Search This Blog

25.5.11

சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதற்கான பின்னணி!


சந்தேகம் வலுக்கிறது

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது; முடிவு செய்யப்பட்டது என்பதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அவற்றையெல்லாம் ரத்து செய்வதோ, மாற்றி யமைப்பதோ பொதுமக்கள் மத்தியில் பொதுவாகக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துத் தரும் என்பது பொது அறிவு உள்ள அனைவராலும் ஒப்புக்கொள்ளப் படக் கூடிய உண்மையாகும்.

முதலாவதாக, 1000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சட்டப் பேரவை ஆகியவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை; மாறாக பழைய கோட்டையிலேயே அவை இயங்கும் என்று அறிவித்ததன்மூலமாக முதற்கெட்ட பெயர் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்டுவிட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டடங்கள் பழுதுபட்டுவிட்டன; மழை பொழிந்தால் கோப்புகள் வீணாகின்றன என்று அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களே வெளிப் படையாகக் கூறி, வேறு இடங்களைத் தேடியதெல்லாம் நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட இடத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறுவது வெறும் அரசியல் வெறுப்புதான் என்ற எண்ணம் தொடக்கத்திலேயே எழுந்துவிட்டது.

சில ஏடுகள், சில கட்சிகள் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதாலேயே, தாம் எடுத்த முடிவு சரிதான் என்று முதலமைச்சர் நினைத்திட வேண்டாம்.

அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி கூட மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.

அடுத்தகட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படாது; பழைய முறையே தொடரும் என்று அ.தி.மு.க. அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதும் கடும் எதிர்ப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிவிட்டது.

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அரசியல்வாதிகள் தயாரித்த திட்டம் அல்ல - கல்வி நிபுணர்கள் ஆய்ந்து பொதுமக்களின் கருத்தையும் கேட்டுக்கூட பரிந்துரைக்கப்பட்டதாகும்.

இந்த நிலையில் அரசியல் கண்ணோட்டத்தோடு இதையும் அணுகுவது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது.


சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப் பட்டுள்ள நிலையில் (சுமார் 200 கோடி ரூபாய்) அவற்றையெல்லாம் மூட்டை கட்டி ஒரு பக்கத்தில் ஒதுக்கித் தள்ளிவிட்டு பழைய பாடத் திட்டம் என்பது - மக்கள் பணம் மதிக்கப்படவில்லை - மாற்றமான கல்வித் திட்டம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணத்தைத்தான் உருவாக்கும்.


இதற்கிடையில் இந்து முன்னணி அதிபர் திருவாளர் இராம. கோபாலன் அய்யர் குறுக்குச்சால் ஓட்டியுள்ளார்.

கருணாநிதி தயாரித்த சமச்சீர் கல்வித் திட்டம் என்றும், தோற்றுப்போன ஈ.வெ.ரா.வின் கொள்கையைக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டுவரும் கல்வித் திட்டம் என்றும் தி.க. தலைவர் கி. வீரமணி இதன் பின்னணியில் இருக்கிறார் என்றும் வழக்கம் போல தனது ஓட்டை வாயைத் திறந்து ஓலம் விட் டுள்ளார். இதிலிருந்து சமச்சீர் திட்டம் நிறுத்தப்படுவதற்கான பின்னணியின் ஒரு முனை வெளிச் சத்துக்கு வந்துவிட்டது.

பெரியார்பற்றி பாடத்தில் இடம்பெறுவதாகவே இருக்கட்டும்; அதில் என்ன தவறு? தந்தை பெரியார் அவர்களைவிட மக்களுக்குத் தொண்டு செய்த மாமனிதர் யார்?

சமூகச் சீர்திருத்தம், சமூகநீதி, பெண்ணுரிமை என்பதெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்ட உயர் எண்ணங்கள்தானே?

முதலமைச்சர் இந்தப் பிரச்சினையில் எந்த எண்ணம் கொண்டுள்ளார்? பெரியாரைப்பற்றிப் பாடம் இருந்தால் இந்த முதலமைச்சர் தடுத்துவிடுவார் என்ற எண்ணம் மக்களிடம் பரவவேண்டுமா?

திருவாளர் சோ ராமசாமியா? பெரியார் ராமசாமியா? இந்த ஆட்சிக்கு யார் நெருக்கம் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடாமல் போகாது.

இந்த ஆட்சியைச் சுற்றி ஒரு பூணூல் வேலி போடத் தீவிர முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. எதில் வெல்வார் முதல்வர்? எங்கே பார்ப்போம்!

---------------- "விடுதலை” தலையங்கம் 25-5-2011

3 comments:

தமிழ் ஓவியா said...

சமச்சீர் கல்வி: அ.தி.மு.க. அரசை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு


சமச்சீர் கல்வி நிறுத் தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கு இன்று விசா ரணைக்கு வருகிறது.

திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, வினி யோகிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தநிலையில், சமச்சீர் கல்வித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. இந்த கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

பொதுநல வழக்கு

அரசின் இந்த முடிவால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறி, சென்னை மதுரவாயலைச் சேர்ந்த கே.சியாம்சுந்தர் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற் காக பாரதிதாசன் பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைத்து பல்வேறு கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்டு அதன்பிறகு மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறையை ஆய்வு செய்து சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலில் ஒன்றாம் வகுப்பும், 6ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 7ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்திற்கு புத்தகம் அச்சடிக்கப்பட்டது. 9 கோடி பாடபுத்தகங்கள், 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன்பிறகு பத்திரிகை களுக்கு அரசு வெளியிட்ட செய்தியில் சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப் பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளி யானது. பழைய பாடத்திட்டமே இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது.

ரூ.9 கோடி பாட புத்தகங்கள் வீண்

தற்போது சமச்சீர் கல்வி திட்டத்தை புதிய அரசு கிடப்பில் போட்டதால் 9 கோடி பாடபுத்தகங்கள் வீணாகியுள்ளது. அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வரி பணம் வீணடிக் கப்பட்டுள்ளது.

அரசின் முடி வால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொள்கை முடிவு என்ற பெயரில், தமிழக அரசு உள் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.

மாணவர்கள் நலன் கருதி கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு அமுல்படுத்த நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும். சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு நிறுத்தி வைக்க தடை விதிக்க வேண்டும். - இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. அப் போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகரன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகிறார்கள்
-------------”விடுதலை” 25-5-2011

Raj... said...

தந்தை பெரியார் அவர்களைவிட மக்களுக்குத் தொண்டு செய்த மாமனிதர் யார்?

There are many people in Tamil Nadu who lived like him, say Kamarajar. So, I humbly request you not to compare Periyar with anyone. Since those leaders are unique in their own ways. Thanks...

நம்பி said...

Raj... said...

// தந்தை பெரியார் அவர்களைவிட மக்களுக்குத் தொண்டு செய்த மாமனிதர் யார்?

There are many people in Tamil Nadu who lived like him, say Kamarajar. So, I humbly request you not to compare Periyar with anyone. Since those leaders are unique in their own ways. Thanks...

May 26, 2011 2:29 AM//

பதிவுல பெரியாரை யாருடனும் ஒப்பிடாமல் தான், அவரின் தன்னலமற்ற சமூதாயத் தனித்தொண்டை பறைசாற்றியிருக்கிறது........ இது யாருடைய பெயரையும் ஒப்பிட்டு குறிப்பிடவில்லை.....

(காமராஜருக்கும் பெருமை சேர்த்தவர், அவரின் சமூகப்பற்றிற்கும் ஆதரவளித்தவர் பெரியார்....

''காமராஜர்'' வேண்டாம்! எனக்கு ஆதரவளிக்காதீர்கள்! என்று மறுக்கவில்லை, எந்த இடத்திலும் மறுத்ததுமில்லை (அதான்...அரசியல்.. அரசியல்வாதி,,,)....

இத்தனைக்கும் காமராஜர் பெரியார் ஒதுக்கிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்...)

நிலைமை இப்படியிருக்க, தேவையில்லாமல் அவசரப்பட்டு ஒப்பிட்டது யார்?

அப்புறம் எதற்கு.....(....humbly request....)....கெஞ்சவேண்டும்....?

என்ன? செய்வது சுயமரியாதைக்காரனுக்கு எந்த இடத்தில் சுயமரியாதை ''குறைந்தாலும்'', குறைத்தாலும்''....''குரைத்தாலும்'' தெரிந்து விடுகிறது.