Search This Blog

16.5.11

ராஜபக்சே தண்டிக்கப்படாவிட்டால், அய்.நா. இருப்பதன் அவசியமே அர்த்தமற்றது


ராஜபக்சே தண்டிக்கப்படாவிட்டால், அய்.நா. இருப்பதன் அவசியமே அர்த்தமற்றதாகி விடும்!
இந்தியா இதுவரை செய்த தவறுகளுக்கு கழுவாய்த் தேட முயற்சிக்கட்டும்!
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கழகம் பரிசீலிக்கும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

வரும் 18ஆம் தேதி நியூயார்க்கில் அய்.நா. முன் நடக்கும் போராட்டம் குறித்தும், இந்திய அரசு நடந்து கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாளை மறுநாள் (18.5.2011) உலக மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் அய்.நா. முன் பேரணியும், மெழுகுவத்தி விழிப்புணர்வுப் போராட்டமும் நடைபெற உள்ளன.

ராஜபக்சேமீது அனைத்துலக சட்டப்படி நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தும் வகையில், புலம் பெயர்ந்த தமிழ் ஈழ அரசு, அய்க்கிய மாகாண தமிழ் அரசியல் நடவடிக்கைக் கவுன்சில், கனடா நாட்டுத் தமிழ் காங்கிரஸ், கனடா தமிழ் மக்களின் நாட்டுத் தேசியக் கவுன்சில், இலங்கைத் தமிழ்ச் சங்கம், வட அமெரிக் காவின் பல்வேறு தமிழர் அமைப்புகள் ஒபாமாவின் தமிழ் ஆதரவாளர்கள், இனப்படுகொலைக்கு எதிராக தமிழர்கள் அமைப்பு - ஆகிய ஒன்பது அமைப்புகள் இதில் பங்கு கொள்கின்றன.

போராட்டத்தின் நோக்கம்!


எல்லா வகையான நியதிகள், பன்னாட்டுச் சட்டங்கள், போர் விதிமுறைகள் அனைத்தையும் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து, முப்படைகளைப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான சொந்த நாட்டு ஈழத் தமிழர்களை காக்கைக் குருவிகளைச் சுட்டுப் பொசுக்குவது போல கொன்றொழித்த சிங்களக் கொலை வெறியன் - மனித குலத்தின் பகைவன் - இலங்கை அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுவது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

பல்வேறு நிலைப்பாடுகள் அணுகுமுறைகள் உள்ள ஒன்பது அமைப்புகள் ஒத்தப் பிரச்சினை ஒன்றின் கீழ் இணைந்து போராட முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதும், வழிகாட்டத் தகுந்ததுமாகும்.

தமிழ்நாட்டுத் தலைவர்களின் கவனத்துக்கு...


தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகளும் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ள முன்வந்தால், அந்நிலை பெரிதும் வரவேற்கத் தகுந்ததாகவும், பயன் விளைவிக்கத் தக்கதாகவும் இருக்குமே!

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையைக் கண்டித்து உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகள் தங்கள் குரலை ஒலித்து இருக்கின்றன.

அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியிருந்தாலும், இப்பொழுது - அய்.நா.வே தலையிட்டு அதனால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு, உரிய வழி முறைகளில் எல்லாம் விசாரணை நடத்தி, இலங்கையில் நடத்தப்பட்டது இனப்படுகொலையே, மனித உரிமைகள் மீறலே - இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றம் செய்துள்ளார்;

அவர்மீது விசாரணை தேவை என்று தெரிவித்த நிலையில், அத்கைய ஏற்பாட்டினைச் செய்ய வேண்டியது அய்.நா.வின் அடிப்படைக் கடமையாயிற்றே!

நாம் வாழும் காலத்தில்..


அய்.நா.வின் பாதுகாப்புக் குழு இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்கிற நடைமுறைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வெகு மக்களின் எழுச்சி என்கிற அழுத்தம் மிகவும் தேவைப்படுகிறது. அந்த வகையில் நியூயார்க்கில் நடைபெறும் போராட்ட நடவடிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் அய்யமில்லை.

நாம் வாழும் காலத்தில் உலகில் நடைபெற்ற மிகப் பெரிய மனிதப் படுகொலை என்பது இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றதாகும்.

தமிழ்நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் எல்லாம் திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பும், பிரச்சாரப் பொதுக்கூட்டங்களையும் நடத்தி எழுச்சியை உருவாக்கியிருக்கின்றன.

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்க - தண்டிக்க அனைத்துலக அமைப்பும், சட்டமும் இருக்கும் பொழுது அவற்றின் அடிப்படையில் அவை இயல்பாகவே செயல்பட்டிருக்க வேண்டாமா? இவற்றின்மூலம்தான் சட்டமுறை அமலாக்கம், மனித உரிமைகள் காப்பு என்கிற நாகரிகக் கோட்பாடுகள் இக்கால கட்டத்தில் பின்பற்றப்படுகின்றன என்பதற்கான உத்தரவாதமும் உறுதிப்பாடுமாகும்.

அய்.நா.வின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்


இவற்றையெல்லாம் தாண்டி உள்நோக்கத்துடனும், உலக நாடுகளின் அணி சேர்க்கைக்கேற்ப தடுமாறும் சிந்தனையுடனும் செயல்படுவது என்பது அய்.நா. உண்டாக்கப்பட்ட நோக்கத்தையே சிதற அடிப்பதாகும். இனவெறியன் ராஜபக்சே தண்டிக்கப்படா விட்டால், உலகில் எந்தவிதமான கொடுமைக்கும் இலவச உரிமம் கொடுக்கப்பட்டு விட்டது என்கிற அபாயத்தைத் தடுக்கவே முடியாது.

இந்தியாவின் கடமை என்ன?


குறிப்பாக இந்தப் பிரச்சினையில் அதிகம் அக்கறை காட்டி, ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய கடமையும், தார்மீகச் சிந்தனையும் இந்திய அரசுக்கு உண்டு. இதுவரை இந்தியா இதற்கு எதிர்நிலையில்தான் செயல்பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவுக்கு வெளியே பன்னாட்டு அமைப்புகள் அய்.நா.முன் பேரணியையும், அறப்போராட்டத்தயும் நடத்தும் இந்த நிலையிலாவது - இந்தியா நியாயமான வகையில் தன் கடமையைச் செய்ய முன்வர வேண்டும்; அதன் மூலம் இந்தப் பிரச்சினையில் இந்தியா நடந்து கொண்டு வரக் கூடிய தவறுகளுக்கும் கழுவாய்த் தேடிக் கொள்ள முடியும். அதற்கு இது ஒரு சரியான சந்தர்ப்பம் ஆகும்.

முதலையும், மூர்க்கனும் கொண்டது விடான் என்ற நிலையை இந்தியா மேற்கொள்ளக்கூடாது. அப்படி இனிமேலும் நிகழ்ந்தால் இந்திய வரலாற்றில் என்றுமே கழுவப்படவே முடியாத மாபெரும் கறையாக - காலா காலத்திற்கும் நிலைத்து விடும் என்பதோடு, கொடுக்க வேண்டிய விலையும், இழப்பும் சொல்ல முடியாததாகி விடக் கூடும்.

நார்வேயில் வழக்கு!


இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசப் பேச்சு வார்த்தைகளை நடத்திய நார்வே நாட்டில், நார்வேயில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களின் அமைப்பால், ராஜபக்சேமீதும் இனப்படுகொலைக்குக் காரணமான மேலும் சிலரின்மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.


நியூயார்க் நகரில் அய்.நா.முன் நடைபெறும் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அதனை திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். உலகத் தமிழர்கள் ஒன்று சேருகிறார்கள்! திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் கழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களும் மற்றும் தோழர்களும் பங்கேற்பர்.

கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை


18ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கும் போராட்டத் திற்குப் பின் ஏற்படும் விளைவுகளைத் தொடர்ந்து, நிலைமையைப் பரிசீலித்து, அடுத்தகட்ட நடவடிக்கை களில் திராவிடர் கழகம் இறங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் அரசியல் கண்ணோட்டமில்லாமல், இந்திய அரசை வற்புறுத்தும் வழிவகைகள் காண அனைவரும் முன்வர வேண்டும் என்பது நமது முக்கிய வேண்டுகோள்ஆகும்.

---------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் -”விடுதலை” 16-5-2011

0 comments: