Search This Blog

20.5.11

ஆதிசங்கரர் பற்றி விவேகானந்தர்


ஆதிசங்கரர் ஜெயேந்திரரை ஒட்டி பாலாபிஷேகம் செய்கிறாரே - அந்த ஆதி சங்கரர் யார்? பார்ப்பனர் வெறியர் தானே? அதற்காகத் தானே அவருக்குப் பாலாபிஷேகம்?

இந்துத்துவவாதிகள் விவேகானந்தர் பற்றி தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்களோ அவர் ஆதி சங்கரர் குறித்து என்ன கூறகிறார்? இதோ...

சுவாமி விவேகானந்தர்: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண் டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர்.

இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக் கிடமாகின்றன. விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால் என்கின்றார்.

நல்லது; இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற் பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா?

அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவ ரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத தொன்று.

வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின. அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! வாதத்திலே தோல்வியுற்றோம்! என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன?

புத்தர் தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய - பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற் காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!

உண்மையே உருவெடுத்தவர் புத்தர்

சிஷ்: அய்யா, புத்தவேர் இப்படிச் செய்ததையும் மற்றொரு வகை மூடப் பிடிவாதமென்று நாம் சொல்லுதல் கூடாதா? அவர் இழிவான ஒரு விலங்கின் பொருட்டுத் தம்முடைய சொந்த உடலைக் கொடுத்துவிட நினைத்தாரே!

சுவாமி விவேகானந்தர்: ஆனால் இந்த மூடப் பிடிவாதத்தினால் உலகுக்கு எவ்வளவு நன்மை விளைந்ததென்பதை எண்ணிப் பார்! எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்தியசாலைகள்,

விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன என்பதை நினைத்துப் பார்! சிற்பறம் எவ்வளவு சிறந்து விளங்கியது! புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது?

ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்ததேவர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப் பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன்படுத்தும் நெறிகளைக் காட்டினார். இங்ஙனம் நோக்கும்போது, அவர் உண்மை வேதாந்தம் உருவெடுத்தது போன்றவர் ஆவார்.


(சுவாமி விவேகானந்தர் சம்பாஷைணைகள் நூல் - _ பக்கம் 81-_ 82)

1 comments:

vimal said...

ஐயா,

மிக அருமை