Search This Blog

25.5.11

பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி என்ன?

தந்தை பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி என்ன? தஞ்சையில் தமிழர் தலைவர் விளக்கம்

தந்தை பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி என்ன? என்பதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினார்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் 21.2.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியாரின் பங்கு பணி என்ன?


நண்பர்களே! இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.. இப்படிச் சொன்ன தந்தைபெரியாரின் பங்கு பணி என்ன? எதற்கெடுத்தாலும் வெறும் எதிர்மறையாகப் பேசிவிட்டுப் போவதா? அல்லது சந்தனத்தைத் தெளித்துவிட்டு அதோடு போவதா? தந்தை பெரியாரின் ஆக்கப் பணி இருக்கிறதே அதுதான் இன்றைக்குத் தலைவர் அவர்களே என்று நாம் அழைக்கிறோம்.

பெரியார் அவர்கள் இந்தப் பணியைத் துவக்குவதற்கு முன்னால் தமிழில் பிரசங்கம் நடந்தது. தமிழில் பேசியவர்கள் சிலர். அந்த பிரசங்கத்திற்கு யார் தலைமை தாங்குவார்கள்? அக்ராசனதிபதி அவர்கள் தலைமை தாங்குவார். அக்கிராசனாதிபதி அவர்களே! என்று சொல்லு வார்கள்.

எழுதிய கடிதத்தில்...


கடிதம் எழுதும் பொழுதே மகாராஜ ராஜஸ்ரீ சிரஞ்சீவி என்று எழுதுவார்கள். சிரம் தலை, சீவி தலையை வெட்டுவது. விபீஷணன் என்றும் சிரஞ்சீவி மார்க்கண்டேயன் என்றும் சிரஞ்சீவி என்றும் இது மாதிரி ஒவ்வொருவரையும் அழைப்பர்.

பெரியாருடைய தன்மானப் புரட்சி பண் பாட்டுப் புரட்சி வந்தபிற்பாடுதான் பல்கலைக் கழகங்கள் என்ற பெயரே வந்தது. அதற்கு முன்பு சர்வ கலாசாலை என்று பெயர். துணைவேந்தர் கிடையாது. உபஅத்தியேட்சகர் என்றுதான் அழைப்பார்கள் ஆசிரியர் என்று அழைக்க மாட்டார்கள். உபாத்தியாயர்கள் என்றுதான் அழைப்பார்கள். அத்தியாயனம், உப அத்தியாயனம் என்றுதான் சொல்லுவார்கள். அய்யா அவர்கள் குடிஅரசு இதழில் அந்த காலத்தில் சித்ர குப்தன் என்ற புனை பெயரில் எழுதியிருக்கின்றார்.

1939ஆம் ஆண்டே பெரியார் சொன்னார்


பெரியார் அவர்கள் சொல்லுவார். தமிழைப் பற்றிச் சொல்லும்பொழுது எப்பொழுது என்றால் 1939ஆம் ஆண்டு. தந்தை பெரியார் அப்பொழுதே பண்பாட்டுப்படை யெடுப்பை எதிர்த்தார் என்பதற்கு அடையாளம். ஆக்க ரீதியாக பணியாற்றினார் என்பதற்கு அடையாளம் என்ன? வடமொழி இந்திய காங்கிரசை ஆதரிப்பவன். சுயமரியாதை தமிழன் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் நடக்கிற மாதிரி ஒரு கற்பனையை எழுதியிருக்கின்றார்.

அப்படியானால் தமிழ்நாட்டில் சமுதாயத்துறை யிலும், அரசியலிலும் ஆதிக்கம்பெற்ற பிறகு தமிழுக்கு என்ன யோக்கியதை கொடுத்திருக்கி றார்கள்?

தமிழை எக்கதியாக்கினார்கள்? இந்த பண் பாட்டுப் படை எடுப்பு வந்தவுடனே எப்படி நீச்ச பாஷை என்று ஆக்கினான்? அதனுடைய விளைவு என்ன? சமஸ்கிருதத்தை நாம் படிக்கக் கூடாது என்று ஆக்கினார்கள். பெரியார் எழுதுகிறார்.

பெரியார் செய்த பணி சாதாரணமானதல்ல


மற்றவர்கள் செய்ததைவிட பெரியார் அவர்கள் செய்த பணி சாதாரணமான பணி அல்ல. இதெல்லாம் பல்கலைக் கழகங்கள். ஆய்வு செய்து சொல்ல வேண்டிய கருத்தை குடிஅரசில் ஒரு செய்தியில் எழுதுகின்றார்.

கல்வித்துறையில் வைத்திருக்கின்ற பெயர்களைப் பார்! எல்லாம் பார்ப்பனர்கள் வைத்தது என்று சொல்லுகிறார். வடமொழி சமஸ்கிருதம் பண்பாட்டுப்படையெடுப்பு இவைகளைப் பார்க்க வேண்டும்.

கணிதம், நீஜ கணிதம், பின்னம், சேத்ர கணிதம், தகுபின்னம், இவை போன்ற ஆரிய பாஷைகளின் பெயரைத்தான் அமுலுக்குக் கொண்டு வந்தார்களே ஒழிய இவற்றிக்கு ஏதாவது தமிழ்ப்பெயர் உண்டா?

உனக்கு தமிழ்ப் பெயர் தெரியுமா?


உனக்கு ஏதாவது தமிழ் பெயர் தெரியுமா? மற்றும் பூகோள நிலவிளக்கப்பிரிவை எடுத்துக்கொள், பூகோளம், குணகோளம், குடகோளம், உத்ரதுருவம், தட்சண துருவம், பீட பூமி, கண்டம், மாகாணம், ராஜதானி, தீபகற்பம், தீவு, ஜலசந்தி, அட்சரேகை, பூமத்திய ரேகை-பிரதேசம், கிராமம், நகரம், ராஜ்யம் போன்ற ஆரிய பாஷை பெயர்களையே புகுத்தி நிலைநிறுத்திவிட்டார்கள். இது ஒன்று. அடுத்தது அரசியலை எடுத்துக்கொண்டு பார்.

எத்தனை விதமான வார்த்தைகள்


தேசியம், சுயராஜ்ஜியம், சுதந்திரம், சமதர்தம், அபதவாதம், (இவை அத்தணையம் வடசொற்கள்), பூரண சுயேச்சை, சத்தியாகிரகம், அகிம்சை, மகா ஜனங்கள், அக்கிராசனாதிபதி, உபபதி, (இப்பொழுது ராஷ்ட்ர பதி) சமூகம், சமுதாயம், சமாஜ்யம், சம்மேளனம், பிராஜா மகரம், வியாசமண்டலம், ராஷ்ட்ரபதி, பாரதமாதா, மருத்து வோஜ் சமோஜ், உபன்யாசம், பிரசங்கம், பரிட்சை, மசோதா, அங்கத்தினர், காரிய கமிட்டி, மகா சபை, பிரதம சபை, பிரேரேபணை (முன்மொழிகிறேன் வழி மொழிகிறேன் என்பது) ஆமோதித்து, பிரதிநிதி, நிர்வாக சபை என்ற வடமொழி வார்த்தைகளைப் பற்றி அய்யா அவர்கள் தொகுத்து எப்பொழுது சொல்லுகின்றார். 1939இல் சொல்லுகின்றார்.

எங்களை மாதிரி இருப்பவர்களுக்கு அப் பொழுது 6 வயது மாணவர்கள். பல பேர் பிறந்திருக்கமாட்டார்கள். அந்த காலத்தில் பெரியார் சொன்னார். பெரியார் தமிழுக்கு என்ன தொண்டு செய்தார் என்று கேட்கிறார்களே அவர் களுக்காகத்தான் இதைச் சொல்லுகிறோம். பழையதையே பேசிக்கொண்டிருந்தால் போதுமா?

வெறும் பழையதையே பேசிக்கொண்டிருந்தால் போதுமா? என்று பெரியார் கோபத்துடன் கேட்டார். அந்த கோபம் எதனாலே. அந்த மொழி மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக கருவியாகப் பயன்படவேண்டும் என்ற ஆழ்ந்த பொறுப்புணர்ச்சியும், கவலையும்தான் காரணம் இதற்கு அடிப்படை.

