Search This Blog

21.1.09

இலங்கையில் போராளிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?


இங்கிலாந்து அமைச்சர் கூறுகிறார்-கேளுங்கள்!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் டில்லியில் தாஜ்மகால் ஓட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாடியபோது, இலங்கைத் தமிழர்ப் பிரச்சினை குறித்து நடுநிலையில் நின்று சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம் என்று இதற்கு உடனடியாக முத்திரை குத்தப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த அமைப்புகள் யாவற்றையும் பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்க நிர்வாகம் முத்திரை குத்தியது. இது சரியான அணுகுமுறையல்ல. ஸ்பெயின் நாட்டில் பாஸ்க் அமைப்பினர் தனி நாடு கோரி போராடி வருகிறார்கள். இலங்கையில் சமஉரிமை மறுக்கப்பட்டதால், விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். சமஉரிமை வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையாகும். இதற்காக அறவழியில் போராடிப் பார்த்து எந்த முடிவும் ஏற்படாததால் ஆயுதப் போராட்டம் நடத்த ஓர் அமைப்பு தள்ளப்பட்டுள்ளது என்றால், அந்த அமைப்பின் செயல்பாட்டை மேலோட்டமாகப் பார்த்து அதை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவது நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியாது.

இதேபோல, பல்வேறு நாடுகளில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தையும் பயங்கரவாத அமைப்புகள் என்று முத்திரை குத்துவது ஏற்கத்தக்கது அல்ல. மனிதநேயத்துக்குப் புறம்பான வழியில் செயல்பட்டு வரும் அரசுக்கு எதிராக வேறு எந்த வழியிலும் போராட முடியாத காரணத்தால், ஆயுதம் ஏந்திப் போராடுவது தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையாகும். இதை அதன் முழு பின்னணியில் புரிந்து கொள்ளவேண்டுமே தவிர ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்று இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

இப்படி கூறியிருப்பவர் விடுதலைப்புலிகளின் நண்பர் அல்லர்;

பார்ப்பனர் பார்வையில் தமிழின வெறியரும் அல்லர் - உலகில் மிக முக்கியமான ஒரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் - இவருக்கு வேறு எவ்விதமான உள்நோக்கத்தையும் கற்பித்துவிடவும் முடியாது.

இலங்கையில் போராளிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைப் பொது நிலையில் நின்று, உண்மை நிலைகளை உள்வாங்கிக் கொண்டு, பகுத்தறிவைப் பயன்படுத்தி, மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தைத்தான் இலங்கை மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவிருந்த ஜே. குணசேகராகவும் கூறியிருந்தார்.

விடுதலைப்புலிகளும், அதன் தீவிரவாதமும் உருவானதற்குக் காரணம் சிங்கள வகுப்பு வாதமே என்று அவர் கூறினார்.

("தீக்கதிர்", 28.3.2002).

இன்றுவரை அரச பயங்கரவாதமாக இலங்கை அரசு இனவாதக் கண்ணோட்டத்தோடு கண்மூடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முல்லைத் தீவை நெருங்கிவிட்டோம்; விரைவில் அது எங்கள் கைக்குள் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே இலங்கை இராணுவம் கொன்று குவிப்பது ஈழத் தமிழர்களைத்தான் - நிராயுதபாணிகளான குடிமக்களைத்தான். இலங்கை இராணுவத்தின் அட்டூழியத்தால் தமிழர்களின் பிணங்கள் சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன என்கிற சேதியை அறிந்த பின்பும்கூட, கலங்காத நெஞ்சங்கள் மனித உணர்வுகளுக்கு உறவுள்ளவை என்று கருதப்பட முடியாது.

இலங்கையில் அமலில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டு, வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டு, ஏழு வெளிநாடுகளின் யுத்த ஆலோசனையைப் பெற்று, யுக்திகளை வகுத்துக்கொண்டு ஓரினத்தையே ஒன்றுமில்லாமல் அழித்துவிடுவது என்று வெறித்தனமாகச் செயல்படும் ஓர் அரசை எதிர்த்து இந்தியா குரல் கொடுக்கவில்லை; உலக நாடுகள் உருப்படியாகக் குரல் கொடுக்கவில்லை; பாலஸ்தீனத்துக்காகக் குரல் கொடுக்க முன்வந்துள்ள அய்.நா. அமைப்பும் குரல் கொடுக்கவில்லை யென்றால், இதன் பொருள் என்ன?

உலகில் நாதியற்ற இனம் தமிழினம் என்ற முடிவுக்குத்தானே உலகத் தமிழர்கள் வருவார்கள்?

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை இராணுவத் தளபதியின் வீர தீர செயல்களைப் பாராட்டிவிட்டு வருகிறார் என்றால், இது என்ன கொடுமை! ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற நிலைதானே இது?

ஒரு மாநில அரசே இந்தப் பிரச்சினையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், முதலமைச்சரே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமரிடம் முறையிட்ட பிறகும், ஒன்றும் நடக்கவில்லையென்றால், அந்நிலை மிகமிக வேதனைக்குரியதே!

இங்கிலாந்து நாட்டின் அமைச்சருக்குத் தெரிந்த உண்மைகள் பாத்தியப்பட்ட இந்திய அரசுக்குத் தெரியாமல் போனது என்பதைவிட, தெரிந்தும் வேறு மாதிரியாக நடப்பதுதான் சிங்கள இனவெறி அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய பலமாகும்; இந்தியத் தேசிய நீரோட்டத்தின்மீது விழுந்த மரணத் தாக்குதலுமாகும்.

பாசாங்குத் தூக்கத்தை இந்திய அரசு கலைத்துக்கொள்ளுமா?


---------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் -20-1-2009

7 comments:

latchoumanan velavan said...

first you ask this type of thingsyour bleddy tamil nadu c.m there.

Robin said...

விடுதலைப் புலிகளுக்கு சக போராளி இயக்கங்களை அழிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

சஞ்சுதன் said...

எனைய குழுக்கள் காலப்போகில் தங்களது சுயநலத்துக்காக இயங்க ஆரம்பிக்க அவர்களை போட்டுத்தள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமானது.
அதைவிட பாலஸ்தீனத்தை இன்று பாருங்கள்.....பாலஸ்தீன பிதாமகர் யசீர் அரபாத்தால் இறுதிக்காலத்தில் குறைந்தபட்சம் ஒரு போர்நிறுத்தத்தை கூட முறையாக அமல்படுத்த முடியவில்லையே.... அதற்கு காரணம் என்ன? பல குழுக்கள் தன்னிச்சையாக இயங்க ஆரம்பித்ததுதான்... இதுவும் ஒருகாரணம்...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராபின். தங்களின் கேள்விக்கு இந்த பிந்த பின்னூட்டத்தில் விடையளித்த நண்பர் சஞ்சுதன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

தமிழ் ஓவியா said...

latchoumanan velavan அவர்களே தமிழில் கருத்துரையை வழங்க வேண்டுகிறேன்.
நன்றி

ரவி said...

இந்திய தேசியம் என்றைக்குமே எழும்பாது.

தூங்குறவங்கள மட்டும் தான் எழுப்ப முடியும்.

நடிக்கறவங்கள ?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செந்தழல் ரவி