Search This Blog

29.5.11

பார்ப்பனர்களின் தேசியம்
பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றி பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறேன். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களை பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கின்ற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்திய பழைய நாகரீகம் சனாதனதர்மம் பழக்க வழக்கம் என்பவைகளையே பிரதானமாகக் கொள்ளும்படி பிரசாரம் செய்து வந்ததும் அதற்காக இந்தியபுராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டி பிரசாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இக்கருத்தைக் கொண்டேதான் கராச்சி காங்கிரஸ் சுயராஜ்ய திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டை “பாரத மாதா” (பூமிதேவி) என்று அழைப்பதும் “பாரததேசம்” என்று சொல்லு வதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாய்க்கொண்டதே ஒழிய வேறில்லை. தேசீயம் என்பதற்கு அரசியலை சம்பந்தப்படுத்திய கருத்தும் இந்தியாவின் பழைய நாகரீகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறல்ல.

இன்றுகூட ஆங்கில ஆட்சியானது சனாதன தர்மப்படி-மனுதர்மப்படி ஆட்சி நடத்தப்படுவதாய் இருந்தால் இன்றைய தேசீயமும் சட்டமறுப்பும், ஒத்துழையாமையும் எல்லாம் பறந்தோடிப்போகும்.

இந்தக் காரணத்தினாலேயேதான் தோழர் காந்தியும், மகாத்மா வாக்கப்பட்டார். ஆனால் இதுசமயம் காந்தியின் செல்வாக்கு வேறுவழியில் ஒரு அளவு குறைந்துபோன காரணத்தினால் அதை புதுப்பிக்கவும் காந்தியின் பிரயத்தினமோ, தயவோ சிறிதும் இல்லால் தீண்டாமை விலக்கும், ஆலயப் பிரவேசமும் கிளர்ச்சி பெற்றதன் காரணமாய் காந்தியார் இதில் பங்குபெற கருதி வலிய வந்து கலந்துகொள்ளவேண்டியேற்பட்டதாலும் “தேசீயவாதி” களான பார்ப்பனர்களுக்கு இப்போது சிறிதுகஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சென்னை தேசீய பார்ப்பனர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. தோழர்கள் சத்தியமூர்த்தி, ஏ,ரங்கசாமி அய்யங்கார், கே. பாஷ்யம் மற்றும் எத்தனையோ சென்னை பார்ப்பனர்களுடைய பேச்சையும், மூச்சையும் காணோம். தோழர் சத்தியமூர்த்தியின் விலாசமே கண்டுபிடிப்பது கஷ்டமாய் இருக்கிறது. அவருடைய முழுசேவையும் தோழர் ராஜா சர். அண்ணாமலையின் குடும்பத்தாருக்கு கண்ராக்ட்டாய் (சோல் ஏஜன்ஸி) விட்டுவிட்டார். அவரைப் பற்றி கவிபாடவும் அவர் கோரும் பொது வாழ்வு காரியங்களை காங்கிரஸ் பிரதிநிதியாய் இருந்து நிறைவேற்றிக்கொடுக்க முன்னோடும் பிள்ளையாய் இருப்பதுமே அவருடைய சுயராஜ்ய தபசாயும், அவரது பிறப்புரிமையாயும் ஆகிவிட்டது. ஆனால் தோழர் ராஜா சர். அண்ணாமலை கொடுக்கும் பணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கே சேர்ந்தது. தோழர் ஏ. ரங்கசாமி அய்யங்காரோ சங்கராச்சாரி கூட்டத்தினர்களை ஆதரித்து அவர்களை மேன்மைப்படுத்துவதன் மூலமும் மற்றும் சில பணக்காரர்களை விளம்பரப் படுத்துவதன் மூலமும் பெருமையும், பணம் சம்பாதிப்பதே அவருடைய காங்கிரஸ் பிரசாரமாகவும், தேசீய பிரசாரமாகவும் ஆகிவிட்டது. தோழர் கே. பாஷியம் அடுத்த சட்டசபை தேர்தல் வரை தலை நீட்டமாட்டார். குட்டி தேசீய வாதிகளான ஒரு கூட்டம் அதாவது, தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் மேல் குறிப்பிட்ட தேசியவாதிகளின் உத்திரவுக்கு இணங்க காந்தியின் செல்வாக்கை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் 7-3-33 ந் தேதி “தமிழ் நாட்டில் பிரசுரித்து இருக்கும் தோழர் எம்.எஸ், சுப்பிரமணிய அய்யர் பிரசங்கத்தைப்படித்துப் பார்த்தால் தெரியவரும். இந்த அவசரத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் கூட்டத்தை நான் மறந்து விட்டதாக சிலர் சொல்லக்கூடும். ஒரு நாளும் மறக்கவில்லை. முன் கூறிய கூட்டமும் இந்தக் கூட்டமும் சகோதரர்களே ஆவார்கள். முன் கூறிய கூட்டம் வாதிக்கு வக்கீலாக இருந்து கொள்ளை அடித்தால் பின் கூறிய கூட்டம் பிரதிவாதிக்கு வக்கீலாய் இருந்து கொள்ளை அடிப்பவர்களாவார்கள். வரும்படியை சமமாக பங்கிட்டுக் கொள்ளுவார்கள்.

தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், ராஜனும் எந்த அளவில் சீர்திருத்தக்காரர்கள் என்பதை கவனித்தால் யாவருக்கும் சுலபத்தில் உண்மை விளங்கிவிடும். ராஜகோபாலாச்சாரியும், ராஜனும் அவர்களது ஜாதி உயர் வுக்கு உரிய ஏதாவது ஒரு சின்னத்தை விட்டு இருக்கிறார்களா? என்பதைக் கவனித்துப்பாருங்கள்.

1, உச்சிக்குடிமை, 2. வடகலை, தென்கலை பிரிவுப்படி நாமம், 3. பூணூல், 4. பஞ்சகச்சம், 5, சந்தியா வந்தனம், 6. நன்மை தீமைகளில் பார்ப்பனர்க்குரிய சடங்குகள்

முதலிய காரியங்களை எவ்வளவு ஜாக்கிரதையாய் அனுஷ்டிக் கிறார்கள் என்பதும் இவர்கள் பிரசங்கங்களில் பாரதம், ராமாயணம், நாலாயிரப் பிரபந்தம், முதலிய வைணவ மத சாஸ்திர பிரசாரங்கள் எவ்வளவு நடைபெறு கின்றன என்பதும் கவனித்துப்பார்த்தால் சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிப் பிரசாரத்துக்கு ராஜகோபாலாச்சாரி, ராஜன் கோஷ்டி பிரசாரம் ஏதாவது கடுகளவாவது இளைத்ததா என்பது விளங்கும்.

நம் தென்னாட்டில் இன்றைய பொது வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது விளம்பரம் பெறவேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது அதிகாரம், பதவி, சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கத்தினர் முதலியவை பெறவேண்டும் என்பவர் களுக்கோ அவர்கள் பார்ப்பனராயிருந்தாலும், முஸ்லீம்களாய் இருந்தாலும் கிறிஸ்தவர்களாய் இருந்தாலும், பார்ப்பனரல்லாதார்களாய் இருந்தாலும், ராஜா சர்களாய் இருந்தாலும், ஜமீன்தாரர்களாய் இருந்தாலும் பெரும்பணம் பூமி படைத்த செல்வவான்களாய் இருந்தாலும், இந்த இரண்டு கூட்டத்தில் ஏதாவதொரு கூட்டத்திற்கு அடிமையானாலொழிய அல்லது வாய்பூசினாலொழிய வேறு மார்க்கமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட இவர்கள் சங்கதியே இப்படியானால் மற்றபடி வயிற்றுச்சோத்துக்கு வேறுவழி யில்லாமல் எப்படி நடந்தாவது வயிறு வளர்க்கலாம் என்ற சில தேசபக்தர்களைப்பற்றி நான் சொல்ல வேண்டுமா? என்று கேள்கின்றேன். ஆகவே இன்றைய நிலைமையைப் பார்த்தால் பார்ப்பனர்களின் தேசியம் ஓரளவுக்கு வெற்றிபெற்று வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். காரணம் என்ன வென்றால் பார்ப்பனரல்லாத மக்களுக்குள் தலைவர்கள் என்பவர்கள் முதல் வாலர்கள் என்கின்ற வரை சுயமரியாதையில் போதிய கவலை இல்லாமல் எப்படியாவது அவரவர்கள் தனித்த முறையில் வாழ்ந்தால் போதும் என்கின்ற சுய நலத்தன்மையானது அவர்களை மறுபடியும் கீழ் நிலைக்கு கொண்டு வரும்படி செய்கின்றது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்? இந்தக் காரணங்களால்தான் பார்ப்பான் ஜாதி திமிரும் பார்ப்பனரல்லாதவர்களில் உள்ள பணத்திமிரும் மொத்தத்தால் உள்ள படிப்புத்திமிரும், உத்தியோக அதிகாரத்திமிரும் எல்லாம் ஒருங்கே அழியவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றதுபோல் தோன்றுகிறது.

--------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை - “குடி அரசு” - 19.03.1933

0 comments: