Search This Blog

7.5.11

சங்கராச்சாரியார் பார்வையில் சாயிபாபா!


இன்றைய ஆந்திரத்தைச் சேர்ந்த அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கொல்ஸ் பள்ளி என்ற கிராமத்தில் வசித்த வெங்கடப்ப ராஜீ - ஈஸ்வரம்மா தம்பதியிருக்கு மகனாக நவம்பர் 23, 1926-இல் பிறந்தார் பாபா. இந்தக் கிராமமே இப்பொழுது புட்டபர்த்தி என்ற பெயரில் விளங்குகிறது. புட்டபர்த்தி என்பதற்குப் புற்றுகள் நிறைந்த ஊர் என்று பொருள் இங்கு பாம்புகள் அதிகம்.

இவ்வூருக்குப் புற்றூர் எனப் பெயர் வரக் காரணம் உண்டு...

இங்கு வசித்த மாடு மேய்க்கும் வாலிபன், தன் மாடுகளைக் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மேய்ப்பான். திரும்பி வரும்போது, ஒரே ஒரு மாட்டின் மடியில் மட்டும், பால் இல்லாமல் இருப்பதைக் கவனித்தான். தொடர்ந்து சில நாட்களாக இதே நிலை நீடித்தது. அந்தப் பசுவை ரகசியமாக கண்காணித்தான்.

ஒரு நாள் தொழுவத்திலிருந்து கிளம்பி, மலையடிவாரத்துக்குச் சென்றது பசு. அங்கு ஒரு புற்று இருந்தது. இதிலிருந்து ஒரு நல்ல பாம்பு வெளியே வந்து மாட்டின் மடியில் வாய் வைத்துப் பாலைக் குடித்தது. வாலிபனுக்கு அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்பட, அந்தப் பாம்பைக் கொல்வதற்காக ஒரு கல்லைத் தூக்கிப் போட்டான். உயிருக்குப் போராடிய பாம்பு பேசியது.

இந்த ஊரிலுள்ள இடையர்கள் இனி தொழில் செய்ய முடியாது. பசுக்கள் அழிந்து விடும். இனி ஊர் முழுதும் புற்றாக மாறி, நல்ல பாம்புகள் குடி கொள்ளும் என சாபமிட்டார். அதன் பின் இந்தவூர் புற்றூர் ஆகி விட்டது.

காலையில் கிணற்றுத் தண்ணீர் இறைக்கச்சென்ற ஈஸ்வராம்பாவின் வயிற்றுக்குள் வானிலிருந்து கிளம்பி வந்த நீல ஒளி பாய்ந்தது. ஈஸ்வரம்பா மயங்கி விட்டார். இதன்பின்தான் வயிற்றில் புகுந்தது தெய்வீக ஒளி என பெரியவர்கள் கூறினர். இதிலிருந்து பத்தாவது மாதம் பாபா பிறந்தார். குழந்தைக்கு சத்ய நாராயண ராஜு என பெயரிட்டனர்.

சத்யா பிறந்தபின் அவ்வூரில் பாம்புகள் அட்டகாசம் ஒழிந்தன.. இடையர்கள் மீண்டும் தம் தொழிலை சிறப்பாக நடத்தினர். பால்வளம் பெருகியது. பாம்பின் சாபம் நீங்கியது. புட்டபர்த்தியில் பாபா பஜனைக் குழு ஒன்றைத் துவங்கினார். அக்டோபர் 20, 1940. பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பினார் சத்யா புத்தகங்களை வீசி எறிந்து விட்டு, இனி நான் சத்யா இல்லை. நான் திருமால், என் மாயை அகன்றது. இனி நான் உங் களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொந்தம்? என சப்தம் போட்டார்.

அவர் அண்ணி ஓடி வந்து பார்த்தார். சத்யாவின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருந்தது.

சாய்பாபா ஒரு கல்லில் அமர்ந்து போதனை செய்வார். அதை போட்டோ எடுத்துப் பார்த்தபோது அது ஷீரடி சாய்பாபாவாக மாறி தோற்றமளித்தது. ஷீரடி பாபாவின் அவதாரமாக கருதி மக்கள் அவரை வழிபட ஆரம்பித்தனர். இதன் பிறகு பல அற்புத லீலைகளை அவர் நிகழ்த்தினார். நோயாளிகளைக் குணப்படுத்தினார்.

புட்டபர்த்தியில் சாந்தாலயம் என்ற பகுதியில் மிகப் பெரிய கோயில் கட்ட முடிவெடுத்தார். பக்தர்கள் கோவிலை எழுப்பினர்.

அதுவே இப்பொழுது பிரசாந்தி நிலையம் எனப்படுகிறது நவ.23, 1950-_இல் இது திறக்கப்பட்டது.

இவ்வளவு தகவல்களும் வெளியிட்டது தினமலர் வாரமலர் (நவம்பர் 20, 2005 பக்கம் 2,3).
ஒரு கடவுள் அவதாரத்தை உருவாக்குவதற்கு இவ்வளவு அறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை, பித்தலாட்டங்களை, மூடத்தனங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பசுவின் மடியில் பாம்பு பால் குடிக்குமா? பாம்புக்கு உள்ளது பிளவுபட்ட நாக்கு; - அதனால் உறிஞ்சிக் குடிக்க முடியாது என்பது அறிவியல் கூறும் -உண்மைத் தகவல்.

வயிற்றுக்குள் வானிலிருந்து கிளம்பி ஒரு நீல ஒளி பாய்ந்ததாம். அது என்ன நீல ஒளி? அது எப்படி வயிற்றுக்குள் பாயும்? அது எப்படி குழந்தையாகப் பிறக்கும்?

புட்டபர்த்தியில் திடீர் பரபரப்பு - நிலாவில் தோன்றி அருள்பாலிப்பேன் -_ சாய்பாபா திடீர் அறிவிப்பு என்று நாளேடுகளில் ஒரு செய்தி தவழ்ந்து வந்தது (6.10.2007)

மாலை 6.30 மணி அளவில் சத்ய சாய்பாபா விஸ்வ ரூப விராத் தரிசனம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. (நிலவில் தோன்றிதரிசனம் என்பது இதன் பொருளாம்!)

கைப்பேசி மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல்கள் பரப்பப் பட்டன. அவ்வளவுதான் புட்ட பர்த்தியை நோக்கிப் பக்தர்கள் படையெடுத்தனர். பல்லாயிரக்கணக்கில் கூடி விட்டனர். சாயிபாபாவை நிலவில் அல்லவா பார்க்கப் போகிறோம் என்ற ஆசை அலை, ஆர்வ ஊற்றுப் பீறிட்டு அடிக்காதா? அமாவாசைக்கு இன்னும் 5 நாள்களே இருந்த நிலையில் அன்று நிலாவே தோன்றவில்லை; ஏமாற்ற மடைந்ததுதான் மிச்சம். இன்னொரு நாள் நிலவில் தோன்றுவேன் என்று கூறி சாயிபாபா சென்று விட்டார் (5.10.2007).

அதுதான் தெய்வ ஒளியாயிற்றே, அதற்கும் பத்து மாதம் தேவைப்படுமா? என்ற கேள்விகளை அறிவைப் பயன்படுத்திக் கேட்கவே கூடாது;. அப்படிக் கேட்டால் அதற்குப் பெயர் விதண்டாவாதமாம் - பகுத்தறிவையெல்லாம் பக்தி விஷயங்களில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்று ஆக்கி வைத்திருப்பதற்குக் காரணம் மூடத்தனங்களை முற்றாகக் காப்பாற்றிடவே!

அப்படிக் காப்பாற்றுவதன் மூலம் தான் பார்ப்பனீயத்தை வாழ வைக்க முடியும் _ ஆண்டான் அடிமைத் தனத்தை நிலைக்க வைக்க முடியும்.

அடுத்து தினமணிக்கு வருவோம்.

தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கை யையும் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு கால கட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ, மேஜிக் என்றோ தள்ளி விடவா முடியும்? என்று தினமணி தலையங்கம் தீட்டுகிறது (25.4.2011)

எழுபது ஆண்டுகளாக பக்தர்கள் மனதில் இடம் பிடித்து விட்டாராம். அதனால் சாயிபாபா வசியக்காரர் என்றோ, மேஜிக்காரர் என்றோ தள்ளி விட முடியாதாம்.

பல நூற்றாண்டுக் காலமாக மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர் வெண்ணெய் இவற்றைக் கலந்து பார்ப்பனப் புரோகிதன் கலந்து கொடுக்க அதனைப் பஞ்சகவ்யம் என்று போற்றி, தட்சணை கொடுத்து மொடாக் குடியனாகக் குடிப்பதால், அந்த அசிங்கம் அங்கீகரிக்கத்தக்கதுதானா?

எத்தனையோ முட்டாள்தனங்கள் பக்தியின் பெயரால் எத்தனை எத்தனையோ ஆண்டுகள் குடி கொண்டுள்ளன என்பதால் அந்த முட்டாள்தனங்களை முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

பல நூற்றாண்டுக் காலமாக தீபாவளி கொண்டாடுகின்றனர் மக்கள் என்பதால் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் மூழ்கடித்தான். இரண்யாட்சதன் என்பதைத் தினமணி ஏற்றுக் கொள்கிறதா?

பூமியும், பன்றியும் புணர்ந்து பிள்ளை பெற்றது _ அவன்தான் நரகாசுரன் என்ற கட்டுக் கதையை காதைப் பொத்திக் கொண்டு தோப்புக் கரணமும் போட்டு ஆம் என்க! என்று ஆமோதிக்க வேண்டும் என்கிறதா தினமணி?

மேஜிக்குகளைச் செய்யும் சாயிபாபாவின் முகத்திரையை நேருக்கு நேர் கிழித்தாரே மற்றொரு மேஜிக்காரரான பி.சி. சர்க்கார்.

பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்ட புட்டபர்த்தியின் திருமண மண்டப திறப்பு விழாவில் கை அசைப் பில் தங்க சங்கிலியை வரவழைத்து நினைவுப் பரிசாக வழங்கிய சாயிபாபா வின் குட்டு - வீடியோ பதிவு மூலம் உடைபட்டதே _ படத்தோடு ஏடுகளி லும் அம்பலமானதே _ இதற்குப் பிறகும் சாயிபாபா தெய்வீகப் புருடர் _ தெய்வீக சக்தி மூலமாகத்தான் இவற்றையெல்லாம் செய்து காட்டுகிறார் என்று தினமணி எழுதுமேயானால் சாயிபாபா என்ற மோசடிக்காரருக்குத் துணை போகும் மோசடி ஏடு என்ற முடிவுக்குத்தானே வர முடியும்?

சரி, கல்கிக்கு வருவோம்.

ஷீரடி சாய்பாபா கோயில் சென்னை மைலாப்பூரில் இருக்கிறது. ஒரு முறை நண்பர் ஒருவர் நீதியரசர் கற்பக விநாயகத்தை அந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அவருக்கு எந்த ஈடுபாடும் ஏற்பட வில்லை. பின்னர் தில்லிக்கு விமானப் பயணம் செய்யும் போது, நடுவானில் விமானம் குலுங்க, அது கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

கடைசி நேரத்தை நெருங்கி விட்டோம் என்று பயணிகளுக்குப் புரிந்து போனது. மனத்தில் கலக்கத்துடன் கண்களை மூடிய கற்பக விநாயகத்துக்கு ஷீரடி சாய்பாபா கோயில் தரிசனம் ஏனோ நினைவுக்கு வந்தது. கண்ணை மூடிக் கொண்டு ஷீரடி சாய்பாபாவை மனமுருக வேண் டினார். என்ன அதிசயம்! அவர் மனக்கண் முன் காட்சியளித்தவர் சத்ய சாய்பாபா. கவலைப்படாதே... ஒன்றும் ஆகாது என்று கைகளை உயர்த்தி ஆசி வழங்கி இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் சீரான நிலைப்பாட்டை அடைந்தது விமானம். அன்று எங்களைக் காப்பாற்றியவர் சிறீசத்ய சாய்பாபாதான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமிதான் என்னை வழி நடத்து கிறார் என்கிறார் கற்பக விநாயகம்.

உள்ளங்கையிலிருந்து அருவியாக விபூதி, வாயிலிருந்து லிங்கங்கள், கையை அசைத்து விரித்தால் தங்க, வைர மோதிரங்கள், கடிகாரங்கள்.. என்று ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து அற்புதங்களை நிகழ்த்தும் சாய்பாபா, நிஜக் கடவுளே வந்தாலும் நம்பாத காலம் இது. நான் மனிதன் அல்ல; தெய்வ அம்சம் என்று சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? உங்கள் மத்தியில் தெய்வமே அவதாரம் எடுத்து வந்திருக்கிறது என்பதை உணர்த்தவே நான் அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால் ஆசை, விரோதம், பொறாமை, கொடுமை, வன்முறை, நயவஞ்சகம் என்று, நல்லவர்களை, ஒழுக்கமுடைய வர்களை, பக்தர்களை தீய பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். மக்களை என்னிடம் கொண்டு வந்து குவிக்கவே அற்புதங்களை நிகழ்த்துகிறேன் என்று ஒரு முறை சொன்னார்.

(கல்கி 8.5.2011 பக்கம் 4,5)

தெய்வ அவதாரம் எடுத்து வந்திருக்கிறேன் என்பதற்காகவே அற்புதங்களைச் செய்கிறேன் என்று சாயிபாபா சொன்னது பற்றிச் சிலாகிக்கிறது கல்கி.

இதற்கு முன் இந்துமத மகாவிஷ்ணு பல அவதாரங்களை எல்லாம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறதே அந்த அவதாரங்கள் எல்லாம் சாயிபாபாவைப் போல மேஜிக்குகளைச் செய்தனரா?

கடவுள் என்ற ஒன்று இருந்து, அதன் உண்மையான அவதாரமாக வந்துதித்தவர் சாயிபாபா என்றால் அற்புதங்களைச் செய்து காட்டித்தான் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டுமா?
இவர்தான் பகவான் ஆயிற்றே - அவர்களின் நெஞ்சுக்குள் நிறைந்து நெக்குருகிப் போகச் செய்ய வேண்டி யதுதானே?

தன்னைக் கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து தப்பிக் குதிகால் பிடரியில் இரகசிய அறைக்குள் ஓடிச் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட சங்கதிகள் எல்லாம் தெரியாதா? பகவான் என்பது உண்மையானால், அவனை கொல்ல முடியுமா? மற்றவர்கள் மனதில் பகவானைக் கொல்ல வேண்டும் என்ற மருள் ஏற்படலாமா?

வருடம் ஒன்றுக்கு எத்தனை எத்தனையோ விமான விபத்துகள், ரயில் விபத்துகள் நடக்கின்றன. பரிதாபமாக மக்கள் பலியாகிறார்கள். அவர்களில் ஒருவராவது சாயிபாபாவை நினைக்காததால் தான் அந்த விபத்துகள் நடந்தனவா? மக்களை விபத்துகளிலிருந்து காப்பாற்ற தானாக முன்வராதவர் எப்படி பகவான்?

ஒரு பொய்யை மறைக்க எத்தனை எத்தனை பொய் மலைகளை இவர்கள் சோடிக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?

சாயிபாபா அற்புதங்களைச் செய்வதால் அவர் பகவான் சாயிபாபாதான், பகவான் அவதாரம்தான் என்று கல்கிகள் சாதிக்கப் பார்க்கின்றனவே.

அந்த அற்புதங்களை வசியங்களை சித்துகளை இவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள் கிறாரா? ஒவ்வொரு வாரமும் அந்தச் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வண்ணப் படத்தை விடாமல் போட்டு பெரியவாளின் அருள்வாக்கை வெளியிட்டுக் கொண்டு தானே இருக்கிறது. கல்கி சாயிபாபா வின் தெய்வீகத் தேஜஸ்பற்றி பிரஸ் தாபிக்கும் அதே கல்கி இதழின் 33ஆம் பக்கத்தில் பெரியவாளின் அருள் வாக்கை வெளியிட்டுள்ளதே!

சாயிபாபாவா? சங்கராச்சாரியாரா? என்று கேள்வி கேட்டால் கல்கி கூட்டத்தார் பெரியவாளுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா?

அந்தப் பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இந்த மேஜிக்குகளை சித்துக்களைப்பற்றி என்ன திருவாய் மலர்ந்தருளுகிறார்?

கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சிசங்கராச்சாரியாரிடம் மந்திரம், மாயா ஜாலங்கள்பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சரியார் அளித்த பதிலாவது:

மந்திரங்கள், மாயா ஜாலங்கள் மதத் துறையைப் பிடித்த ஒரு சாபக் கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும், தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டதல்ல (23.10.1974).

சங்கராச்சாரியாரின் இந்த விமர்சனத்துக்கு தினமணி கல்கி வகையறாக்கள் என்ன பதிலைக் கையில் வைத்துக் கொண்டுள்ளன?

சங்கராச்சாரியாரால் கூறப்பட்டுள்ள அந்த சாபக்கேட்டுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுகிறார்களே, எப்படி? பகவான் பாபாவைக் காப்பாற்ற வேண்டுமானால், பெரியவாளைக் கை கழுவ வேண்டும். பெரியாவாளைக் காப்பாற்ற ஆசைப்பட்டால் பாபாவைத் தூக்கிக் கடாச வேண்டும். என்ன செய்ய உத்தேசமோ!

--------------- 7-5-2011 "விடுதலை” ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

***********************************

சாயிபாபாபற்றி தந்தை பெரியார்

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும் மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும் சொல்லப்பட்டவர்களை எல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும், அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால், ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அர்த்தமாகவில்லையா? கயிலாயத்தில் இருந்து மாட்டின்மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும், அந்த மாட்டின்மேல் ஏற்றிக் கொண்டு கயிலாயத்திற்குப் போய்விட்டார் என்றால், அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது, உண்மையா? அது உண்மையானால் - கடவுள் தன்மைக்கு அது ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

சாயிபாபா, இராமகிருஷ்ணர், ரமணரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுனசாமியார், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற்புதங்கள் எல்லாம் பெரிய புராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது, அதைவிட மட்டரகமானவையா? அல்லது, கற்பனைகளா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ மதித்து வணங்கத்தக்கவர்களோ சைவத்தில் பெரிய புராணத்தில் ஏன் இருப்பதில்லை?

--------------தந்தைபெரியார் - "குடிஅரசு" 2.10.1943


3 comments:

SURESH BABU said...

பகுத்தறிவு பற்றி பேசும் எல்லோரும் இந்து மதம் பற்றி மட்டுமே பேசுகின்றனர் .ஏனைய கிறிஸ்தவம்,இஸ்லாம் பற்றி பேசுவதில்லை.பகுத்தறிவு என்றால் இந்து மதத்தை இழிவு படுத்துவது மட்டுமா ? அல்லது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நம்பி said...

//மனத்தில் கலக்கத்துடன் கண்களை மூடிய கற்பக விநாயகத்துக்கு ஷீரடி சாய்பாபா கோயில் தரிசனம் ஏனோ நினைவுக்கு வந்தது. கண்ணை மூடிக் கொண்டு ஷீரடி சாய்பாபாவை மனமுருக வேண் டினார். என்ன அதிசயம்! அவர் மனக்கண் முன் காட்சியளித்தவர் சத்ய சாய்பாபா. கவலைப்படாதே... ஒன்றும் ஆகாது என்று கைகளை உயர்த்தி ஆசி வழங்கி இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் சீரான நிலைப்பாட்டை அடைந்தது விமானம். அன்று எங்களைக் காப்பாற்றியவர் சிறீசத்ய சாய்பாபாதான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமிதான் என்னை வழி நடத்து கிறார் என்கிறார் கற்பக விநாயகம்.//

அந்த விமானத்தில் கூட பயணித்த இதர பயணிகள் எவரை வேண்டினார்களோ? தெரியவில்லை. அவர்களுக்கு எந்த உருவம் காட்சி தந்ததோ? அதுவும் தெரியவில்லை. அவர்கள் இன்று வரை அந்த விமானத்தை எம் கடவுள் தான் காப்பாற்றியிருக்கிறார்கள் என்று நம்பியிருப்பார்களோ? அதையும் நீதிபதி யோசிக்கவில்லை.

அவர்கள் எந்த மனிதரை, கல்லை நம்பினார்களோ? (பைலட் எந்த கடவுளை நம்பினாரோ? இல்லை அவர்கள் எல்லாம் எதிலும் நம்பிக்கையில்லாதவர்களா? அந்த விமானத்தில் உள்ளவர்கள் அனைவருமா? கடவுள் மறுப்பாளர்கள்.)தெரியவில்லையே!

இதை பற்றி எல்லாம் நீதிபதி தீர விசாரிக்கவேயில்லையே! அதற்குள் தீர்ப்பு எழுதிவிட்டாரே!

அவருக்கு தான் யோசனை எழவில்லை...கல்கிக்கு கூடவா? யோசனை எழவில்லை? அது எப்படி எழும்? திராவிடரா? என்ன?

பித்தலாட்ட சாய்பாபவுக்கு ஆதாரவாக ஒருதலைப்பட்டசமாக தீர்ப்பு எழுதிவிட்டாரே!....

இதுவரை எத்தனை பேருக்கு நீதிமான் என்ற பெயரில் அநீதியான தீர்ப்பை எழுதியிருப்பாரோ...? அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

நம்பி said...

//Blogger SURESH said...

பகுத்தறிவு பற்றி பேசும் எல்லோரும் இந்து மதம் பற்றி மட்டுமே பேசுகின்றனர் .ஏனைய கிறிஸ்தவம்,இஸ்லாம் பற்றி பேசுவதில்லை.பகுத்தறிவு என்றால் இந்து மதத்தை இழிவு படுத்துவது மட்டுமா ? அல்லது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

May 7, 2011 8:06 PM//

எந்த மதத்திற்கு ஆதரவாக இந்த கேள்வி எழுகிறது?

எந்த பித்தலாட்டத்தை காப்பாற்ற இந்த கேள்வி எழுகிறது?

எந்த மனிதநேயமற்றவரை, இழிவுப்படுத்தும் கூட்டத்தை காப்பாற்ற இந்த கேள்வி எழுகிறது?


எந்த மதத்தின் மூடநம்பிக்கைக்கு ஆதரவாக இந்த கேள்வி எழுகிறது?

இப்படித் தன்னைத்தானே கேள்விகள் கேட்டுக்கொண்டால் இப்படிப்பட்ட புறஞ்சொல்லும் கேள்விகள் எப்போதுமே வராது.

உன் வீட்டில் இருக்கும் குப்பையை அகற்றவேயில்லையே? ஊரான் வீட்டு குப்பையை கவலைப்பட்டு என்ன பிரயாசனம்?

சாராயபாட்டிலை கையில் வைத்து கொண்டு மதுவிலக்கை போதிக்காதே!