Search This Blog

26.5.11

தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும் ஏன்? - புரட்சிக்கவிஞர்

தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும்


தமிழருக்கு புரட்சி மனப்பான்மை அவர்கள் தம் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும்; ஆகையால் தமிழர் தம் பகையால் அடையும் எவ்விதத் தொல்லைகளையும் நான் வரவேற்கின்றேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டு களாகவே தமிழர் சீரழிந்து வருகின்றார்கள்; தம் சீரழிவுக்குக் காரணம் இன்னதுதான் என்பதை அவர்கள் அறிந்து வந்தும் அவர்களின் மிதமிஞ்சிய ஆத்திகப் புத்தியானது அந்தச் சீரழிவும் நல்லதே என்று திருப்தியடைய வைத்தது.

அளவு கடந்த கடவுள் வழிபாடு, அதிலிருந்து அதே வீதத்தில் அரச வழிபாடு, அதிலிருந்து எடுத்தற்கெல்லாம் பயம், பின்னர் சுயநலம் _ இந்த நோயில் தமிழர்களை ஆதி தொடங்கியே அமிழ்த்தி வந்தனர் தமிழர்களின் எதிரிகள்;

ஆதி முதல், தமிழர்க்கு எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாக அவர்கள் நெஞ்சுக்கு ஒரு நிமிட நேரம் வஞ்சகத்தால் செல்வாக்கைடந்த ஒரு மூளை திரைமறைவில் வேலை செய்யும்! அதன் விளைவாகப் பகிரங்க ஏதேச்சதிகாரம், தூக்குமரம், சித்ரவதைகள் இவைகளைக் கண்டபின்னும், அரச வணக்கம் _ வறுமையிற் செம்மை _ விதி இந்த நம்பிக்கை! அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற ஜபம்! நெஞ்சு , பஞ்சு படும்பாடு! நரம்புகள் துடைப்பக்குச்சி!

சென்ற நூற்றாண்டில்தான் இந்த ஏமாந்தவர் மேலும், ஏமாற்றுகிறவர் மேலும் ஆதிக்கம் செலுத்த மூன்றாவது வர்ணம் இந்தியாவில் குதித்தது. இதனால் தமிழர் தம் நிலையை அறியச் சிறிது வெளிச்சமும் தமிழரின் எதிரிகட்குத் தமது தந்திர சூழ்ச்சிகட்குத் தக்க லாபம் ஏற்படலாயிற்று.

இப்போது தமிழர் அத்தனை மோசமில்லை. காதைப் பிடித்துத் தூக்கினாலும் இப்போது தமிழன் தன் சகிப்புத் தன்மையை விட்டுக் கீ என்று கத்துகிறான்!

தமிழரின் எதிரிகள் இப்போது ஒரு தப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு:

அரச வணக்கம், அதிகாரி வணக்கம், பயம், சுயநலம் இவை இன்றைக்கும் தமிழன் சொத்து.

அந்தக் காலத்தில், தமிழனின் தமிழ்க் கலைகளையெல்லாம் மாய்த்து அவைகளைக் கடல் கொண்டு போனதாகத் தமிழர் களைக் கொண்டே சொல்லி வைக்க, அதை நம்பினார்கள்.

தமிழச்சி ஒருத்தியைச் சரிப்படுத்திக் கொண்டு, 8000 தமிழர்களை நமது மூதாதைகள் படுகொலை செய்து வெற்றி பெறவில்லையா? தமிழர்களைப் புகழ்வதன் மூலம் தமிழர் தலைகளைப் பலியேற்ற நினைத்ததில் இன்றுவரை வெற்றி காண வில்லை.

தேசத்தை அயலானிடம் காட்டிக் கொடுத்ததிலும், அதனால் சிறுபான்மையோராகிய நம் சுகபோகத்தைக் காத்துக் கொண்டதிலும் வெற்றி மேல் வெற்றி.

சில ஆண்டுகளாகக் கூடத் தமிழருக்குத் தைத்த குல்லாய்களுக்குத் தமிழர் மூக்கைப் பிடித்துக்கொண்டுதானே தலை தாழ்த்தினார்கள்.

காசைப் பிடுங்கிக்கொண்டு காற் செருப்பைக் காட்டும் ஆளுக்கு. எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம் என்று சொல்லும் இருட்டில் தானே தமிழர் குடித்தனம் பண்ணுகிறார்கள்.

வந்தால் அரசபோகம், இல்லாவிடில் சென்னை கந்தசாமி கோயில் வீதியில் மூன்றணாவுக் கொரு பித்தளைச் செம்பு பார்ப்போம் ஒரு கை! எதிரிகளின் இந்த சிந்தனைகள் காலந்தவறியவை என்பது எனது அபிப்பிராயம்.

தமிழரை வஞ்சித்து வஞ்சித்து அவர்களின் ஒற்றுமையைக் கலைத்துக் கலைத்து நலி செய்து நலி செய்து பழகிய அந்த எதிரிகள், இன்று தமிழரின் மண்டையை நோக்கி ஓச்சிய கோட்டடிதான் இந்திக் கட்டாயப் படிப்பு! அநேகமாக இன்று தமிழரால் ஒரு புரட்சி ஏற்படலாம். நலிந்த ஒரு தனிமனிதன் செத்துப் போவான்; ஆனால் நலிந்த ஒரு ஜாதி சாகா: எழுச்சியுறும். இது இயற்கைச் சட்டம். எனது இன்பக் கனவு!

கனம் எஸ். இராமநாதன், கனம் சுப்ராயன், வரதராசலு, தோழர் திரு. வெ. கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் தங்களைத் தமிழர் என்று சரியாகவே நினைத்திருந்த காலம் உண்டு. அப்போது அவர்களால் தமிழர்கட்கு அதிக நன்மை யில்லை.

நல்ல வேளையாக இப்போது தம்மைத் தமிழரின் எதிரிகள் என்று தப்பாக நினைக் கிறார்கள். இந்தக் காலத்தில் தான் அவர்களால் தமிழர்கட்கு விசேட நலன்கள் ஏற்படப் போகிறது. ஏனெனில் இப்படிப் பட்ட கனவான்கள் தமிழர்களின் எதிர்க்கட்சியில் இல்லாவிடில் தமிழரின் உயிராகிய தமிழைக் கொல்லத் தமிழரின் இயற் பகை நாயன்மார்கட்கு ஆணவம் தோன்றியிருக்குமா? அந்த ஆணவம் இல்லாவிடில் தமிழர் மனம் துடிக்க வழியேற்படுமா?

துடிக்காத தமிழர்கள் ஒன்று படுவார்களா? நமது கனம் முதன் மந்திரியார் தமிழரின் உயிரின் மேல் தமது ஆக்ஞா சக்கரத்தை விடுவதையும் மேற்படி இந்தியைக் கட்டாய மாக்குவதையும் நான் வரவேற் கிறேன்; ஆனால் அவர் ஓர் அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண் டதாக நினைக்கலாம்.

ஏற்றசமயம் வாய்த்த போது தமிழ்த் தன்மையின் ஆணி வேரைக் களைந்துவிட வேண்டும் என்பதும் அவர் மதத்தின் ஒரு கிளை. அவ்வாறு ஆணி வேரைப் பறிப்பதன் மூலம் அடியோடு தமது செல்வாக்கைப் பறிகொடுத்து விடலாகாது என்பதும் அம்மதத்தின் மற்றொரு சாகை!

கனம் ஆச்சாரியார் ஆண் டார், அனுபவித்தார். பிள்ளை குட்டிகளைப் பெற்றார். கிருகஸ்தாச்சிரமம் திருப்தி கரமாகத் தீர்ந்தது. இனி வானப்பிரஸ்தாஸ்ரமம், பற்றற்ற இடம்! தியாகத்திற்கு ஏற்ற சந்தர்ப்பம்!

அவர் சரியாக நினைப்பதா யிருந்தால்,

விரோதிகளை அழிப்பதன் மூலம் எதுவரினும் வருக என்ற முடிவுக்குத்தான் அவர் வந்தாக வேண்டும். தமிழகத்தில் தமது செல்வாக்கை எண்ணி எத்தனை தியாகம் புரிந்தார்கள் ஆரியர்கள். ஆரிய ரத்தம் மாறிற்றா?

கடித்துக் குடிக்கும் காப்பி ஏனத்தைக் கழுவும் ஆளும் இன்னும் ஆரிய ரத்தம் இருப்பதாகக் கூறுகிறான்! முதல் மந்திரியார் தமது லட்சியத்தில் பின்னடைவார் என்று நான் வருந்தவேயில்லை.

-----(அன்றைய சென்னை ஆட்சியில் ராஜாஜி, இந்திமொழித் திணிப் புச்சட்டம் கொணர்ந்த போது எழுதப்பட்டது.) ------


------------------- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்(குடிஅரசு 10.10.1937 இதழில் வந்தது)

0 comments: