Search This Blog

28.5.11

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?


நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி

நம்நாட்டுப் பார்ப்பனீயமானது "தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது" என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்

தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லசயம் செய்யாமல் ஒரே அடியாய் "சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்" என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத்தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித்தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்

தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி

அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட்கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத்தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?

மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாப்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுதுவோம்.

இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கரஸ் தமிழர்கள் நிலை என்ன?

"மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கரஸ்தான்" என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறுவளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கியதையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போமானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?

தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?

அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத்மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் - கட்டுப்பாடாகவும் - தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மையாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை

தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந்தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு "மோக்ஷத்தில் இடம்" தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அற்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் "பாவத்துக்கு" மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

பார்ப்பனர் உயர்வுக்குக் காரணம்

அரசியல் துறையிலும் பார்ப்பானையே தலைவனாக்கி பார்ப்பானுக்கு ஊழியனாக இருந்து பார்ப்பானை தலைமை மந்திரியாக்கி அவன் மூலம் ஆட்சி "விடுதலை" பெற அடிமைத்தொழில் செய்ய வேண்டியவனாக ஆகிவிட்டான். இப்படிப்பட்ட இந்த கேவல நிலையிலும் ஒரு தமிழனுக்கு தோன்றும் எண்ணம் மற்றொரு தமிழனுக்கு பிடிக்காது, ஒரு தமிழன் மேல் நிலையில் இருப்பது மற்றொரு தமிழனுக்கு சகிக்காது. எந்த நிலைமையிலும் ஒருவனுக்கொருவன் ஏறுமாறு நடத்தையை கொண்டவனாக இருக்கிறான். ஆனால் பார்ப்பானோ, ஆரியனோ, புரோகிதனோ அப்படியில்லை. தென்கோடி கன்னியாகுமரியில் உள்ள "ஒரு ஒழுக்கங் கெட்ட" பார்ப்பானுக்கு தன் சமூக பாதுகாப்பு விஷயமாய் மற்ற சமூக மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தும் விஷயமாய் "ஒரு அபிப்பிராயம் தோன்றுமேயானால் அதே சமயத்தில் வடகோடி இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு "தவசிரேஷ்ட" பார்ப்பானுக்கு அதே அபிப்பிராயம் தோன்றி செயலில் இறங்கி விடுவான். இந்த ஒரு குணமே பார்ப்பனர் எண்ணிக்கையில் உழைப்பில் முறையே எவ்வளவு சிறிய தொகையாகவும் சோம்பேறிகளாகவும் இருந்தாலும் அவர்கள் பாடுபடாமல் மேன்மையான நிலையில் இருந்து கொண்டு மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் மற்ற சமூகங்களை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் செய்து அழுத்தி வைக்கவும் முடிகின்றது.

ஹிந்திப்போர் நோக்கம்

இதிலிருந்து தமிழ் மக்கள் தப்பவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே இந்த ஹிந்திப் போரை நடத்த வேண்டுமேயொழிய கேவலம் ஹிந்தி ஒழிந்தால் மாத்திரம் போதும் என்கின்ற அற்ப ஆசையால் அல்ல என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஹிந்திப் போரானது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க தமிழனின் தன்மானத்தைக் காக்க கிடைத்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் என்பதாகக் கருதி ஒவ்வொரு தமிழனும் அதில் பங்கு கொண்டு அந்த ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

1922-ல் ஆச்சாரியார்

இன்று இந்நாட்டு அரசியல் தலைவராகவும், அரசாங்க முதல் மந்திரியாகவும், சமுதாயத்தில் மேல் ஜாதிக்காரர் என்பவராகவும் இருக்கிற நமது தோழர் கனம் ஆச்சாரியார் அவர்கள் ஒரு காலத்தில் அதாவது 1922ம் வருஷத்தில் திருப்பூரிலும், தர்மபுரியிலும் சொன்ன சில அகம்பாவமான வார்த்தைகளை இன்று தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். (இவை முன்னமும் இரண்டொரு சமயம் எடுத்துக் காட்டிய விஷயங்களேயாகும்.)

அதாவது 1922-ல் திருப்பூர் தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் கோவில் பிரவேச சம்மந்தமாக வந்த தீர்மான விவாத விஷயமாகவும் தோழர் வரதராஜணலு நாயுடு அவர்கள் தலைமையில் நடத்த தர்மபுரி தாலூகா அரசியல் மகாநாட்டில் கோவில் பிரவேச விஷயமாய் வந்த தீர்மான சம்மந்தமாகவும் நடந்த வாதப்பிரதி வாதங்களில் பார்ப்பனீயத்தைத் தாக்கிப் பேசிய விஷயங்களைப் பற்றி அங்கேயே பின்னால் சாவகாசமாக நடந்த சம்பாஷணைகளின் போது ஆச்சாரியார் அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஞாபகமிருக்கும்வரை அப்படியே எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது "பார்ப்பன ஆதிக்கம் நீங்கள் கருதுகிறபடி அவ்வளவு சுலபத்தில் ஒழிக்கக்கூடியதல்ல. அதை ஒழிக்க சரித்திர காலங்களில் புத்தரால் ஒரு கை பார்த்தாய்விட்டது, புராண காலங்களில் மகாவலிமை பெற்ற பல அரசர்களாலும் ஒரு கை பார்த்தாய்விட்டது. இவ்வளவையும் சமாளித்துக்கொண்டு நீங்கள் ஒழிக்க கருதும் பார்ப்பன ஆதிக்கம் இன்று உயிர் வாழ்கின்றது. அப்படிப்பட்டதை நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று கருதினால் அது ஆகக்கூடிய காரியமா" என சொன்னதோடு "அப்படி பார்ப்பனராதிக்கத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள் தங்களைத்தான் ஒழித்துக் கொள்வார்கள்" என்றும் சொன்னார். இவ்வளவு வலிமையுடன் அவர் பேசிய காரணம் பார்ப்பன சூழ்ச்சிக்கு இருக்கும் சக்தியையும் (தமிழ் மக்களுக்குள் இருக்கும் தன்மானமற்ற தன்மையையும்) தமிழ் மக்களுக்கு மதத்தின் பேரால் பார்ப்பனீயம் ஊட்டி இருக்கும் அடிமைத் தன்மையையும் நன்றாய் உணர்ந்து பார்த்துக் கூறியதேயாகும்.

தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?

இந்த ஹிந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டு புதிய சுதந்திர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டு ஆகவேண்டும்.

ஏனெனில் பார்ப்பனீயம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாக புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்ன வென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்காக வல்ல அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு என்பதற்காக அல்ல இவைகளுக்காக என்று சொல்லுவதும் நம்மை கருதும்படி செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்.

ஹிந்தி புரட்டின் அந்தரங்க நோக்கம்

மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி அதை கெட்டிப் படுத்தி பார்ப்பனீயத்துக்கு தமிழ் மக்களை புராண காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான் சோழவந்தான் ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டில் அதன் தலைவர் "ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பதற்கு உள்ள உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

அரிய சந்தர்ப்பம்

ஆதலால் தமிழ்மக்களுக்கு ஹிந்திப் போர் ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றே ஒவ்வொரு தமிழ் மகனும் கருத வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில் ஏற்படும் என்று எந்த தமிழ் மகனும் லேசில் கருதமுடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும். அதிக காலம் நீடிக்காது அதிக துன்பமும் தொல்லையும் இருக்காது. அதிக பண நட்டமும் கூட இருக்காது என்று சொல்லத் தகுந்த ஒரு போர் என்றே சொல்லுவோம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எந்த தமிழ் மகனும் இழந்துவிடாமல் ஆங்காங்கு உள்ள தமிழ் மக்கள் ஆங்காங்கு அதாவது எந்த எந்த ஊர்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் ஹிந்தி புகுத்தப்படுகிறதோ ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் இப்போதே ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி போட்டு அங்கத்தினர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு ஹிந்தி எதிர்ப்புத் தலைமைக் கமிட்டியாரிடமிருந்து என்ன கட்டளை வருகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டு சகல தியாகத்துக்கும் தயாராய் இருக்க வேண்டுகிறோம்.

சென்னை எதிர்ப்பு

சென்னையில் ஒரு தோழர் உண்ணாவிரதம் என்னும் பட்டினி நோன்பு இருக்கிறார். மற்றும் பல தோழர்கள் கிளர்ச்சிக் கூட்டம் முதலியன போட்டு பேசி கிளர்ச்சி ஊர்வலம் முதலியன செய்கிறார்கள் - கூடிய சீக்கிரத்தில் இவைகள் இன்னும் ஒவ்வொரு துறையிலும் பெருகலாம். நடைமுறைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் என்று பல தக்க வழிகளை கமிட்டியார் ஆராய்ந்தெடுப்பார்கள். அனேகமாக சென்னை காரியங்கள் தோழர் சி.டி. நாயகம் அவர்களது ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் நடைபெறக் கூடும்.

இம்மாதம் முடிவுக்குள் ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி கூட்ட தோழர் விசுவநாதம் அவர்கள் நாள் குறிப்பார். அதற்குள் இன்னும் அனேக தொண்டர்கள் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். பெண்மணிகளும் தாராளமாய் வேண்டும்.

பண உதவி

பண விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மகனும் தாராள நோக்கம் கொண்டு பணத்தை காரியதரிசி விசுவநாதம் அவர்களுக்கு அனுப்பி கொடுக்க வேண்டும். பொதுவாக காரியங்கள் ஒரு கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது ஆசை. தனித்தனியாக பணம் வசூலிப்பது தனித்தனியாக அறிக்கைகள் விடுவது தனிதனியாக காரியங்கள் துவக்கப்படுவது முதலிய காரியங்கள் அவ்வளவு வலுவைக் கொடுக்கும் என்று கருத முடியவில்லை.

எதிர்ப்பு முறை

ஒவ்வொரு ஊரிலும் ஹிந்தி எதிர்ப்பு சங்கம் இருக்க வேண்டும். அவை தலைமை சங்கத்துடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள வேண்டும். தீவிர செயல்கள் ஆற்றுவதற்கு துணிவும் சக்தியும் உள்ள அங்கத்தினர்கள் அக் கமிட்டிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கமிட்டிகள் பேரால் தொகை வசூலித்து பத்திரப்படுத்தி சிக்கனமாய் செலவழிக்கவேண்டும். தொண்டர்களையும் அவர்கள் ஆற்றும் செயல்களையும் அவர்கள் மற்ற ஜனங்களிடம் நடந்து கொள்ளும் நடத்தைகளையும் பொதுஜனங்கள் கண்ணியமாகவும் பச்சாதாபப்படும் படியாகவும் அன்பும் ஆதரவும் காட்டும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்து வணக்கத்தோடு கேட்டுக் கொள்ளுகிறோம். தயார்! தயார்!! போர் நெருங்கி விட்டது!!! வெற்றி நிச்சயம்!!!!

---------------"குடி அரசு" - தலையங்கம் - 15.05.1938

1 comments:

குணசேகரன்... said...

too sharp words..

http://zenguna.blogspot.com