Search This Blog

26.5.11

ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன்,


குற்றாலத்தில் பொதுக் கூட்டம்

தோழர்களே!

இன்று இங்கு பேசிய தோழர்களான பொன்னம்பலம், ஜீவானந்தம் ஆகியவர்கள் வெகு விளக்கமாகவும், எழுச்சியாகவும் பேசியதைக் கேட்டீர்கள். அவர்கள் பெரிதும் கடவுள், மதம், ஜாதி, செல்வவான்கள் ஆகிய தன்மைகள் ஒழிபட வேண்டும் என்று கருத்துப்படப் பேசினார்கள். இப்படிப் பேசியது உங்களில் அநேகருக்குப் பிடிக்காமலிருக்கலாம். சிலருக்கு மன வருத்தமும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் அவர்கள் உங்களுக்கு வெறுப்போ, அதிருப்தியோ ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசவில்லை. இன்றுள்ள இந்நாட்டு மக்கள் நிலையையும், உலக நிலையையும் உணர்ந்து பார்த்து இன்று நடைமுறையிலுள்ள மதம், ஜாதி, கடவுள் முதலியவைகள் ஒழியாமல் மனித சமூகத்துக்கு விமோச்சனமும், சாந்தியும் இல்லை என்பதை உணர்ந்து அதற்காகப் பேசினார்களே ஒழிய வேறில்லை.

என்னைப் பொருத்தவரை நானும் அவைகள் ஒழியப்பட வேண்டும் என்று சொல்வதோடு அவற்றையெல்லாம் ஆதரிக்கும் அரசியல் கிளர்ச்சிகளும், அரசியல்களும் ஒழிய வேண்டும் என்றும் சொல்லுபவன். ஏனெனில் அரசியலும், அரசியல் கிளர்ச்சிகளுமே மேற்கண்டதான கெடுதிகளை ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.

இந்தப்படி சொல்லுவதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது.

இந்த தேசத்து கடவுள்களின் யோக்கியதைகளை நீங்கள் சிறிது யோசித்துப் பாருங்கள். அவைகள் தானாகவே உண்டானவைகளாக இருந்தாலும் சரி, மனிதர்களாலேயே உண்டாக்கப்பட்டவைகளாகவே இருந்தாலும் சரி அவைகளால் நமது நாட்டுக்கும், மனித சமூகத்துக்கும் எவ்வளவு கேடுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

இந்த நாட்டுப் பொருளாதாரக் கேட்டுக்கும் கல்வி அறிவற்ற தன்மைக்கும் யார் ஜவாப்தாரி? என்பதை யோசியுங்கள்.

கடவுள்

இந்தக் கடவுள்கள் நம் நாட்டுச் செல்வங்கள் எவ்வளவை பாழ்படுத்துகின்றன. தென்னாட்டு கோவில்களுக்கு வருஷம் 2 1/2 கோடி ரூபாய் வருமானம். இது சர்க்கார் கணக்கு. அதற்காக மக்களுடைய பணம் செலவாவது மேற்கொண்டு 4, 5 கோடி ரூபாயாக இருக்கலாம். உங்கள் திருநெல்வேலி, மதுரை, ராமனாதபுரம், தஞ்சை ஆகிய ஜில்லாக் களை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் வரும்படிகளும் அதற்காக மக்கள் செய்யும் செலவுகளும் என்ன பயன் அடைகின்றன? இவ்வளவு பணம் பாழாகியும் இந்த நாட்டில் 100க்கு 8 பேர் தானே கையெழுத்து போடத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள். 100க்கு 75 பேருக்கு மெய் உழைப்பாளிகள் தரித்திரர்களாய் இருக்கிறார்கள். இத்தனை கோடி ரூபாய் பாழாகும்படியாக இருந்து கொண்டு, அனாவசியமான போக போக்கியத்தை அனுபவித்து வரும் கடவுள்கள் இந்த நாட்டு மக்களில் 100க்கு 92 பேர்களை தற்குறிகளாக வைத்து இருக்கின்றன என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்கள் நன்றி கெட்டவைகள் அல்லவா என்று கேட்கின்றேன். கல்விக்கும், கடவுளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்களுக்காக இவ்வளவு கோடி ரூபாய்கள் செலவாகும்படி ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். வீணாக பகுத்தறிவும், யோசனையும் இல்லாமல் "சுயமரியாதைக்காரர்கள் கடவுளை வைகிறார்கள்" என்று சொல்லுவதில் பயன் என்ன? இந்திய நாட்டையே இந்தக் கடவுள்கள் தானே இக்கதியாக்கி இருக்கின்றன. கடவுள்களுக்கு பெண்டு பிள்ளை, வீடு வாசல், சொத்துக்கள், நகைகள், தாசி வேசிகள், வைப்பாட்டிகள் எல்லாம் எதற்கு? இதைப் பார்த்துத் தானே ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ளுகிறான். நமது கடவுள்களுக்கு உர்ச்சவம் என்பதெல்லாம் பெரிதும் வருஷம் தோறும் கல்யாணம் செய்வது என்பதற்கு ஆகவே நடைபெறுகின்றன. கடவுளுக்கு கல்யாணம் எதற்கு? சென்ற வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று. ஏதாவது தவரி விட்டதா? அல்லது எந்தக் கோர்ட்டின் மூலமாவது கல்யாண ரத்து ஆகி விட்டதா? இது சிரிப்புக்கிடமான கல்யாணமல்லவா? இந்தக் கல்யாணங்கள் சுயமரியாதை முறைப்படி நடப்பதாயிருந்தால் நமக்கு கவலையில்லை. அப்படிக்கில்லாமல் எவ்வளவு செலவு எத்தனை கால மெனக்கேடு, எத்தனை பேர்களுக்கு கஷ்டம். பெரிய ராஜா வீட்டுக் கல்யாணத்துக்கு மேல் நடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் இந்தக் கடவுள்கள் எல்லாம் ஒழியாமல் எப்படி மனிதன் சீர்பட முடியும்? எப்படி அறிவு பெற முடியும்? எப்படி இந்த நாட்டு செல்வமும், நேரமும் பயனுள்ள காரியத்துக்கு உபயோகப்படுத்தப்பட முடியும்? கோபிப்பதில் பயன் என்ன? எங்களை நாஸ்திகர்கள் என்று சுலபமாக சொல்லிவிடலாம். மற்ற நாட்டார்கள், மற்ற மதக்காரர்கள் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் பார்த்து நாஸ்திகர்கள், அஞ்ஞானிகள் என்று சொல்லுவதோடு மாத்திரமல்லாமல், காட்டுமிராண்டிப் பிராயமுள்ளவர்கள் என்று சொல்லுகிறார்களே. யாருக்காவது மானமோ, வெட்கமோ இருக்கின்றதா? எந்தக் கடவுளாவது இதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துவிட்டதா? அல்லது அவர்களை இப்படிச் சொல்ல வேண்டாம் என்றாவது சொல்லி வைத்ததா?

ஒன்றும் இல்லையே. ஆஸ்திகம், நாஸ்திகம் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் கையில் வலுத்தவன் கதையாகத்தானே இருக்கின்றது. ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படியாகத்தானே மக்கள் நடந்து காட்டுகின்றார்கள். ஆதலால் தோழர்களே இந்தக் கடவுளையும், இந்த ஆஸ்திகத் தன்மையையும் ஒழிக்கப்படாமல் மனிதன் மனிதத்தன்மையை அடைய முடியாது என்பது எங்களது அபிப்பிராயமாகும். மற்றும் மனிதனுடைய இழிவும், தரித்திரமும், அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழிவாய் நடத்துவதும், ஒரு மனிதனது உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக் கொண்டு, உழைத்தவனை தரித்திரனாய், நோயாளியாய், அடிமையாய் வைத்திருப்பதும் கடவுள் செயல் என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளையாவது ஒழிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கின்றேன்.

ஆகவே நீங்கள், சுயமரியாதைக்காரர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகின்றார்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து பாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அனாவசியமாய் உங்களுக்கே புரியாத வார்த்தையாகிய கடவுள் என்கின்ற வார்த்தையைக் கட்டி அழுது கொண்டு "எல்லாம் இருக்கட்டும். கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா?" என்கின்ற அசட்டுத்தனமும், முட்டாள்தனமுமான கேள்வியை கேட்பதில் உங்கள் புத்தியை செலவழிக் காதீர்கள். அதனால் எங்களை மடக்கி விடலாம் என்றோ எங்களை பழிப்புக்கு உள்ளாக்கி விடலாம் என்றோ கருதி விடாதீர்கள்.

உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?

நீங்கள் எப்படிப் பிறந்திருந்தால்தான் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?

உலகில் உள்ள வஸ்துக்கள், உலகில் நடக்கும் செய்கைகள் எல்லாம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது, எப்படி நடைபெறுகின்றது என்பதை எந்த மனிதனாவது அறிந்திருக்கின்றான் என்று நீங்கள் சொல்லிவிட முடியுமா? அது யாரால் எப்படி நடந்தால்தான் என்ன?

உங்களுக்கும் எனக்கும் தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கிறது. இன்று பாடுபட்டாலும் தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் எவ்வளவோ இருக்கின்றன.

அவற்றைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டும் தெரிய வேண்டும் என்று ஆசைபட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் சமுத்திரத்து அலைகளையும், மணலையும், மழைத் துளிகளையும் எண்ண ஆசைப்படும் மூட சிகாமணி களுக்கே ஒப்பாவார்கள்.

மக்கள் படும் கஷ்டங்கள், நமது கண்களுக்குத் தெரிகின்றன.

மற்ற மக்களால் நாம் இழிவும், துன்பமும் அனுபவிப்பதை நாம் உணர்கின்றோம். இதுவே முதலில் ஒழிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்தாலானாலும் சரி, இவற்றிற்கு ஆதாரமாய் இருக்கும் கடவுள் உள்பட எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று தான் நாங்கள் சொல்லுகின்றோம்.

இது சரியா? தப்பா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். ஆகுமா? ஆகாதா? என்பதைப் பற்றிப் பிறகு யோசிப்போம்.

மதம்

கடவுளைப் போலவே நமது மதங்களும் இருந்து வருகின்றன.

ஒரு மதத்துக்கு மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன என்றால், "அவைகள் இருக்க வேண்டியதுதான்" என்றால், அப்படிப்பட்டவர்கள் ஒரு கடவுளுக்கு மேற்பட்ட கடவுள்களையும் ஒப்புக் கொண்டோ, அனுமதித்தோ தான் ஆக வேண்டும்.

வேண்டுமென்றால் ஒரு மதத்தைப் பார்த்து மற்ற மதக்காரன், "உன்னுடைய மதம் மதமல்ல. என்னுடைய மதம் தான் உண்மையான மதம். கடவுளால் அனுப்பப்பட்ட அல்லது சொல்லப்பட்ட மதம்" என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஒரு மதக்காரனின் கடவுள் போலவேதான் மற்ற மதக்காரனின் கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது.

அவற்றிற்கு ஏதாவது பரீக்ஷைக் கருவி உண்டா?

ஒருவனுடைய கடவுளின் குணம் போலவே மற்றவனுடைய கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? அதற்கு ஏதாவது நிபந்தனை உண்டா? ஒரு கடவுளை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உரிமை இருந்தால் பல கடவுள்களை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உள்ள உரிமையை யார் தடுக்க முடியும்? யாருக்கு அதிகாரம் யார் கொடுத்திருக்கிறார்கள்?

ஆதலால் ஒரு கடவுள் மதக்காரனே மகா உத்தமமானவன் என்றும் பல கடவுள் மதக்காரன் மோசமானவன் என்றும் சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

நாம் இங்கு மதத்தைப் பற்றி கவனிக்க வேண்டியதெல்லாம் எந்த மதமாவது மக்கள் எல்லோரையும் இன்பமாய், செழுமையாய், சமத்துவமாய் வாழ வைத்திருக்கிறதா? வாழ வைக்க முடிந்ததா? என்பதுவே யாகும்.

உலகிலுள்ள எந்த மதத்தை அனுசரிக்கின்ற மக்களுக்குள்ளும், எந்த மதத்தை அனுசரிக்கிற தேசத்திற்குள்ளும், ஏழை பணக்காரன், எஜமான் அடிமை, உழைப்பாளி உழைப்பான் பயனை அனுபவிக்கிறவன், பிரபு பிச்சைக்காரன், வித்துவான் முட்டாள், படித்தவன் தற்குறி, மெத்தை வீட்டில் இருப்பவன் ஓட்டைக் குடிசைகூட இல்லாதவன், சுகாதார வசதி உள்ளவன் சுகாதார வசதியில்லாதவன், மேல்மகன் கீழ்மகன், உழைக்காமல் சாப்பிடுபவன் உழைத்தும் பட்டினி கிடப்பவன், அளவுக்கு மிஞ்சி வேலை செய்து சம்பாதித்து பணம் மீத்து வைப்பவன் வேலையே இல்லாமல் திண்டாடுகின்றவன் என்பது போன்ற வித்தியாசங்கள் இல்லை என்று யாராவது சொல்லக் கூடுமா. இது முன் ஜன்ம கர்ம வினை என்றால் என்ன? அல்லது கடவுள் சித்தம் என்றால் என்ன? கஷ்டம் வித்தியாசம் எல்லாம் ஒன்று போல் தானே இருக்கிறது?

ஒரு மதத்தில் "ஆண்டிக்கும் அரசனுக்கும் வித்தியாசமில்லை" என்று சொல்லப்படுமானால், மற்றொரு மதத்தில் "கழுதைக்கும், மகான்களுக்கும் வித்தியாசம் இல்லை. எல்லா உள்ளத்திலும் நானே ஆத்மாவாய் இருக்கிறேன்" என்று கடவுளே சொன்னதாக அவர்கள் வேதங்கள் வேதாந்தங்கள் சொல்லுகின்றன.

இப்படிப்பட்ட சிங்காரப் பேச்சுகளால் பயனென்ன?

இவற்றால் எல்லாம் மக்களை மக்கள் ஏமாற்றத்தான் முடியுமே ஒழிய ஒரு வேளைக் கஞ்சிக்குப் போட வேண்டிய உப்பு மண்ணுக்குக்கூட உதவாது என்றுதான் சொல்லுவேன்.

நான் அனேக தேசம் பார்த்து இருக்கிறேன், பல மத மக்களையும் சந்தித்திருக்கின்றேன். எங்கும் பசிக் கொடுமை பிச்சைக்காரர் தொல்லை, பணக்காரர்கள் கொள்ளை, ஆண் பெண் பேதம், மனிதனுக்கு மனிதன் கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய காரியங்கள் இருந்துதான் வருகின்றன.

இதற்கு எந்த மதமானாலென்ன? பட்டினி கிடப்பவனும், பட்டினி ஆக்குபவனும் இந்து மதத்தின் பேரால் இருந்தாலென்ன? கிருஸ்து மதத்தின் பேரால் இருந்தால் என்ன? இஸ்லாம் மதத்தின் பேரால் இருந்தால் என்ன? பார்சி மதத்தின் பேரால் இருந்தால் என்ன? சீக் மதத்தின் பெயரால் இருந்தால் என்ன? ஆரிய சமாஜ்யத்தின் பேரால் இருந்தால் என்ன? பிரமசமாஜ மதத்தின் பேரால் இருந்தால் என்ன? அல்லது சைவ, வைணவ, ஸ்மார்த்த முதலிய எந்தப் பிரிவு மதங்களின் பேரால் இருந்தால் என்ன? எல்லாம் மக்கள் வாழ்க்கை நிலையை ஒன்றுபோல் தானே நடத்துகின்றன.

இந்துமதமானது ஏழ்மைக்கும் கொடுமைக்கும் "அவனவனின் முன் ஜன்ம கர்மத்தின் பயன்" என்றால் மற்ற மதங்கள் "கடவுள் சித்தத்தின் பயன்" என்றுதான் சொல்லுகின்றனவே ஒழிய அதை நான் தீர்த்து விடுகின்றேன் என்னிடத்தில் ஏழை பணக்காரர் என்கின்ற பிரிவு இல்லை என்று எந்த மதமும் சொல்லுவதே கிடையாது. வேண்டுமானால் ஒவ்வொரு சிறு காரியங்களுக்கு ஒவ்வொரு மதம் அனுகூலமாக இருக்கலாம்.

ஒரு மதத்தில் தீண்டாமை இருந்தால் மற்றொரு மதத்தில் பாராமை இருக்கலாம். இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொன்று அனுகூல மானதாக இருக்கலாம். ஆனால் இன்று உலகம் பூராவும் இருந்து வரும் பொருளாதார பேதம், சமூகக் கொடுமை முதலியவைகளுக்கு மதங்கள்தான் அனுகூலமாயும் ஆதரவாயும் இருந்து வருகின்றன என்பதை நான் உணர்கிறேன்.

மதத்தோடு சம்பந்தப்படாத ஏழ்மையும் தரித்திரமும் கொடுமையும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எல்லா மதமும் சகல காரியத்தையும் ஆண்டவன் செயல் என்றுதான் சொல்லுகின்றன.

ஆனால் தனக்கு இஷ்டமில்லாத காரியங்களை மாத்திரம் அந்த குறிப்பிட்ட மனிதன் செயல் என்று சொல்லி ஆத்திரப்படுகின்றன.

இப்படிப்பட்ட குளறுபடியான மதங்கள் மக்களுக்கு என்ன பயனைத் தரும்? இது வரையாவது என்ன பயனைத் தந்து வந்தது? ஆதலால் தான் சமதர்மத்துக்கு மதம் விரோதம் என்று சொல்ல வேண்டி வருகிறது.

செல்வவான்

மற்றும் தோழர் ஜீவானந்தம் அவர்கள் செல்வவான் என்கின்ற தன்மையும் ஒழிந்தால்தான் பொருளாதாரக் கஷ்டம் ஒழியும் என்றார்.

நான் அதுவும் சரி என்றே சொல்லுவேன்.

செல்வவான்களின் செல்வங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பதையும் அது எப்படி செலவழிக்கப்படுகின்றது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவு ஏழை உழைப்பாளி மக்களின் உழைப்பின் பயனை கொள்ளைக் கொண்டால் ஒருவன் செல்வவானாக முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட பணம் அனாவசியமான கட்டடங் களுக்கும், கல்லுருவங்களுக்கும், கோட்டைகள் கட்டுவதற்கும், உலோக உருவங்களுக்கும், கல்யாண உர்ச்சவம் தேர் திருவிழா செய்வதற்கும், சோம்பேரிகளுக்கு சோறு போட்டு தடி ராமன்கள் ஆக்குவதற்கும், பால், நெய், எண்ணெய் குடம் குடமாகக் கல்லிலும், நெருப்பிலும் கொட்டுவதற்கும் வீணாக்கப்படுகின்றனவா இல்லையா?

மற்றொரு புறத்தில் கல்யாணம், கருமாதி, பிறந்த நாள், புதுமை, 60ம் கல்யாணம், திவசம், பண்டிகை முதலிய காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா?

மற்றொரு புறத்தில் தாசிகள், வேசிகள், சாராயன வகைகள், சூதாட்ட வகைகள், மோட்டார் கார்கள் என்பன போன்ற காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா?

செல்வங்களை இந்தப்படி பாழாக்கும் செல்வவான்கள் ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?

இந்தக் குற்றாலத்தில் நான் பார்க்கின்றேன். இன்று சுமார் 100 தாசிகளுக்கு மேல் குடியேறி இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் 4, 2 நாட்டுக்கோட்டை செல்வவான் உள்பட பல பிரபுக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் கூட்டிக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.

சூதாடியதற்காக போலீசார் இரண்டொரு தடவை பிடித்தும் அவர்களுக்கு கப்பம் கட்டி விட்டு மறுபடியும் அதே காலக்ஷேபமாக இருக்கிறார்கள்.

இன்னும் என்ன என்னமோ நடக்கின்றன. மற்றபடி பெரிய பெரிய ஜமீன்தார், மிட்டாதார், ராஜா பட்டக்காரர், சர் பட்டக்காரர் முதலியவர்களின் யோக்கியதையை சொல்ல வேண்டுமா?

மற்றும் சுதேச ராஜாக்கள் முதலியவர்கள் சங்கதி சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட செல்வவான்கள் ஒழிவதால் யாருக்கு என்ன நஷ்டம் என்று யோசித்துப் பாருங்கள்.

மடாதிபதிகள்

கடவுளையும், மதத்தையும், செல்வவான்களையும் காப்பாற்றும் மடாதிபதிகள், குருமார்கள் யோக்கியதையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு மடத்துக்கு ஆயிரக்கணக்கான வேலி நிலங்களும் வருஷம் பதினாயிரம் ரூபாய், லட்சம் ரூபாய் என்று சொல்லும்படியான வரும்படிகளும் இருந்து வருகின்றன.

இவை மக்களுக்கு என்ன பயனைத் தருகின்றன. அயோக்கியர்களுக்கும், சோம்பேரிகளுக்கும் குடி கேடர்களுக்குமே பயன் அளிக்கின்றன. இப்படிப் பட்ட மடங்கள் தன்மையும் குருமார் தன்மையும் அனுமதிக்கப்படலாமா?

5 லட்ச ரூபாய் செலவிட்டு ஒரு தொழிற்சாலை வைத்தால் தினம் சராசரி 2500 பேர்களுக்கு தொழிலும் நல்ல ஜீவனமும் இருக்கும்படி தொழிற்சாலைகள் கட்டலாம்.

நமது நாட்டு கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும், மடங்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து தொழிற்சாலைகள் கட்டினால் இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ, ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரி நிகர் சமானமான மனிதர்களாகவே காணப்படலாம்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாத்திரம் வருஷம் 20 லட்ச ரூபாய் வரும்படி வருகின்றது. எனவே இந்த வரும்படியில் வருஷம் 4 தொழில்சாலை கட்டி 10000 பேர்கள் வீதம் நிரந்தரமாய் வேலைகள் கொடுத்துக் கொண்டே போகலாம்.

நமது தொழில்சாலை சாமான்கள் உலக சந்தைகளில் எல்லாம் கேட்ட விலைக்கு விற்கலாம்.

ஆகவே சுயமரியாதைக்காரர்கள் ஏழை மக்கள், பாமர மக்கள் இருக்கும் நிலைமையையும், படும் கஷ்டத்தையும் உணர்ந்து இதற்கு என்ன காரணம் என்பதை துருவிக் கண்டு பிடித்து, பிறகு தான் கடவுள், மதம், செல்வவான் மடாதிபதிகள் என்பவற்றைப் பற்றி குறை கூற முன் வந்தார்களே ஒழிய மற்றபடி அவர்களால் கடவுளாகவோ மத கர்த்தாக்களாகவோ, செல்வவான்களாகவோ ஆவதற்கு அல்ல என்பதை உங்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்ளுகிறேன்.

தோழர்களே, நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைச் சொன்னோம். நீங்கள் உங்கள் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு சரி என்று பட்டபடிக்கு நடந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக இந்தக் கூட்டம் கூட்டி வைத்த தோழர் சிங்காரவேலு பாண்டியன் அவர்களுக்கும், இங்கு பேசிய தோழர்கள் ஜீவானந்தம், பொன்னம்பலம் அவர்களுக்கும், இவ்வளவு நேரம் மழைத் தூரலிலும், குளிரிலும் பொறுமையாக இருந்து கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கும் எனது நன்றியறிதலையும் வந்தனத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

-------------------------- 06.08.1935 ஆம் நாள் குற்றாலம் அய்ந்தருவி சாலை வடபுரம் தெப்பக்குள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தந்தைபெரியார் அவர்கள் தலைமையேற்று ஆற்றிய உரை. - ”குடி அரசு” சொற்பொழிவு 11. 08.1935

0 comments: