காலத்திற்கேற்ப தமிழ்மொழி மாற்றம் அடைவதுதான் அறிவுடைமை
தமிழர் தலைவர் தொலைநோக்கு பார்வையுடன் பேச்சு!
காலத்திற்கேற்ப தமிழ் மொழியில் மாற்றம் பெற வேண்யடிதுதான் அறிவுடைமை என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் 21.2.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஒவ்வொரு மாநாட்டிலும் திருக்குறள் எடுத்துச் சொல்லப்படும். ஒவ்வொரு மாநாட்டிலும் திருவள்ளுவர் படம் திறக்கப்பட்டது. திருவள்ளுவருக்கே ஜாதி முத்திரை குத்திவிட்டார்கள் நம்மாள்கள். அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது இந்த இயக்கம்தான். திருவள்ளுவருக்குப் பூநூல் போட்டுவிட்டான். திருவள்ளுவருக்குப் பட்டை போட்டுவிட்டான். ஒரு பக்கம் மழித்தல், இன்னொரு பக்கம் நீட்டல் இன்னொரு பக்கம் கூட்டல். இதை எல்லாம் சேர்த்து கழித்தல் செய்தவர் தந்தைபெரியார்தான் (கைதட்டல்).
இது ஆக்க ரீதியான பணி. அந்த அடிப்படையிலே இவைகளை செய்தார். இந்த மொழி வளர வேண்டும் என்று நினைத்தார்.
இந்த மொழிக்கு என்ன வாய்ப்பு? எழுத்து சீர்திருத்தம் முக்கியம். தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. எதற்காக ஒரு ஆயுத எழுத்து தேவை.
நம்மாள் எழுத்திலே ஆயுதத்தைக் கண்டு பிடித்தானே தவிர, கருவிகளிலே புதுமைகள் வரவேண்டும் சரி. மொழிகளில் புதுமை வர வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முடிய வில்லையே. இந்த ஒரே ஆயுத எழுத்து சிந்தனை யோடு நின்றுவிட்டான். பெரியார்தான் மொழியில் மாற்றம் வரவேண்டும் என்று சிந்தித்தார்.
நான் 1967ஆம் ஆண்டு சிங்கப்பூர் போயி ருந்தேன். சாரங்கபாணி அவர்களின் தமிழ்முரசு ஏடு இன்னமும் அங்கு நடக்கிறது.
சாரங்கபாணி அவர்கள் சுயமரியாதை வீரர். பெரியார் தொண்டர். அவருடைய ஏட்டிலிருந்து வந்த செய்தியாளர் ஒருவர் என்னிடம் பேட்டி கண்டார். ஏங்க விடுதலையில்லை போடுகிறீர்களே. அது என்னங்க. அந்த லை யை இப்படிப் போடுகிறீர்களே.
ஏட்டிக்குப் போட்டி செய்வதுதானே உங்கள் வேலை. பெரியாருடைய ஆட்கள் எதிலும் எதிர்மறையாகச் சொல்வீர்கள். அதற்காகத்தான் இந்த சூழல் என்று எடுத்து சொன்னவுடனே நான் சொன்னேன். அப்படி இல்லிங்க கை என்பதை எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டேன். அந்த செய்தியாளருக்கு அவ்வளவு தெளிவில்லை.
கை போடுகிறோம். லை என்று இப்படிப் போட்டால் என்னங்க. யானைக்கு போடுகிற மாதிரி துதிக்கையைப் போடுகிற மாதிரி ஒரு எழுத்தை ஏன் வைக்க வேண்டும்? இரண்டாவது நீங்கள் பத்திரிகை அலுவலகத்தில் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்பொழுதெல்லாம் கணினி வரவில்லை. ஒவ்வொரு எழுத்தாக தனித்தனி பெட்டியில் போட்டு வைத்துதான் அச்சு கோர்ப்பார்கள். ல என்ற எழுத்து இருந்தாலே போதுமே. அது ஏற்கெனவே பலவற்றுக்கும் பயன்படுகின்ற எழுத்தாகிவிட்டதே.
யானை துதிக்கை மாதிரி ஏன் ஒரு எழுத்தைப் போட வேண்டும்? என்று பெரியார் சிந்தித்து கேள்வி கேட்டார். இத்தனைக்குப் பெரியார் பல்கலைக் கழகத்திற்குப் போகாதவர்.
பெரியார் தன்னை மொழி அறிஞர் என்று சொல்லிக்கொண்டதே கிடையாது. தன்னைப் பற்றி சொல்லும்பொழுது பெரியார் சொல்லுகிறார்.
நான் சாதாரண ஆள். தமிழில் எந்த அளவும் நான் பள்ளியில் பயின்றவன் அல்ல. தமிழைப் பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்ப தல்லாமல், வெறும் பாஷையைப் பற்றியே எவ்வித பிடிவாதம் கொண்டவன் அல்ல. தமிழ் மக்களுடைய தன்மானம் அந்த மக்கள் பேசுகிறமொழி மரியாதை இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சொல் லுகின்றார். தமிழுக்காக எவ்விததொண்டு புரிந்த வனும் அல்ல.
தன்னை இவ்வளவு தாழ்த்திக்கொண்டு தந்தை பெரியார் சொல்லுகிறார் பாருங்கள். தமிழுக்கு வாழ்த்துக் கூற தலைவரும், எனது நண்பருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களும், தமிழ்ப் புலவர் க.நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர் களைப் போன்ற பெரியவர்களுமே உண்மையில் தகுதி உள்ளவர்கள்.
நான் தமிழ் பேசுவதும், எழுதுவதும் தமிழை கொலைபுரிவது மாதிரியாகாமல் நான் பல பத்திரிகைகளை நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கலியாண சுந்தரனார் அவர்களின் தமிழ் பாஷையும், தேச பக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்லுகின்றார்.
மதம், இலக்கணம், மக்கள் சேவகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் என்றால் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதித்து விட்டால் நமது கதி என்ன ஆவது? என்றும் கேட்கின்றார்.
ஆகவே அய்யா அவர்களுடைய சிந்தனை என்பதிருக்கிறதே. மொழிப்புலம் என்பதை நல்ல கருவியாக்கி, உலகளாவிய அளவில் கொண்டு போகவேண்டும்.
இன்றைக்கு உலகப் போட்டியில் தமிழ் முன்னாலே நிற்க வேண்டும். உலக, மொழிகளுடன் போட்டி போட வேண்டும் என்று விரும்பினால் தமிழ்மொழி இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. அதில் துணைவேந்தர் அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது. ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பு உள்ளே நுழைந்து ஆதிக்கவாதிகள் உள்ளே நுழைந்தால் அதற்கு சில தடைகள் எல்லாம் ஏற்பட்டன.
மறுபடியும் வரக்கூடிய ஒரு வேகமான ஆபத்தைக் கொஞ்சம் நிறுத்தி வைத்திருக்கின்றோம். அதனால்தான் பெரியார் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லக் கூடிய இன்றைய நிலை. அடுத்து எழுத்துச் சீர்திருத்தம். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அப் பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார். இன்றைக்கும் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டி ருக்கின்றோம்.
அதற்குப் பிறகு இந்த ஆட்சியில் (திமுக) இன்னும் சிறப்பாக என்னென்ன மாற்றங்கள் வருகிறதோ அதை அத்தனையையும் கலைஞர் செய்துகொண்டு வருகின்றார். மேலும் செய்வார். அதோடு பெரியார் அவர்கள் இன்னும் எழுதி இருக்கிறார்.
உலகத்து அறிஞர்கள் காலத்தோடு தனது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எடுத்து சொன்னார்கள். எனவே ஆக்க ரீதியான பணிகள் செய்வதிலே, நம்முடைய இலக்கியங்களாக இருக்கட்டும், மொழியாக இருக்கட்டும், இலக்கணமாக இருக்கட்டும், எல்லாம் மக்க ளுக்காக அவ்வளவு தானே தவிர, மொழிக்காக மக்கள் இல்லை.
மொழியை நாம் காப்பாற்ற வேண்டும். பண்பாட்டுப் படையெடுப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்கள் தன்மான உணர்வு பெறுவார்கள். ஆனால் இன்றைக்கு அந்த நிலையில்லை. கோயில்களில் தமிழ் இல்லை. தமிழன் வீட்டு நிகழ்வுகளில் தமிழ் இல்லை. அதே போல பல இடங்களில் தமிழ் இல்லை. தமிழக்கு இன்னும் உரிய மரியாதை இல்லை. தமிழுக்கு இன்னும் இரண்டாம் தர, மூன்றாம் தர இடம் தான் என்று இருக்கின்ற நிலை.
இப்பொழுது கலைஞர் ஆட்சி வந்த பிறகு தான். தமிழுக்கும், தமிழனுக்கும் ஏற்றம் பிறந்திருக்கிறது. ஏனென்றால் உண்மையை சொல்ல வேண்டும் அல்லவா? அதிலும் நாங்கள் தான் கேட்டோம் கோயில் உள்ளே போனால் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும். என்று எழுதப் பட்டிருக்கிறது. அதில் என்னையா லும் என்று கேட்டோம்.
தமிழ்நாட்டிற்குள்ளே தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றால் அதில் என்ன அர்த்தம்? வட மொழியிலும் செய்யப்படும் என்று கோவிலில் இருந்திருக்க, வேண்டும். அதைவிடுத்து தலைகீழாக இருப்பதா? ஏனென்றால், சமஸ்கிருதம் தமிழ் நாட்டிற்கு தொடர்பில்லாத மொழி, தமிழ்நாட்டில் தமிழ் தானே இருக்க முடியும். அதே மாதிரி நண்பர்களே இன்றைக்கு பார்த்தீர்களேயானால் தமிழ் இசை அதில் கருநாடக இசை, தமிழிசை என்று சொல்லி, கருநாடக இசை முழுவதும் (தெலுங்கு) தமிழிசை தானே!
பெரியாருடைய இயக்கம் தமிழிசையை வளர்த்தது. மிக நீண்ட காலத்திற்கு முன்னாலே இசை இருந்திருக்கிறது. தமிழிசை இல்லாமல் இல்லை. இன்னும் கேட்டால், இயல் தமிழ், இசை தமிழ், முத்தமிழ் என்றும், நாடக தமிழ் என்றும், எதற்கு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது நன்றாக உங்களுக்குத் தெரியும்.
நடைமுறைக்கு வாருங்கள். சமுதாயத்தில் பல இடங்களில் சென்று பாருங்கள். தமிழுக்குரிய சிறப்பு என்னவென்று மரக் கதவு திறந்தது, சிவபெருமான் வந்தார், முருகன்தான் தமிழ் கடவுள், என்றெல்லாம் சொல்லி, அழகு என்றால் முருகன் தான் என்றெல்லாம் சொல்லி, இப் பொழுது பார்த்தீங்களேயானால் பழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய ஆளில்லையே! ஏற்கெனவே பண்டார நாயக்கர்கள் இருந்தார்கள். திருமலை நாயக்கர்கள் என்று சொல்லக்கூடிய காலம் இருந்தது.
ராமப்பய்யர் என்று ஒரு பார்ப்பனர் வந்தார். இவர் மன்னரின் திவான். நேரே போய் பழனி கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று வந்தார். பந்தோபஸ்து பண்டாரங்கள் என்ப வர்கள் ஏற்கெனவே அங்கே இருந்தார்கள். நீங்கள் எல்லாம் யார்? என்று கேட்டனர். வஸ்தாதுகளா? என்று கேட்டார் ராமப்பய்யர்.
நாங்கள் இங்கேயே தான் இருக்கிறோம் நாங்கள்தான் பாரம்பரியமாக முருகனுக்கு பூஜை பண்ணுகிறோம் என்று சொன்னார்கள். பண்டாரங்கள் முருகனுக்கு தமிழில் ஏன் அர்ச்சனை செய்ய வேண்டும், நீங்கள் போகலாம் இங்கே வேலையில்லை என்று சொல்லி, இரண்டு மணி நேரத்திற்கு மேல் எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டு அர்ச்சனை செய்தார். பார்ப்பனர்கள் செய்த கொடுமை இது.
தமிழ் கடவுள் என்று சொல்லப்படுகின்ற முருகனுக்கே இந்த நிலை. இன்று வரையிலேயே மாற்றம் இல்லையே! இது தான் பெரியாருடைய கேள்வி. ஆகவே பண்பாட்டுப் படை யெடுப்பை எதிர்த்து, பெரியார் காரியங்களை செய்தார். இந்த ஆட்சியிலே தான் மணி மண்டபங்கள் எல்லாம் உருவாயிற்று.
மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோன்றியவர்கள். அதே போல முத்துசாமி தீட்சிதர், தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள் இந்த மூன்று பேருக்கும் ஒரே நூற்றாண்டு தான் என்று இவர்கள் எல்லாம் மும்மூர்த்திகள் என்று சொல்லி வரலாற்றை எழுதி வைத்தார்கள்.
எனவே, வரலாற்றை திருத்தியவர்கள் அவாள்கள் கூட்டம். இது தமிழர்களுக்கு தெரியாது. எனவே இந்த இயக்கம், இந்த சிந்தனை, தந்தை பெரியாருடைய கேள்விகள் இவைகளுக்கெல்லாம் விடை காண வேண்டும்.
எனவேதான் பெரியார் அவர்களுக்கு முன்தோன்றிய மூத்த குடி என்று சொன்னால் மட்டும் போதாது. பல வகையான மொழி என்று சொன்னால் மட்டும் போதாது. உலக வரலாற்றிலே அது நிற்க வேண்டும். பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நிற்க வேண்டும். ஆக்க ரீதியாக செயல்பட வேண்டும். ஆகவே நண்பர்களே! காலம் நேரமாகி விட்டது என்றாலும் கூட இன்னும் பல ஆதாரங்களோடு, அடிகுறியீட்டுகளோடு பல்கலைக்கழக அனுமதியோடு இதைப் புத்தகமாக கொண்டு வர இருக்கிறேன். ஏனென்றால் புதிய கருத்துகள் வரவேண்டும்.
எனவே பெரியாருடைய சிந்தனைகள், பெரியாருடைய பாதைகள் எல்லாமே இந்த பண்பாட்டுப்படை எடுப்புகளிலேயிருந்து காப்பதற்காகத்தான். இவரைவிட, தமிழ்நாட்டிலே மிகப் பெரிய சிந்தனையாளர் வேறு எவரும் இல்லை. மற்றவர்கள் பெரியாரைப் பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் என்று சொல்லி நன்றி கூறி ஒரு சிறப்பான இந்த நிகழ்ச்சியை நடத்திய உங்களுக்கு இந்த இயக்கத்தினுடைய தனித்த நன்றி உண்டு. ஏனென்றால் நாங்கள் செய்ய வேண்டிய பணியை நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.
எனவே, உங்களுடைய இலட்சியங்கள் வெல்லட் டும். ஆக்கங்கள் ஆக்கரீதியாகட்டும் என்று சொல்லி வாய்பளித்த உங்களுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் நீங்கள் உட்கார்ந்து இருந்தீர்கள், ஒரு வகுப்பிற்கு கூட உட்கார்ந்திருப்பதில்லை. (சிரிப்பு கைதட்டல்) இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்காக உட்கார்ந்து இருக்கிறீர்களே (சிரிப்பு வெடி) ஆகவே அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
--------------- "விடுதலை” 24-5-2011
0 comments:
Post a Comment