Search This Blog

19.5.11

மணமகள் மணமகன் கழுத்தில் தாலிகட்டிய சம்பவம்

டேய் சம்பத், டேய் திரவியம், டேய் ஜனார்த்தனம் என்று டேய் போட்டுக் கூப்பிடும் ஒரு மனிதர் நமது இயக்கத்தில் இருந்தார். யாரையும் அவமதிப்பது அவர்தம் நோக்கமன்று; கூப்பிடப்படுபவர்களும் யாரும் வருத்தப்பட்டதும் கிடையாது - இன்னும் சொல்லப் போனால் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தத் தனித்தன்மை வாய்ந்த ஒருவர்தான் தவமணி ராசன் ஆவார். அந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் நினைவு நாள் இந்நாள் (2001).

திராவிடர் மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்று ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றாலும் இவரைத் தான் சுட்ட வேண்டும். கருணானந்தம் (கவிஞர்) இரா. செங்குட்டுவன் (கோபால்சாமி தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களின் மாமனார்) சொக்கப்பா, அமீர் அலி, செல்வ ராஜ், தம்பிராஜ் என்ற ஒரு மாணவர் பட்டாளத்துடன் இணைந்து இந்தச் சாதனையை இவர் நிகழ்த்தினார்.

குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர்ப் பானையிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவன் ஒருவன் (பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த மாணவன்) குடித்து விட்டான் என்பதற்காகப் பார்ப்பன வார்டன் ஒரு ரூபாய் அபராதம் போட்டார்.

அவ்வளவுதான் பிடித்தது நெருப்பு; பற்ற வைத்தவர் தவமணிராசன். ஒரு இயக்கம் பிறப்பெடுத்தது. அதுதான் திராவிடர் மாணவர் கழகமாக உருப் பெற்றது.

சேலத்தில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது 1944 ஆகஸ்டு 27 என்றால், அதற்கு 6 மாதம் முன்னதாகவே மாணவர்கள் பெயரால் திராவிடர் கழகம் கும்பகோணத்தில் தோன்றி விட்டது (1944 பிப்ரவரி 19,20)

இரண்டு நாள்கள் திராவிடர் மாணவர் கழக மாநாடு கும்ப கோணத்தில் நடைபெற்றது; அறிஞர் அண்ணா பங்கு கொண்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், கே.ஏ. மதியழகன் போன்றவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். அந்த மாநாட்டில்தான் இந்த மாணவர்களும் ஓரளவு நாட்டு மக்களுக்கு அறிமுகமானார்கள் என்று கூற வேண்டும். இவ்வளவுக்கும் சூத்திரதாரி இந்தத் தவமணிராசன் என்ற மாணவர்தான்.

கல்லூரி படிப்புக்குப்பின் ஈரோட்டில் குடிஅரசு குருகுலத்தில் பணியாற்றியவர் களுக்கு இவர்தான் சட்டாம் பிள்ளை. இவர் திருமணத்தில் மணமகள் மணமகன் கழுத்தில் தாலிகட்டிய சம்பவமும் உண்டு. அதன் பின்னர் அரசு ஊழியராகப் பணியாற்றச் சென்ற இடத்தில் சீர்காழியில் கழகப் பொதுக் கூட்டத்தில் பேசியதால் அரசு வேலை பறி போயிற்று; மீண்டும் விடுதலை குருகுலம்; மறுபடியும் அரசுப் பணி இத்தியாதி.. இத்தியாதி!

தஞ்சாவூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பொன் விழா மாநாட்டில் (1975) மறக்காமல் தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், இரா. செங்குட்டுவன் ஆகியோருக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் சால்வை அணிவித்து விருதும் வழங்கிச் சிறப்பு செய்தார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார் விருது முதல்வர் கலைஞர் அவர்களால் தவமணிராசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

விடுதலை ஆஃப் செட்டுக்கு மாறியபோது தவமணி அவர்கள் சில காலம் விடுதலை பணிமனையில் தங்கி ஆசிரியர் அவர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.

சீவாத தலை, நாள்தோறும் குளிக்காத உடல், சலவை செய் யாத ஆடை - தீவிரக் கொள்கைப்பற்று. இவை தந்தை பெரியார் தொண்டர் என்பதற்கான அணிகலன்கள் இவரிடத்தில்.

குறிப்பு: நமது ஆவணக் காப்பக இயக்குநர் முனைவர் பு. இராசதுரை அவர்களின் சம்பந்தி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

------------ மயிலாடன் அவர்கள் 19-5-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: