Search This Blog

9.1.09

நாகம்மையார் குழந்தைகள் இல்லம்






வாசமுள்ள வாடாமல்லிக்கு வயது50




கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன செல்வந்தருக்கு உணவு இருந்தும் உண்ண முடியாத உணர்வு, தண்ணீர் இருந்தும் தாகம் தீர்க்க முடியாத தா(க்)கம் போன்ற உணர்வுகள் ஏற்பட, தாய், தந்தையின்றி, ஆதரவற்ற பெண் குழந்தைகள் படும் துயரங்களையெல்லாம் கண்ணால் கண்டதே காரணமாக இருந்தது. அந்த உணர்வுகளைப் போக்க, மனிதநேயம் என்னும் கேடயத்தைக் கொண்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 1959 ஆம் ஆண்டு திருச்சி, பெரியார் மாளிகையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றை உருவாக்கி, தனக்குள் இருந்த தாக்கத்தைப் போக்கிக் கொண்டார் பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார் அவர்கள். 13 பெண் குழந்தைகளோடு செயல்பட்டு வந்த இல்லத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்ததால் அரசின் உதவி கட்டாயத் தேவை என்கிற நிலைக்கு இவ்வில்லம் வந்துவிட்டது. அந் நாளில் அரசின் உதவி தேவை என்றால், இல்லம் அனாதை என்ற பெயரோடு செயல்பட வேண்டுமென்பது அரசு விதிமுறையாகும்.

அதனால் 1961 ஆம் ஆண்டு முதல் அரசு நிதி உதவியுடன் நாகம்மையார் அனாதைப் பெண் கள் இல்லமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற அனாதை இல்லங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகள், பள்ளி வயது என்று சொல்லப்படும் 6 வயது முதல் 18 வயதிற்குள் இருந்தது. பள்ளியில் சேர்ந்து படித்தால் மட்டுமே அரசு நிதி உதவி வழங்கப்படும் என்பது நிதியுதவி விதி முறைகளில் உள்ள நிபந்தனையாகும்.

இவ்வில்லக் குழந்தைகளைப் பராமரிக்கும் பெரும் சுமையை, அன்னை மணியம்மையார் அவர்கள் சுகமாக ஏற்றுக் கொண்டு, நடத்தி வருவதை அறிந்த மருத்துவத்துறை அதி காரிகள், மருத்துவர்கள் பலர் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட 30 நாட்கள் முதல் 3 மாதமான குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளை அம்மா அவர்களிடம் ஒப்படைக்கத் தொடங்கினார்கள். அப்படி ஒப்படைக்கப்பட்ட 6 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளை இவ்வில்லத்தில் சேர்த்து வளர்க்க அரசு விதிமுறைகளில் இடமில்லை. இத்தகைய குழந்தைகளைப் பராமரிக்க பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம் எனத் தனியாக உருவாக்கப்பட்டு, 6 வயதிற்கும் குறைவான குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். தாய், தந்தையற்ற இக்குழந்தைகளுக்கெல்லாம் பெயருக்கு முன்னால் ஈ.வெ.ரா.ம (ஈ.வெ.ராம சாமி மணியம்மை) என்ற முதல் எழுத்துகள் சேர்க்கப்பட்டு பதிவேடுகளில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்தக் கைக்குழந்தைகளையெல்லாம் வளர்க்க, தனது தோளையே தொட்டிலாக்கி, நெஞ்சையே பஞ்சணையாக்கி இன்று அரசு விளம்பரத்தோடு செய்து வரும் தொட்டில் குழந்தைத் திட்டத்தை அன்றே அம்மா அவர்கள் விளம்பரமின்றி தனி ஒரு ஆளாக இருந்து செய்து காட்டி, தரணி போற்றும் தாயாகப் போற்றப்பட்டார்கள்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், இக்குழந்தை களுக்கெல்லாம் தாய், தந்தை இல்லையே என்ற ஏக்க உணர்வு வந்துவிடக்கூடாது என்பதில், அய்யாவும், அம்மாவும் மிகவும் கவனமாக இருந்ததுடன், இக்குழந்தைகளின் படிப்பு, வளர்ப்பு இவற்றில் அம்மா அவர்கள் மிகவும் கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து வரும் போது, சில நேரங்களில் சில குழந்தைகளின் செயல்பாடுகளால், மிகவும் ஆத்திரப்பட்டு, கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. பிறகு அடுத்தவர்கள் யாரும் உங்களைப் பற்றி தகாத வார்த்தையைக் கொண்டு தவறாகப் பேசி விடக்கூடாது என்பதற்காகத்தான், நான் கடுமையாக நடந்து கொண்டேன் என்றும், நமக்குப் பொன்னும் பொருளும் சிறப்பல்ல, நாம் பொருள்பட வாழ்வதுதான் சிறப்பு என்று கூறி, ஆசை, பேராசை, இவைகளுக்கு அர்த்தம் தெரியக்கூடாது என்பதிலும், எளிமை, சிக்கனம், ஒற்றுமை, சுறுசுறுப்பு, கடின உழைப்பு இவைகளுக்கெல்லாம் உதாரணமாக நாம் தான் இருக்க வேண்டுமென்றும் சொல்லி வளர்த்தும், வாழ்ந்தும் காட்டிய தோடல்லாமல், இக்குழந்தைகள் இல்லாத சுற்றுப்பயணமே இல்லை என்கிற அளவிலும், சுற்றுப்பயணத்தில் கழகக் கண்மணிகளால் வழங்கப்பட்டு வந்த அன்பளிப்புகள் மற்றும் அனைத்தையும் இவ்வில்லக் குழந்தைகளுக்கே கொடுத்து மகிழ்ந்து மனநிறைவு பெற்றார் அந்த மாட்சிமை பொருந்திய அன்புத் தாய்.


ஒருமுறை இல்லத்திலிருந்து ஒரு பெண் தப்பிச் சென்றுவிட்டார். தேடிக் கண்டு பிடிப்பதில் துப்பறியும் நிபுணர்கள் கூட சமயங்களில் தோற்றுவிடுவார்கள். ஆனால் எதிலும் தோற்றுப்போகாத அம்மா அவர்களோ, அப்பெண்ணை மிக விரைவிலேயே தேடிக் கண்டுபிடித்து, அப்பெண் இருக்கும் முகவரிக்குத் தனி நபரை அனுப்பி, அப் பெண்ணைக் கேட்டு வரச் செய்தார்கள். அப்பெண் சென்று தஞ்சம் அடைந்த இடமோ, மாவட்ட ஆட்சியரின் வீடு. அந்தத் தம்பதி யர்களோ, அப்பெண்ணைத் திருப்பித் தர முடியாது என்று ஆவேசமாகச் சொல்லி, அப்பெண்ணை அழைத்து வரச் சென்றவரை திருப்பி அனுப்பி விட்டார்கள். அம்மாவின் கோபமோ எல்லை கடந்துவிட்டது. உடனடியாக வழக்கறிஞர்களை வரவழைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி, உடும்புப் பிடியாக இருந்து நீதிமன்றம் வரை சென்று அப்பெண்ணை மீட்டு வந்த பிறகு தான் அந்த வீரத்தாய்க்கு உறக்கம், பசி, நிம்மதி எல்லாமே வந்தது. அம்மாவின் சாதனைகளில், சரித்திரச் சாதனையாக 6 வயது கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் கரத்தால், பெரியார் திடல் நுழைவு வாயிலில் அமைந் திருக்கும் 7 அடுக்கு கொண்ட அந்தப் பிரம் மாண்டமான கட்டடத்தைத் திறந்து வைக்க வைத்து, 8 ஆவது அதிசய சாதனையை நிகழ்த்தி, சிறார்களையும் சிகரத்தில் ஏற்றி, சிகரத்தைத் தொட்ட அந்த மாபெரும் தாய் ஒரு வரலாற்றுத் தாயாக மதிக்கப்பட்டார்.

மொத்தத்தில், கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல பாதுகாத்தும், தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் பூக்களின் மீது யாருடைய விரலும் பட்டு விடக்கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட தோட்டத்தின் காவல்காரராகக் கடமையாற்றிய அந்தக் கண்ணியமான தாயை என்னவென்று சொல்லத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், 01.10.1974 உண்மை இதழில் அம்மா அவர்களாலேயே எழுதப்பட்டுள்ளதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

இதோ அம்மாவின் எழுத்தோவியம்:

"இத்தனை ஆண்டுக் காலம் ஆகியும் இதுவரை எப்படிப்பட்ட கருத்தையும் நான் வெளியிட்ட தில்லை. எனக்கு என்று எந்த விதமான ஆசையையும் எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொண்டதும் இல்லை; எனக்கென்று இருந்த ஒரே ஒரு அன்புப் பிடிப்பையும் இழந்து விட்டு அனாதை போல் தன்னந்தனிமையாய் விடப் பட்டு இருக்கிறேன். என்னைப் புரிந்து கொண்டு, எனக்கு அன்பும் ஆதரவும் அவ்வப் போது காட்டுவதற்கு அருகில் ஒருவரும் இல்லாமலும், அதுபோன்றே எனக்குச் சிற்சில சமயங்களில் ஏற்படும் துயரத்தையும்,- துக் கத்தையும் வாய்விட்டு மனம் திறந்து சொல் வதற்குக் கூட ஒருவருமே இன்றித் தனிமையான சூழ்நிலையில் இருக்கும் படியான ஒரு துயர நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட ஒரு தன்மை எனக்கு என்றேனும் ஒருநாள் வரக்கூடும் என்று முன்னதாகவே தெரிந்து கொண்டு தானோ என்னவோ என் அருமைத் துணைவர் என்னைத் தனிமையில் இருக்க விடாமல் இருப்பதற்காகத்தான், என்னிடம் திக்கற்ற தாய், தந்தையற்ற கன்னித் தாய்மார்கள் கண்கலங்கி ஈன்று என்னிடம் ஒப்படைக் கப்பட்ட சின்னஞ்சிறு சிறார்களையும் நூற்றுக் கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளையும் துணையாக வைத்துவிட்டு, அவர்களை ஆளாக்கும் பொறுப்பினையும் என்மீது சுமத்திவிட்டு எனக்குப்பின் உன் வேலைகளை ஓய்வு ஒழிவு இல்லாமல் செய்வதற்காக இவர்களை விட்டு இருக்கிறேன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரும் இல்லையே என்றும் நினைக்காமல் இவர்களைப் பரா மரித்து, என் ஆசையை, எண்ணத்தை, கொள்கையை நிறைவேற்று என்று சொல் லாமல் சொல்லி அந்த அனாதைக் குழந்தை களோடு ஒன்றாக என்னையும் ஒரு அனாதை யாக (ஆனால் வளர்க்கும் செவிலியாக) விட்டு விட்டுப் போய்விட்டார் என்றே எண்ணு கிறேன். அவர்களைக் கொள்கைப்பிடிப்புள்ள செம்மல்களாக - தந்தையின் கொள்கைகளான பகுத்தறிவு, கடவுள் நம்பிக்கை ஒழிப்பு, மூடப்பழக்கங்களை முறியடித்தல் ஆகிய வைகளை உலகெங்கும் பரப்பிடும்படியான திறமைமிக்க திறமைசாலிகளாக, அறிவின் சிகரங்களாக ஊக்கமும், உழைப்பும், நாணயமும் மிக்கவர்களாக வளர்த்து ஆளாக் கும் பணியினை எல்லாப் பணியிலும் முதன் மையானதாகக் கொண்டு செயல்பட என்னை முழுமையாக ஆளாக்கிக் கொண்டு வருகிறேன்"

