Search This Blog
17.1.09
.நீதிமன்றங்களில் திருக்குறள்தான் சத்தியப் பிரமாணம் எடுக்கக் கூடிய நூலாக வைக்கவேண்டும்.
* தைமுதல் நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு தொடக்கம்
* பெரியார் திடலில் கோலாகல விழா
* கலைஞருக்கு நன்றி தெரிவித்து மாபெரும் கல்வெட்டு
* திருக்குறளை தேசிய நூலாக ஆக்கவேண்டும்
நீதிமன்றங்களில் திருக்குறள்தான் சத்தியப் பிரமாண நூல்
திராவிடர் கழகம் மாநாட்டைக் கூட்டும் -
நீதிமன்றங்கள் முன் போராடும்
பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் அறிவிப்பு
தைமுதல்நாள் தான் தமிழர்களுக்குப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில், தமிழர்கள் இதைப் புரிந்துகொண்டு இதை இனி மேல் ஏற்றமிகு விழாவாக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடக் கூடிய விழாவாக உலகிற்குப் பறைசாற்றுகின்ற வகையில் அதற்குக் காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற வகையிலே - வரலாற்றில் என்றென்றைக்கும் பொன்னெழுத்துகளால் பொறிக்கக்கூடிய வகையிலே முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அய்யா நினைவிடத்தில் நன்றி தெரிவித்து மாபெரும் கல்வெட்டினை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் திருக்குறள் தேசிய நூலாக வேண்டும். திருக்குறள்தான் இனி நீதிமன்றங்களில் சத்தியப் பிரமாணம் எடுக்கின்ற நூலாக வரவேண்டும். அதற்காக மாநாட்டைக் கூட்டி நடத்து வோம். நீதிமன்றங்கள் முன்பும் போராடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.
தைமுதல் நாள்தான் தமிழர் களுக்குப் புத்தாண்டு தொடக்கம் என்ற வரலாற்றில் என் றென்றைக்கும் நிலைத்து நிற் கக்கூடிய பொன்னெழுத்து களால் பொறிக்கக் கூடிய மாபெரும் திருவிழா பொங்கல் பெருவிழா. சென்னை பெரி யார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் 14.1.2009 அன்று காலை 11.15 மணிக்கு எழுச்சித் திருவிழாவாக, கலை விழாவாகப் பண் பாட்டுப் புரட்சி விழாவாகத் தொடங்கி நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட முக்கியச் செய்தி வருமாறு:-
தமிழர்கள் இழந்ததை எல்லாம் மீட்டெடுத்துக் கொண்டாடுகின்ற இந்த தை முதல் நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும்.
தமிழர்கள் விழாமல் இருப்பதற்குத்தான் விழா கொண்டாடப்படுகின்றது. அதுதான் இந்த விழா.
நம்மிடையே புகுந்த குப்பைகளைப் போக்கி அதை சுட்டெரிக்கக் கூடிய, தமிழர் களுக்கு என்று இருக்கக்கூடிய கொண்டாடக் கூடிய ஒரு விழாதான் - இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள் விழா. தந்தை பெரியார் அவர்கள் 1968 ஆம் ஆண்டு எழுதிய பொங்கல் விழா செய்தி இந்த உண்மை இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
தந்தை பெரியார் அவர்கள் பொங்கல் விழாவைப்பற்றிக் கூறிய கருத்தை உங்களுக்குப் படித்துக் காட்டுகின்றேன்.
நமது மதம், இலக்கியம் மொழி, அரசியல், பத்திரிகை கள் எல்லாமே நமது மடமை யையும், முட்டாள்தனத்தையும் நிலை நிறுத்துவதற்காகவே இருக்கின்றன. பொங்கல் என்பது நமது இயக்கம் ஏற்பட்ட பின்புதான்
இந்தப் பொங்கல் என்பது நமது இயக்கம் ஏற்பட்ட பின்புதான் இது தமிழர்களின் பண்டிகை என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதுவரை அது ஆரியப் பண்டிகையாகவே இருந்தது. நமக்குள்ள பண்டி கைகள் யாவும் ஆரியப் பார்ப்பனப் பண்டிகைகளே தவிர தமிழனுக்கு என்று தனி யான பண்டிகை எதுவும் கிடையாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்கின்றார்.
கலைஞர் பார்த்துக் கொண்டுதான் வருகின்றார்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முதல்வர் கலைஞர் அவர்கள் நீதியரசர் தலைமை யில் ஒரு குழுவை அமைத்துப் பரிந்துரைகளை ஏற்று பயிற்சிப் பள்ளியை நடத்தி, அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராக வெகு விரைவில் ஏற் பாடு செய்ய அதை முழுமையாக கவனத்தில் கொண்டு பாடுபட்டுக் கொண்டு வருகின்றார். இடையில் ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இதையொட்டி இருக்கிறது. அதையும் கலைஞர் அவர்கள் கவனத்தில் கொண்டுதான் பார்த்துக் கொண்டு வருகின் றார்.
பழனியில் பயிற்சி பெற்றவர்கள்
நேற்று நான் பழனிக்குச் சென்றிருந்தேன். கலைஞர் அரசுக்கு நன்றி பாராட்டும் கூட்டம் அது. அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக பழனி பயிற்சியில் படித்த ஒரு எட்டு, பத்து பேர் கழுத்தில் உத்திராட்சக் கொட்டை, நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு வந்து எனக்கு சால்வை போர்த்தி நன்றி தெரிவித்து படம் எடுத்துக்கொண்டனர். கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பழனி கோவிலில் பண்டாரத்தார்தான் பூசை செய்து வந்தனர். திருமலை நாயக்கர் மன்னரிடம் இருந்த ராமப்பய்யர் என்ற அதிகாரி அந்த பூசை செய்த தமிழர்களை - ஒரு சில மணிநேரத்தில் வெளியேற்றி பார்ப்பனர்களை உள்ளே புகுத்தினான்.
கலைஞர் செய்திருக்கின்ற பண்பாட்டுப் புரட்சி
ஆண்டவனுக்குப் பூ செய் என்பதுதான் தமிழில் இருந்தது. அதைப் பார்ப்பனர்கள் பூஜை என்று தங்களது மொழியாக மாற்றிக் கொண் டனர். கலைஞர் அவர்கள் ஈரோடு குருகுலத்திலே பயின்ற காரணத் தால்தான் இனிமேல் கோவில் களில் கருப்பு உருவங்கள் தெரியக் கூடிய ஒரு அறிவுப் புரட்சியை, ஜாதி ஒழிப்புப் புரட்சியை, ஒரு தமிழ்ப் பண்பாட்டுப் புரட்சியை அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் என்ற ஆணை மூலமாக உருவாக்கி யிருக்கின்றார்.
பெரியார் திடலில் இரண்டாவது கல்வெட்டு
கலைஞர் அவர்கள் செய்து வருகின்ற இதுபோன்ற சமுதாயப் புரட்சிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்ற வகை யிலேதான் சென்னை பெரியார் திடலில் அய்யா நினைவிடத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக ஆணையிட்டதற்கு முதல்வர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து முதல் கல்வெட்டைத் திறந்தோம். இன்றைக்கு தைமுதல் நாள் தான் தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித் தமைக்காக அந்தக் கல்வெட் டிற்கு அருகில் இன்னொரு வரலாற்றுக் குறிப்பு மிக்க கல்வெட்டினை நாங்கள் நன்றி தெரிவிக்கின்ற வகையிலே நிறுவியிருக்கின்றோம்.
இனிமேல் இது காலம் காலமாக வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு இதைச் செய்திருக்கின்றோம்.
ஒரு பக்கத்திலே மகிழ்ச்சி - இன்னொரு பக்கத்திலே துன்பம்
ஒரு பக்கம் இது மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கத்திலே ஈழத் தமிழர்கள் படும் சொல்லொணாத கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை யையும் நாம் எண்ணிப் பார்த்து அதற்கும் விடிவு காண்போம். இழந்தவைகளை மீட்டெடுத் திருக்கின்றோம்.
அதேபோல, ஈழத்திலேயும் இழந்தவைகளை நாம் மீட்கத்தான் போகிறோம். அதைக் காணக் கூடிய நாள் வெகுவிரைவில் வரும்.
இருள் மட்டுமே என்றைக்குமே நீடித்து நிலைத்திருந்ததில்லை. அடுத்து வெளிச்சம் வந்துதான் தீரும். அதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
நாம் அறிவுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். ஊழைத் தூக்கி எறியவேண்டும். உண்மையை ஏற்கவேண்டும். நமது முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ் செம்மொழியாக ஆக்கிட பாடுபட்டார்கள்.
அதேபோல, திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டும்.
திருக்குறள்தான் தேசிய நூல்
திருக்குறள்தான் தேசிய நூல் என்று மத்திய அரசு பிரகடனப்படுத்தப்பட வேண்டும் (பலத்த கைதட்டல்).
அடுத்து நாங்கள் அறிஞர் பெருமக்களை கலைஞர் அவர்களை அழைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தவிருக்கின்றோம் என்பதை இந்த நேரத்திலே அறிவிக்கின்றோம். இரண்டாவதாக இன்றைக்கு நீதிமன்றங்களில் பைபிள், கீதை போன்ற நூல் கள்தான் சத்தியப் பிரமாணம் எடுக்கின்ற நூல்களாக இருக் கின்றன. இனிமேல் நீதிமன்றங்களில் கீதை போன்ற நூலுக்கு இடம் இருக்கக் கூடாது. அவைகளுக்குப் பதிலாக நீதிமன்றங்களில் திருக்குறள்தான் சத்தியப் பிரமாணம் எடுக்கக் கூடிய நூலாக வைக்கவேண்டும்.
அதற்கு எல்லா நீதிமன்றங்களும் முன்வரவேண்டும். அதையும் வலியுறுத்தி திராவிடர் கழகம் நீதிமன்றங்கள் முன்பு வலியுறுத்திப் போராடும்.
------------------நன்றி: "விடுதலை" 16-1-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சத்தியப் பிரமாணம் எடுப்பதே ஒரு வெட்டி வேலை. அதற்கு திருக்குறள் எதற்கு?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment