Search This Blog

2.5.11

பெரியார் இன்னும் தேவைப் படுகிறாரா?


ராஜ் - தொலைக்காட்சியில் தமிழர் தலைவர் பேட்டி - ஒரு விமர்சனம்

- மின்சாரம்-

நேற்று (29-3-2011) இரவு 10 மணிக்கு ராஜ் தொலைக் காட்சியில் பிரபல விமர்சகர் நிஜந்தன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களைப் பேட்டி கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

அரை மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி சுவையானது - சூடு பறக்கக் கூடியது.

வினாக்கள் ஒவ்வொன்றும் வெடுக்வெடுக்கென்று கூர்மையாக ஏவப்பட்டதாகும். (Devil’s Advocate)

ஆனால் அத்தனைக் கேள்விகளுக்கும் அருமையாக, பொறுமையுடன் ஆழமான கருத்து வளத்துடன் பளிச் பளிச் என்று பதில் சொன்னார் தமிழர் தலைவர்.

78 ஆண்டு அகவையில் 68 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொது வாழ்வும், தந்தை பெரியார் அவர்களிடம் அவர் பெற்றிருந்த பயிற்சியும், கிடைக்கிற நேரத்தையெல்லாம் கருத்துகளைச் சேகரித்துக் கொள்ளும் அறிவுப் பசியின் நுட்பமும் இணைந்து எந்தக் கேள்விக்கும் இடைவெளி சிறிதும் இல்லாத எண்ண ஓட்டமுடைய பதில்களை விடையாகத் தந்து கொண்டிருந்தன.

சோ ராமசாமி போன்ற அதிகப்பிரசங்கிகள்கூட ஆசிரியர் அவர்கள் பதில் சொல்லும் முறையைச் சிலாகித்ததுண்டு.

நிஜந்தன் அவர்களைப் பொறுத்தவரை அவர் துறையில் அசகாயசூரர் என்று பெயர் எடுத்தவர். இடக்கு முடக்காகக் கேள்விகளை அப்படியே அலக்காகத் தூக்கிப் போடக் கூடியவர் என்றாலும், பதில் சொல்லும் இடத்தில் அமர்ந்திருந்தவர் பகுத்தறிவுப் பகலவனால் பக்குவப்படுத்தப்பட்ட சீடராயிற்றே!

திராவிடர் கழகம் தி.மு.க. கூட்டணி யில் உள்ள கட்சியா?


பலரும் கேட்கக் கூடிய கேள்விதான். அந்த இடத்தில் பாமர மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வினாவாக அது இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.

திராவிடர் கழகம் கூட்டணிக் கட்சியல்ல; தேர்தலில் எங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று கோருகின்ற அமைப்பும் அல்ல - மாறாகத் தாய்க் கழகம் - சமூகப் புரட்சி இயக்கம்!

தி.மு.க.வை திராவிடர் கழகம் ஆதரிப்பது - ஏன்?


- இன்னொரு கேள்வி.

திராவிடர் கழகம் என்னும் சமூகப் புரட்சி இயக்கத்திலிருந்து பிரிந்த கழகம் தி.மு.க.; அது அரசியலுக்குச் சென்று இருக்கிறது என்றாலும் சமுதாயக் கொள்கையில் திராவிடர் கழகத்தின் கொள்கையை அது ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக்குச் சென்று தாய்க் கழகத்தில் பல கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்னும் சட்டம் போன்றவை. இந்த வகையில் ஏராளமான எடுத்துக்காட்டுகளையும் கூற முடியுமே!

திராவிட என்னும் பெயரைத் தாங்கியுள்ள கட்சிகள் எல்லாம் திராவிடக் கட்சிகள்தானா? அவற்றிற்கு திராவிடர் கழகம்தான் தாய்க் கழகமா?


திராவிட என்ற சொல்லைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருப்பதாலேயே அந்தக் கட்சிகளெல்லாம் திராவிட இயக்கச் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டதாகக் கருத முடியாது.

திராவிட, பெரியார் என்னும் சொற்களைப் பயன்படுத்தினால்தான் தமிழ்நாட்டில் எடுபட முடியும் என்ற எண்ணத்தில் அந்தப் பெயர்களைத் தங்கள் கட்சியோடு ஒட்டுப் போட்டு வைத்திருக்கலாம்.

ஆனால் தி.மு.க.வைப் பொறுத்தவரை அவ்வாறு கூற முடியாது. அதன் தலைவர் இரண்டு நாள்களுக்குமுன்புகூட ஓர் அறிக்கையில் தமது திராவிட இனவுணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் - திராவிட வரிப் புலியே, புறப்படு! என்று எழுதியிருக்கிறார். (பல நேரங்களிலும் சமுதாயக் கொள்கைகளை உடைய அரசியல் கட்சி தி.மு.க. என்பதைப் பதிவும் செய்து இருக்கிறார் குமுதம் இதழுக்குப் (2.3.2011) பேட்டி கொடுத்தபோதுகூட மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இராமன் - இலட்சுமணன் போல் அல்ல; இராவணனும் - கும்பகர்ணனும் போல இருக்க வேண்டும் என்று சொன்ன பதிலில் கலைஞரின் இனவுணர்வுத் தீபம் எத்தகையது என்பதற்கான விளக்கமாகும்).

தி.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் என்னதான் வேறுபாடு?


தி.மு.க. அரசியல் கட்சி என்கிற காரணத்தால் வெகு மக்களின் வாக்குகளை வாங்கும் நிலையில், திராவிடர் கழகத்தின் சமுதாயப் புரட்சிக் கொள்கை யின் முழு பரிமாணத்தையும் எட்டிட முடியாது.

எடுத்துக்காட்டாக - ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது போன்ற சமரசக் கொள்கையாகும்; கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அதிகம் உள்ள ஒரு நாட்டில் தேர்தலில் வெற்றி பெற அவர்களின் வாக்குகள் தேவைப்படுகின்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.

ஆனாலும் இருக்கிற அரசியல் கட்சிகளில் திராவிடர் கழகத்தின் சமுதாயப் புரட்சிக் கொள்கைக்கு நெருக்கத்தில் இருப்பது தி.மு.க. என்பதில் எள்ளள வும் சந்தேகம் இல்லை.

தாய்க் கழகம் என்பதால் தி.மு.க. வின் எல்லா செயல்களையும் திராவிடர் கழகம் ஆதரிக்குமா?


அப்படிக் கூற முடியாது. வேறுபட்ட இடங்களில் திராவிடர் கழகம் சுட்டிக் காட்டியதுண்டு - கண்டித்தது உண்டு - ஏன், எதிர்த்ததும் உண்டு.

எடுத்துக்காட்டாக, தி.மு.க. பா.ஜ.க. வோடு கூட்டணி வைத்துக் கொண்டபோது திராவிடர் கழகம் எதிர்க்கத்தான் செய்தது.

பா.ஜ.க. என்பதுதான் திராவிடர் கழகத்தின் எதிர்ப்புக்கான அளவுகோலா?


ஆமாம் - அதில் என்ன சந்தேகம்? பா.ஜ.க., அடிப்படையில் பார்ப்பனியத்தை, மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சி - வருணாசிரமத்தைப் பாதுகாக்கும் கட்சி; வெளிப்படையாக இந்துத்துவா பேசும் ஓர் அமைப்பு.

திராவிடர் கழகத்தின் கொள்கையோ இதற்கு நேர் எதிரானது - சமதர்ம - சமத்துவக் கொள்கையுடைய சமூகப் புரட்சி இயக்கம்.

எல்லார்க்கும் எல்லாம் என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை - இன்னார்க்கு இன்னதுதான் என்பது பா.ஜ.க.வின் மனுதர்மக் கொள்கை.

தி.க.வும் - பா.ஜ.க.வும் இரண்டு துருவங்கள்.

காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் தொகுதி பங்கீடுப் பிரச்சினை வந்தபோது நீங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை சூட்டைக் கிளப்பிவிட்டதே!


ஆமாம் - கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற இடங்களைவிட அதிகமாக எண்ணிக்கையில் கேட்டதோடு அல்லாமல், நாங்கள் கேட்கும் தொகுதிகளை தி.மு.க. கட்டாயம் கொடுத்தே தீர வேண்டும் என்ற பெரியண்ணன் மனப்பான்மையோடு காங்கிரஸ் நடந்து கொண்ட நேரத்தில் பெரும் பான்மை மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய அறிக்கை அது குட்டக் குட்டக் குனிந்துபோக வேண் டாம் - சுயமரியாதை முக்கியம் என்று அறிக்கை திராவிடர் கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்டது.

இலவசங்கள் பற்றிய கருத்தென்ன? இலவசங்களைக் கொடுப்பது தேவை தானா?


அதில் என்ன தவறு? ஏழ்மை நிலைமை இருக்கும் வரை அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, மருத்துவ உதவி இவை ஏழைகளுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு ஓர் அரசு இலவசமாகக் கொடுக்க முன்வந்தால் அதனைப் பாராட்டத்தானே வேண்டும்?

இலவசங்களைக் கேலி செய்த அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் - தி.மு.க.வின் அறிவிப்புகளைப் படித்தவுடன், அதற்கு மேலாக அல்லவா இலவசங் களை அள்ளித் தருவதாகக் கூறுகிறார்.

நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட் சிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. காமராசர் காலத்திலும், எம்.ஜி.ஆர். காலத்திலும் கலைஞர் அவர்களின் காலத்திலும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாரத்துக்கு 5 முட்டைகள் கொடுக்கப்படுகின்றன.

ஊட்டச் சத்து பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம் ஆயிற்றே! போதிய போஷாக்கு இல்லையாயின் உடல் வளர்ச்சி மட்டுமல்ல; மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுமே! இந்தத் திட்டத்தை உலக வங்கியே பாராட்டியிருக்கிறதே!

உணவில் மட்டுமல்ல இலவசம்; காமராசர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வி, அண்ணா காலத்தில் பி.யூ.சி. வரை இலவசக் கல்வி, கலைஞர் காலத்தில் பட்டப் படிப்பு வரை இலவசம் என்பதெல்லாம் சோசலிசப் பார்வையில் மிகவும் சரியானதே!

திராவிடர் கழகத்தின் கொள்கை - ஜாதி ஒழிப்பு. ஆனால் தேர்தலில் ஜாதி அடிப்படையில்தானே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்?


இருக்கலாம். எல்லா இடங்களிலும் அப்படி நிறுத்தப்படுவதாகக் கூற முடியாது. பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்தவர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றதும் உண்டு (எடுத்துக்காட்டு - கடலூர்).

ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்ல வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?

பாலம் கட்டப்படும் வரை மாற்றுப் பாதை (Diversion Road) தேவைப்படுவது போல ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதியின் பெயரால் சில வாய்ப்புகள் இருப்பதில் தவறே கிடையாது.

இதனைக் குறை சொல்பவர்கள் யார்? ஜாதி உணர்ச்சி அற்றவர்களா? தங்கள் வீட்டில் திருமண விஷயத்தில் வேறு ஜாதியைத் தேர்வு செய் கிறார்களா? திருமண விஷயத்தில் சுலபமாக அவர்களை அடையாளம் கண்டுவிட முடியுமே!

பெரியார் இன்னும் தேவைப் படுகிறாரா?


கண்டிப்பாகத் தேவைப்படுகிறார். இன்னும் ஜாதி இருக்கிறது; தீண்டமை இருக்கிறது. மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. சாமியார்கள் பெண்களைக் கற்பழிப்பது போன்ற செய்திகள் நாளும் ஏடுகளில் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.

பெண்களுக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவிகித இடங்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட முட்டுக் கட்டைகள். இந்த நிலையில் தந்தை பெரியார் கண்டிப்பாகத் தேவைப்படுகிறார். பேதங்கள் இருக்கும் வரை, அவை முற்றாக ஒழிக்கப்படும் வரை தந்தை பெரியார் அவசியம் தேவைப்படுகிறார்.

அரை மணி நேரத்தில் அவசியமான வினாக்கள் - ஆணித்தரமான பதில்கள் - தொலைக்காட்சிகளும் கூட பயனுள்ள காரியங்களையும் சில நேரங்களில் செய்யத் தான் செய்கின்றன; ராஜ் தொலைக்காட்சியின் இந்தத் தேர்தல் களம் அந்த வகையானதே - பாராட்டுகள்!

-------------------- "விடுதலை” 30-3-2011

0 comments: