Search This Blog

18.5.11

பெரியாரை அறிவோமா?


வாசக நேசர்களே....இது தந்தை பெரியாரின் உழைப்பு, தொண்டு, போராட்டம், குணநலம் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் புதிய பகுதி.படியுங்கள். நம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு இதழிலும் 10 செய்திகள் கேள்வி வடிவில் இடம் பெறுகிறது. படித்துவிட்டு சிறிது நேரம் சிந்திக்கலாம். பின்னர் விடைகளை அறிய இறுதிப் பக்கத்திற்கு வரலாம்.

1. பெரியார் மனித நேய மாண்பாளர் என்பதற்கு எடுத்துக்காட்டு

அ) பல்வேறு ஊர்களிலும் மருத்துவமனை அமைத்தார்.

ஆ) பக்தர்களையும் மதித்தார்.

இ) தம் தொண்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கான தண்ணீர்ப் பந்தல்களை அமைத்தார்.

ஈ) ஈரோட்டில் பிளேக் நோயால் பலர் மாண்டபோது அனேக பிணங்களைத் தம் தோள் மீது தூக்கிச் சென்று அடக்கம் செய்தார்.

2. ஜாதி இல்லை, மதம் இல்லை என்று சொன்ன பெரியார் மதவாதிகளைப் போல தாடி வைத்துக் கொண்டதற்கான காரணம் என்ன?

அ) ரஷ்ய அறிஞர்கள் தாடி வைத்திருந்ததால்.

ஆ) காலச் செலவையும், பொருட்செலவையும் குறைக்க.

இ) தம்மை மற்றவர்கள் மகான் என்று நினைக்க.

ஈ) அழகிற்காக

3. பின்வரும் கூற்று யாருடையது?

வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை அளவிடற்பாலது. அவர் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் அமிதவாத (தீவிரவாத)க் கொள்கையை உடையவராக இருந்தார். சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தக்க தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒருவரே ஆவார்
அ) என் சிவராஜ் பி.ஏ.பி.எல்

ஆ) கக்கன்

இ) சிவசண்முகம் பிள்ளை

ஈ) தொண்டு வீராசாமி

4. பெரியார் ஈ.வெ.ராவின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட திருப்பத்திற்குக் காரணம் எது?

அ) அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆதல்.

ஆ) கோவிலில் தமிழில் வழிபடுதல்.

இ) இந்தி ஆதிக்க எதிர்ப்பு.

ஈ) வகுப்புரிமை (இட ஒதுக்கீடு)

5. ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராகப் பெரியாரைத் துணைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட சங்கத்தின் பெயர்

அ) ஹோம் ரூல் இயக்கம்.

ஆ) சென்னை மாகாணச் சங்கம்.

இ) தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

ஈ) அதி தீவிரவாதிகள் சங்கம்

6. வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தந்தை பெரியார்

அ) சிறைக்குச் செல்லாமல் புதுவையில் தலைமறைவானார்.

ஆ) கைது செய்யப்பட்டு 6 மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தார்.

இ) நான்கு மாதத்திலேயே விடுதலை செய்யப்பட்டார்.

ஈ) இவற்றில் எதுவுமில்லை

7. தேவதாசி முறை ஒழிப்பு, பூசாரி மான்ய ஒழிப்பு, பொதுநிகழ்ச்சிகளில் கடவுள் வணக்கம் ஒழிப்பு, முதலிய தீர்மானங்களை நிறைவேற்றிய மாநாடு எது?

அ) 1929 முதல் சுயமரியாதை மாநாடு.

ஆ) 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாடு.

இ) 1930 ஈரோடு சுயமரியாதை மாநாடு

ஈ) 1929 புதுவை சுயமரியாதை மாநாடு

8. பொதுப்பணிக்கு வருவோர்க்கு இருக்க வேண்டிய இரண்டு சாதகமான சூழல்கள் எவை எனப் பெரியார் கூறுகிறார்?

அ) பரம்பரையான குடும்பப் பெருமையும் செல்வமும்.

ஆ) பெரிய படிப்பும் பெரியவர்கள் தொடர்பும்.

இ) பொதுநலப் பணியால் பிழைக்கிறோம் என்பதும், அதனால் பதவி, பெருமை அந்தஸ்த்து லாபம் எனும் வகையில் சிறுபலனாவது பெறுகிறோம் என்பதும் இல்லாமை.

ஈ) நல்ல அரசியல் அனுபவம், பொருளாதார அறிவு

9. நாகரிகத்தைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது பெரியாருடையது இல்லை?

அ) எம்மதமும் சம்மதம் எனக் கொள்வதே நாகரிகத்தைக் குறிக்கும்.

ஆ) தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவை என்று கருதப்படுகிறதோ, அவற்றைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம்.

இ) சமுதாயத்தின் பொதுவான (ஒட்டுமொத்த) முன்னேற்றமே நாகரிகம்.

ஈ) இந்தக்கால விஞ்ஞான அறிவுப் பெருக்கத்திற்கு ஏற்றவகையில் முன்னேறியும் மாறியும் வாழ்க்கையை இன்பமயமாகத் திகழச் செய்வதே நாகரிகம்.

10. ஒரு குடும்பத் தலைவியின் சிறப்புகளைப் பற்றிய தந்தை பெரியாரின் நூல்

அ) குடும்ப விளக்கு. ஆ) குடும்பத் தலைவி. இ) குடும்பச்சுடர். ஈ) வாழ்க்கைத் துணைநலம்


விடைகள் :

1. ஈ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. ஆ, 6. இ, 7. இ, 8. இ, 9. அ, 10. ஈ

------------------------------------------------------------------------------------------------

------------------- “உண்மை” மே 1_16 -2011

0 comments: