Search This Blog

15.5.11

தெய்வீக ஆற்றல் கொண்டவரா சாயிபாபா?


அறிவியல் அறிஞர் எம். பார்கவா இந்துவில் எழுதிய ஆய்வுக் கட்டுரை


(புஷ்பா எம். பார்கவா தேசிய அறிவியல் ஆணையத்தின் முன்னாள் தலைவ ராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோ சனைக் குழுவின் முன்னாள் உறுப் பினராகவும், அய்தராபாத் செல்லுலர் மற்றும் மொலகுலர் பயாலஜி மய்யத்தின் தோற்றுநரும், முன்னாள் இயக்குநராகவும் இருந்தவர்.)

புட்டபர்த்தி சாயிபாபா தெய்வீக சக்தி கொண்டவர் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்யே, அவர் வெறும் சாதாரண வித்தை காட்டுபவரே (மேஜிக் செய்பவரே) என்பதைப் பிரபல அறிவியல் அறிஞர் எம். பார்கவா இன்றைய இந்து ஏட்டில் எழுதியுள்ளார். அதன் மொழியாக்கம் வருமாறு:


சத்யசாய் பாபாவின் வாழ்க்கையிலிருந்தும், இறப்பிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதால், அவர் இறந்த பிறகு புழுதியைப் போன்று எழுந்த அவரைப் பற்றிய பல்வேறுபட்ட கருத்துகள் அனைத்தும் அடங்கிய பிறகு, அவரைப் பற்றியும், அவரது பணியைப் பற்றியும், அவற்றின் பாதிப் புகள் பற்றியும் உணர்ச்சி வசப்படாமல், ஆக்கபூர்வமாக மதிப்பீடு செய்வதற்கான நேரமிது.

(1) சீரடி சாய்பாபாவின் மறுஅவதாரம், தான் என்றும் ,

(2) தெய்வீகத்தைப் பிரதிபலிக்கும் தானே கடவுள் என்றும்,

(3) அதன் காரணமாக அழியக் கூடிய எந்த மனிதரும் பெற்றிராத ஆற்றலை தான் பெற்றிருப்பதாகவும்,

(4) பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் தன்னிடம் வருபவர் களுக்கு உதவியையும், மனஅமைதியையும் அளிப்பேன் என்றும்,

(5) மருத்துவமனைகளைத் துவக்கி நடத்துவது, கிராம மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்குவது போன்ற அறப் பணிகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் - அவர் கூறிக்கொண்டவை, மிகவும் சாதாரணமான, தாழ்ந்த ஒரு நிலையி லிருந்து புகழின் உச்சிக்கு அவர் வளர்ந்ததற்கு அடிப்படையாக அமைந்தன.


மறுபிறப்பு என்று எதுவும் இல்லை


மேற்குறிப்பிட்டவாறு அவர் தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டவற்றையும், அவரது செயல்களை யும் ஒன்றன் பின் ஒன்றாக இப்போது நாம் ஆராய்வோம். மறுபிறப்பு உண்டு என்பதற்கு ஒரு சிறு ஆதாரமும் இல்லை.

மறுபிறப்பு என்ற கருத்தே அனைத்து அறிவியல் கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். மறுபிறப்பு என்று கூறிக் கொண் டவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் மேற்கொள் ளப்பட்ட புலன் விசாரணை அவர்கள் கூறியது அனைத்தும் பொய் என்றே மெய்ப்பிக்கப்பட்டது.


அற்புதங்கள் என்னும் மோசடி


கடவுளின் அவதாரம் என்று தன்னைப் பற்றி அவர் கூறிக்கொண்டதைப் பொறுத்தவரை, அவர் காட்டிய ஒரே ஆதாரம், தன்னால் அற்புதங்களைச் செய்ய முடியும் என்று சில அற்புதங்களைச் செய்து காட்டியதுதான். உண்மையைக் கூறவேண்டு மானால் அவர் எப்போதுமே எந்த அற்புதத்தையும் நிகழ்த்தியதே இல்லை. இன்னும் கூறப் போனால், எவர் ஒருவராலும் கூட எப்போதும் எந்தவித அற்புதமும் நிகழ்த்தப்பட்டதே இல்லை. மதத் தலைவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்பு தங்கள் அனைத்தும் மதவாதிகளின் கண்டு பிடிப்புகளேயாகும்.

ஒரு எடுத்துக் காட்டைக் கூற வேண்டுமானால், அன்னை தெரசா அவர்களை நான் சந்தித்தபோது, தனது வாழ்நாளில் எந்த ஒரு அற்புதத்தையும், தான் நிகழ்த்தியதாக அவர் கூறிக்கொள்ளவே இல்லை. ஆனால் அவர் இறந்த பிறகு அவரைப் புனிதராக அறிவிப்பதற்காக இவர் நிகழ்த்தியதாக இரண்டு அற்புதங்களைக் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்கள். பொது மக்களின் பார்வையில் சாயிபாபா செய்ததாகக் கருதப்பட்ட ஒவ்வொரு அற்புதச் செயலும் எந்த ஒரு சாதாரண வித்தை காட்டுபவராலும் (மேஜிக் செய்பவர்) செய்யப்பட இயன்றவைதான்.


அய்தராபாத் செல்லுலர், மொலக்குலர் பயாலஜி மய்யத்தில் பணியாற்றி வந்த என் சக பணியாளர் டாக்டர் எம்.டபிள்யூ. பண்டிட் அத் தகைய அற்புதங்களையெல்லாம் பலரும் காணும் படி செய்வார். அதைப் போலவே காலம் சென்ற புகழ்பெற்ற பகுத்தறிவாளரான பிரேமானாந்தாவும் அத்தகைய அற்புதங்களைச் செய்து காட்டுவார்.

உங்களுக்கு வேண்டுமானால் நரேந்திர நாயக்கை நீங்கள் கேட்டால், அவர் வந்து சாய்பாபா செய்தாகக் கூறப்படும் ஒவ்வொரு அற்புதத்தையும் -மோதித்தை அல்லது ஜப்பான் கைக்கடிகாரத்தை அல்லது விபூதியை வரவழைப்பது அல்லது அவரது ஒளிப்படத்திலிருந்து விபூதி கொட்டச் செய்வது - போன்ற அனைத்து அற்புதங்களையும் உங்களுக்குச் செய்து காட்டுவார்.


தனது தெய்வீக ஆற்றலால் நோய் எதையும் அவர் குணப்படுத்தியதில்லை


நோய்களை அற்புதம் மூலம் குணப்படுத்திய தாக அவர் கூறியதைப் பொறுத்த வரை, அத்தகைய முயற்சிகளில் அவர் வெற்றி அடைந்ததாகவே நாம் கேள்விப்பட்டதில்லை. எனது உறவினரின் மகனான சிறுவன் ஒருவன் தீர்க்க முடியாத நோயினால் துன்புற்று வந்தான். அவனை ஆசீர்வதித்த சாய்பாபா அவன் குணமடைவான் என்று கூறினார். குழந்தை இறந்த பிறகு திரும்ப சாய்பாபாவிடம் சென்ற எனது உறவினப் பெண்ணிடம், என்னிடம் குழந்தை வந்து சேர்ந்ததே சிறந்தது; நான் அதை அழைத்துக் கொண்டு விட்டேன்.

அதனால் கவலைப் படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அவர் கூறினார். அவரால் குணப்படுத்தப்பட்டவை என்று கூறப்படும் நோய்கள் எல்லாம் சாய்பாபாவின் தெய்வீக ஆற்றலால் மட்டுமே குணப்படுத்தப் பட்டன என்று எப்போதுமே நேரடியாக மெய்ப் பிக்கப்பட்டதில்லை. அவை இயற்கை யாகவோ அல்லது மனோதத்துவ முறையிலாவதோ குண மடைந்து இருக்கலாம்.

இவற்றிற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதனால்தான், பெங் களூரு பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் நரசிம்மையாவையோ, பிரேமானந்தாவையோ தன் அருகில் வருவதற்குக் கூட சாய்பாபா எப்போதுமே அனுமதித்தது இல்லை. நரசிம்மையா மீது வன்முறைத் தாக் குதல்களை ஒரு முறை நடத்தியவர்கள் சாய்பாபா வின் ஆட்கள்தான் என்றும் நம்பப்படுகிறது.


ஒரே ஒரு புல்லை வரவழைக்க முடியாதவர் சாயிபாபா


சில ஆண்டுகளுக்கு முன்பு, கனடா நாட்டின் அருகே நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த சி.எஸ்.அய்.ஆர். அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் டாக்டர் ஒய். நாயுடம்மா, முன்னொரு காலத்தில் சாயிபாபாவின் தீவிர பக்தராக இருந்த பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான டாக்டர் எஸ். பகவந்தம் அவர்களுடன் சென்று சாயி பாபாவை சந்தித்த நிகழ்ச்சி ஒன்றை என்னிடம் கூறினார்.

சாயிபாபா வின் முன்னால் தன் இருகைகளையும் கூப்பி மிகுந்த மரியாதையுடன் நின்றிருந்த நாயுடம்மா, தனது கைகளில் இருந்து ஒரே ஒரு புல்லை மட்டும் வரவழைத்துக் காட்டு மாறு சாயிபாபாவிடம் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்தால் அது ஓர் அற்புதம்தான். ஆனால், அவ்வாறு சாயிபாபா புல்லை வர வழைக்கவுமில்லை; நாயுடம்மா ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.


மோசமான வழிகளில் பொருள் ஈட்டியவர்கள் எல்லாம் கூட அறப்பணி செய்கின்றனர்


அவரது அறப்பணிகளைப் பொறுத்தவரை, மோசமான வழிகளில் தாங்கள் ஈட்டிய செல் வத்தைப் பற்றி தேவையற்ற கவனத்தை ஈர்ப் பதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு அறப் பணி களில் ஈடுபடுபவர்கள் நாட்டில் எண்ணற்றவர்கள் உள்ளனர். அவரது அளவற்ற செல்வத்தைப் பற்றிய கணக்கு வழக்குகள் பராமரிப்பது எப்போதுமே வெளிப்படையாக இருந்ததில்லை.


சாயிபாபாவின் ஒரே சாதனை எண்ணற்ற பெரிய மனிதர்களைக் கவர்ந்ததுதான்


சாயிபாபாவின் அசாதாரணமான ஒரே சாதனை என்னவென்றால், பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல்வாதிகள், பெரிய அரசியல் அதிகாரிகள், சட்டமியற்று பவர்கள், சட்டத்தைக் காப்பவர்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் என்று பெரும் எண்ணிக்கை கொண்ட மக்களைத் தன் தீவிர பக்தர்களாக, ஆதரவாளர்களாக நியமிக்கச் செய்ததுதான்.


அரசியல்வாதிகள் மரியாதை செலுத்த படையெடுத்ததுதான் பெரிய தேசிய சோகம்


சாயிபாபாவின் இறப்பு ஒரு தேசிய சோகமல்ல. தேசிய சோகம் என்னவென்றால், அரசு மரியாதையுடன் அவர் அடக்கம் செய்யப் பட்டதும், துக்ககாலம் என்று அரசு அறிவித்ததும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி வளர்ப்பது என்ற அரசமைப்புச் சட்டப்படியான கடமையைப் புறம் தள்ளிவிட்டு, கட்சி வேறு பாடின்றி பிரதமர், தேசிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களின் அரிய நேரத்தையும், பொருளையும் செலவழித்து சாயிபாபாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்ததும்தான்.

-------------- நன்றி: "தி ஹிந்து" 15-5-2011 தமிழில் த.க.பாலகிருட்டிணன் -"விடுதலை”15-5-2011

0 comments: