இரண்டாண்டுகளுக்குமுன்!
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஈழத்தில் இலங்கையின் முப்படைகள் இந்தியா, சீனா, ருசியப் படைகளின் துணையோடு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்துக்கொண்டு இருந்தது. மே 18ஆம் தேதி (2009) நந்திக்கடலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
சொந்த நாட்டு மக்களை இவ்வளவு குரூரமாகப் படுகொலை செய்தது மனித உருவில் நடமாடும் ஓநாயாகிய ராஜபக்சேவன்றி வேறு யாரும் இருக்க முடியாது. ஜெனிவா உடன்பாட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையெல்லாம் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்தியது சிங்கள இராணுவம்.
2009 சனவரி தொடங்கி மே வரை 5 மாதங்கள் தமிழர் களை வேட்டையாடியது கொலைகார சிங்கள அரசு.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித உரிமையாளர்களும், இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தார்களேயொழிய, மனித உரிமைகளைக் காப்பாற்றப் பிறந்த அய்.நா.வோ, வேறு குறிப்பிடத் தகுந்த நாடுகளோ முன்வரவில்லை.
2010 சனவரி 14 முதல் 16 முடிய டப்ளின் நகரில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கடுமையான குற்றச்சாற்றை இலங்கை ராஜபக்சே அரசின்மீது வைத்ததற்குப் பிறகு தான் அய்.நா. மன்றம் கொஞ்சம் அசைய ஆரம்பித்தது.
இலங்கைப் போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்திய மூவர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அதனை எதிர்த்தும் ராஜபக்சே எவ்வளவு குதி குதித்தார்.
கொழும்பில் உள்ள அய்.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் அலுவலர்களை (120 பேர்கள்) பணயக் கைதிகளாக சிறைப் பிடிப்போம் என்று ராஜபக்சே அமைச்சரவையைச் சேர்ந்த விமல் வீரவன்ச கொக் கரிக்கவில்லையா? அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கொடும்பாவிகள் இலங்கையில் எரிக்கப் படவில்லையா? அய்.நா.வின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகுதானே வாலைச் சுருட்டியது ராஜபக்சே என்னும் ஓநாய்.
அய்.நா. நியமித்த நிபுணர் குழுவின் செயல்பாட்டை முறியடிக்கவும் தான் ஏதோ மனித குலத்தை ரட்சிக்கப் பிறப்பெடுத்த யோவான் போலவும் காட்டிக்கொள்ள இதே ராஜபக்சே போட்டிக் குழு ஒன்றினை அமைக்க வில்லையா? அதில் சாட்சியம் அளிக்க இலங்கை எதிர்க் கட்சி மறுத்ததையொட்டி அது குறைப்பிரசவம் ஆனது என்பதுதானே உண்மை.
அய்.நா. அமைத்த நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழையக்கூட அனுமதிக்கவில்லை இந்த அபாயகரமான மனிதரான ராஜபக்சே!
போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் போக, உயிரைக் கொஞ்சம் கையில் பிடித்துக்கொண்டிருந்த - அன்றாட வாழ்க்கைக்கே தத்தளித்துக்கொண்டிருந்த லட்சக் கணக்கான தமிழர்களை அந்த நாட்டுக்குரிய அந்தப் பூர்விகக் குடிகளை முள்வேலிக்குள் முடக்கியவரும் பயங்கரவாதம் பெற்றெடுத்த பாதகன் இந்த ராஜபக்சேதான்.
முள் வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடந்த மக்களைப் பார்த்து விட்டுக் கண்ணீர் விட்டவர் யார் தெரியுமா? சிங்களவர்களில் இரக்கம் உள்ளவர்கள் முற்றிலும் அற்றுப் போய் விடவில்லை என்று காட்டிக் கொள்ளும் வண்ணம் முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களின் அவல நிலையை நேரில் பார்த்து விட்டுக் கண்ணீர் உகுத்தவர் இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா. நமது நாட்டின் சட்டத்தின்மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை; ஒரே ஒரு இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதெல்லாம் பச்சை பொய்கள்!
இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப் படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப் புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம் கவலையில்லை என்று கண்ணீர் விட்டாரே!
அய்.நா.வின் நிபுணர் குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், கொடுங்கோலன் ராஜபக்சே தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்பதற்கு இலங்கையின் தலைமை நீதிபதி தெரிவித்த இந்தக் கருத்து ஒன்றே ஒன்றுகூடப் போதுமே!
இரண்டாண்டுகள் ஓடிவிட்டன - ஈழத்திலே எம்மினத்திற்கு மரணவோலை எழுதப்பட்டு....
இந்தக் கறுப்பு நாளிலாவது நம் தமிழர்கள் கட்சி வண்ணங்களை மறந்து, ஒரே எண்ணத்தில் எஞ்சியுள்ள நம் இன மக்களின் வாழ்வுரிமைக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்கக் கூடாதா?
திராவிடர் கழகம் திருப்பித் திருப்பி இதனை முன் வைக்கிறது. அரசியலாக்காமல் ஆழச் சிந்திப்பீர், அருமைத் தலைவர்களே!
--------------------"விடுதலை”தலையங்கம் 17-5-2011
0 comments:
Post a Comment