Search This Blog

23.5.11

தீண்டாமை ஒழிப்பு ஒரு பார்வை!


கேரள மாநிலத்தில் பதிவுத்துறை அய்.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. இராமகிருஷ்ணன். இவர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற காரணத்தால் அவர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பணியாற்றிய அறையில் இருந்த தளவாடச் சாமான்கள்மீது சாணித் தண்ணீர் தெளித்து சுத்திகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அதிகாரி மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் செய்துள்ளார்.

மனித உரிமை ஆணையத்தின் தலைவரான நீதிபதி என். தினகர் சம்பந்தப்பட்ட துறைக்குத் தாக்கீடு அனுப்பினார். தனிப்பட்ட நபரை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.

அரசில் உயர்தரப் பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொது மக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது ஒன்றும் இந்தியத் திருநாட்டில் புதிதான ஒன்றல்ல. இதற்கு முன் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தாழ்த்தப்பட்டவர் என்கிற காரணத்தால், அவர் பதவியில் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில், அவர் பயன்படுத்திய அறை சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பின்புதான், உயர்ஜாதி பார்ப்பன நீதிபதி அந்த அறையைப் பயன்படுத்தினார் என்பதையும் இந்த இடத்தில், நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் என்னும் தொழுநோயால் பீடிக்கப்பட்ட இந்தியாவில் இதுபோன்ற உணர்வுகள் இருப்பது ஆச்சாரியமான ஒன்றல்ல. குஜராத் மாநில அமைச்சராக இருக்கக்கூடிய திருவாளர் நரேந்திரமோடி தாம் எழுதிய கர்மயோகி என்னும் நூலில் குறிப்பிட்டு இருந்தது என்ன? சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போர்க்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்கள் செய்யும் வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக் காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகும் எனவும் கருதலாம் என்று எழுதவில்லையா? இதன் பொருள் என்ன? மலம் அள்ளுவது - மனித உரிமைக்கு எதிரானது; இது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கும் ஒரு கால கட்டத்தில், இப்படி ஒரு கருத்தினை ஒரு மாநில முதல் அமைச்சர் ஒரு நூல் மூலம் பதிவு செய்கிறார் என்றால் இந்து மனப்பான்மை என்ற ஒன்று - பெரிய நிலையில் உள்ளவர்களின் குருதி ஓட்டத்தில்கூட அழுத்தமாகப் பிடிமானம் கொண்டு இருப்பதாலும், இந்து மதத்தின் வருணதர்மத்தில் ஜாதிக் கண்ணோட்டத்தில் தீண்டாமை என்பது தவிர்க்கப்பட முடியாத அம்சமாக இருக்கிற காரணத்தால் தீண்டாமை ஒழிப்பு சட்டங்களைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் தன்மையராய் இருப்பதை அறிய முடிகிறது.

இந்தக் குற்றம் செய்யும் பெரிய மனிதர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுத்து, அதனை விளம்பரப்படுத்துவதால் தீண்டாமை என்னும் நஞ்சை ஓரளவு முறிக்கலாம் என்றாலும், அதைவிட தீண்டாமைக்குக் காரணமான - ஆதாரமான இந்துமத சாஸ்திர, புராண, இதிகாசக் குப்பைகள் பற்றியும் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களே முன்வந்து அவற்றைப் பொது இடத்தில் கொளுத்தும் ஒரு நிலையை உண்டு பண்ண வேண்டும்.

தந்தை பெரியார் இராமாயணத்தை எரிக்கச் சொன்னதும், தந்தை பெரியார் அவர்களுக்குப்பின் மனு தர்ம சாஸ்திரத்தை திராவிடர் கழகம் எரித்ததும் இந்த அடிப்படையில்தான்.

ஏதோ ஒரு காரணத்துக்காகவும் இதுபோன்ற நூல்களைப் பரப்புவதையும், பிரச்சாரம் செய்வதையும்கூட தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி தடுக்க வேண்டும்.

தீண்டாமைக்கு மூலமானவற்றை ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு, இன்னொரு பக்கத்தில் தீண்டாமைக் கொடுமைபற்றிப் பேசுவது எல்லாம் வாய் சாமர்த்தியமே தவிர, மூல நோய் ஒழிப்புக்குப் பயன் படாது என்பது உறுதி, உறுதியே!

-------------------”விடுதலை” தலையங்கம் 23-5-2011

0 comments: