Search This Blog
18.1.09
தமிழ்ப் புத்தாண்டும் - வரலாற்றுக் கல்வெட்டும்
தைமுதல் நாள் தான் தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தமைக்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து பெரியார் திடலில் அய்யா நினைவிடத்தில் வைக்கப் பட்டுள்ள கல்வெட்டு.
-------------------------------------------------------------------------------------
வரலாற்றுக் கல்வெட்டு
சென்னையில் தமிழறிஞர்களுக்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்ட விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சி தொடர்பான பல நல்ல கருத்துகளையும், அறிவிப்புகளையும் வெளியிட் டுள்ளார்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பினால் கடும் பாதிப்புக்கு ஆளான தமிழர் இனம் சீர்பெற, தன் தனித்தன்மைகளைக் காப்பாற்றிக் கொள்ள இத்தகு அறிவிப்புகள் மிகமிக முக்கியமானவை.
தமிழ் ஆண்டுகள் என்று கூறி ஓர் ஆண்டின் பெயர்கூட தமிழில் இல்லாமல் ஆக்கப்பட்ட இந்த ஒரே ஒரு நிலை மட்டுமே போதும் - ஆரியப் பார்ப்பனக் கொட்டத்தின் ஆதிக்க ஏற்பாட்டுக்கு!
எதையும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் இவற்றின் பெயரால் ஏற்றிக் கூறினால், திணித்தால் அறிவைச் செலுத்தாது, அப்படியே கண்மூடித்தனமாக மக்கள் ஏற்பார்கள், நம்புவார்கள் என்று பலகீனத்தைப் பயன்படுத்தி இந்தப் பார்ப்பன வேட்டை நடந்திருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர் முதலமைச்சராகவிருக்கும் காரணத்தால், ஆழமான சிந்தனையின் அடிப்படையில், தமிழினப் பண்பாட்டு மீட்சிக்கு தம் அரசு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்ற வரலாற்று நோக்கில்தான் - தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்கிற அரும்பெரும் செயலை அரசு சட்டம்மூலம் நிலைப்படுத்தியுள்ளார்.
எந்த ஓர் ஆட்சியும் சாலைகள் போடலாம்; தெரு விளக்கு களுக்கு ஏற்பாடுகள் செய்யலாம்; ஆனால், ஓர் இனத்தின் மீட்சிக்கு, அதன் பண்பாட்டு அடித்தளத்தில் நின்று, திருப்பம் தரும் சட்டங்களை நிறைவேற்றி நிலைப்படுத்துதல் என்பதுதான் காலத்தை வென்று நிற்கக்கூடிய செயற்கருஞ்செயலாகும்; வரலாற்றுச் சிகரமும், மகுடமும் ஆகும்.
இந்த அடிப்படையில்தான் திராவிட இயக்கத் தாய் நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை பெரியார் திடலான தலைமையிடத்தில் தமிழ்ப் புத்தாண்டான அதே பொங்கல் நாளில் தமிழ்ப் புத்தாண்டை நிலைப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசின் சட்டம்பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டினை, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்துள்ளார்; முதல்வர் கலைஞருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அமைப்புகளும் இதுபோன்ற கல்வெட்டுகளை நிறுவலாமே!
சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டும் போதாது; அது மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிவாக மலர்ந்திட வேண்டும். அதுதான் சட்டம் இயற்றப்பட்டதைவிட மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை முதலமைச்சர் அவர்கள் நுட்பமாக உணர்ந்த நிலையில்தான், அமெரிக்காவின் சுதந்திர தினம் போல, அடுத்த ஆண்டுமுதல் கொண்டாடப்படும் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மூடத்தனமான, அருவருப்பானவற்றை உள்ளடக்கிய பண்டிகைகளை மதத்தின் பெயரால், கடவுள் நம்பிக்கையின் பெயரால் கொண்டாட வைத்துவிட்டனரே, இந்த நிலையில், அறிவுக்குப் பொருத்தமான, தமிழினப் பண்பாட்டுக்கு உகந்த பொங்கற் பொன்னாளை இணைத்து தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவதை வழக்கப்படுத்துதல் மிகமிக அவசியமாகும்.
தந்தை பெரியார் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் திராவிட இயக்கத்தவர் தமிழ்நாட்டில் பொங்கல் விழாவை நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு நிலை உருவாக்கப்பட்டது. அதன்மூலம் தீபாவளி என்ற மூடத்தன - திராவிடர்களை இழிவுபடுத்தும் ஆரியப் பண்டிகையின் மவுசு குறைக்கப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக அரசே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பாக அறிவித்து, உலகம் பூராவும் உழவர் திரு நாள் (Harvest Festival) கொண்டாடுவதுபோல, பொங்கலையும் இணைத்துக் கொண்டாடச் செய்திருக்கும் நிலையில், தமிழர்களான அறிஞர் பெருமக்களும், சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், இயக்கங்களும், பொது அமைப்புகளும் குறிப்பாக திராவிட இயக்கம் என்ற உணர்வோடு இருப்பவர் களும் வரிந்து கட்டிக் கொண்டு குழந்தைகள் மனம் வரை பிடிப்புக் கொள்ளும் வகையில், தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழாவை புதிய உற்சாகத்துடன், எழுச்சியுடன் தமிழர் வீடுகளில் மட்டுமல்ல; வீதிகள்தோறும் கொண்டாட ஒல்லும் வகையில் எல்லாம் முயற்சிப்போமாக! செயல்படுவோமாக!!
நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த குழந்தைகள்தான் தமிழ் வருடங்கள் என்ற ஆபாச, அருவருப்புகளைக் காப் பாற்றும் நோக்கில் இன்றைக்குக்கூடப் பார்ப்பனர்கள், அவர் களின் ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும் கேவலத்தை உணர்ந்து கொண்டால், இந்தப் பிரச்சினையில் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தமிழர்கள் நன்கு உணர்ந்து கொள்ளலாமே - செயல்படலாமே!
-------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 17-1-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கலைஞர் செய்த செயல்களில் மிகவும் முக்கியமானவைகளில் இதுவும் ஒன்று.
நன்று.
Post a Comment