என்று உண்மை இதழில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதன்படியே, இவ்வில்லக் குழந்தைகளை வளர்த்து, ஆளாக்கி, தான் வளர்த்த செல் வங்கள் எவ்விதத்திலும் சோடை போய்விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து, வாழ்க்கை முழுவதும் இல்லக் குழந் தைகளுக்காகவே வாழ்ந்து, தனது வாழ் நாளிலேயே 3 பெண்களுக்குத் திருமணம் முடித்து, அடுத்து சில பெண்களுக்குத் திருமண ஏற்பாடுகளையும் செய்து, இறக்கை இழந்த பறவைகளுக்கு இறக்கையாக, கிளை இழந்த மரங்களுக்கு தாங்கி நிற்கும் பூமியாக, ஆதரவை இழந்த குழந்தைகளுக்கு அணைக்கும் கரமாக இருந்த தன்னலம் கருதாத, தன்மானம் பாராத துணிச்சல் மிக்க அந்த உத்தமத்தாய், இன்று, சென்னை பெரியார் திடல் முகப்பில், இரண்டு கைகளிலும், இரண்டு குழந்தைகளுடன் சிலையாக, - இல்லையில்லை எல்லோருடைய இதயத்துடிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை வாழ்க அம்மா!- அய்யா!

அம்மாவிற்குப் பிறகு...

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை, குடும்பத்தில் உள்ள மூத்த அண்ணன் தான் கவனிக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு வந்துவிட்ட, அம்மா வின் விருப்பத்திற்கிணங்க, பெரியார் அறக் கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற, இவ்வில்லத்துக் குழந்தைகள் அன்போடு அண்ணா என்றழைக்கும் போதெல்லாம், நேசக்கரம் நீட்டி, பாசமொழி பேசி, அவர்களுள் ஒருவராக, அக்குழந்தைகளின் அன்புக்குரிய அண்ணனும், பெரியாரின் போர்ப் படைத்தளபதி தமிழர் தலைவரான கருப்பு மெழுகுவத்தி, மானமிகு கி.வீரமணி அவர்கள், குடும்பம் என்னும் கப்பலுக்கு மாலுமியாக இருந்து ஆற்றி வரும் பெரும் பணிகள் அவரது தூய தொண்டுள்ளத்து உணர்வுகளுக்கு உரைகல்லாகும்.

அந்த வகையில் பொறுப்பேற்றதுமே தனது முதல் பணியாக விதிமுறைகள் தெரிந்திருந்தும், அதையும் மீறி, அனாதை என்ற வார்த்தைக்குத் தான் அரசு உதவி என்றால், அப்படியான உதவி தேவையில்லை, ஊர் முழுவதும் சுற்றி, எனது இரண்டு கைகளால் கையேந்தி, இவ்வில்லப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் மனோதைரியம் எனக்கு இருக்கிறது என்று சொல்லி, நாகம்மையார் அனாதைப் பெண்கள் இல்லம் இனி நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்பதாகச் செயல்படும் என அறிவித்து, அங்கே கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறார் அண்ணன்.

தனது இமாலயப் பணிச்சுமைகளில், ஒரு சிறிய சுமையை சுமை சிறிதாக இருந்தாலும் அதன் பாரம் மிகவும் கடினமானது அதாவது, இவ்வில்லத்தின் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை, அய்யா - அம்மா அவர்களோடு கூடவே இருந்து, அய்யாவின் தனிச் செயலாள ராய் இருந்து அரும்பெரும் தொண்டினை யாற்றிய, இல்லக் குழந்தைகளால், பாசத்தோடு புலவர் அண்ணா என்றழைக்கப்பட்ட புலவர்.கோ.இமயவரம்பன் அவர்கள் இவ்வில் லத்திற்குத் தாளாளராகவும், குழந்தைகளுக்குக் காப்பாளராகவும், நியமிக்கப்பட்டார். அவரும் அப்பொறுப்பிலிருந்து சிறிதும் பிறழாமல், தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், இல்லக் குழந்தைகளுக்காகவே, தனது வாழ்வை அர்ப்பணித்து, தனது கடைசி மூச்சு வரை, இவ்வில்லக் குழந்தைகளுக்குத் தாய், தந்தை மற்றும் அண்ணனாக இருந்து இக்குழந் தைகளின் மனதில் நீங்கா இடத்தில் வரையா ஓவியமாக வாழ்கிறார்.

அதன்பிறகு, மீண்டும் இவ்வில்லக் குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு, எதிர்காலம் போன்ற கடமைகளுக்கு, பல நெருக்கடிகளுக் கிடையே ஆளாகி, எதிலும் எதிர்நீச்சல் போட்டே பழகிய, சவால்களுக்குச் சற்றும் சளைக்காமல் சாதிக்கும் வல்லமை கொண்ட ஆசிரியர் அண்ணன் அவர்கள், 1980 ஆம் ஆண்டு அய்யாவின் நூற்றாண்டு விழாவினை யொட்டி, விவசாயம் செய்து வந்த, பெரியார் தோட்டத்தை, பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகமாகப் பெயர் மாற்றம் செய்து, பெரியார் மாளிகையில் இயங்கி வந்த இல்லத்தை மாற்றம் செய்ததால், இடநெருக்கடிக்கு ஆளான இல் வில்லக்குழந்தைகள் தங்குவதற்கு, பேருள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் பலரின் உதவியை நாடி, ஏறக்குறைய ரூ. 50 இலட்சத்தில் மிகவும் பாதுகாப்பான, எழில் நிறைந்த இடத் தில் சகல வசதிகளுடன், 2 அடுக்குக் கொண்ட தனிக்கட்டடம் ஒன்றை உருவாக்கி அச்சிறப்பு மிகு கட்டடத்தை முன்னாள் இந்தியப் பிரதமர் சமூக நீதியின் சின்னம் மாண் புமிகு வி.பி.சிங் அவர்களைக் கொண்டு திறந்து வைத்து, வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

-----------------------ஆர். தங்காத்தாள் காப்பாளர், நாகம்மையார் குழந்தைகள் இல்லம் - "விடுதலை" 9-1-2009

5 comments:

Thamizhan said...

பெண் குழந்தைகளுக்குப் புத்துணர்வு,தன்னம்பிக்கை,முயற்சி என்று பாடங்களுடன் சேர்த்துக் கராத்தே,பாட்டு,பேச்சு,நடிப்பு என்று பலவற்றையும் நல்ல உணவுடன் ஊட்டி வளர்க்கும் இல்லம் நாகம்மை இல்லம்.
தமிழர்கள் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய உண்மையான கோவில் இதுதான்.
மாண்புமிகு வி.பி.சிங் பார்த்து மயங்கிய இல்லம்.தனது கவிதைப் புத்தகத்தின் தமிழ் வெளியீட்டு வருவாயை இல்லத்திற்கு நன்கொடையாகக் கொடுத்தார்.
இந்தக் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு ஒவ்வொருவரும் ஒரு குழந்தையின் படிப்பை ஏற்றுக் கொள்வது தந்தை பெரியாருக்குச் செய்யும் நன்றியாகும்.

Arasu said...

தந்தை பெரியார் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்பிவரும் தமிழ் ஓவியாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த இடுகையின் மூலம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைப்பற்றித் தெளிவாகத்தெரிந்து கொண்டேன். தமிழன், தமது பின்னூட்டத்தில் ஒரு சிறந்த யோசனையைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி, ஒரு குழந்தையின் மேற்படிப்புச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

- அரசு

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி தமிழன் அய்யா .

தமிழ் ஓவியா said...

//தந்தை பெரியார் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்பிவரும் தமிழ் ஓவியாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த இடுகையின் மூலம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைப்பற்றித் தெளிவாகத்தெரிந்து கொண்டேன். தமிழன், தமது பின்னூட்டத்தில் ஒரு சிறந்த யோசனையைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி, ஒரு குழந்தையின் மேற்படிப்புச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

- அரசு//

நன்றி அய்யா மிக்க நன்றி. தங்களின் தொண்டறத்திற்கு எனது தலைதாழ்ந்த வணக்கங்கள்.
நன்றி.

தமிழ் ஓவியா said...

தொண்டறத்திற்கு இதோ ஒரு கண் முன் எடுத்துக்காட்டு:

"நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன் விழா
பெரியார் பன்னாட்டு மய்யத்தினர் பூரித்துப் பாராட்டு
மாணவியரில் முதல் மதிப்பெண் பெறுவருக்கு விருது: அரசு - மீனா
முதல் மதிப்பெண் மாணவியருக்கு மேல் படிப்புச் செலவு: இளங்கோவன் - சரோஜா

வாஷிங்டன், ஜன.11- பெரியார் பன்னாட்டு மையத்தைச் சார்ந்த அறிஞர் பெரு மக்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன் விழாவைப் பூரித்துப் பாராட்டினர்.
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் பயிலும் மாணவியருக்குப் பரிசு சலுகைகளை அறிவித்துள்ளனர். வாஷிங்டனில் இருந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் பொன்விழா துவக்கத்தின் மாட்சி அறிந்து பெரியார் பன்னாட்டு மையத் தோழர்கள் பெரிதும் மகிழ் கிறோம். மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்துவரும் பொன்விழாவில் பங்கேற்கும் மாணவியர் அனைவருக்கும் எங்களின் நல்வாழ்த்துக்கள். தந்தை பெரியாரின் சிந்தனையால் துவக்கப்பட்டு, அன்னை மணியம்மையாரால் சீராட்டி வளர்க்கப்பட்டு, அவருக்குப் பின் தமிழர் தலைவரின் அருமுயற்சியால் ஓங்கி உயர்ந்திருக்கும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து கல்வி பெறும் மாணவியர் அனைவரும் மிக உயர்ந்த நிலையை அடையவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம். காப்பாளர் திருமதி தங்காத்தாள் இல்லத்தின் வரலாற்றைப்பற்றி விடுதலையில் எழுதிய கட்டுரையை பெரியார் பற்றாளர்களிடையே பகிர்ந்து கொள்கிறோம்.
2009-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளித்தேர்வில், நாகம்மையார் இல்ல மாணவியருள் முதல் மதிப்பெண் எடுப்பவரது மேற்படிப்பை மேரிலாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அரசு - மீனா வாழ்விணையர்கள் ஏற்க முன்வந்துள்ளனர். அதேபோன்று 2010ம் ஆண்டு முதல் மதிப்பெண் எடுக்கும் நாகம்மை இல்ல மாணவியின் மேற்படிப்புச்செலவை மருத்துவர்கள் இளங்கோவன் - சரோஜா வாழ்விணையர்கள் ஏற்கிறார்கள். இல்லத்திலிருந்து பயிலும் அத்தனை மாணவச் செல்வங்கள் ஒவ்வொருவரும் தமது பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் செயலாற்றலால் - வையத்துள் வாழ்வாங்கு வாழ மீண்டும் வாழ்த்தி மகிழ் கிறோம். நாகம்மை இல்ல மாணவியருக்கு பெற்றோர் உற்றாராய் இருந்து அருந்தொண்டாற்றிவரும் அத்தனை நல்லுள்ளங் களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

- பெரியார் பன்னாட்டு மையம், வாஷிங்டன்"

-----------"விடுதலை" 11-1-2009

மிக்க நன்றி. மிக்க மகிழ்சி.

தொடர்க தங்களின் தொண்டறம்

தங்களின் தொண்டறத்திற்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள். நன்றி. பாராட்ட வார்த்தைகளே இல்லை.