இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது மட்டுமல்ல- கிடைக்கவேண்டிய தண்டனையை தடுத்தது இந்தியா!
தஞ்சையில் தமிழர்தலைவர் சரமாரியான விளக்கம்
இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையைத் தடுத்தது இந்தியா அது மட்டுமல்ல. இலங்கைக்கு ஆதரவாகவும் செயல் பட்டது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஈழத்தமிழர் படுகொலை பற்றிய அய்.நா. குழுவினரின் அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்ற தலைப்பில் 7.5.2011 அன்று தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
இலங்கையில் ஈழத்திலே நடைபெற்ற படுகொலைகள் பற்றியும், அவலங்கள் பற்றியும் இதுவரையிலே மறைத்து வந்த செய்திகள் எல்லாம் இன்றைக்கு வெளிச்சத்திற்கு வர ஆம்பித்துவிட்டன என்று சொல்லக்கூடிய சூழலிலே உலக நாடு களுக்கெல்லாம் பொது அமைப்பாக இருக்கக் கூடிய அய்.நா. சபையின் சார்பிலே ஒரு குழு அமைத்து அந்தக்குழு ஒரு அறிக்கையைத் தந்திருக் கிறது. அந்த அறிக்கை 240 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாகும்.
இந்த அறிக்கைகளின் முக்கிய குறிப்புகள் எல்லா இணையதளங்களிலும் கிடைக்கக் கூடிய அளவுக்கு இருக்கும். இலங்கையிலே நடந்த கொடுமைகள் போர்க் காலத்திலே நடந்த கொடுமைகள் எத்தகைய மனித உரிமை மீறல்கள், எவ்வளவு அட்டூழியங்கள், எவ்வளவு கோரத் தாண்டவங்கள் அங்கே ஆடப்பட்டிருக்கின்றன.
இவைகளை எல்லாம் ஆதாரப்பூர்வமாக நண்பர் அவர்கள் சற்றுமுன் சுட்டிக்காட்டியது போல நாம் யாரும் அய்.நா. சார்பில் வெளியிடப் பட்ட இந்த அறிக்கையைத் தொகுக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் இதைச் செய்யவில்லை. உலகத்திலே நடுநிலையிலே நின்று, பொது நிலையிலே நின்று மனித உரிமைகளிலே யார் யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். இன்றைக்கு ஈழத்தில் நிகழ்ந்தால் நாளைக்கு அது எங்கும் நிகழும். எங்களுக்கும் அந்த ஆபத்து வரக்கூடும் என்று நினைத்த மனிதநேய நாகரிக உணர்வாளர்கள் தங்களுடைய இன்றியமையாத கடமையை இதன் மூலம் செய்திருக்கிறார்கள்.
அய்.நா. சபையாலே அமைக்கப்பட்ட குழுவினர் இந்த அறிக்கையைத் தர 10 மாத காலம் காலக்கெடு எடுத்துக்கொண்டார்கள். 240 பக்கங்கள் இருக் கின்றன.
யார் யாரெல்லாம் ஈழத்திலே இருக்கக்கூடிய தமிழர்களுக்கு வாழ்வுரிமை தேவை. மனித உரிமை அடிப்படையிலே இன உணர்வு அடிப்படையிலே கூட அல்ல; இன உணர்வை நீங்கள் ஒப்புக் கொள்ளாதவர்களாக இருந்தால்கூட, மனிதஉரிமை அடிப்படையிலே இலங்கையிலே தமிழர்களுக்கு எதிராக நடப்பது அநியாயம், அங்கே நடப்பது அக்கிரமம், அங்கே அநீதி கொடிகட்டிப் பறக்கிறது என்று இதை எல்லாம் கண்டியுங்கள் என்று திராவிடர் கழகம்தான் இதை தமிழ் நாட்டிலே முதன்முதலில் இந்தக் கொடுமையை அம்பலத்திற்குக் கொண்டு வந்தது.
திராவிடர் கழகத்திற்கு ஓட்டுக் கண்ணோட்டம் கிடையாது. நாட்டுக் கண்ணோட்டம் மட்டும்தான் உண்டு. நாட்டுக் கண்ணோட்டத்தையும் தாண்டி அங்கே வேட்டுச்சத்தம் கேட்டாலும்கூட, ஆகா! அங்கே நடப்பது பயங்கரவாதம் என்றெல்லாம் சொன்னபொழுது திராவிடர் கழகம்தான் சொல்லிற்று.
அது பயங்கரவாதம் அல்ல. இலங்கையிலே எல்லை மீறிய கொடுமையைத் தாங்க முடியவில்லை என்ற கட்டத்தை உணர்ந்த காரணத்தினாலே அங்கே ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே அவர்களுடைய வாழ்வுரிமையை நிர்ணயிக்கக்கூடிய ஜீவமரணப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் பாலஸ்தீன இயக்கத்தை ஆதரிக்கின்றோம். அதைக் குறித்து இந்திய அரசு-மத்திய அரசு தீர்மானம் போடுகிறது. இதற்கு முன்னாலே தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த நெல்சன் மாண்டேலா அவர்கள் 27 ஆண்டு காலம் தனியாக தனிமைச் சிறையிலே வைக்கப்பட்டார்.
கறுப்பர்களுக்கு சுதந்திரம் தேவை என்று சொன்னார் நெல்சன் மண்டேலா. தென் ஆப்பிரிக்காவிலே இன ஒதுக்கல் கொடுமைகளை எல்லாம் எதிர்த்துப் போர் முழக்கம், வீர முழக்கங்களை எல்லாம் இட்டார்கள் நண்பர்கள்.
அதே பாணியிலே, அதே அளவுகோலைக் கொண்டு அதைவிட பன்மடங்கான கொடுமைகள் இலங்கையிலே நடைபெறுகின்றன. அதனுடைய நிலை என்ன நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டோம். ஈழத்திலே நடந்த கொடுமைகளை பல மொழிகளிலே புத்ததகமாக வெளியிட்டிருக் கின்றார்கள்.
இதில் உள்ள படங்களைத் திறந்து பார்க்கக்கூட யாருக்கும் துணிவு இருக்காது. இந்தப் படங்களைப் பார்த்த பிறகு உங்களால் முழுமையாக உணவு உண்ண முடியாது. இதைப் பார்த்த பிறகு உங்களால் இரவில் உறங்கக்கூட முடியாது. தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொண்டால்கூட உறங்க முடியாது. அந்த அளவிற்கு அவ்வளவு கொடுமைகள். இதற்கு இனஉணர்வு தேவை யில்லை. மனிதாபிமான உணர்வுதான் தேவை. இந்தக் கொடுமைகளை உலகம் முழுவதும் எடுத்துக் காட்டினார்கள். ஈழத்திலே நடைபெற்ற சித்ரவதை, படுகொலைகளை திராவிடர் கழகம் தமிழகம் முழுக்க ஒளிப்படக் காட்சியாக நடத்தியது. இதே தஞ்சாவூரிலும் நடத்தினோம்.
சிங்களவர்களால் மைனாரிட்டிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழர்களும், தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று பகிரங்கமாக அறிவித்து போர்டு போட்ட காலத்திலிருந்து பார்த்து வந்தோம். அவர்கள் அப்பொழுது செய்த கொடுமைகள் எல்லாம் சிறு கோடுகள். அதைவிட பெரிய கோடுகளை, பெரிய கொடுமைகளை இழைத்த இனவெறியனை, இட்லரை தோற்கடித்த கொடுமை யாளன், மனித மிருகம் உகாண்டாவிலே இருக்கக் கூடிய இடிஅமீன்கூட இப்படி இருந்ததில்லை என்று சொல்லக்கூடிய கொடுமையாளன்தான் ராஜபக்சே.
ராஜபக்சே எவ்வளவு பெரிய கொடுமைகளை நடத்தினார் என்று சொல்லும்பொழுதெல்லாம் ஒரு சமாதானம் சொல்லப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்த்து இலங்கையிலே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்திய அரசாகிய நாங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறோம். பயங்கர வாதத்தைத்தான் அடக்க வேண்டுமென்று நினைக்கின்றோம். என்றெல்லாம் இலங்கைக்குத் துணை போனது இந்திய அரசு. வெட்கக்கேடான நிலை.
பயங்கரவாதமா? அல்லது ஈழத்தமிழர்களுடைய உரிமைக்கான போராட்டமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஈழத்திலே உள்ள தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்வ தற்காகப் போராடினார்கள். இதுவரையிலே சகித்துப் பார்த்து, இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது; எதற்கும் ஓர் எல்லை உண்டு என்று சொல்லக்கூடிய அளவிலே அங்கே ஒரு சூழல் ஏற்பட்டது.
ஒரு பூனையைக்கூட அறையில் அடைத்து வைத்து நீங்கள் அடித்துக்கொண்டே இருந்தால் அந்தப் பூனை என்ன செய்யும்? நீங்கள் அந்தப் பூனையைவிட வலிமை உள்ளவர்களாகக்கூட இருக்க முடியும். அந்தப் பூனை அடியை வாங்கிப் பொறுத்துக் கொண்டிருக்காது.
ஆனால் அந்தப் பூனை பொறுத்துக் கொண்டி ருக்காது. அடிக்கிறவன் மீதே பாய்ந்து அவனையே கடித்துக் கொல்லுவதற்கு முயலும். வாழ்வா?சாவா? என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் அடிபட்ட பூனைகூட சீறுகிறதோ அதுபோலத்தான் சிங்கள இராணுவத்தின் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப் புலிகளாக ஆளானார்கள் (கைதட்டல்). இந்த வரலாறு உங்களுக்குத் தெரியாததல்ல.
எடுத்த எடுப்பிலேயே அங்கு எல்லோரும் புலிகளாகப் பிறந்துவிடவில்லை. புலிகளாக அவர்கள் ஆக்கப்பட்டார்கள். புலிகளாக அவர்கள் ஆவதற்குரிய நிர்ப்பந்தத்தை யார் கொடுத்தது? சிங்களவர்களுடைய கொடுமை கொடுத்தது. இந்த நீண்ட வரலாற்றை உங்களுக்குச் சொல்லத் தேவை யில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்றவர் களுடைய கண்களை வெளிக்கடை சிறையில் தோண்டி எடுத்தார்கள். இந்த வரலாறெல்லாம் தெரிந்த வரலாறு. அன்றைக்கு ஒரு சம்பவம், இரு சம்பவங்கள் என்று இப்படித்தான் நடந்தன.
போரிலே ஒரு நியதி உண்டு. ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் போர் நடக்கும்பொழுது சில நியதிகள் உண்டு. உள்நாட்டிலேயே கலவரம் நடந்தால் அது போர் அல்ல. ஆனால் அங்கே நடந்தது போரா? அல்லது பயங்கரவாதத்தை எதிர்த்து நடத்திய ஒரு முயற்சியா? என்று எண்ணிப்பார்த்தால் ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.
அதை நியாயப்படுத்த முனைகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்தத் திக்கிலே இருந்தாலும் அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறார்கள்.
இலங்கையிலே சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு விழ ஆரம்பித்ததா-இல்லையா? உலக வர லாற்றை அறிந்தவர்கள் இருக்கிறீர்கள்; படித்த வர் கள் இருக்கிறீர்கள்; வழக்குரைஞர்கள் இருக்கிறீர் கள். தயவு செய்து கட்சியை மறந்துவிட்டு, ஜாதியை மறந்துவிட்டு பிரச்சினையை மட்டும் முன்னாலே எடுத்து வைத்துச் சிந்தித்து, நடுநிலையோடு, மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்.
எங்கேயாவது சொந்தநாட்டு மக்கள் மீதே அந்த நாட்டு அரசாங்கம் விமானத்தின் மூலம் குண்டுபோட்டு அழித்தது உண்டா? உலக வரலாற்றில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது-ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்பொழுது, மட்டும்தான் அங்கே விமானங்களின் மூலமாக குண்டு வீச்சுகள் நடைபெறும். ஆனால் இலங்கையிலே தமிழர்கள் மீது முப்படைத் தாக்குதல்களும் நடைபெற்றன. புறநானூற்றுத் தமிழன்
முப்படைத் தாக்குதல்களை சிங்கள அரசு நடத்த, நடத்த தமிழனால் முப்படைகளையும் தயாரிக்க முடியும் என்று காட்டியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் (கைதட்டல்). ஓர் அரசாங்கத்திற்கு எதிராக முப்படைகளையும் நடத்தினார்.
இதுவரையிலே புறநானூற்றைப் பற்றி நமது புலவர்கள் பேசியிருக்கிறார்கள். வீரத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதை இருபதாம் நூற்றாண்டிலே, இருபத்தியோராம் நூற்றாண்டி லேயே நடைமுறைப்படுத்தி ஒரு வரலாற்றைப் படைக்கக் கூடிய ஆற்றல் தமிழ்மகனுக்கு உண்டு என்று காட்டினான்.
தென்திசையைப் பார்க்கின்றேன். என் சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்குதடடா
என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்களே-அது போன்ற ஒரு நிலையை தமிழன் ஏற்படுத்தினான். சிங்களவனுடைய ஹெலிகாப்டர்களை, விமானங் களை சுட்டு வீழ்த்த பீரங்கிகளைத் தயாரிக்கக் கூடிய ஆற்றல் விடுதலைப்புலிகளுக்கு உருவாக்கப் பட்டது.
அவசியம் வந்தால் நிச்சயமாக புழுகூடப் புலியாக மாறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக வரும். அப்படித்தானே நடந்தது? அங்கே? நடந்தது வெறும் பயங்கரவாதத்தை எதிர்த்தா?
மத்திய அரசு செவி சாய்த்ததா?
இப்படி சொல்லுகிறவர்களை எல்லாம் மொழிவெறியர்கள், குறுகிய மனப்பான்மை படைத்தவர்கள் என்று ஒதுக்கி ஒதுக்கி வைத்தார்களே அதுவும் குறிப்பாக மத்திய அரசின் அகராதியிலே தமிழ் இனம் எந்தக் கொடுமையை அனுபவித்தாலும் அதைப் பற்றி நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்போம் என்பதைப் போல கேளாக் காதினராக, பார்வை இருந்தும் கண்ணற்றவர்களாக இருந்தார்களே!
மத்திய அரசே! உங்களுடைய கடமை என்ன? அய்.நா. சபை என்பது ஒரு கட்சி அல்ல. அது ஓர் உலக அமைப்பு. அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலிலே இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதற்காக எல்லா நாடுகளுக்கும் போய் ஆதரவைத் திரட்டிக்கொண்டிருக்கின்றீர்களே-அந்த அய்.நா. சபை கொடுத்த அறிக்கையிலே தெளிவாகச் சொல்லுகிறார்கள்.
அமெரிக்காவைச் சார்ந்த ஒருவர், தென்னாப் பிரிக்காவிலிருந்து ஒருவர், இந்தோனேசியா விலிருந்து ஒருவர் இந்த மூன்று பேரை போட்டுத்தான் இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை 10 மாத காலமாக ஆய்வு செய்து அவர்கள் ஒரு அறிக்கை தந்திருக்கிறார்கள். 240 பக்கங்களைக் கொண்ட அறிக்கை அது.
பன்னாட்டு நீதி நெறிமுறைகளுக்கு எதிராக இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றிருக் கின்றது என்பதைச் சொல்லியிருக்கின்றார்கள். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கு மிடையே நடைபெற்ற போர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
போர் நடந்தாலும்கூட போரிலே பிடிபட்ட குற்றவாளிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உலக நாடுகளிலே நியதிகள் இருக் கின்றன. அந்த நியதிகளை இலங்கை அரசு பின்பற்றியிருக்கிறதா- என்றால் இல்லை.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே உணர்ந்து இப்படி ஒரு குழு வருவதற்கு முன்னாலேயே இலங்கை மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து நாடு. தனியே இராணுவம் வைத்துக்கொள்ளாத நாடு. அய்ரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்றழைக்கப்படும் நாடு. அங்கு நான்கு மொழிகள். அங்கு மொழிப் பிரச்சினையே கிடையாது. உலகத்தில் சுவிஸ்நாட்டு மக்களைத்தான் நல்ல பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வார்கள், அந்த அளவுக்கு நேர்மையாளர்கள். ஆற்றல் படைத்தவர்கள். அதைவிட அவர்களுடைய மனிதாபிமானம் பெரிது. செஞ்சிலுவை சங்கம் என்ற அமைப்பை வைத்திருக்கிறார்கள்.
உலகத்தில் எங்கே கொடுமைகள் நடந்தாலும் எந்த மனிதனுக்கு ரணங்கள் ஏற்பட்டாலும், புண்கள் ஏற்பட்டாலும், அடிபட்டாலும், இரத்தம் ஆறாக ஓடினாலும் அதைத் தடுப்பதற்கு மனிதநேயத்தோடு உதவி செய்யக்கூடிய ஓர் அமைப்பு-செஞ்சிலுவைச் சங்கம்.
ஜனநாயகத்தில் அற்புதமாக மலர்ந்த மலர்தான் சுவிட்சர்லாந்து நாடு. அங்கே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தாலும், திருப்பிஅழைக்கின்ற உரிமை கூட அவர்களுக்கு உண்டு. அந்த சிறிய நாடு உலக அரசியல் சட்டத்திற்கே வழிகாட்டக்கூடிய நாடு.
இலங்கை நாடு மனித உரிமை மீறல்களை நிறைய செய்தது. பன்னாட்டு மனித உரிமை அமைப்பினர் ஜெனிவாவிலே கூடுகிறார்கள். இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை நடத்தியிருக்கிறது என்று குற்றம் சுமத்தப்பட்டது. அப்படி இலங்கை மீது குற்றம் சுமத்தக்கூடாது. இலங்கை மீது இப்படிச் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம். அதன் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது என்று எதிர்த்து அந்தத் தீர்மானம். நிறைவேற்றாமல் தடுத்த ஒரு நாடு உண்டு. சுவிட்சர்லாந்து நமக்குச் சொந்தமான இனஉணர்வு படைத்த ஒரு நாடு அல்ல.
அந்தத் தீர்மானம் வெற்றிபெறாமல் துடைத்து குறுக்குச்சால் ஓட்டிய நாடு எது தெரியுமா? நண்பர்களே! வெட்கத்தோடு சொல்லுகிறோம். அதுதான் இந்தியா.தமிழர்களை உள்ளடக்கிய நாடு. நமக்கு 30 கல் தொலைவிலே இருக்கக்கூடிய ஈழத்திலே தொப்புள் கொடி உறவு உண்டு. அதை எல்லாம் தாண்டி மனிதநேயம். மனித நேயத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை. தமிழர்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். தமிழர்கள் நமக்கு கப்பம் கட்டுகிறார்களே! தமிழ்நாடு தானே நமக்கு வாழ்வளித்திருக்கிறது?
தமிழ்நாட்டில் கலைஞருடைய முயற்சியினாலே நாற்பதுக்கும் நாற்பது நாடாளுமன்ற தொகுதி வெற்றி கிடைத்த காரணத்தால் காங்கிரஸ் ஆட்சி. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியே மலர்ந்திருக்க முடியாது. மதவெறி ஆட்சிதான் தொடர்ந்திருக்க முடியும். இந்தியாவில் மதவெறியை ஒழித்த பெருமை தமிழக வாக்காளர்களையே பொறுத்தது. காரணம், திராவிடர் இயக்கம் இந்த மண்ணை அந்த அளவுக்குப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டைப்பற்றியும், தமிழ்நாட்டு மக்களு டைய உணர்வுகளைப்பற்றி எல்லாம் கவலைப் படாமல் மத்திய அரசு இருக்கிறது. தொலை தூரத்திலே இருக்கின்ற ஜப்பான் நாட்டுக் காரன் பாதுகாப்பு கொடுக்கிறான். தாய்லாந்து நாட்டுக் காரன் பாதுகாப்பு கொடுக்கிறான். நார்வே நாட்டுக் காரன் மத்தியஸ்தம் பேசுகிறான். ஆனால் நரிவ லமும் போக வேண்டாம்; இடமும் போக வேண்டாம், மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும் என்று கிராமத் திலே ஒரு பழமொழி சொல்லுவதைப் போல நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டியதில்லை. உபத்திரவம் செய்யாமலாவது இருந்திருக்கிறீர்களா? இவை எல்லாம் கடந்தகால சம்பவங்கள்.
இலங்கையிலே திட்டமிட்டு எப்படி எல்லாம் கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்ற வாளியாக ஏன் குற்றவாளிக்கூண்டிலே நிறுத்தப்பட வேண்டும் என்று அகில உலக அய்க்கிய நாடுகள் சபை குழு எவ்வளவு தெளிவாக 240 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையிலே சொல்லியிருக் கின்றது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இதோ பட்டியலிட்டுக்காட்டுகிறேன். போர் நடந்துகொண்டிருக்கின்றது. வன்னிப்பகுதி பாதுகாப்பு பகுதி என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
வன்னிப்பகுதியிலே மூன்று லட்சத்து முப்பதாயிரம் பொதுமக்கள் செல்கிறார்கள்-அந்தப் பகுதிக்குப் போனால் குண்டுவிழாது என்று. அது பாதுகாப்புள்ள பகுதி. எனவே பொது மக்கள் அங்கே போய் இருங்கள். உங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது. ஆபத்து இல்லை என்று சொல்லுகிறது. ஈழத்தமிழர்கள், குழந்தைகள், பெண்கள் செல்லுகிறார்கள். அது போர் இல்லாத பகுதி. குண்டு விழாத பகுதி என்று அரசாங்கம் அறிவித்த காரணத்தினால் மக்கள் செல்லு கிறார்கள்.ஆனால் என்ன நடந்தது?
இதோ அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் சுருக்கத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.
1. வன்னியிலே பாதுகாப்பு வளையப் பகுதியில் தஞ்சமடைந்த மூன்று லட்சத்து முப்பதாயிரம் பொதுமக்களை வான் தாக்குதல், மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்கி பல்லாயிரம் பேரை சிங்கள இராணுவம் கொன்று அழித்தது. நியதிகளே கிடையாது. மனித நாகரிகமே கிடையாது.
புரட்சிக்கவிஞர் சொன்னார்: கோழிக்குஞ்சுகள் சாதாரணமாக சென்று கொண்டிருக்கின்ற நிலையிலே வான் பருந்துகள் இதை எப்படியாவது வட்டமிட்டு தூக்க வேண்டுமென்று நினைத்த நேரத்திலே தாய்க்கோழி என்ன செய்யுமாம்? அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா?
வான் பருந்து பலமானது என்பதைப்பற்றி அது கவலைப்படாது. அது போராடும். ஈழத்திலே சிங்கள இராணுவத்தை எதிர்த்து தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இயலாதவர்கள் பாது காப்பு கருதி அங்கே சென்றார்கள்.
ஆனால் சிங்கள இராணுவம் என்ன செய்தது? தமிழர்களை சுற்றி வளைத்து மேலே வான் தாக்குதல், கனரக எந்திரங்கள் மூலம் தாக்கினார்கள்.
ஜாலியன் வாலாபாக் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மக்களை வெள்ளைக்காரன் டையர் என்பவன் சுட்டான், சுட்டான் என்று மேடையில் முழங்கிக்கொண்டிருக்கின்ற நண்பர்களே, தேசியங்களே! உங்களைப் பார்த்துக் கேட்கிறோம்.
தயவு செய்து ஜாலியன் வாலாபாக்கில் நூறு பேரை சுட்டதற்கு பேசுகிறீர்களே-வன்னிப் பகுதியிலே சிங்கள இராணுவம் பல்லாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததே-அது உயிர்ப்பலிகள் இல்லையா? உங்கள் இதயத்தில் இரத்தக் கண்ணீர் கசிய வேண்டாமா?
2. அப்பாவி மக்களுக்கு உதவி செய்தவற்காக அமைக்கப்பட்டிருந்த அய்.நா. மய்யத்தையும், உணவு வழங்கும் மய்யங்களையும் சிங்கள இராணு வத்தின் மூலமாக குண்டு வீசி அழித்தது. அந்த சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சி கொடுத்த இராணுவம் எது? இந்திய இராணுவம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இராணுவத் தீர்வில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஒரு பக்கம் பாடிக்கொண்டே இன்னொரு பக்கம் சிங்களவனுக்கு இந்திய இராணுவம் இராணுவப் பயிற்சி கொடுத்தது.
சென்னைக்கு பயிற்சிக்கு வந்த சிங்களவர்களைக் கண்டு நாம் எதிர்ப்பு காட்டியவுடனே இன்னொரு மாநிலத்திற்குச் சென்று நீங்கள் பயிற்சி கொடுத் தீர்களே!
3. போரிலே காயமடைந்து மீட்க வந்த சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல் மீது சிங்கள இராணுவம் வான் தாக்குதல் நடத்தி சரமாரியாக குண்டுவீசி காயம்பட்ட பல நூறு தமிழர்களை அழித்தது.
வன்னிப்பகுதி மருத்துவமனை அமைந்த பகுதிகள். பாதுகாப்புக்காக மக்கள் போயிருந்த பகுதி மட்டுமல்ல, மருத்துவமனைகள் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.
மருத்துவமனைப் பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றன. என சிங்கள இராணுவத்திற்குத் தெரிந்திருந்தாலும், அவை அனைத்தும் குறி வைத்துத் தாக்கி அழிக்கப்பட்டன. இதனால் பலநூறு நோயாளிகள் உயிரிழந்தனர்.
5.இலங்கை அரசின் இதுபோன்ற நட வடிக்கைகளால் உணவு, மருந்து, குடிநீர் விநியோகம் முற்றிலும் முடக்கப்பட்டு, அப்பாவிப் பொதுமக்கள் கதி அற்ற நிலையில் அவர்க ளாகவே இறந்துபோகும் நிலையை உருவாக்கியது. அண்மைக்காலத்தில் உலக வரலாற்றில் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருக்கிறதா?. ஹிட்லர் கூட இப்படி நடத்தியிருக்கிறானா? போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்கள் எண்ணிக்கையை மறைமுகமாக திட்டமிட்டு குறைத்துக்காட்டி அதற்குப் பின் தாக்குதல் நடத்தியது.
2009 ஜனவரி மே மாதம் முதல்வரையிலான 5மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று வரை அவர்களில் பெரும்பகுதியினர் அடையாளம் காணப்படவில்லை.
என்ன ஆனார்கள் யாருக்கும் தெரியாது. தகப்பன் இருக்கிறான்; பிள்ளை என்ன ஆனான் தெரியாது. கணவன் இருக்கிறான்; மனைவி எங்கேயிருக்கிறார் தெரியாது. மனைவி இருக் கிறார்; கணவன் எங்கே தெரியாது. இப்படிப்பட்ட கொடுமைகள். இன்றுவரை இராணுவத்தினரின் கொடுமை தொடர்கிறது
போர் முடிவுற்றதற்காக இலங்கை அரசு அறிவித்த பின்பும் இராணுவத்தின் கொடுமை களும், சித்ரவதைகளும் இன்றுவரை நிறுத்தப் படவில்லை. சொல்லுவது விடுதலை அல்ல. சொல்லுவது வீரமணி அல்ல. சொல்லுவது கலைஞர் அல்ல. சொல்லுவது சுப.வீரபாண்டியன் அல்ல. சொல்லு வது தமிழர்கள் அல்லர். சொல்லுவது அய்.நா. சபையினுடைய அறிக்கை.
அதனால்தான் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லுகின்றோம். இலங்கையிலே நடைபெற்ற கொடுமை வரலாற்றிலே எங்கு தேடினாலும் காண முடியாது. போரில் இருந்து தப்பியவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அடையாளம் காணுகிறோம் என்கிற பெயராலே தமிழர்களைக் கண்டுபிடித்து சித்திரவதை செய்தனர்.
விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்துச்செல்லப்பட்டவர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பல நூற்றுக்கணக்கில் பெண் கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
சிங்களவன் சொன்னான்இனிமேல் தமிழச்சி களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் எல்லாம் சிங்களக் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று சொல்கிறான். இதை சொல்லுவதற்கு எங்களுடைய நா கூசுகிறது. கேட்பதற்கு காதுகளே இருக் கின்றனவா என்று எண்ணி வேதனைப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. மனிதநேயம் படைத்த மற்றவர்கள் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா?
அதோடு ஊடக நண்பர்கள் இங்கே இருக் கிறார்கள். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இனப்படுகொலையை எதிர்த்த ஊடகவிய லாளர்கள், ராஜபக்சே நடத்துவது நியாயமில்லை என்று சிங்களவன்கூட சொல்லலாம். அப்படிச் சொன்ன பத்திரிகையாளர்களை, தொலைக் காட்சியாளர்களை, சமூக ஆர்வலர்களை இலங்கை அரசு அவர்களை பல்வேறு வழிகளிலே மிரட்டி, துன்புறுத்தி அடக்கியிருக்கிறது; கொன்றி ருக்கிறது.
வெள்ளை வேன்கள் மூலம் கடத்திச் செல்லப் பட்டவர்கள் மர்மமான முறையில் கொல்லப் பட்டனர். இலங்கையில் பெரும்பாலான தமிழர்கள் காணாமலே போய்விட்டார்கள். உலகம் பதறிப் போய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அய்.நா. குழு இவைகளை எல்லாம் ஆராய்ந்து அறிக்கையாக தயார் செய்து இலங்கை அரசின் அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று அறிவித்திருக்கிறது.
எனவே நண்பர்களே, இது போல ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஒரு சிறு சேம்பிளை உங்களுக்கு எடுத்துச்சொன்னோம். இலங்கையிலே இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றன. இதற்கு விசாரணை தேவை என்று அய்.நா. குழு வற்புறுத்துகிறது.
மத்திய அரசினுடைய கடமை என்ன? நீங்கள் ஏன் இன்னமும் மவுனம் சாதித்துக்கொண்டி ருக்கிறீர்கள்? இதற்கு முன் இந்திய அரசு நடந்து கொண்டது வரலாற்றிலே மன்னிக்க முடியாத-தமிழர்கள் மத்தியிலே என்றைக்கும் மறக்க முடியாத கொடுமைகள்.
அதற்குப் பரிகாரம் தேட இதைவிட நல்ல ஒரு வாய்ப்பு உங்களுக்கு வருமா? முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள தமிழர்களை எங்கே சிங்களவன் விட்டான்? நீங்கள் அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என்று பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
இந்தியா பல்லாயிரக்கணக்கான கோடியை இலங்கை அரசுக்கு கொட்டிக் கொடுத்தது. இது நம்முடைய வரிப்பணம் இல்லையா? தமிழக அரசின் சார்பிலும் சரி, மத்திய அரசின் சார்பிலும் சரி கொடுக்கப்பட்ட பணம் யாருக்குப் பயன் பட்டது?
ஓடிப்போன சிங்களவனைத் தேடிக் கண்டு பிடித்து மீண்டும் சிங்கள குடியேற்றங்களை அங்கு நடத்தத்தான் பயன்பட்டதே தவிர, எங்கள் தமிழ் இனத்தை வாழவைப்பதற்காக புனர்வாழ்வு, புதுவாழ்வு தருவதற்காக-செத்தவர்கள் போக, அழிக்கப்பட்டவர்கள் போக, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவின் பணம் ஏதாவது பயன்பட்டதா?
இனிமேல் வாழ முடியுமா?
இவர்களும் இருக்கிறார்கள் என்று காட்டக் கூடிய ஒரு நடிப்பு-நாடகம்கூட சிங்கள ராஜபக்சே கூட்டத்திற்கு இல்லை. அரசியல் தீர்வு இனிமேல் ஏற்பட முடியுமா? தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுபட்டு வாழ முடியுமா? தமிழர்களை அழித்து, தமிழர்களுடைய உரிமைகளை எல்லாம் இப்படி பறித்துக்கொண்டிருக்கின்ற நிலையிலே மீண்டும் எம் தமிழினம் வாழவேண்டும் என்றால் தமிழின உணர்வு அடிப்படையிலேகூட அல்ல, மனிதநேய அடிப்படையிலே கேட்கிறோம்.
எந்த நிலையில் தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ முடியும்? நான் பல கூட்டங்களில் சொல்லியி ருக்கின்றேன்.
தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று சிங்கள ராஜபக்சே சொல்லுகிறார். ஓநாய் வயிற்றில் ஆட்டுக்குட்டி இருந்தால் ரொம்ப பாதுகாப்பு என்று சொன்னால் எப்படி யிருக்கும்? புலியினுடைய வயிற்றில் புள்ளிமான் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள்.
இனிமேல் இலங்கையில் தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ முடியாது. ஈழத்திலே உள்ள தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். எங்கள் இரத்த சம்பந்தமுள்ளவர்கள்.
ஒரு காலத்திலே இலங்கையும், தமிழ்நாடும் கடல்கொள்ளப்படுவதற்கு முன்னாலே ஒன்றாக இருந்த நிலம் என்பது ஆராய்ச்சியாளர்களாலே சொல்லப்பட்டது. எங்கள் உணர்வுகளை மற்ற வர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
தமிழ்நாடு மத்திய அரசினுடைய ஒரு அங்கமாக இருக்கிறது என்ற சொல்லும்பொழுது, உங்களை வற்புறுத்த, உங்களுடைய தூக்கத்தை உலுக்க, உங்களுடைய மவுனத்தைக் கலைக்க எங்களுக்கு உரிமை இருக்கிறதா-இல்லையா? அதை நாங்கள் செய்யாமல் சும்மா இருப்போம் என்று நினைக் கின்றீர்களா? நிச்சயமாகக் கிடையாது. ஒரே ஒரு அரசியல் தீர்வு-தமிழ் ஈழம்தான்!
இனிமேல் ஒரே ஒரு அரசியல் தீர்வுதான் உண்டு. அந்த அரசியல் தீர்வு என்ன தெரியுமா? தமிழ் ஈழம்! தமிழ் ஈழம்! தமிழ் ஈழம்! என்பதைத் தவிர வேறு கிடையாது (பலத்த கைதட்டல்).
அந்தத் தமிழ் ஈழத்திற்காகத்தான் நீண்ட காலத்திற்கு முன்னாலே நாங்கள் மாநாடு போட் டோம். எப்பொழுது? 25 ஆண்டுகளுக்கு முன்னாலே கால் நூற்றாண்டுக்கு முன்னாலே தமிழ் ஈழவிடுதலை மாநாடு. அன்றைக்கு சொன்ன காரணம் இன்றைக்கு மாறியிருக்கிறதா?
அண்ணா அவர்களைப் பார்த்து கேட்ட பொழுது, அண்ணா சொன்னாரே! பிரிவினையைக் கைவிட்டு விட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு அண்ணா சொன்னார், ஆம். பிரி வினையைக் கைவிட்டுவிட்டோம் என்று. ஆனால் பிரிவினைக் காரணங்கள் அப்படியே இருக் கின்றன என்று சொன்னாரல்லவா? அதுதானே அரசியல் விஞ்ஞானம், அதுதானே சிறந்த அணுகு முறை?
நோய் நாடி நோய் முதல் நாடித் தீர்ப்பதுதானே மருத்துவர்களுடைய கடமை? எனவே, தமிழ் ஈழத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். மத்திய அரசு முன் வரவேண்டும்.
அமெரிக்கா பின்லேடனை எப்படித் தூக்கியது என்று பார்த்தீர்கள். இனிமேல் யாராவது இறை யாண்மையைப்பற்றிப் பேசலாமா? அதுமட்டுமல்ல; இந்தியாவின் தளபதி பேசினாரே- நேற்று நாங்களும் அதுபோல போய் திடீரென்று பாகிஸ்தானுக்குள் உள்ளே நுழை வோம். இறையாண்மையைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம் என்று சொன்னார்.
உங்களுக்கு நெருக்கடி வரும்பொழுது இறை யாண்மை வசதியாக மறந்துபோய்விடுகிறது. எங்கள் இனம் அழியும்பொழுது மட்டும் நீங்கள் இறையாண்மையைப் பேசினால் அந்த இறை யாண்மையைத் தூக்கி வங்காள விரிகுடா கடலிலே போடுவதற்குத் தமிழர்கள் தயங்குவார்களா? (கைதட்டல்).
பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தவர்கள். தென்னாப்பிரிக்க விடுதலையை ஆதரித்தவர்கள் அவ்வளவு தூரம் போக வேண்டாம். இந்திராகாந்தி அம்மையார் காலத்திலே வங்கதேச யுத்தம் எதற்காக நடந்தது?
வங்காள தேசம் எப்படி உருவானது? சோனார் பங்களா-தங்க வங்கம் என்றெல்லாம் பாடி னார்களே! ஒவ்வொருவரும் நாம் பணம் கொடுத்தோம். நாம் வாங்கிய ஸ்டாம்பிலேகூட அய்ந்து காசு ஸ்டாம்பை சேர்த்து ஒட்டினோமே?
அகதிகள் வருகிறார்களே என்பதற்காக வங்க தேசத்தை உருவாக்கிக் காட்டினார்கள். இந்திரா காந்தி அவர்களுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது.
அதற்குப் பல காரணங்கள் அரசியல் ரீதியாகவும் இருக்கலாம். பாகிஸ்தானை பலம் இழக்கச் செய்யவேண்டுமென்ற அரசியல் காரணம்கூட இருக்கலாம். நாம் அந்த இடத்திற்குப் போக வேண்டிய அவசியமில்லை. இந்தியாவே பங்களாதேசை உருவாக்கியது.
ஏன் ஒரு தமிழ் ஈழத்தை உருவாக்க முடியாது? அதன் மூலம் உங்களுக்கும் பாதுகாப்பு; உங்க ளுடைய இறையாண்மைக்கும் பாதுகாப்பு ஏன் ஏற்படுத்தக் கூடாது? இந்திராகாந்தி அம்மையாருக்கு இருந்த ஒரு தொலைநோக்கு-ஒரு தீர்க்கமான சிந்தனை ஏன் இன்றைய காங்கிரஸ் தலைமைக்கு வர மறுக்கிறது? இதைக் கேட்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.
காங்கிரஸ் அரசை-மத்திய அரசை காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள். அந்த முறையிலே கேட் பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.
அமெரிக்காவினுடைய ஏழாம் ஆதிக்க போர்ப்படைக் கப்பல் இலங்கையில் உள்ள திரிகோண மலைக்கு வந்தது என்று சொல்லும் பொழுதே இந்திராகாந்தி அவர்களுக்குத் தெளி விருந்தது. திரிகோணமலையிலே அமெரிக்கா இராணுவ தளம் தேடுகிறது. அது என்றைக்கும் இந்தியாவுக்கு ஆபத்து என்று நாட்டுப் பாதுகாப்புக் கண் ணோட்டத்தோடு பார்த்தார்.
ஜெயவர்த்தனே ஈழத்தமிழர்கள் மீது கொடு மையைக் கட்டவிழ்த்துவிட்ட பொழுது இலங்கை யிருந்து வந்த தமிழர்களுக்கு- விடுதலைப்புலி களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்த இடம் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்தார். இந்திராகாந்தி தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு இந்தப் பிரச்சினையை அணுகினார்.
இந்திரா காந்திக்குத் தெரியாத இறை யாண்மையா உங்களுக்குப் புரிகிறது? இந்திரா காந்தி அம்மையார் அதை ராஜதந்திரத்தோடு பார்த்தார். அரசியல் ரீதியாக மனிநேயத்தோடு பார்த்தார். அந்த உணர்வு இப்பொழுது தேவைப் படுகிறது.
ஓர் அரசாங்கம்கூட முக்கியமான முடிவு எடுக்கிற நேரத்திலே, திணறுகிற நேரத்திலே இதற்கு பழைய முன் மாதிரி எங்கேயிருக்கிறது என்றுதேடிப் பிடித்து புரட்டுவார்கள். பழைய முன்மாதிரிகளைப் தேடிப்பாருங்கள்.
இந்த நேரத்திலே ஒன்றை நான் அறிவிக்க விரும்புகின்றேன். ஈழத்தமிழர்களுக்கா உலகம் முழுவதும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அய்.நா. மன்ற அறிக்கை உலகம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. தமிழ்நாட்டிலே-ஒரு சிறிய பூபாகத்திலே சிறிய குரலாக வருகிறது என்று யாரும் நினைக்கவில்லை. நியூயார்க் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம்
வருகிற 18ஆம் தேதியன்று அமெரிக்காவிலே-நியூயார்க்கிலே-அய்க்கிய நாடுகள் சபைக்கு முன்னாலே அமெரிக்கத் தமிழர்கள், கனடா நாட்டுத்தமிழர்கள், மற்றத் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து அய்.நா.அறிக்கை மீது ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்துங்கள் என்று அய்க்கிய நாடுகள் சபைக்கு முன்னாலே மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது- (கைதட்டல்).
அதிலே திராவிடர் கழகம் கலந்துகொள்கிறது என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே தெரிவிக்கவில்லை; வேதனையோடு தெரிவிக்கிறேன் (கைதட்டல்). ஏனென்றால் கண்ட ஆர்ப்பாட்டம் என்று சொல்லும்பொழுது நமக்கு பங்கு இருக் கிறது. நாங்கள் எல்லாம் கருமத்திற்கு உரியவர்கள். கடைசி வரையிலே இருப்போம். எங்களுக்கு இலங்கைப் பிரச்சினை தேர்தல் பிரச்சினை அல்ல; ஓட்டுப் பிரச்சினைஅல்ல.
கிராமத்திலே சொல்லுவார்கள்-புருசனைப் பார்த்தால் தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்கள் என்று கொச்சையாக இப்படி ஒரு பழமொழி சொல்லுவார்கள், அது போல அல்ல.
ஈழப்பிரச்சினை எங்கள் இரத்தத்தில் உறைந்த இனப்பிரச்சினை. மனிநேயப் பிரச்சினை. திராவிடர் கழகம் சார்பாக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்துகொள்வார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம் (கைதட்டல்).
அங்கிருக்கின்ற தமிழர்கள் கேட்டார்கள்-நீங்கள் யாரையாவது அனுப்புங்கள் என்று. ஏற்கெனவே அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவர் கலந்துகொள்வார் என்று ஏற்பாடு செய்தவர்களுக்கு, பன்னாட்டமைப்பாளர்களுக்கு உள்பட மனித நேயம் யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் கலந்து கொள்ளக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக் கிறார்கள்.
திடீரென்று ஆர்வம் வந்து மற்றவர்கள் பின்னால் போகலாம் என்பது அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வெள்ளை மாளிகை முன்னாலே இதே தமிழ் ஈழத்திற்காக போராட்டம் நடத்திய காலத்தில், அதற்காகவே சென்று திராவிடர் கழகத்தின் சார்பிலே கலந்துகொண்டவர்கள்தான் உங்கள் முன்னாலே பேசுகிற நாங்கள்.
பழைய வரலாறுகள் தொடருகின்றன என்ப தற்கு அடையாளம்தான் அங்கே நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே, உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டு விட் டர்கள்.
இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள். இந்த வேண்டுகோளோடு என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
தமிழகத்தின் அரசியல் கட்சி நண்பர்களே! மற்ற பிரச்சினைகளில் நாம் அரசியல் பேசலாம்; அரசியலை விமர்சிக்கலாம்; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் பேசலாம். தயவு செய்து ஈழத்தமிழர்களுடைய துயரைத் துடைக்கின்ற நேரத்தில், அவர்களுடைய கண்ணீரைத் துடைக் கின்ற நேரத்தில், அவர்களுக்கு ஏற்பட்ட கொடு மையை அய்.நா.அமைப்புகளே இன்றைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிற நேரத்தில் இன்னமும் நமக்குள்ளே அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள்.
பிரித்துப் பிரித்து அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய்களாக ஒரு போதும் இருக்காதீர்கள். இதுதான் கலைஞரை குற்றம் சொல்ல வாய்ப்பு என்று ஒரு கட்சியினர் கிளம்புவது-ஒரு கூட்டத்தினர் கிளம்புவது; இன்னொருவர், இதுதான் சந்தர்ப்பம் என்று மற்ற அரசியலைப் பேசுவது- இவை களுக்கெல்லாம் ஓய்வு கொடுங்கள்; விடுமுறை கொடுங்கள்.
தயவு செய்து அரசியலை கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர்கள் பிரச்சினை என்றால் அவர்களுக்காக மட்டும் கண்ணீர் சிந்துவதற்கு, கண்டனம் தெரிவிப்பதற்கு தயாராக இருங்கள்.
மற்ற அரசியல் விவாதங்களைப் பிறகு வைத்துக்கொள்ளலாம். இப்படி தமிழர்கள் பிரிந்து பிரிந்து, பிளந்து போனதால்தான் தமிழகம் பெற வேண்டிய உரிமைகளை நாம் இழந்திருக்கின்றோம். முல்லைபெரியாறு அணையை உயர்த்துவதற்குக் கூட கேரளாக்காரன் தடுக்கிறான். இன்னமும்-உச்சநீதிமன்ற உத்தரவைப் பார்த்தபிறகும். எதற்காக? தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத் தால். கருநாடகத்திலே காவிரிப் பிரச்சினை இன்ன மும் தீராமல் இருக்கிறது.
எப்பொழுது மேட்டூர் அணை திறக்கப்பட்டு நமக்குத் தண்ணீர் வருகிறதென்று சொன்னால் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிட்டது.
இனிமேல் தண்ணீர் இருந்தால் அணை உடையும் என்கிற நேரத்தில் கிருஷ்ணராஜசாகர் அணை பாதுகாப்பிற்காக தண்ணீரை மேட்டூர் அணைக்குத் திறந்து விடுகிறான்.
நமக்குத் தண்ணீர் வந்தவுடனே மறந்துவிடுகின் றோம். நமக்கு தண்ணீரைப் பற்றிக் கவலை இல்லை. காவிரிப் பிரச்சினை ஏதோ தீர்ந்துவிட்டதைப் போன்று நினைக்கின்றோம்.
காவிரிப் பிரச்சினை மீண்டும் ஆரம்பித்தவுடனே அவர் குற்றவாளியா? இவர் குற்றவாளியா? நீ குற்றவாளியா? நான் குற்றவாளியா? என்று பேசி அரசியல் உள்ளே புகுகிறது.
பாலாறு மீது அணைப் பிரச்சினையா? எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இங்கே அரசியல்- அரசியல்-எதிலும் அரசியல். தயவு செய்து ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையிலே அரசி யலை ஒதுக்கி வையுங்கள்.
நாங்கள் எல்லோரையும் அழைத்து ஒரே மேடையில் பேசக்கூடத் தயாராக இருக்கின்றோம். நாங்கள் பல இடங்களிலே சொல்லியிருக்கின்றோம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை-நிபந்தனை கூட அல்ல; ஒரு வேண்டுகோள்.
வருகின்றவர்கள் யாராக இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்காகவும், அவர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மட்டும்தான் பேச வேண்டுமே தவிர, தயவு செய்து உள்ளூர் அரசியலைக் கொண்டு வந்து யார் குற்றவாளி? யார் எதைச் செய்யத் தவறினார்கள் என்று ஒவ்வொருவரும் பழைய கதையை ஆரம்பித்தால் நிச்சயமாக எது பொது நன்மையோ அதைப் பார்க்க முடியாது.
வில்லெடுத்து நாணேற்றுகிறவன் இலக்கு என்னவோ அதைமட்டும்தான் அவன் பார்க்க வேண்டுமே தவிர, பக்கத்திலே இருப்பவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் அவனுக்கு இலக்கிலே குறிஇல்லை; வேறு எதிலோ குறியிருக்கிறது என்று அதற்குப் பொருள்.
தமிழர்களே! தமிழர்களே! ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் கண்ணீர் விடுவது உண்மையாக இருந்தால் நாம் நிச்சயமாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது. மத்திய அரசை வலியுறுத்துவோம்!
மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றால், எல்லா தமிழர்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். ஆறுகோடி தமிழர்கள் ஏழு கோடி தமிழர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏழுகோடி தமிழர்களும் தனித்தனியே இருக்கிறார்கள். புரட்சிக் கவிஞர் சஞ்சீவி பருவதத்தின் சாரலிலே சொல்லுவார், ஏகமனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே? எல்லோரும் அங்கே தனித்தனிதான்- என்று.
ஈழப்பிரச்சினை என்றால் தமிழர்கள் ஒன்றுபட்டு குரல்கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று சொல்லுங்கள். பிறகு மத்திய அரசு என்ன? உலக அரசுகள் எல்லாம் சார்பில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய நிலை வரும்.
எனவேதான் தமிழ் ஈழம் என்ற தீர்வை வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான் என்று ஒப்புக்கொள்ளக்கூடியவர்கள் தமிழ்நாட்டு அரசியலை உள்ளே கொண்டு வந்து பேச மாட்டோம் என்று ஒப்புக்கொள்ளக் கூடியவர்கள்.
யாராக இருந்தாலும் ஒரே மேடையிலே தோன்றி, ஒரு உணர்வை உருவாக்குவதன் மூலமாக வெற்றிபெறுவோம். நிச்சயம் மத்திய அரசை செயல்பட வைப்போம்; வைக்கக்கூடிய துணிச்சல் கட்சி வேறுபாடுஇல்லாமல், ஓட்டைப் பற்றி கவலைப்படாத இந்த பெரியாரியக்கத்திற்கு உண்டு- திராவிடர் இயக்கத்திற்கு உண்டு-
தமிழ் இன உணர்வோடு, சுயமரியாதையைப் பற்றிக் கவலைப்படுகின்ற இந்த இயக்கத்திற்கு உண்டு என்று சொல்லி உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
---------------- “விடுதலை” 11-5-2011
0 comments:
Post a Comment