Search This Blog

16.5.11

புட்டபர்த்தி சாய்பாபாவின் வக்கிரமான பாலியல் லீலா விநோதங்கள்

சாய்பாபாவின் மறுபக்கம்

சத்திய சாய்பாபா என்று மக்கள் மத்தியிலே மோசடியாக விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் புட்டபர்த்தி சாய்பாபாபற்றி இந்தியா டுடே இதழில் வெளிவந்துள்ள கட்டுரையை மய்யப் படுத்தி எழுதப்பட்டது.

நாட்டில் தங்களைக் கடவுள் அவதாரங்கள் என்று கூறிக்கொண்டு, மக்களது அறியாமையை தங்களது மூலதனமாக்கிக் கொண்டு கொழுத்து வரும் சாமியார்கள், சாமியாரிணிகளின் கொட்டம் நாளும் குறைந்த பாடில்லை.

பக்தி என்ற போதையிலிருந்து மீளாத மக்கள் தங்களது அறிவு, உழைப்பு, பொருள், கவுரவம் எல்லா வற்றையும் இழந்து நிற்க இந்த கபட வேடதாரிகள் காரணமாயிருக்கின்றனர். சட்டப்படி இ.பி.கோ. 420 ஆவது செக் ஷன்படி இவர்கள் கைது செய்யப்பட்டு, மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட யோக்கியப் பொறுப்புள்ள ஆட்சிகளையோ, தலைவர்களையோ நாம் பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டல்லவா தேடவேண்டியுள்ளது.

குறுக்கு வழியில் பணம் திரட்ட காவி உடை! குறுக்கு வழியில் செல்வம் திரட்ட காவி உடையும், ஆன்மீகப் போர்வையும் போதும். அதிலும் சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருந்தால் போதும். இவற்றை விட வேறு எந்த முதலீடும் தேவையில்லை.

திடீர் ஆனந்தாக்களாகவும், சிவானந்த, ஞானானந்த, தயானந்த, தபோவானந்த, சரஸ்வதிகள் என்ற பெயரில் ஒட்டுப் போட்டு திடீர் மடத் தலைவர்களாகி, ரூபாய் 500, 1000 கோடிக்கு அதிபர் ஆகிவிடுகிறார்கள்.

அத்துணை அரசியல் தலைவர்களும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அவர்கள் காலில் விழுந்து கடாட்சம் பெறுவதை தமது கதி மோட்சம் என்று கருதிடும் நிலை!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரின் நிலையை நினைந்துவிட்டார் என்ற வேதனையும், வெட்கமும்தான் மிஞ்சுகிறது!

அன்றாடம் காவிகளின் காலித் தனமும், கயமைச் செயல்களும் ஏடுகளில் வெளிவந்தும், நமது மக்களின் அறியாமை, பாமரத்தனம் (படித்த தற்குறிகள், பதவித் தற்குறிகள் உட்பட) போகவில்லையே!

இன்னும் ஆயிரம் பெரியார் அல்லவா தேவைப்படுகின்றனர்?
புட்டபர்த்தி சாயிபாபாவின் மகிமை என்ன?

புட்டபர்த்தி சாயிபாபா என்ற ஒரு சாமியாருக்கு கர்நாடகத்தில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடி கோடியாக கொட்டப்படுகின்றன!

பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்ட அவரது ஆசிரமத்தின் மகிமை என்ன?

கையசைப்பில் விபூதி வரவழைத்தல், லிங்கம் கக்கி எடுத்தல் போன்ற வித்தைகளைக் கண்டு ஏமாளிக் கூட்டம் நாளும் பெருகுகிறதே!

எப்போதும் நோய்க் கிருமி வேகமாகப் பரவும்; சிகிச்சை தாமதமாகும் என்பது உண்மை என்றாலும், நாளும் வரும் செய்தி நாரசாரமாய் உள்ளதே!

புட்டபர்த்தி சாயிபாபாவின் ஆபாசங்கள் இந்தியா டுடே அம்பலப்படுத்துகிறது!

புட்டபர்த்தி சாய்பாபாவின் வக்கிரமான பாலியல் லீலா விநோதங்கள் பற்றி இந்த வார இந்தியா டுடே இதழில் (ஆங்கிலம், தமிழ் எல்லாவற்றிலும்) விவரமான, ஆதார பூர்வமான செய்திக் கட்டுரை வெளி வந்துள்ளது.

அசிங்கம். அருவருப்பு. ஆபாசம் இவை எல்லாம் வழிந்தோடும் செய்திகள்!

இந்த மகானுபவரை நம்பி மந்திரிகள், முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆட்சியந்திரத்தை முடுக்கும் படாபடா அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் எல்லாம் பக்தர்களாகி பஜனை செய்வதைவிட தேசிய அவமானம் வேறு உண்டா?

15 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் நடந்தது என்ன?

சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, சாய்பாபா மோதிரம் வரவழைப்பது, விபூதி கையிலிருந்து கொட்டுதல்பற்றி கோலக்கிள்ளன் என்ற ஊரில் பேசினேன்.

உடனே எனக்கு சாய்பாபா பக்தர்களிடமிருந்து மிரட்டல் வந்தது. சாய்பாபா பக்தரான ஈழத்தமிழர் (இவர்களில் பலருக்கும் இந்த கிறுக்கு எல்லை மீறி உன்டு) கோலாலம்பூரில் வழக்கறிஞர் திரு. ஜெயராம் என்பவர், எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, சாய்பாபாபற்றிப் பேசினால் வழக்குத் தொடருவோம் என்று மிரட்டினார்.

அங்கேயே, அப்போதே, நானும் வழக்கறிஞன்தான் என்று கூறி வக்கீல் நோட்டீசுக்குப் பதில் நோட்டீஸ் அனுப்பினேன்.

அதுபோலவே மறைந்த மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமி அவர் களுக்காகவும் எனது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் என்ற முறையில் வக்கீல் நோட்டிசுக்கு பதிலை நானே அனுப் பினேன்.

தமிழ்நாட்டிற்குத் திரும்பியதற்குப் பிறகும் மற்றொரு மிரட்டல் நோட்டீஸ்; நானும் பதில் எழுதினேன் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று. வழக்கும் தொடுத்தவர்களே சாய்பாபாவைப் புரிந்துகொண்டனர்.

பிறகு அவர்களிடமிருந்து மூச்சுப் பேச்சில்லை; இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென்று அதே வழக்குரைஞர் திரு. ஜெயராமன் அவர்களிடமிருந்து ஒரு பதிவு அஞ்சல் வந்தது. (அவரது வழக்குரைஞர் குழுமம் ராம் - ரெய்ஸ் - யாப் ஒரு தமிழர், ஒரு சீனர், ஒரு மலாய்காரர்).

அதில், என்னை உங்களுக்கு நினைவு இருக்குமென்று நினைக்கிறேன். முன்பு புட்டபர்த்தி சாய்பாபா பக்தனாக இருந்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப் பிய வக்கீல் நான்.

நீங்கள் சாய்பாபா பற்றிக் கூறியது 100க்கு 100 உண்மை என்பது இப்போது எங்கள் அனைவருக் கும் புரிந்துவிட்டது.

எப்படியெனில், எங்கள் இளைஞர்கள் பலரை சாய்பாபாவிடம் ஓயிட்பீல்ட் ஆசிரமத்திற்கு ஆன்மீகப் பயிற்சிக்காக அனுப்பினோம்.

அவர்களிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார். ஆண் புணர்ச்சி மற்றும் பலவிதமான ஒழுக்க ஈனத்திற்கு அவர்களை அழைத்துக் கெடுத்துள்ளார்.

அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பாபா படங்களைக்கூட போட்டு உடைத்து விட்டோம். அவர் பற்றிய ஒரு நூலைக் குறிப்பிட்டீர்கள்; அதன் பிரதி இருந்தால் எங்களுக்கு அனுப்பி வைத்து உதவுங்கள் என்று எழுதினார்.

நானும் உடன் பதில் எழுதி, அவர் பற்றிய சாய்பாபா சீடர் (அமெரிக்காவிலிருந்து சென்ற டால் பூரூக் எழுதிய அவதார் ஆப்தி நைட் (இரவு நேர அவதாரம்) என்ற புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அதிலிருந்து மலேசியாவில் இவரது மவுசு பெருமளவுக்குக் குறைந்தது.

சாய்பாபாவை அம்பலப்படுத்திய அமெரிக்க வாழ் நண்பர்


சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா, அமெரிக்கா சென்றி ருந்தபோது இண்டர்நெட்மூலம் இவரது தகாத ஒழுக்க ஈனத்தை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரையை ஒரு நண்பர் உலகம் முழுவதும் அனுப் பினார்.

அமெரிக்காவில் பணிபுரியும் மற்றொரு நண்பர் (சத்தியா என்பவர்) இதை எனக்கு அனுப்பி பிறகு அடுத்த முறை அந்த நண்பரையே சந்திக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தார்!

விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஏடுகளில் அந்த இணையத்தில் இடம் பெற்றிருந்த கட்டுரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட் டோம்.

புட்டவர்த்தியின் ஓரினச் சேர்க்கை போன்றவைபற்றி இப்போது இந்தியா டுடே ஏட்டில் பாதிக்கப் பட்ட புதிய வெளிநாட்டு பக்தியாளர்கள் ஆஸ்திரேலியாவிலும், ஜெர்மனியிலும் வழக்குப் போடவும்,

இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில் முக்கிய அமைச்சரே இதுபற்றி எச்சரிக்கை விடுத்துப் பேசியதும் நமது பகுத்தறிவு மனித நேய இயக்கம் செய் யும் பணி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

---------------தொடரும் .. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "சாயிபாபாவின் மறுபக்கம்" எனும் நூலிலிருந்து

2 comments:

ரிஷி said...

:-))

VISHAKAN said...

enna oru kandu pidippu.
Unga 4to iruntha anuppi vykkavum.vaiththu kumpidukirom.