அடுத்து அய்யா அவர்கள் சொல்லுகிறார். வான சாஸ்திரம், வாயு, உஷ்ணம், சீதோஷ்ணநிலை, (தட்ப வெப்ப நிலை என்று சொல்ல மாட்டார்கள்) சீத மண்டலம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், கிரகணம், லக்னம், திதி, அமாவாசை, பவுர்ணமி, வருஷம் முதலியவைகள்.

பெரியாருடைய குருகுலத்திலே பயின்ற கலைஞர் முதல்வரானார். அவர் முதல்வரானதால் தான் தமிழுக்கு, தமிழனுக்கு ஏற்பட்ட இழிவைத் துடைத்தார்.

இன்னமும் தமிழ்ப்புத்தாண்டு என்று ஏப்ரல் மாதத்தில் கொண்டாடுகிறார்கள். மாணவர்களே இளைஞர்களே, தோழர்களே, தோழியர்களே ஒரு கேள்வியைக் கேளுங்கள். பெரியார் கேட்ட கேள்வி.

கலைஞரால் வந்த புத்தாண்டு


தமிழ்ப்புத்தாண்டு கதை சொல்லுகிறார். 60 ஆண்டுகள் என்று பிரபவ, விபவ, குரோதி, விரோதி ஆண்டுகள் என்று சொல்லுகின்றார்களே.

இந்த ஆண்டுகளை எடுத்துப் பார்த்தால் ஒரு ஆண்டாவது தமிழ்ச்சொல் பெயர் உண்டா? தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லுகிறார்கள். தமிழர் ஆண்டு என்று சொல்லுகிறார்கள்.


இதில் ஒரு சொல்கூட தமிழில் இல்லை என்றால் இதைவிட தமிழுக்கு தமிழனுக்கு மானக்கேடு தமிழுக்கு இழிவுக்கேடு வேறு என்ன இருக்க முடியுமா? இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மூல காரணமாக இருந்தவர் தந்தைபெரியார்.

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு


அதற்கு உறுதுணையாக இருந்தவர் முதல்வர் கலைஞர். அதனால்தான் தை முதல்நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்று அறிவித்தார். ஒரு காலத்தில் நினைத்துப் போராடியது. நினைத்துச் சொன்னது. இது எதிர்மறையான கருத்துகள் மட்டுமல்ல. ஆக்க பூர்வமான சாதனைகளும் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கு மாற்று என்ன என்று கேட்டால் மாற்று ஏமாற்றல்ல. மாற்று இதோ இருக்கிறது.

மேலும் அய்யா சொல்லுகிறார். மதம், வேதம், புராணம், இதிகாசம், சாஸ்திரம், ஸ்ருதி, உபந்நியாசம், பிராமணீயம், ஆகமம், புத்தாந்தம், வேதாந்தம், ஆஸ்ரமம், ஆஸ்மா, மகாத்மா போன்ற வார்த்தைகள் எவ்வளவு பிரபலத்தில் கொண்டு வரப்பட்டன என்பதைப்பார்.

இன்றைக்குத்தானே மரியாதை?


இன்றைக்குத்தானே நமக்கு மரியாதை வந்திருக்கிறது. மாண்புமிகு என்று, ஸ்ரீமான், ஸ்ரீமதி, ஸ்ரீ என்ற வார்த்தைகளே மிகப்பெரிய அளவுக்கு இருக்கிறதே.

திருவாளர், திருச்செல்வி இதெல்லாம் இன் றைக்குத்தானே வந்திருக்கிறது. ஆகவே இதை சாதாரணம் என்று நினைக்காதீர்கள். இது வெறும் சொற்கள் அல்ல. இது வெறும் சொற்கள்-மாறாக இதன் மூலம் ஒரு பெரிய பண்பாட்டுப் பாதுகாப்பு ஏற்பட்டிருக்கிறது. துணைவேந்தர் அவர்கள் சொன்னமாதிரி, தன்மானம் மட்டுமல்ல. தமிழ்மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

கருவிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்


எனவே அவர்களுடைய பார்வை என்பது முக்கியம். கருவிகள் புதுப்பிக்கப்பட வேண்டும். எம்மொழிக்கு ஆற்றல் உண்டு. சிறப்பு உண்டு. மொழி வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதை, மூட நம்பிக்கைகளை தந்தை பெரியார் சுட்டிக்காட்டி கண்டித்தார். நம்மொழி உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்று விரும்பினார்.

பெரியாரும், இராமலிங்கரும் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நூல். குடிஅரசு இதழை நடத்திய பொழுது தொகுத்து வெளியிட்டார். சமஸ்கிருதம் ஒரு மொழி என்று சொன்னார்கள். அதை மறுத்து வள்ளலார் சொன்னார்கள். என்கிற செய்திகளை எல்லாம் தொகுத்துச் சொன்னார்கள்.

பெரியார் அவர்கள் சிறிய நூலாகப் போட்டு இந்தக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி னார்கள். அன்றைக்கு அதை எடுத்துச்சொன்னார். அதே போல திருக்குறள். இன்றைக்குத்தான் திருக்குறளுக்கு இவ்வளவு பெரிய மரியாதை வந்திருக்கிறது.

கீதைக்கும், இராமாயணத்திற்குமுரிய மரியாதை


கீதைக்கும், இராமாயணத்திற்குரிய மரியாதை. திருக்குறளுக்கு வந்திருக்கிறதா? கீதையின் தத்துவம் என்ன? துருவித் துருவி பார்த்தால்-இன்றைக்கு பயங்கர வாதம் பெருகியிருப்பதற்கு அடித்தளமே எது என்றால் இந்த நாட்டில் கீதை பரப்பியதுதான்.

இதனுடைய மூலகாரணத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். திருக்குறளை எடுத்துப் பாருங்கள். திருக்குறள் உலக நூல். இளைஞர்களுக்கு, மற்றவர்களுக்கு தெரியவேண்டும்.

திருக்குறளை பரப்பியவர் பெரியார்


1948-க்கு முன்பு திருக்குறளைப் பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. புலவர்கள் வீட்டுப்புத்தக அலமாரியிலிருந்த திருக்குறளை மக்கள் மன்றத் திற்குக் கொண்டு வந்த பெருமை பெரியார் அவர் களுடைய பணியாகும் (கைதட்டல்).

அறிவு, திருக்குறளைப் பார். உழைப்பு, திருக் குறளைப் பார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ஊழை உட்பக்கம் காண்பர்

என்பது குறள்.

ஊழழைப் பற்றி பெரியார் சொன்னார். ஊழ் என்றால் சிலபேர் தலை எழுத்து என்று சொல்லுகிறார்கள்.

தலை எழுத்து என்றால்...


தலை எழுத்து என்றால் நம் தலையில் மட்டும் எழுதிவிட்டானா? ஏன் மற்றவர்களுடைய தலையில் எழுதவில்லை. மற்றவன், தலையைக் காட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டானா என்று தந்தை பெரியார் கேட்டார். அய்யா பொதுக் கூட்டங்களில் கேட்பார். என்னய்யா நாம் தலை எழுத்து , தலை எழுத்து என்று சொல்லுகின்றோமே.

அமெரிக்ககாரன் தலையைக் காட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டானா? ரஷ்யாக் காரன் தலையைக் காட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டானா?

நம்மாள் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள் என்று சொல்லிவிட்டானா? என்று எளிமையான மக்கள் சிந்திக்கும்படி கேள்வி கேட்டவர் தந்தை பெரியார்.

ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே திருக்குறள் மாநாடு நடத்தினார் பெரியார். அண்ணா அவர்கள் செயலாளராக இருந்து நடத்தி னார். திரு.வி..க நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், மா.இராச மாணிக்கனார், இப்படிப்பட்டவர்கள் எல்லாம் திருக்குறள் பரவ, அய்யா, அண்ணா அவர்களுக்கும், தமிழ் மொழி பரவவும் உடன் இருந்து பாடு பட்டவர்கள்.

--------------------தொடரும் ”விடுதலை” 23-5-2011

0 comments: