Search This Blog

1.5.11

ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்டிருக்கும் ஹசாரே குழு கலைக்கப்படவேண்டும் - கி.வீரமணி

அன்னா ஹசாரே தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

மத்திய அரசு அமைத்த லோக்பால் கூட்டுக்குழு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அமைக்கப்பட்ட குழு என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள்-யார்? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் 22.4.2011 அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில்...!

பொதுவாக ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலே யாருக்கும் ஆட்சேபனை-மறுப்பு இருக்க முடியாது. அவர்கள் சுட்டிக் காட்டியது போல ஊழலை ஒழிக்க முன்வரக்கூடியவர் களைக்கூட எதிர்ப்பதற்கு இவர்கள் ஒரு கூட்டத்தைத் திரட்டுகிறார்களே என்று நம்மைப் பற்றி ஒரு தவறான பிரச்சாரத்தை மற்றவர்கள் செய்யக்கூடும். ஆனால் பொதுவாக நம்முடைய நாட்டில் ஆங்கில நாட்டுப் பழமொழியை இங்கு தலைகீழாகப் பயன்படுத்துகிறார்கள்.

யுத்த காலங்களிலேதான் உண்மைகள் கள பலியாகும் என்பது ஆங்கில பழமொழி. ஆனால் நம்முடைய நாட்டிலே அமைதியான காலங்களில் முதலில் உண்மைதான் களபலியாகும் என்று சொல்லக்கூடிய அளவிலே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்றால், அண்மையிலே திடீரென்று ஊழலை ஒழிப்ப தற்காக முயற்சி எடுத்து திடீர் பிள்ளையார் தியாகராயர் நகரில் சில காலத்திற்கு முன்னாலே தோன்றியதைப் போல, அல்லது திடீர் அவதா ரங்கள் தோன்றியதைப் போல திடீரென்று டில்லியிலே தேர்தல் நடக்கக்கூடிய அல்லது முடியக்கூடிய ஒரு காலகட்டத்திலே-முடிவுகள் வரமுடியாத ஒரு காலகட்டத்திலே-அந்த இடை வெளியிலே ஏராளமான அளவுக்கு தொலைக் காட்சி விளம்பர வெளிச்சங்கள்-ஊடகங்களுடைய அபாரமான வெளிச்சங்கள்- இவைகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது இதற்கு முன்னாலே அப்படி ஒரு சட்டம் வராதது போலவோ அல்லது யாருமே அதைப் பற்றிக் கவலைப்படாதது போலவோ ஊழல் எல்லாத்துறைகளிலும் மலிந்து விட்டது. ஆகவே அதைத் தடுப்பதற்கு ஒரு மாபெரும் புரட்சி யுகம் தொடங்கிவிட்டது.

புரட்சியின் பூபாளம்-ஹசாரே?

புரட்சியின் பூபாளம் இதோ ஹசாரேயின் உருவத்திலே வந்திருக்கிறது என்று காட்டுவதற்காக காவி விரிப்பைப் போட்டு-பாரதமாதாவைக் காட்டி அதன் மூலமாக ஒன்றைத் தெளிவாக செய்திருக்கின்றார்கள்.

இதைப்பற்றி மக்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறு கின்றது. இதிலே ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்பு கின்றோம். ஊழலை ஒழிப்பதற்கு பகுத்தறிவு வாதிகள், பெரியார் சிந்தனையாளர்கள் யாரும் பின்வாங்கியவர்கள் அல்லர்.

டில்லி நீதிமன்றத்தில் வழக்கு திடீரென்று டில்லியிலே ஒரு மேடை. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவர் சொன்னது போல 50 லட்ச ரூபாய் வசூல். எங்கேயிருந்து வந்தது? அதை விசாரித்தாலே ஒரு ஊழல் புராணம் வெளியே வந்து விழும்.

ஊழலை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு செலவே 50 லட்சம் ரூபாய். ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கே 16 லட்சம்தான் செலவு. ஆனால், ஊழல் ஒழிப்பிற்கே 50 லட்சம் செலவாகியிருக்கிறதே என்று கேட்டால், இதுவரை அவர்கள் சொன்னதை மற்றவர்கள் மறுத்திருக்கிறார்களா? இதை மறுக்கவில்லை என்பதனாலே அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்றே நாம் கொள்ள வேண்டும்.

ஆராய வேண்டும்

மத்திய அரசுக்கு இதிலே தெளிவான பார்வை வேண்டும். இதிலே விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும் என்கிற இடத்திலே, மத்திய அரசின் சார்பிலே கேட்கக்கூடிய ஒரு மக்களாட்சியில், சட்டப்படி அங்கே நாடாளுமன்றம் இருக்கிறது. நிருவாகத்துறை (Executive) இருக்கிறது. நீதித்துறை இருக்கிறது. இப்படி மூன்று பிரிவுகள் இந்த நாட்டை ஆளக்கூடியவை.

இந்த மூன்றும் தனித்தனியாக அவை இணைந்து செயல்படக்கூடிய நிலையிலே இந்த மூன்றி னுடைய முறைகளை வரையறுப்பதற்குத்தான் இந்திய அரசியல் சட்டம் இருக்கிறது.

எந்தப்பிரிவின்கீழ் கூட்டுக்குழு அமைத்தீர்?

இந்திய அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் ஹசாரே போன்றவர்கள், சாந்திபூஷன் போன்றவர்கள், பிரசாந்த் பூஷன் போன்றவர்கள் இவர்கள் ஒரு பக்கம்; அதே போல அரசாங்க உறுப்பினர்கள் அய்ந்து பேர் என்று ஹசாரே தலைமையில் பத்து பேர்கொண்ட கூட்டுக்குழுவை அமைத்தார்கள்? இவர்கள் எல்லாம் சேர்ந்து ஊழலை ஒழிக்க முதல்கூட்டம் நடத்திவிட்டோம்; அடுத்தகூட்டம் நடத்தப் போகிறோம் என்று சொல்லுகிறார்களே-இதற்கு Where is the legal sanction under the constitution of india? இந்திய அரசியல் சட்டத்தில் எந்த விதியின் கீழ் இது செய்யப்பட்டிருக்கிறது? அரசியல் சட்டத் திற்கு அப்பாற்பட்டு நடந்துகொள்கிறோம் என் றால், அதைப்பற்றி சுப.வீரபாண்டியன் மிக அழகாகச் சொன்னார்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டு....

Extra Constituitional Authority இது சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிதீவிரமான ஆதிக்க சக்திகள். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நாமெல்லாம் சேர்ந்து கூட திடீரென்று ஒரு முடிவு எடுக்கலாம். ஒவ்வொரு நாளைக்கும் தேவையில்லாமல் இந்த அம்மையார் அறிக்கை கொடுப்பது, உடனடியாக தேர்தல் ஆணையம் அதற்கு ஏற்ப விதிகளை மாற்றுவது, அதிகாரிகளை மாற்றுவது என்று சொல்லுவதற்குப் பதிலாக தேவையில்லாமல் இதை எல்லாம் நிறுத்திவிட்டு, அடுத்த முதல்வர் இவர்தான் என்று எங்களுக்கே தெரிகிறது. இப்படி தேர்தல் ஆணையம். முடிவுக்கு வந்துவிட்டது. எனவே கலைஞர் முதல்வர் அல்ல; அம்மையாரே முதல்வர் என்று அறிவித்துவிட்டுப் போகலாமே!

தொலைக்காட்சியில் ஊழல் வழக்கு

ஒரு பத்து பேர் ஊடகத்தினர் சொல்லி விட்டார்கள், மற்றவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லலாமா? ஏன் இதை சொல்லுகிறோம் என்றால் மற்றவர்கள் யார் மீதும் இருக்கின்ற வெறுப்பு அல்ல. உண்மையிலேயே நடுநிலையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஹசாரே பற்றிய ஊழல் வழக்கு தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று இங்கு செய்திகளைச் சொன்னார்கள்.

மகாராட்டிர மாநிலம் புனேவைச் சார்ந்தவர் ஹேமந்த் கோலேகர். 2005ஆம் ஆண்டு அண்ணா ஹசாரே மீது நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர் கூறியுள்ளார். அன்னா ஹசாரே தொடங்கிய ஹிந்த் ஸ்வராஜ் அறக் கட்டளைக்குச் சொந்தமான நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்து 1998 ஜீன் 15 அன்று தனது 61ஆவது பிறந்தநாளை ஹசாரே வெகு விமரிசையாக கொண்டாடியிருக்கிறார். ஒரு அறக்கட்டளை நிதியிலிருந்து தனிநபர் இப்படி நிதி எடுத்து பிறந்தநாள் கொண்டாடப்படுபவர்தான் ஊழலை ஒழிப்பாரா?

ஆகவே, இவர் பதவி வகிப்பதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. முதலில் ஹசாரேவுக்கே ஊழல் உண்டு. டில்லி உயர்நீதிமன்றத்திலே வழக்கு வருகிறது என்று செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஊழல் ஒழிப்புக்காரர்களில் ஒருவர் மிஞ்சலாம்!

ஊழலை ஒழிப்பதற்காக போனவர்களிலே வேண்டுமானால் ஒருவர் மிஞ்சலாம்- ஹெக்டே சந்தோஷ் என்பவர். அவரைத் தவிர மற்றவர்கள் யாருமே மிஞ்ச மாட்டார்கள். ஆனால் அருமை நண்பர்களே, மற்ற செய்திகளை எல்லாம் சகோதரர் அவர்கள் சொன்னார். அரசியல் சட்ட விதிப்படி எந்தப் பிரிவின்கீழ் இப்படி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

முதல் குற்றவாளியே மத்திய அரசு

எனவே, முதல் குற்றம்சாற்றப்பட வேண்டியது மத்திய அரசு-இந்திய அரசு. மிரட்டினால் பணி வோம் என்று சொன்னால் நாளைக்கு யார் வேண்டுமானாலும் இந்த அரசை மிரட்டலாம். யார் வேண்டுமானாலும் அச்சுறுத்தலாம். அதற்கு நீங்கள் பணியலாம் என்று சொன்னால், நாளைக்கு எங்களால் அதைச் செய்ய முடியாதா?

சேது சமுத்திரத் திட்டத்தின் நிலை...

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடிக்க இன்னும் 12 கி.மீ.தான் பாக்கி. இல்லாத இராமனைக் காட்டி தடுத்திருக்கிறார்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று நாங்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் அனு மதிப்பார்களா?
ஈழப் பிரச்சினை அதே போல் ஈழத்தமிழர் பிரச்சினையிலே இவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று சொல்லுகின்ற நேரத்திலே, அதற்கு வழிகாட்டக் கூடிய அளவிலே மக்களைத் திரட்டினாலே, அதை ஒப்புக்கொள்வார்களா?

சட்டப்படி நடந்திருக்கிறதா?

எல்லாவற்றுக்கும் Due processes of law சட்டப்படியான முறை இருக்கிறது என்று சொன்னபிற்பாடு, அரசியல் சட்ட விதியின் கீழ் அவர்கள் செயல்படவேண்டுமா? இல்லையா? அரசியல் சட்டத்தின் கீழ் எந்த விதியின் கீழ் நீங்கள் செயல்பட்டிருக்கின்றீர்கள்? எனவே, ஹசாரே தலைமையிலான கூட்டுக் குழுவுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் உண்டா? அரசியல் சட்ட ரீதியாக-சட்ட ரீதியாக அங்கீகாரம் இல்லாத ஒரு எக்ஸ்ரா கான்ஸ்டிடியூசினல் அத்தாரிட்டி என்று நீங்களே முடிவு செய்து கொண்டீர்கள் என்றால், என்ன அர்த்தம்?

டில்லி கட்டப்பஞ்சாயத்து

நமது ஊரில் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இது கட்டப்பஞ்சாயத்து-இது டில்லியில் நடந்த கட்டப்பஞ்சாயத்து. கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டுமென்று கீழ் மட்டத்தில் ஆரம்பித்தால் இந்த கட்டப் பஞ்சாயத்து இப்பொழுது மேல்மட்டத்தில் போயிருக்கிறது.

இது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டப்பஞ்சாயத்து. இதைவிட வெட்கக்கேடான மற்றொரு செயல் கிடையவே கிடையாது. இதை நன்றாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த அடிப்படையில் மத்திய அரசு இந்தக் கூட்டுக்ழுவை அமைத்தது? யாரோ நான்கு பேரை அழைப்பது, நீங்களே இந்த குழுவில் இருங்கள் என்று மத்திய அரசே சொன்னால் என்ன அர்த்தம்?

பழைய சம்பவம் ஒன்று-இங்கு நடந்தது. ஒரு குழு போட்டார். நான் அரசியல் வரலாற்றுக்கெல்லாம் போகவில்லை. ஏனென்றால் விருப்பு-வெறுப்பு இல்லாததனால் நான் பெயரைச் சொல்லாமல் இருக்கின்றேன்.

நீயே 29 நபராக இரு!

எங்கள் ஜாதிக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று ஒரு ஜாதிக்காரர் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று ஆரம்பித்தார். ஏற்கெனவே 28 பேர் கொண்ட-நிறைவாகப் போடப்பட்ட குழு முதல்வர் அந்த வழியாக வந்தார். என்ன கூட்டம், எல்லாம் கும்பலாக நிற்கிறார்களே? என்று கேட்கிறார். இல்லிங்க, அவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று சொன்னார்கள். எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்று கேட்டார். என்ன வேண்டும் என்று கேட்டார். எங்கள் ஜாதிக்குப் பிரதி நிதித்துவம் இல்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொன்னார்.

அப்படியா! நீங்கள் உடனே சாக வேண்டாம். நீங்களே உறுப்பினர். 29ஆவது உறுப்பினர் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். அதாவது, இதற்காகவாவது ஓர் ஆதாரம் இருக்கிறது. முதல்வருக்கு அதிகாரம் இருக்கிறது-எத்தனை உறுப்பினர்கள் போடவேண்டும் என்பது. எந்தவிதமான குறைபாடும் இதில் இல்லை. ஆகவே முதலாவது இந்தக்குழுவே சட்ட விரோதமான, சட்ட சம்மந் தமற்ற குழுவாகும். சட்டப்படி அமைக்கப்பட்டது அல்ல என்பது எங்களுடைய வாதம் ஊழல் என்றால் லஞ்சம் மட்டும்தான் ஊழலா?

----------------" விடுதலை”27-4-2011

அன்னா ஹசாரேவுக்கு மத்திய அரசு பணிவதா?

சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி

அன்னா ஹசாரேவுக்கு மத்திய அரசு பணிவதா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள்-யார்? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் 22.4.2011 அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஊழல் என்றால்....!


Corruption என்கிற வார்த்தை இருக்கிறது பாருங்கள். அந்த வார்த்தைக்கு என்ன பொருள் அகராதியில் எடுத்துப்பாருங்கள். Corruption என்றாலே கெடுப்பது என்று அர்த்தம். நல்லதாக இருப்பதை கெடுப்பதுதான் Corruption பிரைபரி என்பது லஞ்சம்.

அதாவது கையூட்டு கொடுப்பது என்பது பிரைபரி என்று பெயர். பல வகையில் கெடுப்பதில் இந்த ஒரு அம்சம்தான் லஞ்சம்.

கையூட்டாக கொடுக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை. பெறுபவர் எந்த பற்றோடு இருக்கிறார் என்பதைப் பார்த்து கொடுக்கலாம். அதற்குப் பெயர்தான் லஞ்சம்.

பலகீனத்தை சரிப்படுத்தினாலே


ஒருவனுக்கு என்ன பலகீனமோ அந்த பலகீனத்தை சரிப்படுத்தினாலே அங்கே ஊழல் என்றுசொல்லக்கூடிய கட்டம் மிகத்தெளிவாக இருக்கிறது.

நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் கூட சொன்னார். காந்தியார் உண்ணாவிரதம் இருந்த நேரத்திலே பெரியார் ஆதரிக்கவில்லை. தம்பி பிரபாகரன் கூட உண்ணாவிரதம் இருந்தார். அவர்களுடைய ஆயுதங்களை பறித்தார்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தார்.

நாங்கள் பிரபாகரன் உண்ணாவிரதம் இருக்கின்ற இடத்திற்கே சென்றோம். ஒரு போர் வீரன் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்று எழுதியதோடு மட்டு மல்ல.

உண்ணாவிரதத்தை முடித்தவர்கள்


பிரபாகரனின் உண்ணாவிரதத்தையே முடித்து வைத்தவர்கள் நாங்கள். எதற்காக சொல்லுகிறோம் என்று சொன்னால் சில நேரங்களில் இதற்கு வழி தெரியவில்லை என்று போனபொழுதுகூட எங்களைப் போன்றவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள் ஆதரிக்கவில்லை.

பெரியார் அப்பொழுதும் சொன்னார். எதிர்காலத்தில் தொலைநோக்கோடு சிந்தித்துச் சொன்னார்கள். இது எங்கேபோய் முடியும் என்று சொன்னால் யார் யாரை எந்தெந்த வகையிலே பயமுறுத்த வேண்டுமோ, அச்சுறுத்த வேண்டுமோ அதற்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். இதைவிட சமுதாயத்தில் மிகப்பெரிய ஊழல்-ஒழுக்கக்கேடு வேறு கிடையாது. பொது ஒழுக்கத்திற்கு இது கேடு என்று தெளிவாகச் சொன்னார்.

அச்சுறுத்தி காரியங்களை செய்வதா?


பொது ஒழுக்கக் கேட்டைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஒவ்வொருத்தரையும் அச்சுறுத்தி காரியங்கள் செய்வோம் என்று சொன்னால் அது எங்கே போகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

உண்ணாவிரதம் இருந்த ஹசாரே என்ன செய்திருக்க வேண்டும். நான் சட்டம் வருவ தற்காகத்தான் உண்ணாவிரதம் இருந்தேன். நெருக்கடி கொடுப்பதற்கு ஒரு வழிமுறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அதை ஏற்பாடு செய்தேன்.

சொல்லியிருக்க வேண்டாமா?


என்னை எதற்கு அழைத்து தலைமை தாங்கச் சொல்லுகிறீர்கள்? எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? யார் சட்ட நிபுணர்களோ யார் உறுப்பினர்களோ அவர்கள் இருக்கட்டும் என்று சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா?

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று மக்களவை. இன்னொன்று மாநிலங்களவை. மக்களவை, மாநிலங்களவை இரண்டுஅவைகளிலும் இருக்கின்ற உறுப்பினர்கள் சேர்ந்து விவாதிக்க வேண்டும்.

வெளியிலே இருக்கின்ற நம்மைப் போன்ற வர்கள் எங்கே வேண்டுமானாலும் கூட்டம் போடலாம். எங்கே வேண்டுமானாலும் பொது மக்கள் கருத்தை உருவாக்கலாம். அதற்குரிய வாய்ப்புகள் உண்டா இல்லையா?

முதலில் ஊழலை ஒழிப்போம் என்று தொடங்கியதே போலித்தனம். இப்பொழுது அதனுடைய விளைவு என்ன? ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.

சாந்தி பூஷன் பேசிய குறுந்தகடு


ஊழல்கள் இப்பொழுது ஊடகங்கள் மூலம் வெளியே வருகிறது. வெளிநாட்டுக்கும் போகிறது. மற்ற இடங்களுக்கு இந்த செய்திகள் போகிறது.

சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன் இவர்களுடைய குறுந்தகட்டைப் பற்றிச் சொன்னார்கள். இந்த குறுந்தகடே செயற்கையாக தயாரிக்கப்பட்டது. உண்மையானதல்ல. நான் சந்திக்கவே இல்லை என்று சாந்தி பூஷன் எடுத்துச் சொன்னார்.

அமர்சிங் ஒரு தகவலைச் சொன்னார். நான் முலாயம்சிங்கிற்காக சாந்திபூஷனிடம் வாதாடி ஒரு வழக்கை ஏற்பாடு பண்ணச் சொன்னேன். சந்திக்கவே இல்லையா?

நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆகவே சாந்திபூஷனை சந்திக்கவே இல்லை என்று அவரது மகன் சொல்லுவது அப்பட்டமான பொய் என்று தெளிவாகச் சொன்னார்.

ஒரு வழக்கிற்கு வழக்குரைஞரை ஏற்பாடு செய்வதற்காக ரொம்ப முக்கியமான ஒருவர் போகிறார் என்றால் மூத்த வழக்குரைஞர் சீனியர் வழக்குரைஞரை சந்திக்காமலே எப்படி பேசுவார்?

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது


நான் சந்திக்கவே இல்லை என்று சொன்னால் அப்பட்டமாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று சொன்னால் இதைவிட கேவலம் வேறு உண்டா?

அதைவிட இன்னும் அசிங்கம் என்னவென்றால் சாந்திபூஷனுக்கு வேண்டிய ஒரு இடத்தில் அந்த குறுந்தகடு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக் கிறது. அந்த குறுந்தகடு போலியானது.

பிறகு அந்த சி.டி. அரசுதடய அறிவியல் துறையில் சோதனைக்கு கொடுக்கப்பட்டது. அதில் தெளிவாகவே கண்டுபிடித்துவிட்டார்கள்.

சாந்தி பூஷன் குரல்தான்


இது சாந்திபூஷன் அவர்களுடைய குரல்தான் இவர்தான் நீதிபதியிடம் ரூ.4 கோடி லஞ்சம் பற்றி பேசியிருக்கிறார் என்று தெளிவாகச் சொல்லப் பட்ட தென்றால் உடனடியாக அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்தால் அதற்கே அவர் மீது வழக்குப் போட்டியிருக்க வேண்டுமா? அல்லவா! அவர்மீது சட்டம் பாய்ந்திருக்க வேண்டுமா அல்லவா? இதைவிட பெரிய ஊழல் எங்கேயிருக்கிறது.

வரிசையாக ஒவ்வொரு ஊழல்


ஊழலை ஒழிப்பதற்காக கிளம்பிவிட்டு ஒவ்வொருவருடைய ஊழலைப் பற்றியே இப் பொழுது நாடு பேசிக்கொண்டிருக்கிறது. ஒரு ஊழல் கிளம்பினவுடனே வரிசையாக அடுத்த ஊழல் கிளம்பியது. அதாவது ஊழல் எல்லாம் கியூவில் நிற்கிறது. அதாவது ஒரு ஊழலுக்கு அடுத்த ஊழல் என்று கியூவில் நிற்கிறமாதிரி இருக்கிறது.

சாந்திபூஷன் அந்த குறுந்தகட்டில் சொல்லியது இருக்கிறது. நான்கு கோடி ரூபாய் கொடுத்து விட்டால் எந்த ஜட்ஜையும் சரிப்படுத்திவிடலாம் என்று சொன்னார். இந்த செய்தி வெளி நாட்டுக்காரர்களுக்குப்போய்விட்டது.

நீதிபதிகளுக்கு விலை 4 கோடி


நீதிபதிகளுக்கு விலை ரூ.4 கோடி போட்டி ருக்கிறது. உச்சகட்டமாக எனறு சொல்லக்கூடிய அளவிற்கு இந்த அசிங்கங்கள் இந்த அவதூறுகள், ஆபாசங்கள் எவ்வளவு அசிங்கமாக வந்திருக்கிறது. இது சரியான குறுந்தகடு என்று ஆக்கப்பட்டது.

மாயாவதிக்காக ஒரு வழக்கில் சாந்திபூஷன் ஆஜராகிறார். அதற்காக பண்ணை வீடுகளை அப்பனும் வாங்கியிருக்கிறார். மகனும் வாங்கி யிருக்கிறார். இரண்டு பேரும் அந்தப் பண்ணை வீடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக் கிறார்கள் என்று குற்றச்சாற்று. இது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாந்தி பூஷன் வகையறா இதுவரை அதை மறுத்திருக்கிறார்களா? தந்தை பெரியார் ஒரு முறை கேட்டார்.

அண்ணா ஆட்சிக்கு வந்தபொழுது


1967இல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி வந்தது. உணவுப்பிரச்சினை ரொம்ப மிக முக்கியமாக இருந்தது. உணவைப் பதுக்கி வைத்த இடங்களில் எல்லாம் வெளியே கொண்டு வாருங்கள். என்று அண்ணா உத்தரவு கொடுத்தார்.

உணவுப்பிரச்சினை நமக்கு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. நாங்கள் தலையிடமாட்டோம். நீங்கள் பதுக்கலை வெளியே கொண்டுவரவேண்டுமென்று அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

திருச்சியில் புத்தூர்-அக்கிரகாரம் இருக்கிறது. அதில் பெரும்பாலும் மிராஸ்தாரர்கள்தான் இருப் பார்கள். அவர்களுக்கு இடங்கள் எல்லாம் நிறைய இருக்கும்.

அரிசியை வெளியே கொண்டுவந்தாரா? இல்லையா?


அவர்களில் ஒருவர் பூஜை அறையின் முன்னால் சாமிப்படத்தை வைத்துவிட்டு பின்னாலே நிறைய அரிசி மூட்டையை வைத்திருந்தார்கள். அரிசியை நிறையப் பதுக்கி வைத்திருந்தார்கள். நேராகப் போய் அரிசி மூட்டைகளை வெளியே கொண்டுவந்தார்கள். அதைவெளியே போட்டுகாட்டினார்கள்.

உடனேஅவர்கள் அதை எப்படி பிரச்சாரம் செய்தார்கள் என்றால் என்ன அக்கிரமம்? வீட்டிற்குள்ளே நுழைந்தார்கள். பூட்ஸ் காலோடு நுழைந்தார்கள். இதை விட கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? இந்த ஆட்சி இப்பொழுதுதான் வந்தது.

நாத்திக ஆட்சி வந்தவுடனே...!


நாத்திக ஆட்சி வந்தவுடனே இப்பொழுது இப்படிச் செய்ய ஆரம்பித்துவிட்டதே என்று சத்தம் போட்டு ஊடகங்கள் எழுதியவுடன் அய்யா தந்தை பெரியார் திருச்சியில் இருந்து ஒரு அறிக்கை கொடுத்தார்.

அதிகாரி பூட்ஸ்காலோடு போனாரா? வெறும் காலோடு போனாரா என்பது முக்கியமல்ல. போனவர் அரிசியைக் கொண்டு வந்தாரா? இல்லையா? அதுதான் முக்கியம் என்று சொன்னார். (பலத்த கைதட்டல்).

சாந்தி பூஷன் விலகியிருக்க வேண்டுமே!


சாந்தி பூஷன் ஊழலை யாராவது மறுத்தார்களா? ஆக. இப்படிப்பட்ட உத்தமர்கள்தான் இந்த ஊழல் ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வரப்போகிறோம் என்றால் எப்படி நம்புவது?

இவர் விலகமாட்டார். அவர் விலகக் கூடாது என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன இருக் கிறது? இதைக்கேட்டவுடனே, தானே அவர் விலகியிருக்க வேண்டுமா இல்லையா?

என் மீது நம்பிக்கை இல்லை. தவறாகக் கூட சொல்லலாம். ஆனால் எப்பொழுது என் மீது நம்பிக்கை இல்லையே. நான் அந்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று சொன்னதால்தானே அவர் சான்றாளார். அதுதானே அவருடைய சான்றாண் மைக்கு அடையாளம். இதை சொல்லுவதற்கு அவர் தயாராக இல்லையே. அதை ஏன் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்?

மத்திய அரசின் பலகீனம்


இந்தக் குழுவே மிகக் கேவலமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இதை சரிப்படுத்தலாம் என்று நினைப்பதே மத்திய அரசின் பலகீனம். மத்திய அரசு பலகீனமாக நடந்துகொள்ளக்கூடாது. நீங்கள் அந்த அளவுக்குப் பலகீனமாகப் போனால் அடுத்த தடவை அவர்களுடைய திட்டம் என்னவென்று சொன்னால் மதச்சார்பில்லாத ஒரு அரசு இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக இந்துத்துவாவை சொல்லக்கூடிய ஒரு அரசு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கு இது முதல் ஒத்திகை. (கைதட்டல்).

பெரியார் கண்ணாடிக்குத்தான் தெரியும்


எனவே இதை பெரியார் கண்ணாடியை போட்டுப்பார்த்தால்தான் தெரியும். மிகத் தெளிவாக எடுத்துச்சொல்ல முடியும்.

இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லையே இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியி ருக்கிறார்கள். wrong way to right matters. B.G. வர்கீஸ் எழுதியிருக்கின்றார்.

சுப.வீ.பணிக்கருடைய கட்டுரையைப் பற்றிச் சொன்னார். தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்குச் சொன்ன கருத்துக்களை இன்றைக்கு ஏற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்களே!

பெரியார் காந்தியாரை கண்டிக்கிறார் என்று சொன்னார்கள். காரணம் என்ன? தந்தை பெரியார் அவர்களுக்கு சமுதாயத்தின் மீது இருக்கின்ற மிகப்பெரிய அக்கறை.

ஊழல் ஒழிப்பு ஒரு ஃபேஷன்


ஊழலை ஒழிப்போம் என்று சொல்லுவது பெரிய ஃபேஷனாகிப்போய்விட்டது. நாம் ஊழலை ஆதரிக்கவில்லை. (கைதட்டல்). ஊழல் எந்த ரூபத்தில் இருக்கிறது என்று பேசுவதற்கு முன்னாலே ஊழலை ஒழிப்போம் என்று பேசக் கூடியவர்களின் தன்மை என்ன என்பதைப் பார்க்க வேண்டாமா?

ஊழலை ஒழிக்கும் உண்ணாவிரதத்தில் பாரதமாதா படம் பெரியதாக இருந்தது. காவித் துணி போடப்பட்டிருந்தது என்பதைப் பற்றி பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் சொன்னார்.

போலித்தனமான நாடு


நமது நாட்டைப் போல ஒரு போலித்தனமான நாட்டை உலகத்தில் தேடிப்பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது.

எல்லாவற்றிலும் போலி (கைதட்டல்) எதை எடுத்தாலும் போலி. மருந்து சாப்பிடலாம் என்று நோயாளி போனால் போலி மருந்து வருகிறது. காலாவதியான மருந்து. அதைவிட உணவை எடுத்துக்கொண்டால் காலாவதியான உணவு. தண்ணீரை எடுத்துக்கொண்டால் அதில் கலப் படம். சரி, சாமியார்களை எடுத்துக்கொள்ளுங்கள். சாமியார் என்றாலே போலி.அப்புறம் அதற்கு மேல் போலி என்று சொல்ல முடியாத அளவிற்கு

சாய்பாபா


சாய்பாபா பகவான் சாயிபாபா. அவர் இன்னும் நீண்டநாள் இருக்கட்டும் நாம். அவருடைய ஆயுள் முடிந்துவிடவேண்டும் என்று அற்பத்தனமாக நினைக்கக் கூடியவர்கள் அல்ல.

நாங்கள் பகுத்தறிவுவாதிகள். கருவிகள் மூலமாக வாழ வைக்கிறார்கள். இங்லீஷ் பத்திரிகையில் போடுகிறார்கள். சாய்பாபா 96வயது வரை வாழ்வேன் என்று அவரே சொல்லியிருக்கிறார் என்று செய்தி போடுகிறார்கள்.

96 வயது வரை அவரை விடுவதாக இல்லை. இந்த கருவிகளுக்கு வேலை கொடுக்காமல் விடமாட்டோம் என்று நினைக்கிறார்கள்.

ஊழல் எந்தத்துறையில் இல்லை. நடிகர் களுடைய ஊழலைப்பற்றி இங்கேசொன்னார்கள். கறுப்புப்பணம் வாங்காத நடிகர்கள் யாராவது உண்டா? சமுதாயத்தில் எல்லாத்துறைகளிலும் ஊழல். எந்த இடத்தில் இரண்டு கணக்கு இல்லாமல் இருக்கிறது?

கலைவாணரின் சவ், சவ் படம்


ரொம்ப நாளைக்கு முன்னாலே சவ், சவ் என்று ஒரு படம் வந்தது. இரண்டாவது உலக யுத்தம் முடிந்த நிலையில் அந்தப்படம் வந்தது. நாங்கள் எல்லாம் அப்பொழுது மாணவர்களாக இருந்த காலகட்டம்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த படம் அது. அதில் ஒரு காட்சி. கலைவாணர் அங்கிருந்து வருவார். அவர் கிராமத்திலிருந்து வருவார். போலீஸ்காரனிடம் போய் கேட்பார். என்னங்க இங்கே மார்க்கெட் என்று சொல்லுகிறார்களே அது எங்கு இருக்கிறது என்று கேட்பார்.

போலீஸ்காரர் சொல்லுவார். கடைவிதி அங்கே இருக்கிறது. அங்குதான் மார்க்கெட் இருக்கிறது என்று சொல்லுவார்.

பிளாக் மார்க்கெட் எங்கே?


கலைவாணர் சொல்லுவார். நான் கொண்டு வந்திருக்கிற மூட்டையை விற்க வேண்டும் அதற்காக கேட்கிறேன் என்று சொல்லுவார்.

என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று போலீஸ்காரர் கேட்பார். இல்லை நெல்லு மூட் டைகளை கொண்டு வந்திருக்கிறேன். என்னிடம் சொல்லி அனுப்பியவர்கள் சொன்னார்கள். பிளாக் மார்க்கெட் என்று ஒன்று இருக்கிறது. அந்த மார்க்கெட் எங்கேயிருக்கிறது காட்டுங்கள் என்று கலைவாணர் போலீஸ்காரரிடம் கேட்பார்.

பிளாக் மார்க்கெட்டைத்தான் தேடிக் கொண்டி ருக்கிறேன். அதில் விற்றால் தான் நிறைய பணம் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பி யிருக்கிறார்கள். அதனால் உங்களைக்கேட்டால் தான் தெரியும் என்பதற்காக போலீஸ்காரரை கேட்கிறேன் என்று சொல்லுவார். 1944-1945 அந்த காலகட்டத்திலே இப்படி ஒரு காட்சி.

அந்த மாதிரி இன்றைக்கு எல்லாவற்றிலும் இரட்டை வேடம்.

------------- தொடரும் - " விடுதலை”- 28-4-2011

நமது நாட்டில் உள்ள சட்ட முறையை அடியோடு மாற்ற வேண்டும்

சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

நமது நாட்டில் உள்ள சட்ட முறையையே அடியோடு மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள்-யார்? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் 22.4.2011 அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

போலி விமானி


போலி சர்டிபிகேட் இல்லாதவர்கள் உண்டா? போலி ஊழல் ஒழிப்பாளர்களும் இன்றைக்கு வந்துவிட்டார்கள். (சிரிப்பு-கைதட்டல்). சாமி யாராகப் போனால் மடத்துக்குப் போகலாம் என்றாலும் அங்கும் போலி சாமியார். சரி இந்த நாடே வேண்டாம். விமானத்தில் ஏறி வெளி நாட்டிற்குப் போய்விடலாம் என்று போனால் விமானம் ஓட்டுகிறவன் போலி சர்டிபிகேட் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறான். ஆக எதை எடுத்தாலும் போலித்தனம் என்று இருக்கின்ற ஒரு நாட்டிலே அடித்தளம் எங்கேயிருந்து போக வேண்டும்?

இன்று காலையில் பேட்டி காரணம் என்ன? இன்று காலையிலே ஒரு மூத்த பத்திரிகையாளர் என்னைப் பேட்டி கண்டு எழுதிக்கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி பல செய்திகள் கேள்விகள் கேட்டார்கள். நான் சொன்னேன். இவைகளை எல்லாம் ஒழிக்க அடித்தளத்திற்குப் போக வேண்டும். இன்றைக்கு ஏன் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால்-மத நம்பிக்கை உள்ளவர்கள் எங்களோடு ஒப்புக் கொள்ளலாம். மாறுபடலாம். அது அவர் களுடைய உரிமை.

ஏன் ஊழலை ஒழிக்க முடியவில்லை?


ஏன் இந்த நாட்டிலே அவ்வளவு சுலபமாக ஊழலை ஒழிக்க முடியாது என்றால், ஊழல் எங்கேயிருந்து ஆரம்பித்திருக்கிறது. தெரியுமா? பூஜை அறையிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. (கைதட்டல்). கடவுளுக்குக் கொடுக்கின்ற லஞ்சம்தான் மிக முக்கியம்.

பூஜை அறையிலிருந்து ஊழல் ஆரம்பம்


பூஜை அறையிலிருந்தே ஊழல் ஆரம்பம். நான் இன்னது கொடுத்தால் நீ இன்னது கொடு. இதுதானே லஞ்சம். இதைத் தவிர கையூட்டு வேறு என்ன இருக்கிறது? கடவுளுக்கு கையூட்டு கொடுத்தால் அது லாபம். இந்த கடவுள் இதை வாங்குவார். அந்த கடவுள் அதை வாங்குவார். திருப்பதி வெங்கடா ஜலபதிக்கு உண்டியல் இருக்கிறது. உண்டியலுக்கு எவ்வளவு பாதுகாப்பு வைத்திருக்கிறார்கள்; உண்டியலுக்கு சென்ட்ரி டியூட்டிதானே போட்டி ருக்கின்றார்கள்!

உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பொழுது கூட ஜாக்கிரதையாக எண்ண வேண்டும். கோவிலுக்கும் பூட்டு; உண்டியலுக்கும் பூட்டு; அதைத் திறக்க வேண்டுமானாலும் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும்.

காணாமல் போய்விடும்....!


ஏன் உண்டியலுக்கும் பூட்டுப் போட்டிருக் கின்றான்? விட்டால் காணாமல் போய்விடும் என்பதுதானே? அப்படியானால் வெங்கடாஜலபதி சக்தி என்ன ஆனது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்னும் கேட்டால் வெங்கடாஜலபதியிட மிருந்து நாளைக்கு ஒரு அறிவிப்பு வரட்டும். ஊழலை ஒழிப்பதற்கு நான் வழிகாட்டத் தயாராக இருக்கிறேன். திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வரும் அறிவிப்பு என்னவென்றால்.. நாட்டில் கறுப்புப்பணம் புழங்குகிறது. ஸ்விஸ் பேங்கிற்கு போவதற்கு முன்பு இங்கு வந்துவிட்டுப் போகி றார்கள்.

செக்கோ, டிராப்டோ...!


இதனால் நாங்கள் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் செக் மூலமாக முகவரியோடு பணத்தைப் போட வேண்டும். (கைதட்டல்). டிராப்டு மூலமாகத்தான் பணத்தைப் போட வேண்டும். கணக்கில் வராத பணத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

நான் அன்னா ஹசாரேவுக்கு மேல் வழிகாட்டு வதற்காக இருக்கிறேன். நானே இந்தக் குழுவுக்குத் தலைவராக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

ஆகவே வெங்கடாஜலபதியாகிய நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இனிமேல் தயவு செய்து யாரும் நீங்கள் என்னுடைய உண்டியலில் பணம் போடும்பொழுது செக்கோடு-டிராப்டோடு, முகவரியோடு போடுங்கள் என்று ஒரு அறிவிப்பு வந்தால் சென்ற மாதம் வந்த பணம் இந்த மாதம் வந்து சேருமா?

ஊற்றுக்கண் எங்கேயிருக்கிறது?


அப்படியானால் ஊழலின் ஊற்றுக்கண் எங்கே யிருந்து ஆரம்பிக்கின்றது? ஆக அடிப்படையிலே அந்த சிந்தனையிலேயே மாற்றம் வரவேண்டும்.

எனவேதான் சொன்னோம். இது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. ஒரு சமூகப் பிரச்சினை. அந்த சமூகப்பிரச்சினையை நாம் சமூக ரீதியாக அணுக வேண்டும். சமூகத்தில் ஏன் அவன் லஞ்சம் கொடுக் கின்றான். லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசிய மென்ன?

சிங்கப்பூரில் ஊழல் இல்லையே...!


சிங்கப்பூரில் போய் லஞ்சம் கொடுக்க முடியாதே. தானாகவே அந்தந்த வேலை டக், டக் என்று நடக்கிறதே. அங்கு பரிந்துரையே கிடையாதே. பரிந்துரை செய்தாலும், அங்கு மாறுதல் கிடையாதே. அங்கு ஒரு அமைப்பு முறை இருக்கிறது.

அந்த முறையில் மாற்றம் செய்யாமல் நீங்கள் நபர்களில் மாற்றம் செய்து எப்படி சீர்திருத்தம் கொண்டு வருவீர்கள்? சில பேர் வேண்டுமானால் பெரிய மனிதர்கள் ஆகலாம். சில பேர் விளம்பர வெளிச்சம் பெறலாம். அவ்வளவுதானே தவிர, மற்றதுக்கு எப்படி அது பயன்படும்?

இந்தக் கட்சியா? அந்தக் கட்சியா?


ஆகவேதான் பகுத்தறிவுவாதிகள் சிந்திக்க வேண்டும். முதலாவது இந்தப் போலித்தன வேட மணிவது, இரட்டை வேடங்கள் இவை ஒழிக்கப்பட வேண்டும்.

தேர்தலில் நிற்கிறவர்கள் அதை செய்கிறோம். இதைச் செய்கிறோம். என்றால் பெரிய அளவுக்குப் பாராட்டு. இது நடந்தது. அது நடந்தது என்று பாராட்டுகிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில் நடக்க வேண்டிய முறையான பணிகள் ஏன் தடைபட வேண்டும்? வளர்ச்சிப் பணிகள் என்பது எந்த அரசாங்கம் வந்தாலும் தொடர வேண்டிய ஒரு பணி இந்தக் கட்சியா? அந்தக் கட்சியா? என்று பார்க்கக் கூடாது. ரோடு போட்டுக்கொண்டிருக்கும்பொழுது நடுவில் ஏன் அதை நிறுத்த வேண்டும்?.

சட்டத்தை மாற்ற வேண்டும்


இல்லை, சட்டம் சொல்கிறது என்றால் அந்த சட்டத்தை மாற்ற வேண்டும். தலைக்காகத்தான் குல்லாயே தவிர, குல்லாய்க்காக தலை இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணரக்கூடிய அளவிற்கு வரவேண்டும்.

தயவு செய்து நினைத்துப் பாருங்கள். ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்பது பெரும் அளவுக்கு உண்மை. அதை மறுக்கவில்லை. அதைத்தான் தடுக்கவேண்டும்.

அய்யா அவர்கள் பல விசயங்களில் துணிந்து சொல்லுவார். அவன் தவறு பண்ணுகிறான். தவறு பண்ணுகிறான் என்று சொல்லுகிறீர்கள். நீ முதலில் யோக்கியனாக இருந்தால் நீ ஓட்டுக்குக் காசு வாங்கியிருக்கலாமா? என்று கேட்டார். வேண்டு மானால் ஒன்று செய்.

இங்கே ஒரு பெரிய அண்டாவை வைக்கச் சொல்லுகின்றேன். வாங்கின பணத்தை எல்லாம் கொண்டு வந்துபோட்டு விடுங்கள்.

நமது நாட்டு ஒழுக்க இலட்சணம்?


போட்ட பிற்பாடு ஊழலைப் பற்றி நீ பேசு. நான் ஒப்புக்கொள்கிறேன் என்று சொன்னார். எனக்குப் பணம் கொடுத்தால் நான் வாங்கி வைத்துக் கொள்வேன். நான் ஊழலைப் பற்றிப் பேசுவேன் என்றால் என்ன அர்த்தம்? அது மட்டுமல்ல. தலைவர்கள் எந்த அளவுக்குப் போய் விட்டார்கள் என்றால் ஒழுக்கத்தோடு இரு என்று சொன்னால் கேட்க மாட்டார்கள் என்று சொல்வதினாலே நமது நாட்டு ஒழுக்கம் போலித்தனம் எப்படி வந்திருக்கிற தென்றால் ஆணுறையைப் பயன்படுத்துங்கள்; ஒழுக்கத்தோடு இருங்கள் என்று சொல்லுவதற்குத் தயாராக இல்லை.

மாட்டிக்கொள்ளாதீர்கள்; தப்பித்துக்கொள் ளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? ஒழுக்கக் கேட்டிற்கு லைசென்ஸ் கொடுத்த மாதிரி அல்லவா ஆகிறது!

முதல் தவறு எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது? அந்த லைசென்சிலிருந்துதானே ஆரம்பிக்கிறது. அதைக் கண்டிக்க வேண்டாமா? அதனுடைய அடித்தளத்திற்குப் போக வேண்டாமா?

வாக்குரிமை கட்டாயம் ஆக, அது மாதிரி வாழத்தேவை என்ன? தேர் தலில் வாக்குரிமை என்பது அத்துணை பேரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். வாக்களிக் காதவர்களுக்கு தண்டனை உண்டு. அவர்களுக்கு இந்தக் குடியுரிமை சலுகைகள் எல்லாம் எடுக்கப் படும் என்று நாளைக்கு சட்டத்தைத் திருத்துங்கள். திருத்தி மக்கள் மத்தியிலே எடுத்துச்சொல்லுங்கள். வாக்காளர்களே, நீங்கள் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.

நடமாடும் வாக்குச்சாவடி


உங்களுக்கு Mobile Booth வரும். நடமாடும் வாக்குப் பதிவு இயந்திரம் வரும். இந்த இடத்தில் உள்ளோர் இன்ன இடத்திற்கு வாருங்கள் என்று சொல்லுங்கள். தெளிவாக வருமே. மற்றதில் ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்லக்கூடிய வர்கள் தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

தேர்தலில் நின்ற அத்துணை வேட்பாளர்களும் எந்தக்கட்சி என்று வித்தியாசம் இல்லை. அத் துணை வேட்பாளர்களும் கணக்கு கொடுக்கப் போகிறார்கள். வெற்றி பெற்றவர்கள், தோற்றவர்கள் எல்லோரும் ஜூன் மாதத்திற்குள் கணக்கு கொடுக்க வேண்டும் என்று. யாராவது கொடுக்கின்ற கணக்கு உண்மையானதா? தயவு செய்து நெஞ்சில் கை வைத்துச் சொல்லட்டும். (கைதட்டல்).

நாணயமான கணக்கு கொடுக்க முடியுமா?


சமுதாயத்தில் இரண்டு கணக்கு வைத்துக் கொண்டு பணம் வாங்குகிறார்களே அதே மாதிரி எந்த வேட்பாளராவது நாணயமாக கணக்கு கொடுக்க முடியுமா? காரணம் என்ன? சட்டத்தில் இருக்கின்ற ஓட்டை.

பல காரணங்களில், அது ஒரு காரணம். ஏனென்றால் நடைமுறையில் எவ்வளவு பெட்ரோல் செலவென்றே கணக்குத் தெரியவில்லை. அவன் தொகுதிக்குப் போய்விட்டுத் திரும்பி வரவேண்டு மானால் இவ்வளவு ஆகும்-பதினைந்து நாளைக்கு என்று சொல்லமுடியவில்லையே!

ஆகவே, அதிலேயே ஓட்டை நிறைய இருக்கிறது. நமது நாட்டில் ஓட்டையை விட்டால் பெரிய யானையைக் கொண்டுவந்து விடுவானே! இன் றைக்கு அத்துணைபேருடைய கணக்கும் பொய்யானதுதானே?

--------------தொடரும்--- " விடுதலை”- 29-4-2011

மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்டிருக்கும் ஹசாரே குழு உடனடியாக கலைக்கப்படவேண்டும்

ஊழலை ஒழிக்கக் கூட்டப்பட்டிருக்கும் அன்னா ஹசாரே குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள்-யார்? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் 22.4.2011 அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நீதிமன்றத்தில் ஏறியவுடன் சாட்சி சொல்லு கிறோம். நான் சொல்வதெல்லாம் சத்தியமாக, கடவுள் பெயரால் உண்மை; உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறான். கடவுள் பெயரால்-ஆண்டவன் பெயரால் நீதி மன்றத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள்.

நீதிமன்றத்தில் இரு தரப்பாரும் சாட்சி

நீதிமன்றத்தில் குற்றவாளியும் சத்தியத்தின் பெயரால், கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்கிறார். நிரபராதியும் சத்தியத்தின் பெயரால் உறுதிமொழி எடுக்கிறார்.

இரண்டு பேருமே கடவுள் பெயரால் உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்கள்.

அந்தக் கடவுளாவது வந்து, டேய், ஏண்டா என்னை இப்படி வம்புக்குக் கூப்பிடுகிறீர்கள்? இந்த மாதிரி தொல்லை கொடுக்கிறீர்களே என்று கேட்கவேண்டாமா? அவர் இருந்தால் அல்லவா கேட்பார்? அந்த அளவுக்குக் கடவுள் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

எல்லாவற்றிலுமே போலித்தனங்கள்.....!

கடவுள் பெயராலும் இந்த நாட்டில் போலித்தனங்கள் இருக்கின்றன. எனவேதான் தேர்தல் முறையில் அடிப்படை மாற்றங்கள் வரவேண்டும். பல விதிமுறைகளில் மாற்றம் வரவேண்டும்.

இரண்டாவது, போலீஸ் கிரிமினல் நடவடிக் கைகளில் திருத்தம் வரவேண்டும். நமது நாட்டில் போலீஸ் நடவடிக்கை கிரிமினல் நடவடிக் கைகளில் எல்லாம் மாற்றம் வரவேண்டும்.

ஏழைகள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடிகிறதா?

இன்றைக்கு ஏழைகள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடிகிறதா? இன்றைக்கு இருக்கின்ற அமைப்பு முறையில் ஏழைகள் யாராவது உச்சநீதிமன்றத் திற்குச் செல்ல முடியுமா? உச்சநீதிமன்றத்தின் பல்வேறு கிளைகள் மக்கள் மன்றத்தில் வரவேண்டு மென்றால் அதை ஒப்புக்கொள்கிறார்களா? இல்லையே! இங்கு இருக்கிற சாதாரண குப்பன், சுப்பன் டில்லிக்குச் சென்று வழக்கு நடத்திவிட்டு வரவேண்டுமானால் முத்தன்-முனியன் அங்கு போக முடியுமா? தயவு செய்து எண்ணிப்பாருங்கள். அதுமட்டுமல்ல; நம்முடைய நாட்டில் வழக்குகள் மற்ற நாடுகளைப் போல் இல்லை.

வழக்குகளுக்கு ஆயுள் நீட்டிப்பு

நம்முடைய வழக்குகளுக்கு ஆயுள் நீடிக்கிற மாதிரி உலகத்தில் வேறு எந்த வழக்கிற்கும் கிடையாது. காஞ்சிபுரம் யானைக்கு எந்த நாமம் போடுவது என்ற வழக்கு 125 வருடங்களாக நடக்கிறது.

வடகலை நாமமா? தென்கலை நாமமா? என்பதில் பிரச்சினை. இது வரைக்கும் நான்கு யானைகள் செத்துப் போய்விட்டன. (கைதட்டல்). அய்ந்து நீதிபதிகள் இல்லை. ஏழு வழக்குரை ஞர்ககள் இறந்தே போனார்கள். எல்லா வழக்கையும் பார்த்தீர்களேயானால், குறைந்தபட்சம் வாய்தா வழக்கே நம்மூரில் 14 வருடம் நடந்து கொண்டிருக்கிறதே! (கைதட்டல்). இராமன் காட்டுக்குப் போனதைவிட அதிக வருடங்கள். வழக்கு வாய்தா-தள்ளிப்போடுவது இப்படியே நடந்துகொண்டிருக்கிறது.

வெள்ளி விழா-வைரவிழா வழக்குகள்

அதற்கடுத்து ஒவ்வொரு வழக்கும் வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா, முத்துவிழா, நூற்றாண்டு விழா. இந்த மாதிரி வழக்குகள் இருந்தால் எப்படி அங்கே ஊழல் இல்லாமல் இருக்க முடியும்?

வழக்குரைஞரைப் போய் திடீரென்று கேட்டால் கேஸ் கட்டைக் காணோம் என்று சொல்லுகின்றார். கட்டே காணாமல் போய்விடுகிறது (கைதட்டல்). அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதற்கு நடைமுறையில் பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

பச்சையாக உண்மையைப் பேசினால்...

அப்பட்டமான உண்மைகளைப் பேசினால், பச்சையான உண்மைகளைப் பேசினால் ஊழலின் ஊற்றுக்கண் எங்கேயிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். ஆகவே நீதித்துறையில் தாமதம். ஏழைகள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இவை எல்லாம் மாற்றப்பட வேண்டும்.

குடியரசுத் தலைவருக்கு சம்பளம் ரூ.10,000

அதுமட்டுமல்ல; குடியரசுத் தலைவருடைய சம்பளம் பத்தாயிரம் ரூபாய் என்பதுதான் அரசியல் சட்டத்தில் முதன்முதலில் எழுதப்பட்டது.

ஆனால், இன்றைக்கு அந்த விதியிருக்கிறதா? நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே சம்பளம் ரூ.1லட்சம் கேட்டு, எண்பதாயிரம் என்று கொடுத்திருக்கின்றார்கள்.

விருப்பு-வெறுப்பு இல்லாமல்....

நான் விருப்பு-வெறுப்பு இல்லாமல் சொல்லு கிறேன். நடுநிலையிலே ஒரு குடிமகன் என்ற முறையில் பார்த்தீர்களேயானால் இன்றைக்கு என்ன சூழ்நிலை?
மக்களுடைய வரிப்பணம் எந்தெந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது? யார் அதற்குப் பொறுப் பானவர்கள் என்று யாரும் பார்த்துச் செயல் படுவதற்குத் தயாராக இல்லையே.

மின்சார தட்டுப்பாடு

மின்சார தட்டுப்பாடு எல்லா இடங்களிலும் இருக்கிறது. மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. செலவுக்கு ஏற்ப நாம் மின் உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மின்திருட்டு இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சி அந்த ஆட்சியைக் குறை சொல்வது, அந்த ஆட்சி இந்த ஆட்சியைக் குறை சொல்வது என்றுதான் இருக்கிறது. இதில் முறைகள் மாறவில்லை.

ஊழலின் ஊற்றுக்கண் எங்கே?

ஆகவே ஊழலை ஒழிக்க வேண்டிய உத்த மர்களை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டு மானால் ஊழலின் ஊற்றுக்கண், எங்கேயிருக்கிறது என்று தெரிந்து அந்த ஊற்றை அடைந்தால் ஒழிய அதற்கு வழிகிடையாது என்பதை மிகத் தெளிவாக சொல்லி, இது போன்று சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களை வைத்துக்கொண்டு நடத்துவது அர்த்தமில்லாதது.

ஹசாரே குழு கலைக்கப்படவேண்டும்

அதைத்தான் இன்றைக்குப் பார்த்திருக்கின்றீர்கள். முதலாவது, இப்படிப்பட்ட அன்னா ஹசாரே கூட்டுக்குழு கலைக்கப்படவேண்டும் (கைதட்டல்).

நாடாளுமன்ற உறுப்பினர்களே முயற்சி எடுத்து மக்களிடம் இந்தக் கருத்துகளை எடுத்துச்சொல்லி, நீங்கள் எல்லோரும் வந்து எப்பொழுதும் கருத்துகளைச் சொல்லலாம் என்று அப்பொழு தும் அறிவிக்கின்றார்கள். அதுபோல நாம் எல் லோரும் கருத்துகளைச் சொல்லுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

எங்கெங்கே அடித்தளம் ஆடியிருக்கின்றதே அந்த அடித்தளத்தையே மாற்றினால் ஒழிய, மேல் கட்டடத்தில் மட்டும் பூச்சுப்பூசினால் சரியாக வராது.

வெறும் சட்டப்பிரச்சினை அல்ல!

எனவே, ஊழல் ஒழிப்பு என்பதிருக்கிறதே, அது வெறும் சட்டப் பிரச்சினை அல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை; சமூகம் சார்ந்த பிரச்சினை. அதனுடைய போலித்தனங்கள் சமுதாயத்தில் எல்லா துறை களிலும் இருக்கிறது.

இதை மாற்றிக்காட்டினால் ஒழிய, இதற்கு விடிவு கிடையாது என்பதை தெளிவாகச் சொல்லி, இந்த நாட்டிலே மதச்சார்பற்ற ஓர் அரசு இருக்கிற நேரத்தில் அதை மாற்றி மதவெறி அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு பீடிகையாக, -முன்னுரையாக இந்த முயற்சிகள் அமையக்கூடாது.

எச்சரிக்கை செய்வது...

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்வதுதான் எங்களைப் போன்றவர்களுடைய வேலை. காரணம், கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். இதுதான் அதனுடைய தத்துவம் என்று கூறி முடிக்கிறேன்.வணக்கம். இவ்வளவு குறுகிய காலத்தில் வந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

---------------------”விடுதலை” 30-4-2011

0 comments: