Search This Blog

23.5.11

வாலிபர்களே! பிரச்சாரம் நடந்தாக வேண்டும்! - தந்தை பெரியார்


ஏப்ரல் மாதம் முதல் குறைந்தது 2 மாதங்களுக்குக் குறையாமல் 3 மாதங்கள் வரை பள்ளிக் கூடங்களும், காலேஜ்களும், கோர்ட்டுகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கும் வக்கீல்களுக்கும் நல்ல ஓய்வு இருக்கப் போகின்றது. இந்த ஓய்வு நாட்களை இவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதே நமது முக்கிய கவலையாகும்.

வியாபாரிகளுக்கு இப்போது நல்ல கொள்ளை லாபம் கிடைக்கும் சமயமாதலால் அவர்களுக்கு இந்த சமயத்தில் பணம் தவிர வேறு எவ்விதக் கவலையும் கொள்வதற்கு இயற்கை இடம் கொடுக்காது. ஆதலால் அவர்களின் தொண்டை நாம் இப்போது எதிர்பார்ப்பது நீதியாகாது. மற்றப்படி வக்கீல்கள் கண்டிப்பாக இந்த ஓய்வு நாட்களில் சுற்றுப் பிரயாணம் செய்து அவரவர்கள் எல்லைகளில் திராவிடர் கழகங்களை ஏற்படுத்த வேண்டியது அவர்களது பொறுப்பு என்றே சொல்லுவோம். இந்த சமயம் வக்கீல்களுக்கு சற்றுத் திருப்தி இல்லாத சமயம் என்பது நமக்குத் தெரியும். யுத்தத்தின் காரணமாக பெரும்பான்மையான செல்வவான்கள் பணம் சேர்ப்பதிலும் அதற்காக அனேக வழிகளில் தந்திரம், கணக்குமறைப்பு முதலியவைகள் செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுக்கு கோர்ட்டுக்குப் போக வேண்டிய அவசியமும் அவகாசமும் ஏற்படுவதில்லை. ஆதலால் கோர்ட்டுகளில் வேலை இல்லை என்பதோடு, குடியானவர்களுக்கும், மிராசுதார் களுக்கும் இரசவாதம் போல் விளைவின் பயன் செல்வத்தைக் குவிப்பதால் கொடுக்க வேண்டியவர்களுக்குத் தாங்களாகவே கொண்டு போய்க் கொடுத்து விடுகிறார்கள். வரவேண்டியதும் தானாக வந்துவிடுகிறது. ஆதலால் கொடுக்கல் வாங்கல் தகராறுகளும் கோர்ட்டுக்குப் போகவேண்டி நேரிடுவதில்லை. இன்னும் இரண்டொரு காரணங்களாலும் கோர்ட்டுகளுக்குச் சரியாக வேலை யில்லாததால், வக்கீல்கள் நிலைமை மற்றவர்களைப் போல் அவ்வளவு திருப்தியாக இல்லை. எனவே, வக்கீல்களுக்குப் போதிய வேலை இல்லை. ஆதலால் வக்கீல்கள் மனம் வைத்தால் நல்ல விதமாகவும் நல்ல பயன் ஏற்படும்படியும் வேலை செய்யலாம். வாலிப வக்கீல்கள் தயவு செய்து சற்று யோசித்துப் பார்த்து பிரசாரத்தில் இறங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

மாணாக்கர்கள் கண்டிப்பாக இந்த ஓய்வில் வெளியில் இறங்கி வேலை செய்ய வேண்டும். பார்ப்பன மாணவர்கள் எப்படி நடந்து வந்திருக்கிறார்கள் பாருங்கள். பள்ளிக்கூடம் நடக்கும் காலங்களில் வேலை நிறுத்தம், காலித்தனம் முதலிய எத்தனையோ காரியங்களைச் செய்து கிளர்ச்சி களையே நடத்தி வந்தார்கள். இப்போது யூனிவர்சிட்டி சட்டத்தினாலும் திராவிட மாணவர்கள் அனேகர் உஷாராகி விட்டதினாலும் பார்ப்பன மாணவர்களின் தொல்லை சிறிது அடங்கி இருக்கிறது. என்றாலும், திடீரென்று கிளம்பினாலும் கிளப்பி விடுவார்கள். ஆனால் முன்போல் அவர்களுக்கு வெற்றி கிடைக்க மாட்டாது என்பது உறுதி.

நம்மைப் பொறுத்தவரை நாம் மாணவர்கள் படிப்பு வேளைகளில் எவ்விதக் கிளர்ச்சியிலும் சம்மந்தப் படக் கூடாது என்று சொல்லி வந்திருக்கின்றோம். இப்போதும் அதையேதான் இன்னமும் வலியுறுத்திக் கூறுவோம். ஆனால் பள்ளிக்கூடம் ஓய்வுள்ள வேலையில் அறிவும், ஆற்றலும் உணர்ச்சியும் தன்மானக் கவலையும் உள்ள மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை பாமர மக்களுக்கு விளக்கம் செய்யும் பிரசார வேலையைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறோம். அதோடு, தீவிர கிளர்ச்சி செய்யுங்கள் என்று நாம் பள்ளி மாணவர்களுக்குச் சொல்லுவதில்லை. படிப்பை முடித்த வாலிபர்கள் தாங்கள் ஏதாவதொரு வேலையில் அமரும் மட்டும் பிரசார வேலையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொல்லுகிறோம். இதனால் மாணவர்களுக்கு சில அனுபோகங்கள் கூட ஏற்படலாம். நாட்டையும், பலவித மக்களையும் அறிந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. உலக அனுபவம் ஏற்பட இடமாகின்றது. ஒவ்வொரு வாலிபனும் எதிர்காலப் பெரியார்கள் ஆனதால் அதற்குத் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். தமிழன் திராவிடன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் வாலிபன் மற்றவர்கள் தேடிவைத்ததைச் சாப்பிடத்தான் பயன்பட வேண்டுமா?

வாலிபர்களுடைய பிற்கால வாழ்வு மேன்மை யுடையதாக இருக்க வேண்டுமானால் அந்த வாலிபர் களுக்கு ஒரு கடமையும் இல்லையா என்று கேட் கிறோம். நம் வாலிபர்கள் சுமார் ஒரு 20 வருஷம் பாடுபட்டிருப்பார்களேயானால் அவர்களது நிலைமை இன்று வேறு விதமாக இருந்திருக்கும். அப்படி இல்லாததினாலேயே நாம் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு வாலிபனும் வேறு எவனாவது பாடுபட்டு நிலைமையை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பான்; நாம் மாப்பிள்ளை மாதிரி விண்ணப் பம் போட்டு சிபாரிசு பிடித்து வேலை சம்பாதித்து பெரிய உத்தியோகதனாக ஆகி வாழலாம் என்று நினைத்தால், அப்படிப்பட்டவன் தன்னையே ஏமாற்றிக் கொண்டவனாகிறான். வாலிப காலம் தவிர வேறு காலத்தில் உண்மையான பயன்படும் படியான தொண்டு செய்யவே முடியாது.

இன்றும் நம் வாலிபர்களுக்கு நல்ல புத்தி இருக்கின்றது; அதை முதலாவது அவனவன் தன்மானத்துக்கு பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். வாலிபர்களுக்கு வேலை செய்ய நல்ல வேலை இருக்கிறது; அதற்கேற்றபடி நாடு பண்பட்டு நன்றாய் உழுது போடப்பட்டிருக்கிறது; பருவமும் அனுகூலமாய் இருக்கின்றது. இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நல்ல விதைகளை விதைக்க வேண்டிய வேலை ஒன்றுதான். இதற்கு வாலிபர்கள் முன்வரவில்லையானால் நம்மைச் சூத்திரர் என்றும் மானத்தில் கவலையற்றவர்கள் என்றும் நம் எதிரிகள் சொல்லுவதில் பெரிய குற்றம் என்ன இருக்கின்றது?

ஆகவே படித்து முடித்த வாலிபர்கள் குறைந்தது 3 மாதத்துக்கு வேலை செய்ய முன்வர வேண்டும். அவசரமாக ஒரு கூட்டம் கூடி ஒரு வேலைத்திட்டத்தையும், செலவுத்திட்டத்தையும் நடைமுறை ஒழுங்கையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 3 பகுதி அல்லது 4 பகுதிகளாய்ச் சுற்றுப் பிரயாணம் செய்து வேலைத்திட்டத்தைப் பிரசாரம் செய்ய வேண்டும். இது முக்கியமான விஷய மாகும். இந்த வருடம் இதைத் தமிழ்நாட்டில் துவக்கி வழிகாட்டி விட்டுவிட வேண்டும். சராசரி மனித வாழ்க்கைச் செலவுக்கு வேண்டிய உதவி செய்ய இரண்டொரு பெரியோர்கள் ஆவலாக இருக் கிறார்கள்.

வாலிபர்களே! தயவு செய்யுங்கள்! தைரியமாய்த் தியாக உணர்ச்சியுடன் முன்வாருங்கள். கண்டிப் பாக வெற்றி பெறுவீர்கள். நல்ல பெருமையும் கவுரவமான மதிப்பும் ஏற்படும். தமிழர் தன்மானம் வாலிபர்களின் கடமையை எதிர்பார்த்து இறைஞ்சு கிறது. வாருங்கள்! வாருங்கள்!! அவசியம் வாருங்கள்!!!

-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" - தலையங்கம் - 11.03.1944

0 comments: