Search This Blog

20.5.11

பெரியார் மொழியைப் பார்த்த பார்வை

போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதுபோல் மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்

தஞ்சை பல்கலை.யில் தமிழர் தலைவர் பேச்சு

காலத்திற்கு ஏற்ப போர்க் கருவிகள் மாறுவதுபோல் மொழியும் மாற்ற மடையவேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் (21.2.2011) திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நான் தேர்வு செய்த தலைப்பே...


நான் எதை எண்ணிக் கொண்டு வந்தேனோ எதிரிலிருந்து துவங்கவேண்டும் என்று எண்ணினேனோ அதையே சொன்னார்கள். நான் தேர்வு செய்த தலைப்பே தந்தை பெரியார் அவர்களின் மொழிச் சிந்தனை. அவரின் பார்வை என்பவை பண்பாட்டுப்பாதுகாப்பு இது தான் தலைப்பு. நாங்கள் தலைப்புக் கொடுக்கவில்லை. நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

அந்தத் தலைப்பை மய்யப்படுத்தி இங்கு கருத்துகளை எடுத்து வைக்க நான் ஆயத்தமாக வந்தேன்.

நான் எதை முதல் அத்தியாயமாகத் தொடங்க வேண்டும் என்று நினைத்தேனோ அதை நூலாகக் கூட எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள். உரையாற்றுவதிலே நீங்கள் ஒரு குறிப் பிட்ட காலம் தான் உரையாற்றமுடியும். எனவே நீங்கள் களைப்படையக் கூடாது. கருத்துகளும் குறையக் கூடாது. நூலாக சேர்த்து....

இன்னும் கொஞ்சம் அதிகமான செய்திகளைக் கூட சேர்த்து நூலாக இந்த அறக்கட்டளை சொற்பொழிவுக்குத் தர முடியும் என்று நினைத்தேன். இதற்காக நான் எழுதியதை பாதியிலே முடித்து விட்டு, சரி இந்த உரை முடியட்டும். அதற்குப் பிறகு பல் கலைக்கழகத்தினுடைய அனுமதியோடு நாம் சிறப்பாக பல்கலைக்கழக வெளியீடாகவோ அல்லது மற்றவர்கள் வெளியிட்டுப் பல்கலைக் கழகத்திற்கு கொடுப்பதோ அதை சிறப்பாக செய்யலாம் என்கிற அந்த வகையிலே இதை எடுத்துக் கொண்டபொழுது எதைத் துவக்கமாக நினைத்துக் கொண்டிருந்தோமோ அதையே மிகச் சிறப்பாக நம்முடைய துணைவேந்தர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

யூகத்தின் அடிப்படையில் கூடாது


இரண்டும், இரண்டும் நான்கு என்று கூட்டினால் அது சரியாக உண்மையான கூட்டலாக இருந்தால் அது சரியாக இருக்கும். யூகத்தின் அடிப்படையில் கூட்டல்கள் அமையக் கூடாது.

உண்மையின் அடிப்படையில் கூட்டல்கள் அமைய வேண்டும். இரண்டும் இரண்டும் சேர்த்தால் நான்குதான் வரும். நான்கும், நான்கும் சேர்த்தால் எட்டு வரும்.

இது துணைவேந்தர் அய்யா கூட்டினாலும் அது தான். பேராசிரியர் அய்யா இராமலிங்கம் அவர்கள் கூட்டினாலும் அதுதான்.

நான் கூட்டினாலும் அது தான் என்பதைப் போல தந்தை பெரியார் அவர்களுடைய புரட்சி கரமான சிந்தனைகள் என்பதை மற்றவர்கள் சொன்னதை மிக ஆழமான உணர்வோடு எடுத்துச் சொன்னார்கள்.

பெரியார் மொழியைப் பார்த்த பார்வை


மற்றவர்கள் மொழியைப் பார்த்த பார்வைக்கும், தந்தை பெரியார் அவர்கள் மொழியைப் பார்த்த பார்வைக்கும், மற்ற அறிஞர்கள், பெரிய சிந்தனையாளர்கள், ஆற்றலாளர்கள், மிகப்பெரிய நுண்மான் நுழைபுலம் கொண்டவர்கள், கற்றுத் துறைப் போகிய அறிஞர்கள் இப்படி எல்லோரும் சிந்தித் ததை விட தந்தை பெரியாரின் சிந்தனை என்பது ஒரு தனித்த சிந்தனை.

அதைத்தான் மொழித்துறையிலே இருந்த மாணவர்களாக இருந்தாலும், என்றைக்கும் நிரந்தரமாக பெரியாரின் மாணவனாகிய என்னைப் போன்ற வர்களுக்கெல்லாம் மிகத் தெளிவாகத் தெரிய வேண்டிய செய்தி என்னவென்று சொன்னால் அதைத்தான் நம்முடைய துணைவேந்தர் அய்யா அவர்கள் சொன்னார்கள்.

சுயமரியாதை மக்களுக்கு மட்டும் இருப்பதை விட அந்த மக்கள் பேசுகின்ற மொழி அது பண்பாட்டின், உருவம்.

மொழி என்பது...


மொழி என்பது வெறும் கருவி என்பது ஒரு தத்துவம். ஆனால் அந்தக் கருவி பிறகு வளருகிற பொழுது. அது பண்பாட்டின் ஒட்டு மொத்தமான பிரதிபலிப்பாக-பண்பாட்டினுடைய எதிரொலியாக பண்பாட்டினுடைய தொகுப்பாக அது ஆகிறது. ஆகவே அந்த மொழிக்கு ஏற்படுகிற அவலம், அந்தப் பண்பாட்டிற்கு ஏற்படுகின்ற மிகப்பெரிய கேடு என்பதை தனித்த சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் விளக்கி யிருக்கின்றார். தந்தை பெரியார் சிறந்த பகுத்தறிவாளர், விருப்பு வெறுப்புக்கு ஆளாகாத ஒரு விஞ்ஞானப் பார்வை அறிவியல் பார்வை, சமுதாய பார்வை கொண்ட ஒருவர்.

தந்தை பெரியார் தன்னைப்பற்றி சொல்லும் பொழுது சொன்னார். எனக்கு எந்தப் பற்றும் கிடையாது என்று. பின் எந்தப் பற்று எனக்கு உண்டு என்று சொன்னால், அறிவுப்பற்று மட்டும் தான் உண்டு. வளர்ச்சிப் பற்று இந்த இரண்டு பற்றும் எனக்கு மிக முக்கியம். மற்ற பற்றெல்லாம் எனக்குக் கிடையவே கிடையாது என்று சொன்னார்.

நாட்டுப்பற்று கிடையாதா?


உங்களுக்கு நாட்டுப்பற்று கிடையாதா? என்று கேட்டார்கள். எனக்கு நாட்டுப் பற்று கூட கிடையாது மனிதப் பற்று ஒன்றுதான் என்று பெரியார் சொன்னார். யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்பது பழமொழி.

அய்யா சொல்லுகிறார், மனிதப்பற்று என்பது என்னுடைய மக்களிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவர்களை மய்யப்படுத்தினேன். எனக்கு உடன்பாடு அல்ல. இதைப் பார்க்கிறவர்களுக்கு ஒரு முரண்பாடு போல தோன்றும் என்ற அளவிலே அய்யா அவர்கள் கருத்துகளை எடுத்து வைத்தவர்கள்.

எனவே ரொம்ப அழகாக எதை நான் துவக்கவேண்டும் என்று நினைத்தேனோ அதையே என்னுடைய பணியை எளிதாக்குகின்ற வகையிலும், என்னுடைய உரைக்கு ஒரு நல்ல முன்னுரை, முதல் பகுதியாகவே நம்முடைய துணைவேந்தர் அய்யா அவர்கள் அதை சொன்னதற்கும் முதற்கண் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து அதே கருத்தை உங்கள் முன்னாலே மேலும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இங்கே இருக்கக்கூடிய புலவர் பெருமக்களுக்கு பேராசிரியர் பலருக்கு கேள்விப்பட்டு அறிமுகமானவர் அய்யா புலவர் ந.இராமநாதன் அவர்கள் ஆவார்கள். இராமநாதன் அவர்கள் ஒரு பல்கலைக் கொள்கலன்.

பெரியாருடைய சிந்தனை, பெரியாருடைய கருத்துகள் இவை எல்லாம் பெரியாரியல் பாடங்களாக்கி பல்வேறு பட்ட நிலையில் இருக்கக் கூடிய அய்.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட பலரையும் அவர்கள் மாணவர்களாக ஆக்கிக் கொண்டு, எடுத்துச் சொன்னார்கள். அவர் சொன்ன கருத்துகளை நாங்கள் நூலாகவே கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தோம்.

பெரியாரியல் பாடங்கள்


ஏனென்றால் அது எப்போதும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பெரியாரியல் பாடங்கள் தொகுதி 1, 2 என்று போட்டோம். அவர்கள் மொழியைப் பற்றி ஆய்வு செய்கிற நேரத்திலே நம்முடைய துணைவேந்தர் அய்யா அவர்கள் தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தனித் தன்மை வாய்ந்தது என்று சொன்னார்களோ அதை அழகாக எடுத்துச் சொல்லி ரொம்ப தெளிவான ஒரு நிலையை தந்தை பெரியார் அவர்கள் பற்றிக் காட்டினார்கள்.

அதை ஒரு பெரும் தமிழ்ப்புலவர் வாயிலகாகவே சொல்லுகின்ற நிலையும், அதை அப்படியே வழி மொழிந்து உறுதிப்படுத்துகின்ற வகையிலே, இன்றைக்கு சற்று நேரத்திற்கு முன்னால் இந்த அறக்கட்டளை சொற்பொழிவுக்குத் தலைமை தாங்கிய நம்முடைய துணைவேந்தர் அவர்களுடைய ஆழமான கருத்துரையும், அதிலே பொருள் பொதிந்த உரையும் அமைந்தது.

பல மயக்கங்கள் தீரும்!


இதை புரிந்து கொண்டால் தந்தை பெரியார் பற்றிய பல மயக்கங்கள் தீரும். சிலர் திட்டமிட்டே அவதூறான செய்திகளை, பரப்புரைகளை செய்கிறார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாங்கள் எப்பொழுதும் தூங்குகிற வர்களை எழுப்புகிறவர்களே தவிர தூங்குகிறவர்களைப் போல நடிக்கிறவர்கள் அல்ல.

பாசாங்கு செய்பவர்களைப்பற்றிக் கவலைப் படுகிறவர்கள் அல்ல (கைதட்டல்). அது வீண்வேலையும் கூட பெரியார் அவர்களுடைய சிந்தனை எப்படிப்பட்டது என்பதற்கு ஓர் அறிமுக உரையை பேராசிரியர் புலவர் இராமநாதன் அவர்கள் சொல்லியிருக்கின்றார்.

முதலில் கரந்தைப் புலவராக இருந்து பிறகு உயர் நிலைக்குச் சென்றவர்கள். தஞ்சைக்கு அருகில் உள்ள இந்த மண்ணைச் சார்ந்தவர்கள்.

பெரியாருடைய மொழிக்கொள்கை என்பது இலக்கண-இலக்கிய ஆராய்ச்சியால் விளைந்த விளைவன்று. பெரியார் தம்முடைய அறிவிற்கும் (ஒவ்வொரு சொல்லும் முக்கியம்) அனுபவத்திற்கும் உட்பட்டிருப்பது தேவைகளை முன்னிட்டு வாழ்வில் துறைதோறும் பல கருத்துகளைச் சொல்லி யிருக்கின்றார்.

-இவற்றைப் போலவே, மொழியைப் பற்றிப் பொதுவாகவும், தமிழ் மொழியைப் பற்றிச் சிறப்பாகவும் ( அவருடைய கருத்தை கோடு போட்டுக் காட்டுகிறார்)

சிலருக்கு கருத்துகளில் குழப்பம்!


சில பேருக்கு கருத்துகளில் குழப்பம் ஏற்படுவதற்குக் காரணம் பெரியார் மொழியைப்பற்றிப் பொதுவாகக் கூறியதை எந்த இடத்திலே தவறாகக் கையாளுகிறார்கள், எந்த இடத்திலே சரியாக கையாளாமல் இருக்கிறார்கள் என்பதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறார். தம்முடைய கருத்துகளை கூறியுள்ளார். பெரியார் கருத்துகளை நாம் இரு வகையில் ஆய்வு செய்யலாம்.

(ஆகவே இந்த அரங்கத்திற்கு அந்தக் கருத்துகளை உள்ளே வைக்கின்றோம்.) பொதுவாக மொழிகள் பற்றிய பெரியாரின் சிந்தனைகள் ஒருவகை. தமிழ்மொழி பற்றிய பெரியார் சிந்தனைகள் பிறிதொரு வகை. இதை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பார்த்தால் குழப்பமே வராது. பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்.

அவருக்குப் போய் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஒரு அறக்கட்டளை கொண்டு வருகிறார்கள் என்று மேலெழுந்த வாரியாக சில பேர் சொல்லக்கூடும். சில பேருக்கு இதில் ஒரு மயக்கம் ஏற்படலாம்-ஒரு வேளை தவறு செய்துவிட்டார்களோ என்று.

ஒரு வேளை அதன் காரணமாகத்தான் புலவர் இராமலிங்கனாருக்கு அந்த வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதோ என்கிற அய்யம் எங்களுக்கு உண்டு.

சிலர் விமர்சனத்துக்கு அஞ்சுகிற துணை வேந்தர்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய துணை வேந்தர் ராஜேந்திரன் அப்படிப்பட்டவர் அல்லர். அன்றைக்கு கடாரம் கொண்டவர்களைப் போலவே இன்றைக்கும் பெரியாரைக் கொண்ட வர்கள் என்று சொல்லுகிற அளவுக்கு இருப்பவர்.

இலட்சியத்தின் மீது இருக்கின்ற வேகம்


அவருடைய முறைகள் எப்பொழுதுமே மிகவும் நாசுக்கானது. அவர்கள் அதிகாரியாக நீண்ட காலமாகப் பணியாற்றியிருக்கின்றார்கள். அதிகாரிகள் கூட எப்பொழுதுமே பக்குவமாகத்தான் ஆட்சியாளர்களுக்கு கருத்துகளை எடுத்துச் சொல்வார்கள்.

இவரைப் போல கருத்துகளை வேகமாக எடுத்துச் சொல்ல மாட்டார்கள். இராமநாதன் அய்யா அவர்கள் திறந்த மனதோடு கருத்தைச் சொல்லக் கூடியவர், பெரியாரைப் பொறுத்த வரைலே அவருக்கு யார் மீதும் தனிப்பட்ட கோபம் கிடையாது. அவருக்கு அவருடைய இலட்சத்தியத்தின் மீது இருக்கின்ற வேகம் இருக்கிறது பாருங்கள். அதற்கு எதிராக யாராக இருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

பெரியார் சொல்லுகிறார்


அண்ணா அவர்கள் மொழி, போர்க் கருவி பற்றிச் சொன்னார்கள். அதற்கு முன்னாலே இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே பேராசிரி யர்கள், புத்தகம் படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதாவது தியரிடிகல் ஸ்டடி படித்தவர்கள் இருக்கின்றீர்கள். அய்யா அவர்கள் சொல்லுகின்றார். பெரியார் சொல்லுகிறார் இன்றைய புலவர்கள் புத்தகம் படைத்தவர்கள். நான் (தியரிட்டிகள் ஸ்டடி உள்ளவன் -) நடைமுறையில் உள்ள அனுபவ அறிவை உடையவன். அதாவது பிராக்டிகல் ஸ்டடி உடையவன் என்று பெரியார் சொல்லுகின்றார்.

இவ்வாறு தமிழ்ப்புலமைபற்றி பெரியார் தன்னை முன்னிறுத்திக் கூறிய கருத்துகள் இதனை இப்படியே திராவிட மொழிகள் நான்கையும் முன்னிறுத்தி பெரியார் சொன்ன கருத்தாக நாம் சொல்லும் அளவுக்கு பெரியாரின் திராவிட மொழிகள் நான்கிலும், நடைமுறையில் நன்றாக பழக்கமும், அனுபவமும் உண்டு. அனுபவம் என்பதற்கு என்ன விளக்கம்? என்று சொல்லு கின்றார். இவ்வாறு கூறும் பெரியாரின் கருத்தைக் கேட்போம்.

படிப்புக்கு இரண்டு குறைகள்


படிப்புக்குப் பொதுவாக இரண்டு குறைகள் உண்டு என்பார். படித்தவர்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆய்வுக்கும் அது தான் பலவீனமும் கூட. பெரியார் இவ்வளவு பெரிய புரட்சியாளராக வருவதற்கு அடிப்படைக் காரணம் அவர் பல்கலைக்கழகத்திற்குள்ளே போகாததுதான் என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கும்.

காரணம் நாம் எல்லாம் பல்கலைக்கழகத்திற்கு வந்தவர்கள்தான். ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைப் போட்டுக் கொள்கிறோம். அந்த குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டுவதற்கு நம்மாலே துணிவில்லை. தெளிவில்லை. துணிவு இருக்கிறவர்களுக்குத் தெளிவில்லை. தெளிவில்லாதவர்களுக்குத் துணிவில்லை. இரண்டும் இருப்பவர்களுக்கு வாய்ப்பில்லை. ஆகவே இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்ட தினாலே ரொம்பத் தெளிவாகச் சொல்லுகின்றார்.

படிப்புக்கு பொதுவாக இரண்டு உணர்வுகள் உண்டு. ஒன்று அய்ய உணர்வு. இரண்டு தீது உணர்வு. தீது உணர்வு என்பது இதுவா? அதுவா? என்று தெளிவான முடிவுக்கு வராமல் தடுமாறுவது. திரிபு உணர்ச்சி என்பது ஒன்றை மற்றொன்றாகவே எண்ணிவிடுவது. இந்த இரண்டையும் நீக்கிப் புத்தகத்தைப் பயில வேண்டும். இங்குதான் தந்தை பெரியார் அவர்கள் அவருடைய கருத்தைச் சொல்லுகின்றார். மொழி என்பதைப் பற்றி துணைவேந்தர் கூட சொன்னார்.

மொழி என்பது...!


மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். என்று சொல்லு கின்றார். இந்தக் கோணத்தில் மொழியைப் பற்றி யாரும் சிந்தித்தவர்களே கிடையாது. மொழி என்றால் அழகு. மொழி என்றால் இலக்கியம். மொழி என்றால் ரசனை மொழி என்றால் நமக்கு ஒரு வாய்ப்பு.

நம்முடைய புலமையைக் காட்டுவதற்கு அது ஒரு மேடை இப்படித்தான் மொழியைப் பார்த்தார்கள். பெரியார் ஒருவர் தான் தனித்தப் பகுத்தறிவாளர் என்ற காரணத்தினாலே மனித நேயத்தை மட்டுமே நினைத்த காரணத்தாலும் தன்னுடைய மக்களை முன்னிறுத்தியதாலும், மக்களுக்குத் தன்மானம் வேண்டும், சுயமரியாதை வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்தக் கோணத்திலே சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

கருவிகள் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்...!


மொழியைப் பற்றி உலகம் பூராவும் சொன்ன அறிஞர் பெருமக்களை ஒப்பிட்டுப்பாருங்கள். பெரியாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கேதான் பெரியார் தனித்து நிற்பார். உயர் எண்ணங்கள் மலரும் சோலை. மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அதற்குரிய வாய்ப்பைப் பாருங்கள் அய்யா சொல்கிறார்:

மொழி என்பது உலகப் போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவற்றோடு கண்டு பிடித்து கைக்கொள்ள வேண்டும். இதைத்தான் நான் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் துணைவேந்தர் ஆரம்பித்தார். இன்னும் ஒரு படி மேலே போய் அதிகமாக சொன்னார்.

கடவுள் கையில் உள்ள ஆயுதங்கள் பயன்படவில்லை


இன்றைக்கு எல்லா கோவில்களுக்கும் கடவுள்களுக்கே பாதுகாப்புக் கருவி தேவைப் படுகிறது. ஆனால் அந்தக் கடவுள்கள் கைகளிலேயே ஆயுதம் இருக்கிறது அது ஏன் பயன்படவில்லை? அது அந்தக் காலத்து பயன்படாத ஆயுதம். இன்றைக்கு வில்லைக் கொண்டு போய் எதுவும் பண்ண முடியாது. இராமாயணத்தில் இராமன் விட்ட அம்பு இருக்கிறது. அது எல்லா இடத்திற்கும் சென்று எதிரிகளை எல்லாம் சதக் சதக் என்று குத்திவிட்டு, அந்த அம்பு ரத்தக் கறையுடன் சரையூ நதிக்கரையில் குளித்து விட்டு அதுவே பிறகு இராமனுடைய அம்பறாத் தோணியில் புகுந்து கொண்டது என்று சொல்லுவார்கள்.

இப்படி நம்பினார்கள், அம்புக்கு இவ்வளவு வேலை இருக்குமா-தெரியாது.

-------------------தொடரும் ...... "விடுதலை” 20-5-2011

0 comments: