Search This Blog

22.5.11

வீரத் தமிழன்னை!


13.11.1938 தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாதா பெருநாள்; ஆம் அன்று வரை ஈ.வெ.ரா. என்று தமிழ்நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தலைவருக்குப் பெரியார் என்ற பட்டம் அளித்துப் பெருமை பெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்ற பொன் னாள் அது!

தோழியர் மீனாம்பாள் சிவராசு அவர்கள் தமிழ்க்கொடி உயர்த்திட, பண்டித நாராயணி அம்மையார் மாநாட்டினைத் திறந்து வைக்க, வா.பா. தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரையாற்ற, மறைமலை அடிகளாரின், மகள், பா. நீலாம்பிக்கை அம்மையார் மாநாட்டிற்குத் தலைமை யேற்க, மூவாலூர் இராமா மிர்தம் அம்மையார், டாக்டர் தருமாம்பாள், ராணி அண்ணா புடைசூழ அந்தப் பட்டம் வழங்கப் பெறலாயிற்று.

அந்த மாநாட்டு உரையில் தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் ஈடுபடப் பெண்களைத் தூண்டினார் என்ற அடிப்படையில் தான் (1938) இந்தி எதிர்ப்புப் போரில் சிறைத் தண்டனையும் பெற்றார்.

முதல் நாள் பெண்கள் மாநாடு; மறு நாள் மங்கையர் போராட்டத்துக்கு அணி வகுப்பு!

மொழிப் போரில் முதன் முதலில் பெண்கள் சிறைக் கோட்டம் நுழைந்தது அப்பொழுதுதான்.

டாக்டர் தருமாம்பாள், தலைமையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள் பாலசுந்தரம், மலர் முகத்தம்மையார், சீதம்மாள் (டாக்டர் தருமாம்பாள் மருமகள், மூன்று வயதுடைய மங்கையர்க்கரசி, ஒரு வய துடைய நச்சியார்க்கினியன், (குழந்தை) ஆகியோர் சிறைப்பட்டனர்.

காவல்துறை அதிகாரி (தாய்மார்களைப் பார்த்து) நீங்கள் இவ்விடத்தைவிட்டு அகலுங்கள்.

தாய்மார்கள்: முடியாது; இந்தி ஒழியும் வரை இவ்விடத்தை விட்டுப் போக மாட்டோம்.

காவல்துறை அதிகாரி: அப்படியானால் சிறைச் சாலைதான்.

தாய்மார்கள்: அழைக்கட்டுமே. அதற்குத்தானே காத்துக் கிடக்கிறோம்.

(கைது செய்யப்பட்டு சிறைக் கோட்டம் சென்றனர் - 6 வாரம் கடுங்காவல் தண்டனை)

டாக்டர் தருமாம்பாள் சித்த வைத்தியத்தில் தேர்ந்த மருத்துவர்; தஞ்சை கரந்தை யில் பிறந்தவர் (1890) இவரது பொது நலத் தொண்டைப் பாராட்டி வீரத் தமிழன்னை என்ற பட்டம் ஒரு விழாவில் டாக்டர் அ. சிதம்பரநாதன் அவர்களால் வழங்கப்பட்டது (1951).

சிறந்த சீர்திருத்தவாதி, பெரியாளையத்தில் வேப்பந்தழை உடுத்தி பெண்கள் நிர்வாணமாகக் கோயிலை வலம் வருவதைத் தடுக்க நேரில் சென்று பிரச்சாரம் செய்தவர்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர் களுக்குத் தோன்றாத் துணையாக இருந்தவர். சென்னை மாணவர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 9 ஆண்டுகள் தாங்கிப் பிடித்தவர்; அவரின் நினைவு நாள் இந்நாள் (1959).


சென்னை - தங்க சாலையை தருமாம்பாள் சாலை என்று மாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்.

வாழ்க வீரத் தமிழன்னை!

---------------- மயிலாடன் அவர்கள் 21-5-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: