Search This Blog

22.1.09

புதுவையில் இன்றைக்கு 64 ஆண்டுகளுக்குமுன்...




புதுவையில் இன்றைக்கு 64 ஆண்டுகளுக்குமுன்...

22.7.1945 - முதன்முதலாகப் புதுச்சேரியில் (பழைய பெயர் பாண்டிச்சேரி) திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட நாள்.

ஒரு மைல் ஊர்வலம், 3000 பேர் பங்கேற்பு; மண்டபத்தில் 5000 பேர்; வெளியில் 5000 பேர்; ஒதியஞ்சாலை கவாலியன் திரையரங்கில் கோலாகலமான நிகழ்ச்சிகள்.

தலைமை: தந்தை பெரியார்
வரவேற்புரை: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கொடியேற்றுதல்: அறிஞர் அண்ணா
தொடக்கவுரை: திருவொற்றியூர் சண்முகம்
திராவிட நாடுப் படத் திறப்பு: இரா. நெடுஞ்செழியன்
பெரியார் படத் திறப்பு: க. அன்பழகன்
டாக்டர் அம்பேத்கர் படத் திறப்பு: சத்தியவாணி முத்து
ஏ.டி. பன்னீர்செல்வம் படத் திறப்பு: ஏ.பி. ஜனார்த்தனம்
புரட்சிக்கவிஞர் படத் திறப்பு: பாலசுந்தரம்


- புரட்சிக்கவிஞர் படம் திறக்கப்பட்டபொழுது உள்ளூர்க்காலிகள் புரட்சிக்கவிஞரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் குரல் கொடுத்தனர், கலவரத்தில் ஈடுபட்டனர்.

தாக்கவும் முனைந்தனர் - அதனைக் காரணம் காட்டி காவல்துறை அதிகாரி (சார்ஜன்ட்) உடனே கூட்டத்தை நிறுத்தும்படிச் செய்தார்.

காலை நிகழ்ச்சிகள் முடிந்து மாலை நிகழ்ச்சியில்தான் இந்தக் கலாட்டா!

நிகழ்ச்சி முடிந்து வெளியில் சென்று கொண்டிருந்தபோதுதான் அன்றைய திருவாரூர் மு. கருணாநிதி காலிகளால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அவர் ஓடி ஒளிந்த இடம் - கலகக்காரர்கள் கூடி சதி நடந்த இடம் என்று நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். நிலைமை என்னவாகியிருக்கும்?

அய்யோ, யார் பெற்ற பிள்ளையோ! இப்படிச் சாகக் கிடக்கிறதே? என்று முதிர்ந்த தாய் முனகியதை அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் திராவிடர் கழகம் தொடக்கம் என்பதே கலவரத்தில்தான் பிரசவம் ஆனது.

அதேநேரத்தில், சுயமரியாதை மாநாடும் (1.3.1931) புதுவை முதல் வாலிபர் மாநாடும் (19.6.1932) இதே புதுவையில் நடந்திருக்கின்றன என்றாலும், திராவிடர் கழகம் என்ற பெயரால் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சி இதுவே!

அத்தகைய ஊரிலே கழகத்திற்கு என்று ஒரு கட்டடம் - பெரியார் படிப்பகம் - பேரணி - பெரியார் சிலை திறப்பு - விளக்கக் கூட்டம் என்று நடைபெறவிருக்கிறது (24.1.2009) என்று எண்ணும்போது அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன.

இந்த நிலையை எட்டுவதற்கு இயக்கத் தோழர்கள் எத்தகைய விலைகளையெல்லாம் கொடுத்திருக்கின்றனர் என்று எண்ணிப் பார்க்கும்பொழுது அந்தக் கறுப்பு மெழுகுவத்தியாம் செம்மல்களுக்கு வீர வணக்கம் செலுத்தத் தோன்றுகிறது - செலுத்துவோம்!

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு வெ. வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. சானகிராமன் (தி.மு.க.), சட்டமன்ற உறுப்பினர் இரா. விசுவநாதன் (சி.பி.அய்.) மற்றும் திராவிடர் கழக முன்னோடிகள் பங்கேற்க உள்ளனர்.

ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டுள்ளன. புதுவையே திராவிடர் கழகத்தின் பாசறை போன்று வடிவெடுத்து நிற்கிறது. எங்கு நோக்கினும் சுவர் எழுத்து விளம்பரங்கள் - பதாகைகள், கழகக் கொடிகள் என்று ஊரின் வடிவமே மாறிப் போயிருக்கிறது.

புரட்சிக்கவிஞர் பிறந்த புதுவையிலே புரட்சிகர இயக்கமாம் திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகள்!

உனக்குமா ஓர் இயக்கம் - அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக்குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே
உனக்குமா ஓர் இயக்கம்?


(குயில், 3.3.1959)

என்று புரட்சிக்கவிஞர் அரை நூற்றாண்டுக்கு முன்பு தீட்டினார் குயிலில்.
இன்றைக்கும் அதே வினாவைத் திருப்பித் தொடுப்போம்.

ஜாதி ஒழிப்பா?
சனாதன எதிர்ப்பா?
மூட நம்பிக்கை தகர்ப்பா?
பெண்ணடிமை ஒழிப்பா?
பகுத்தறிவுப் பாட்டையா?
சமூகநீதி எழுச்சியா?
சமத்துவக் குரலா?
சமதர்ம எக்காளமா?
மண்ணுரிமை முழக்கமா?
எந்தத் தளத்திலும் தன்னேரில்லா
குரல் கொடுக்கும்
இந்த இயக்கம் இருக்கையிலே
அய்யா வழியில் நின்று
அரிமாவாக வழி நடத்தும்
தலைமை இருக்கையிலே
நாட்டில் எண்ணற்ற
சமூக இயக்கம் எதற்கு -
திராவிடர் கழகம் இருக்கையிலே?

என்ற வினாவை - புதுவையில் எழுப்புவோம்!

புதுவைக் கொளுத்தும் புரட்சித் தீ அந்த எண்ணற்ற இளைஞர்கள் மத்தியில் விதைக்கட்டும்!
இளைஞர்கள் வந்து சேரவேண்டிய இயக்கம் இதுவல்லால் வேறு எது?
புறப்படுக, புதுவை நோக்கி!

புரட்சிப் பூபாளம் எழுதுவோம், வாரீர்! வாரீர்!!

---------------மின்சாரம் அவர்கள் 22-1-2009 "விடுதலை" இதழில் எழுதியது.

2 comments:

Anonymous said...

புதுவையில் திராவிடர் கழகத்திற்கு என தனிக்கட்டடம் திறக்கப்பட இருப்பது புதுவையைச் சேர்ந்த என் போன்றோருக்கு மிக்க மகிழ்ச்சி. தனிக்கட்டடம் இல்லாமல் ஒரு கலந்துரையாடல் நடத்த கழகத்தலைவர்கள் பட்ட கஷ்டத்தை நான் அறிவேன். தற்போது மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன்.தாங்கள் நேரம் கிடைக்கும்போது எனது http://muzhangu.wordpress.com/ யும் http://www.muzhangu.blogspot.com/ யும் பார்த்து கருத்து சொல்லவும். நன்றி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி.
தொடர்வோம் தோழமையை.