Search This Blog

1.5.11

பகவான் சாயிபாபாவின் மறுபக்கம் - திடுக்கிடும் கசப்பான உண்மைகள்புட்டபர்த்தி சாயிபாபா 24.4.2011 அன்று ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில் மரணம் அடைந்தார். 28 நாள்கள் மருத்துவமனையில் படாதபாடு பட்டார். சிறுநீரகம், கல்லீரல் என்று ஒவ்வொரு உறுப்புகளும் பழுதுபட்டு, மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, சாதார ணமாக மனிதர்களுக்கு ஏற்படும் அத்தனைத் துன்பங்களையும் உடல் ரீதியாக அனுபவித்தது பரிதாபமாகத் தான் இருந்தது. 96 ஆண்டுகள் வாழ் வேன் என்று அவர் சொன்னது பொய்த்துப் போய் விட்டது.

அவர் நோய் வாய்ப்பட்டதிலோ, மரணத் துன்பம் அடைந்ததிலோ, மரணம் எய்தியதிலோ கிஞ்சிற்றும் பகுத்தறிவாளர்களுக்கு மகிழ்ச்சி இல்லை.

அதே நேரத்தில் வாழ்ந்த காலத்தில் சாயிபாபா மக்களை மூடநம்பிக்கைச் சகதியில் ஆழ்த்தியது போதாதென்று, அவரது மரணத்தை வைத்தும் மக்களை மடமையில் ஆழ்த்தும் நாசகார செயல்களில் ஈடுபடுவதை மனிதப் பற்றும், பகுத்தறிவும் உடையவர்களால் எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்?

இந்த நிலையில் நாம் நிமிர்ந்து நின்று மூடநம்பிக்கையின் முதுகெலும்பைப் பிளப்பது என்பது நமது அடிப்படைக் கடமையாகி விட்டது.

முதல் கேள்வி: பகவான் சாயிபாபா என்பது உண்மையானால் அவருக்கு ஏன் நோய் ஏற்பட வேண்டும்? மற்றவர்களின் நோய்களை எல்லாம் தம் பார்வையாலோ தரும் திருநீறாலோ குணப்படுத்தும் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கூறுகிறார்களே, - அப்படிப்பட்ட மனிதனுக்கு தெய்வீகப் புருடனுக்குக் கொடும் நோய்கள் தாக்கலாமா?

சாயிபாபாவின் திருநீறும், பிரசாதங்களும் என்னாயிற்று? எதற்காக மிலேச்சன் இங்கிலீஷ்காரன் கண்டுபிடித்த மாத்திரைகளும், மருந்துகளும்?

96 வயது வாழ்வேன் என்றவர் ஏன் 85 வயதிலேயே மாண்டு போனார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தர வேண்டாமா?

இவர் நாட்டைக் கெடுத்தது போதாதென்று மூன்றாவதொரு சாயிபாபாவும் தோன்றுவார் - அவர் பெயர் பிரேமசாய்; கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறப்பார் என்று செத்துப் போன சாயிபாபா சொல்லியுள்ளார் என்பதெல்லாம் அடுத்த ஒரு திட்டமிட்ட மோசடிக்கு முகூர்த்தக்கால் நடுகிறார்கள் என்றே பொருள்.


சிவசக்தி வடிவமானவர் தான் மறைந்த சாயிபாபாவாம்; அப்படி யென்றால் குறிப்பிட்ட ஒரு மதச் சிமிழுக்குள் அடங்கிக் கிடப்பவர் என்று ஆகி விடவில்லையா? கிறித்துவரும், இஸ்லாமியரும் இவரை எந்தக் கண் கொண்டு பார்ப்பது? என்கிற வினாக்கள் எழத்தான் செய்கின்றன.

உண்மையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் சாயிபாபா ஒரு மேஜிக் வித்தைக்காரர், நாலு ரோடுகளில் வித்தை காட்டுபவர்கள் நம் நாட்டில் இல்லையா? அவர்களுக்குப் பிழைக்கத் தெரியவில்லை. இவரோ பக்திப் போதையில் சிக்கிக் கிடக்கும் மக்களை ஏமாற்றி ஏற்றம் கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதில் வெற்றி கண்டவர் என்று வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

நமது கழகத்தில் மந்திரமா? தந்திரமா? கலையில் விற்பன்னராகத் திகழ்ந்த புரபசர் கே.ஆர். குமார் நினைத்திருந்தால், சாயிபாபாவுக்கு மேல் போய் குந்தியிருக்கலாமே! இன்னும் எத்தனை எத்தனையோ நம் கருஞ் சட்டைத் தோழர்கள் இந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆயிற்றே! இந்தத் தோழர்கள் மக்களின் அறியாமை இருளை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சத்யநாராயண ராஜுவோ பிழைக்கத் தெரிந்த ஆசாமி, மக்களின் மடமையை அஸ்திவாரமாக்கி, அதன் மீது மாட மாளிகை கட்டி உல்லாச வாழ்வை மேற்கொண்டவர்.

ஒரு பி.சி சர்க்கார் நினைத்திருந்தால் அவர் கற்றறிந்த தந்திரக் கலையைப் பயன்படுத்தி ஆயிரம் சாயிபாபாக் களுக்கு இணையாக நடமாடியிருக்க முடியுமே! அவர்கள் எல்லாம் அதனை ஒரு கலையாகக் கொண்டவர்கள். பகவான் சாயிபாபா என்று நடமாடும் ஒருவரின் முகத்திரையைக் கிழித்து எறிய பிரபல பி.சி. சார்க்கார் விரும்பினார்.

ஒரு பெண்ணை இரண்டு துண்டாக்குவது, ஒரு யானையைக் காற்றில் மறைந்து போகச் செய்வது போன்ற மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சிகளை யெல்லாம் கண்மூடி கண் திறப்பதற்குள் செய்து காட்டும் அந்தக் கலைஞர் சாயிபாபாவைச் சந்திப்பதற்கு வாய்ப்பினைக் கேட்டார். அனுமதி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? தான் ஒரு அஸ்ஸாம் வியாபாரி என்றும் தனக்கு ஆஸ்மா நோய் இருக்கிறது என்றும், அதிலிருந்து குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறி, அனுமதியும் பெற்று சாயிபாபா ஆசிரமத்துக்குள் நுழைந்தாரே!

(பகவான் சாயிபாபா அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரியான தமாஷ்!)

சாயிபாபா ஆசீர்வதிக்கும் அறைக்குள் கடைசி நபராக நுழைந்தார் சர்க்கார்; அஸ்ஸாமும், இந்தியும் கலந்த மொழியில் பேசினார். சாயிபாபாவால் புரிந்து கொள்ள முடியவில்லை; புரியவில்லை என்ற தொனியில் தலையை அசைத்தார் (பகவானாயிற்றே எந்த மொழியைப் பேசினாலும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டாமா - இப்படியெல்லாம் யார் சிந்திக்கப் போகிறார்கள்?) மொழி பெயர்ப்புக்கு ஆள் ஏற்பாடு செய்தனர்; என்ன பிரச்சினை? என்று சாயிபாபா கேட் டார். ஆஸ்த்மா பிரச்சினை என்றார் பி.சி. சர்க்கார்; என்னைப் பார்க்க வந்து விட்டீர்களே, உங்கள் நோய் குணமாகி விடும்! என்றார் சாயி.

எனக்கு ஏதாவது மந்திர மருந்து, திருநீறு போன்று தாருங்கள் என்றார் சர்க்கார்.

கக்கத்தில் வைத்திருந்த திருநீற்றுப் பையில் இருந்த சரக்குத் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று சாயிபாபாவுக்குத் தயக்கம்.

சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழக்கப்பட்ட சாயி சீடர்கள் தானே! குறிப்பை உணர்ந்து சாயிபாபாவுக்கு முன்னிருந்த பலகாரத் தட்டு எடுத்த சீடர் அதில் ஒரு சந்தனத்தை நைசாகப் போட்டு அந்தத் தட்டை சாயிபாபா பக்கத்தில் வைத்தார்.

இந்த ஜாலங்கள் எல்லாம் அன்றாடம் அங்கு நடப்பதுதானே!

பாபா கையை அசைத்து சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்தார்; பி.சி. சர்க்காருக்கு இந்தத் தந்திரம் தெரியாதா? உடனே இவர் கையை அசைத்து பக்கத்துத் தட்டிலிருந்து ரசகுல்லாவைக் கையில் வரவழைத்துக் கொடுத்து அசத்தினார்.

அவ்வளவுதான் வியர்த்துக் கொட் டியது ஆசாமிக்கு; சத்தம் போட்டார்; சாயிபாபாகூட இருந்த சிஷ்யர் களுக்கோ ஆத்திரம் கரை புரண்டது.

நான்தான் பி.சி. சர்க்கார் என்று கூறி வெளியேறினார். இவ்வளவு தகவல் களையும் பி.சி. சர்க்காரே இம்பிரிண்ட் ஆங்கில மாத இதழில் (1983 ஜூன்) விரிவாக எழுதி பகவான் என்னும் மூடு திரைக்குள் மறைந்திருந்த மோசடிப் பேர் வழியின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுதே விடுதலையும் அதனை மொழி பெயர்த்து வெளியிட்டது (விடுதலை 21.7.1983)

உண்மை இவ்வாறு இருக்க, சாயிபாபா பெரிய மகான் என்றும், பகவான் என்றும், சிவனின் அவதாரம் என்றும் தூக்கிப் பிடிக்கின்றனர் என்றால் - இது எவ்வளவு பெரிய சமூக மோசடி!

இன்னொரு முக்கிய தகவலும் உண்டு.

1992-இல் புட்டபர்த்தியில் நவீன வசதிகளைக் கொண்ட திருமண மண்டபம் ஒன்றை சாயிபாபா கட்டி யிருந்தார்; அதன் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டில், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், ஆந்திர அமைச்சர் விஜய பாஸ்கர ரெட்டி, மத்திய விவசாய அமைச்சர் பல்ராம் ஜாக்கர் முதலியோரும் வந்திருந்தனர்.

அந்த விழாவில் திருமண மண்டபத்தை வடிவமைத்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ. இராமகிருஷ்ணா என்னும் கட்டடக் கலைஞருக்கு, விழா மேடையில் சாயிபாபா ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். உடனடியாக தன் கையை அசைத்துத் தங்க சங்கிலி ஒன்றை வரவழைத்து அந்தக் கலைஞருக்கு வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.


அந்த நிகழ்ச்சிகள் முழுவதும் ஆந்திரத் தொலைக்காட்சி நிறுவனத் தால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அரை டஜன் பேர்கள் ஒளிப்பதிவு (வீடியோ) செய்திருந்தனர்.

தொலைக்காட்சி நிறுவனத்தினர் தங்கள் நிலையத்துக்குச் சென்று போட்டுப் பார்த்தபோது பேரதிர்ச்சி ஒன்று அவர்களுக்காகக் காத்திருந்தது.

புட்டபர்த்தி சாயிபாபாவின் உதவியாளர் மேடையில் சாயிபாபா கட்டடக் கலைஞருக்குத் தர வேண்டிய நினைவுப் பரிசைத் தரும்போது அதனோடு சேர்த்து தங்கச் சங்கிலி ஒன்றையும் தெரியாமல் வழங்குகிறார்.

நினைவுப் பரிசுக்கும் கீழே தங்கச் சங்கிலியை வைத்திருந்தது வீடியோ காமிராவில் பதிவாகி இருந்தது. தனது ஒரு கையில் நினைவுப் பரிசினை வழங்கும் சாயிபாபா, அப்படியே தங்கச் சங்கிலியை கைக்குள் மறைத்து, பிறகு கை அசைப்பின் மூலம் கொண்டு வருவதாக நடித்து, அதனைத் தந்து விட்டார். பதிவான இந்தத் தகவல் சாயிபாபாவின் கவனத்துக்கு வந்தவுடன், உடனே அதனை எரித்துவிடும்படி கட்டளை யிடப்பட்டது.

சொல்பவர் பாபா ஆயிற்றே - கோடிக்கணக்கான சொத் துக்கு அதிபர் ஆயிற்றே _ அவ்வாறே அது எரிக்கப்பட்டது. ஆனாலும் தனியார் தொலைக்காட்சிகள் எடுத்த வீடியோவை என்ன செய்வது! அதற்கும் முயற்சி வேகமாக மேற்கொள்ளப் பட்டன. ஆனாலும் அதற்குள் அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேடு படத்துடன் அப்படியே வெளியிடவும் செய்து விட்டது (24.11.1992)

டெக்கான் கிரானிக்கல்லில் வெளி வந்த அந்தச் செய்தியைப் படத்துடன் விடுதலையும் வெளியிட்டது (26.11.1992 முதல் பக்கம் தலைப்புச் செய்தி)

பகவான் பெயரில் எவ்வளவுப் பெரிய மோசடி! இதற்கு இந்நாட்டில் உள்ள குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும், தலைவர்களும் பராக்குப் பாடுகிறார்கள் என்றால் இது நாடுதானா? நாகரிக உலகில்தான் நாம் வாழுகிறோமா? கூட்டத்துடன் கோவிந்தா போடு வதுதான் நல்லவர்களுக்கு அழகா?

பகவானுக்குப் பணம் எதற்கு? ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்தாம்; 50 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பாம்.

கை அசைப்பில் எதையும் சாதிக்கக் கூடிய ஒரு பகவானுக்கு ஏன் இவ்வளவு திரண்ட சொத்துகள்? கேள்வி கேட்பதுதானே அறிவு நாணயம்?

சாயிபாபா பார்ப்பனர் அல்லர் _ சூத்திரர்தான். ஆனாலும் அவர் குவித்து வைத்திருக்கும் திரண்ட சொத்துக்களை நிருவகிப்பது யார்? உள் குத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்குள்ளும் நுழைந்து தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விடுவார்கள் போல் தோன் றுகிறது.

டி.வி.எஸ். அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வேணு. சீனிவாசன், தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யஜித் என்ற இன்னொரு பார்ப்பனர், முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான சக்ரவர்த்தி என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்- இவர்களுள் ஒருவர் மோசடியாக சேர்க்கப்பட்ட சொத்துக்கு அதிபதியாக ஆகப் போகிறார்கள். கொட்டிக் கொடுத்த பக்தர்களோ வாயில் விரலை வைத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

மருத்துவமனைகளைக் கட்டினார்; கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார் என்பதெல்லாம் நல்ல காரியங்கள்தாம்; தவறு செய்கிறோம்; மக்களை மோசடி செய்கிறோம் என்பதைத் தெரிந்து தனக்குள் முற்றாக அறிந்த நிலையில் இவை போன்ற காரியங்களைச் செய்வது அவரைப் பொறுத்தவரை தவிர்க்கப்பட முடியாதவை ஆகி விட்டன என்பதுதான் உண்மை.

(அடுத்தடுத்துப் பல திடுக்கிடும் கசப்பான உண்மைகள் அணி வகுக்கும்)

------------------மின்சாரம் அவர்கள் 30-4-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

கடவுள் மறைவதில்லை என்று கூறும் பக்தர்களே!
பகவான் சாயிபாபா மறைந்துவிட்டார் என ஏன் பதறுகிறீர்?

கடவுளுக்கு இறப்பில்லை என்று கூறும் பக்தர்களே! பகவான் (சாயிபாபா) இறந்துவிட்டார் என்று நீங்களே கூறுகின் றீர்களே! என்று பக்தர்களின் அறியாமையை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கவுரையாற்றினார். அரக்கோணம் மாவட்டம் நெமிலி ஒன்றியம் பெரப்பேரியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் 28.4.2011 அன்று இரவு 7 மணிக்கு வெகு சிறப்பாக பெரப்பேரி பெரியார் ஊழியன் துரை. சக்ரவர்த்தி நினைவு மேடையில் நடைபெற்றது. பெரப்பேரி கிராமம் முழுமையும் மற்றும் வழிநெடுக இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கழகக் கொடிகளும், வண்ண விளக்குகளும் பார்த்தோர் வியக்கும் வண்ணம் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழர் தலைவர் உரை

இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையில் பேசியதாவது:

பெரியார் பிறந்திருக்காவிட்டால்.... என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். பெரியார் பிறந்திருக்காவிட்டால் நம்முடைய தோளில் துண்டு தொங்குமா? நம்முடைய வேட்டி முழங்காலுக்குக் கீழே இருக்குமா?

மார்பை மறைக்க உரிமை இல்லை

தாய்மார்கள் சிந்திக்கவேண்டும். நூறு வருடங் களுக்கு முன்னால், பெரியார் பிறப்பதற்கு முன்னால், நம்முடைய சமுதாயத்தில் இருந்த பெண்கள் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்கள் - நம்முடைய சகோதரிகள் மார்பை மறைக்கக் கூடிய உரிமையைப் பெற்றவர்களாக வாழவில்லை. வெட் கத்தோடு சொல்கிறோம்; இன்றைக்கு அந்நிலை மாறி போய்விட்டது. பெண்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக மற்றும் அனைத்துத் துறை களிலும் வளர்ந்திருக்கிறார்கள். இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? இதை மாற்றிய கொள்கைச் சீலர்தான் - இதோ, நாம் திறந்து வைத்திருக்கக்கூடிய சிலையாக நின்று கொண்டிருக்கும் நமது பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்தான் இந்த மாற்றத்திற்கான காரணகர்த்தா!
ஏன் பெரியாருக்கு சிலை வைக்கிறோம்? பெரியாருடைய சிலையை பார்க்கும்பொழுது, மனித உரிமை சம உரிமை, சமத்துவம் என்கிற உணர்வை நாம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அய்யாவிற்கு சிலை வைக்கிறோம். மற்றவர்களைப் போல இந்த சிலையை மூன்று சுற்று சுற்றி வந்தால், யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதெல்லாம் நடக்கும், அல்லது தேங்காய், பழத்தோடு விழுந்து கும்பிட்டால், நடக்கவேண்டியது நடக்கும்; கிடைக்கவேண்டியது கிடைக்கும். அரசை மரத்தைச் சுற்றி வருவதுபோல சுற்றி வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் போன்ற மூட நம்பிக்கைகளுக்காக நாம் சிலை வைக்கவில்லை. இவைகளையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொன்னாரே, நமக்கு அறிவை கொளுத்தினாரே, அறிவு வெளிச்சம் தந்தாரே, இருட்டிலிருந்து நம்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரே, அந்தத் தலைவர் தந்தை பெரியார்தான் இதோ சிலையாக நிற்கிறார் பாருங்கள் என்று தெளிவாக, அவருடைய தொண்டை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தானே தவிர, வேறொன்றுமில்லை. அடுத்த தலைமுறையி னருக்கு தந்தை பெரியாரின் பணியை, இந்த இயக்கத்தின் பணியை எடுத்துச் சொல்ல, தந்தை பெரியாரால் பலன் - பயன் பெற்ற தமிழர்கள் முனைப்பு காட்டவேண்டும் என்று குறிப்பிட்டார்.

பகவான் கவலைக்கிடமா?

மேலும் அவர் உரையில்,பகவான் கவலைக் கிடம் என்று தலைப் பிட்டு அனைத்து ஊட கங்களும் செய்தி வெளி யிட்டன. பகவானாக இருப்பவர் எப்படி கவலைக்கிடமாக இருக்க முடியும்? உடல் நிலைக் கவலைக் கிடமாக இருந்தால், அவர் எப்படி பகவா னாக இருக்க முடியும்? இதைத்தானே திராவி டர் கழகம் நீண்ட நாள்களாக கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு யாராவது பதில ளிக்க முடியுமா? எந்த ஊடகங்கள், பக்தர்கள், சாய்பாபா சக்தி மிகுந்த பகவான் என்று சொன் னார்களோ, இப்போது அவர்களே, பகவான் மறைந்தார் என்று சொல்லுகிறார்கள். பகவான்களுக்கு உயிர் தர வேண்டுமென் றாலும் மருத்துமவனை களைத்தான் நாட வேண்டி இருக்கிறது. இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே இதே பக வானை கொல்ல சதி நடந்ததாகவும் செய்தி வெளிவந்தது. பக வானை சாதாரண மனி தர்களால் கொலை செய்ய முடியுமா? என் பதை பக்தர்கள் சிந் தித்துப் பார்க்கவேண் டும் என்று தமிழர் தலைவர் உரையாற் றினார். (முழு உரை பின்னர் வெளிவரும்).
---விடுதலை” 30-4-2011

தமிழ் ஓவியா said...

பி.சி. சர்க்கார்

இந்தியாவின் புகழ்பெற்ற தந்திரக்கலை (மேஜிக்) நிபுணர் பி.சி. சர்க்கார். அவருக்கு மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெரு-மைப்-படுத்தியிருக்கிறது. இதற்குமுன் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து எட்டாண்டு-களுக்-குப்பின் கொல்கத்தா நகராட்சி ஒரு தெருவுக்கு இவரின் பெயரைச் சூட்டிச் சிறப்பு செய்தது.

இவர் செய்த தந்திரக் கலை என்பது மூட நம்பிக்-கை-களைச் சார்ந்ததல்ல; அறிவியல் பூர்வமாகவே நடத்தி வந்தார்.

இவரது நிகழ்ச்சி என்பது _ இசை, நடனம் உள்ளிட்ட பல கலை வண்ணங்கள் ஒளிரும் கலவையாகக் கண்-டோரை ஈர்க்கும் சிறப்புத்-தன்மை உடையது.

பணம் கொடுத்து அனு-மதிச் சீட்டு வாங்கி மக்கள் ஆர்வத்தோடு ஓடோடிப் பார்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். அத்தகைய தந்திரக்கலை மன்னருக்கு நடுவண் அரசு இத்தகைய சிறப்பு செய்தது பாராட்டத்-தக்கதாகும்.

கடவுள் சக்தியென்று கூறி, கையசைப்பில் பொருள்களை வரவழைப்பதாகக் கூறும் சாய்பாபாவை சந்திக்க பி.சி. சர்க்கார் விரும்பினார். ஒவ்-வொரு முறையும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னை அசாம் வியாபாரி என்று கூறிக்கொண்டு, தனக்கு ஆஸ்துமா நோய் நெடுநாளாக இருப்பதாகவும், சாய்பாபா-விடம் குணப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறிக்-கொண்டு சாய்பாபா ஆசிர-மத்துக்குள் நுழைந்துவிட்டார் பி.சி. சர்க்கார். ஒவ்வொரு-வராகத் தரிசனத்துக்காக அழைத்தார் சாய்பாபா.

பி.சி. சர்க்காரும் அழைக்-கப்பட்டார். சாய்பாபாவைச் சுற்றி அவரைச் சேர்ந்த சீடர்கள் உட்கார்ந்திருந்தனர்.

அசாம் மொழி, இந்தி மொழி ஆகியவற்றைக் கலந்து பேசினார் சர்க்கார். சாய்-பாபா-வால் அதனைப் புரிந்து-கொள்ள முடியவில்லை. மொழி பெயர்ப்பாளரை அழைத்துக்கொண்டு வந்தனர் (அவர்தான் பகவான் ஆயிற்றே _ அசாம் மொழி தெரியாதது ஏனோ?)

உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார் சாய்பாபா. ஆஸ்துமா வியாதி இருக்கிறது; அதைக் குணப்-படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன் என்றார் சர்க்கார். மந்திரத்தால் விபூதி கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டி-னார். கைவசம் வைத்திருந்த விபூதி தீர்ந்துவிட்ட நிலையில், ஒரு நிமிடம் சாய்பாபா திகைத்தார்.

சூ போட்டு சந்தனம் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சர்க்காரே கடைந்-தெடுத்த தந்திரக்கலை நிபுணர் ஆயிற்றே _ நடந்தது என்ன என்பதை நுனிப்பொழுதில் தெரிந்துகொண்டார்.

பலகாரத் தட்டு ஒன்றை எடுத்து வந்து சாய்பாபாவின் சீடர் அதில் சந்தனத்தையும் போட்டார்; அதை சர்க்காரும் கவனித்துவிட்டார் (பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா!) அவ்வளவுதான் பி.சி. சர்க்கார் திடீரென்று சாய்பாபா செய்த அதே தந்திரத்தைக் கையாண்டு, ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாய்-பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம் (பக்கத்தில் பலகார தட்டு இருந்தது அல்லவா!).

அவ்வளவுதான் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா; சீடர்கள் கூச்சல் போட்டு என்ன பயன்? பக-வானின் வேடத்தைக் கலைத்-தெறிந்து கம்பீரமாக வெளியில் வந்தார் பி.சி. சர்க்கார் (ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983) என்ன, பி.சி. சர்க்காருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது சரிதானே!

- மயிலாடன்.27-2-2010