Search This Blog

7.5.11

மாட்டிறைச்சி சாப்பிடுவதை பார்ப்பனர்கள் எப்பொழுது கைவிட்டனர்?

மாட்டிறைச்சியும் - ஜாதி இந்துக்களும்


ரிக் வேதம் பசு புனிதமானது என்று கூறுகிறது. புனிதமானபடியால் யாகங்களில் அது வாளால் அல்லது கோடரி யால் வெட்டப்பட்டுக் கடவுளுக்கு நெய்வேத்தியமாக அளிக்கப்பட்டது. கடவுள் நெய்வேத்தியத்தைப் பிரசாதமாக பிராமணர்களும் சரி, பிராமணர்கள் அல்லாத ஜாதி இந்துக்களும் சரி பக்தியுடன் சாப்பிட்டனர்.

இதை தைத்தீரிய பிராமணா என்ற வேத நூல் தெளிவாகக் கூறியுள்ளது. இது மட்டுமின்றி, வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அவருக்கு கோ உணவு அளிக்க வேண்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவ்வாறே விருந்தாளிகள் வேத காலங்களில் கவுரவப் படுத்தப்பட்டனர்.


ஆரியர்களின் ஆகப் பெரிய ரிஷி யாகிய யாஜன வல்கியார் கூறுகிறார்:

நான் அதைச் சாப்பிடுகிறேன். ஆனால், அது இளசாக இருக்க வேண்டும்.

இந்துக்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததைப் புத்த சூத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. பசுக்களும் இதர பிராணிகளும் ஏராளமாகக் கொல்லப் பட்டன. இவை அனைத்தும் சமயச் சடங்குகளாகக் கருதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய இந்தியாவில் இந்துக்களை மாமிச பட்சிணியாகவும், காய்கறி உணவு உண்பவர்களாகவும் பிரித்தால் மட்டும் போதாது. மாமிசம் உண்பவர்களை, மாட்டு மாமிசத்தைத் தவிர வேறு மாமிசங்களை உண்பவர்கள் என்றும், மாட்டு மாமிசம் உண்பவர்கள் என்றும் பிரிக்க வேண்டும். உணவு அடிப்படையில் இந்துக்களைப் பிரித்தால் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார், துண்டாப்படாதவர் எனலாம். ஆனால், வேதங்கள் கூறும் நான்கு வர்ணங்களுக்கு இது ஒத்துவராது. எனினும், எதார்த்த நிலையை உண்மையில் எடுத்துக் காண்பிக்கின்றது.

ஒரு காலத்தில் எல்லோருமே மாட்டு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் மாட்டு மாமிசத்தை உண்ணுவதை விட்டுவிட்டனர். பிறகு எந்த மாமிசமும் சாப்பிடுவதை விட்டுவிட்டு, காய்கறி உணவு மட்டும் சாப்பிடத் தொடங்கினர். ஆனால், பிராமணர் அல்லாதவர் மாட்டு மாமிசம் சாப்பிடுவதை விட்டனரே தவிர, மீதியுள்ள மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர்.

அஸ்வமேத யாகம் போல், பசு யாகம் செய்த போதெல்லாம் பிராமணர் அந்த மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர். உண்மையில் ஏறத்தாழ தினசரி பிராமணர் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் குருமார்கள் ஆன படியால், பிராமணர் அல்லாதார் எல்லாச் சடங்குகளுக்கும் பிராமணர்களை அழைத்து வந்தனர்.

எல்லாச் சடங்குகளிலும் கலந்து கொள்ளும் பிராமணர்களுக்குத் தினசரி இலவச மாகவே மாமிசம் கிடைத்தது. இந்த வசதி பிராமணர் அல்லாதவர்களுக்கு கிடைக்க வில்லை. உபநிஷத் துக்கள் கோ மாமிசம் சாப்பிடுவதை நியா யப்படுத்தின; கட்டா யப்படுத்தின. அப்படியானால், கோ மாமிசம் சாப்பிடுவதைப் பிராமணர் எப்பொழுது கைவிட்டனர்? ஏன் கைவிட்டனர்? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

புத்த மதத்திற்கும் பிராமணீயத் திற்கும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் கடுமையான சண்டைகள் நடைபெற்று வந்தன. புத்தமதம், மக்களை மிகவும் கவர்ந்தது. கடவுள் இல்லை என்பதும் பொருள் முதல்வாதமும் மக்களின் சமயமாக ஆயின. அசோக மன்னனே பவுத்தத்தைப் பெரிதும் ஆதரித்தவன்.

பிராமணர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பெரும் முயற்சி செய்து வந்தனர். பவுத்த மதம் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டதால், அதே மதத்தைப் பிராமணர்களும் கடுமையாக பின்பற்றத் தொடங்கினர். புத்தர் இறந்த பின், பவுத்தர்கள் புத்தக் கோவில்களைக் கட்டினர். பிராமணர்களும் கோயில்களைக் கட்டினர். ஆனால், அவைகளில் சிவன், விஷ்ணு, இராமர், கிருஷ்ணன் விக்கிரகங்களை வைத்தனர். இதன் நோக்கம் ஒன்றே; புத்தர் கோவில்களுக்குச் செல்லும் மக்களைத் தங்கள் கோவில்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு தான் கோவில்கள் ஏற்பட்டன. பிராமணீயத்தில் கோவில்கள் கிடையாது.

பவுத்தர்கள், பார்ப்பனர் சமயத்தை எதிர்த்தனர். குறிப்பாக யாகத்தையும், யாகத்தில் குதிரை, பசு முதலியவற்றைக் கொல்வதையும் கடுமையாக எதிர்த்தனர். பசுக் கொலை எதிர்ப்பைப் பெரு வாரியான சாதாரண மக்கள் பெரிதும் வரவேற்றனர். காரணம், விவசாயத்திற்கு மாடுகள் மிகத் தேவையான தாலும் பெருவாரியான மக்கள் விவசாயிகளானபடியாலும், மாட்டைக் கொலை செய்வதை அவர்கள் விரும்பவில்லை. பிராமணர்கள் மீது வெறுப்பு இவ்வாறு அந்தக் காலத்தி லிருந்துதான் ஏற்பட்டது. இதைச் சமாளிக்கும் பொருட்டு பிராமணர்கள் யாகத்தையும், பசுவை யாகத்தில் கொல்வதையும் கைவிட்டனர்.

இது மட்டுமன்றி பவுத்த பிக்குகள் செல்வாக்கிலிருந்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கப் புலால் மறுத்து. எந்த மாமிசமும் தின்பவர்கள் அல்லர் என்றும் தாங்கள் காய்கறிகள்தான் உண்பவர்கள் என்றும் வெளிப்படுத்தத் தொடங்கினர். இவ்வாறுதான் மாமிசப் பட்சிணியாக இருந்த பிராமணர்கள் காய்கறி மட்டுமே தின்னும் சாகப் பட்சிணியாகத் தொடங்கினர்.

இது ஒருபுறமிருக்க, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் தின்பது தீண்டாமைக்கு ஏன் இட்டுச் செல்ல வேண்டும்? பிராமணர்களும் பிராமணர் அல்லாதவர்களும், கோமாமிசம் சாப்பிடுவதை விட்டபின், உடைந்த மனிதர்கள் மட்டும் கோமாமிசம் சாப்பிடுவது புதிய சூழ்நிலையை ஏற்படுத் தியது.

கோமாமிசம் சாப்பிடாதவர்கள், பசு பவித்திரமானது; அதைக் கொல்லக் கூடாது; பசு மாமிசம் சாப்பிடுகிறவர்கள் சண்டாளர்கள் என்று கூறத் தொடங்கினர். அகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்தால் அவர்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டனர்.

ஆகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்த காரணத்தால், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டது என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

-----------------------மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய ”டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” நூலிலிருந்து

2 comments:

வலிப்போக்கன் said...

மாட்டு இறைச்சியை காங்கிரஸ்ன்னு சொலறோமுங்க.

Massy spl France. said...

பார்ப்பனர்களாகட்டும் அல்லது தங்களை ஒசத்தி சாதியர் என பிதற்றிக்கொள்ளும் மற்றவர்கள் ஆகட்டும், சமுதாயத்தின் ஒரு பகுதியினரை தீண்டப்படாதவர், கீழ் சாதியர், ஒதுக்கப்பட்டவர் என பிரித்து பாகுபாடு செய்ய யார் இவர்களுக்கு உரிமை கொடுத்தது? யார்தான் இதை கேட்டது? சமுதாய ஒற்றுமையை உடைத்து மக்களை பிரித்து ஆள செய்யப்பட்டு வருகிற வெறும் சதியே இவை அனைத்தும்.