Search This Blog

24.5.11

பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட மா மனிதர்கள்

விடயபுரம் திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் - கண் கொடுத்த வனிதம் என்னும் ஊரையடுத்துள்ள குக்கிராமம் (Hamlet).

இந்த ஊர் இன்று உலக வரலாற்று வரைபடத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது. அதற்குக் காரணகர்த்தா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

சுயமரியாதைப் பிரச்சாரப் பள்ளி (பயிற்சி முகாம்) இவ்வூரில் நடைபெற்ற போது தான், தான் இது நாள் வரை சொல்லி வந்த கடவுள் மறுப்புக் கொள்கைக்கு, ஆத்மா மறுப்புக் கொள்கைக்கு வார்த்தை வடிவம் கொடுத்து உலக மானுடத்திற்குப் பிரகடனம் செய்தார். தந்தை பெரியார் அந்த வரலாற்றுச் செப்பம் மிகுந்த புரட்சித் திருநாள் இந்நாள்! (24.5.1967).

கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன்.

தந்தை பெரியார் அவர்களின் இத்தகைய அறிவிப்புக்குப்பின் நாடெங்கும் கடவுள், ஆத்மா மறுப்புக் கல்வெட்டுகள் நிறுவப்பட் டன. தந்தை பெரியார் சிலைகளின் பீடங்களிலும் இவை பொறிக்கப்பட்டன.

புத்தரின் கருத்துச் செல்வங்களை அசோக சக்ரவர்த்தி கல்வெட்டுகளில் பொறித்த ஏற்பாட்டுக்கு நிகரானவை இவையாகும்.

உலகில் எந்த நாட்டிலும் கடவுளை எதிர்க்கும், மதத்தை மறுக்கும் இத்தகு மாமணிகள் பொறிக்கப்பட்ட தில்லை. இது வரலாற்றில் புரட்சி அத்தியாயமாகும்.

எங்கள் மனம் புண்படுகிறது என்று கூறி இவ்வாசகங்களை எதிர்த்து நீதி மன்றமும் சென்றவர்கள் இறுதியில் தோல்வியையே சுமந்தனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

அப்பாசாமி நாயுடு என்னும் பெரு நிலக்கிழார். பக்திப் பழம் தான்; ஆனாலும் தந்தைபெரியார் அவர்களின் பால் அதையும் தாண்டிய கூடுதல் பக்தி, கொண் டவர்! எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கைகட்டி, வாய் பொத்திப் பேசக் கூடிய மாண்பாளர்.


அவர்தான் இந்தப் பயிற்சிப் பள்ளிக்கான அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொண்டு ஏற்பாடுகளையும், விரிவாகச் செய்து கொடுத்தவர்.

கோடையின் கொப்புளங்களால் தந்தை பெரியார் தகிக்கப்படக் கூடாது என் பதற்காக ஆசிரமப்பாணியில் பூங்கொடிகள் குடைபிடிக்க கொட்டகை அமைத்து, அதற்குப் பூங்கொடி இல்லம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட மா மனிதர்கள் இதுபோல் எத்தனை எத்தனை வகையான வித்தியாசமான வண்ண வண்ண மலர்களோ!

---------------- மயிலாடன் அவர்கள் 24-5-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: