2009ஆம் ஆண்டே ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும்
குடந்தை பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் பேச்சு
2009ஆம் ஆண்டே ராஜபக்சே குற்றவாளிக்கூண்டிலே ஏற்றப் பட்டிருக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் காரண காரியங்களோடு விளக்கினார்.
ஈழத்தமிழர் படுகொலைபற்றிய அய்.நா. குழுவினரின் அறிக்கையும், மத்திய அரசின் கடமையும் என்ற தலைப்பில் 8.5.2011 அன்று கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
நமக்கு 30 கல் தொலைவிலே பக்கத்திலே இருக்கிற ஈழத்தில் எத்தகைய கொடுமைகள் அங்கிருக்கக் கூடிய தமிழ் மக்களுக்கு இழைக்கப் பட்டது என்பது இன்றைக்கு உலகம் அறிந்த உண்மையாக ஆக்கப்பட்டுவிட்டது.
இலங்கையிலே இருக்கக்கூடிய நம்முடைய தமிழர்கள்-தொப்புள்கொடி உறவுள்ளவர்கள் எத்தகைய கொடுமையை அனுபவிக்கிறார்கள், வாழ்வுரிமைக்காக எப்படி போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்லாம் நாங்கள் தமிழ்நாட்டில் தெருத்தெருவாக விளக்கிய நேரத்தில் எல்லாம் இங்கே இருந்த ஒரு அரசு அல்லது இங்கே இருந்த ஒரு சில சக்திகள் அதிலும் குறிப்பாக பார்ப்பனீய ஊடகங்கள்-பார்ப்பனீய சக்திகள், தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டன.
இலங்கையிலே ஈழத்திலே நடத்துகின்ற போராட்டத்தை மறைமுகமாக ஊக்குவிப்பது போல அங்கே பயங்கரவாதம் நிகழ்ந்துகொண்டி ருக்கிறது. எனவே பயங்கரவாதத்தை எதிர்த்துத் தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள்-சிங்கள வர்கள், ராஜபக்சேக்கள் என்றெல்லாம் வியாக்யானம் செய்தார்கள்.
இங்கே இருக்கிற மத்திய அரசு இலங்கை அரசுக்குத் துணை போகக்கூடிய அளவிலே இராணுவத்திற்கு இங்கே பயிற்சி, இராணுவ உதவிகள், மற்றும் ஆயுத உதவிகள் உள்பட பலவற்றை இலங்கை அரசுக்குச் செய்தார்கள் என்றபோதிலும், அவர்கள் அதை நியாயப் படுத்துவதற்காக, காயப்பட்ட எங்களுடைய உள்ளங்களைப்பற்றிக் கவலைப்படாமல், தமிழர் களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் என்ன ஒரே விளக்கம் சொன்னார்கள் அரசு தரப்பிலே என்று சொன்னால், அங்கே நடை பெறுவது பயங்கரவாதம்; பயங்கரவாதத்தை எதிர்த்து அந்த நாட்டு அரசு போரிடுகிறது. ஆகவே பயங்கர வாதத்தை, பயங்கரவாதிகளை இந்தியா ஆதரிக்காது என்று சொன்னார்கள்.
நிச்சயமாக பயங்கரவாதிகளாக விடுதலைப் புலிகளோ அல்லது ஈழத்தமிழர்களோ இருந்திருந் தால் நாட்டிலே என்ன சூழ்நிலை வந்திருக்கும்? இந்த நாட்டைப் பொறுத்தவரையிலே பயங் கரவாதிகளை ஒதுக்கிவிட்டுத்தான் இந்தத் தீர்வுகளைக் காணுகிறார்களா?
காஷ்மீரில் பயங்கரவாதிகள்-தடைசெய்யப் பட்ட அமைப்புகள், அதன்தலைவர்களோடு மத்திய அரசின் முக்கியப் பொறுப்பாளர்கள் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று பிரதமர் அலுவலகத்திருந்தே சொல்லக்கூடிய சூழல் ஒரு பக்கத்திலே இருக்கிறது.
எனவே பயங்கரவாதத்தை அணுகுவதிலேகூட வேறுபாடு; தமிழர்களைக் காப்பாற்றுகின்ற அணுகுமுறையிலே வேறுபாடு. அதே நேரத்திலே மற்றவர்களைக் காப்பாற்றுவதிலே வேறுபாடு.
ஒவ்வொரு அளவுகோல் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது. இப்படி இரட்டை அளவுகோல் முறை இருந்து கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாததல்ல. இது ஒரு பக்கத்திலே இருந்தாலும், அண்மையிலே நடந்த சம்பவங்கள் உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அகில உலக அமைப்பிலே சிறப்பான ஒரு அமைப்பு இன்றைக்கு இருக்கிறதென்றால் அது அய்.நா. சபை. அந்த அய்.நா. சபையிலே ஒரு குழுவைப் போட்டு நியமித்தார்கள்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்க அந்தக் குழு அமைக்கப்பட்டது.
இந்தோனேசிய முன்னாள் தலைமை வழக்கு ரைஞர் மார்சுகி தருஸ்மேன் தலைமையில், ஸ்டீவன் ரட்னர், பாஸ்மீன் சூகா இருவரும் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு பற்றிய ஒரு செய்தி இன்றைக்குத்தான் (8.5.2011) வந்திருக்கிறது. அந்தக் குழு தனது பணியைச் செய்து முடித்து விட்டதாலேயே அய்.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் சொல்லுகிறார்.
இந்தக் குழு கலைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லியிருக்கின்றார். ஏனென்றால் அறிக்கை கொடுத்தார்கள்.
அறிக்கை கொடுத்து முடித்தவுடனே அது கலைக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். எந்தப் பணிக்காக அந்தக் குழு அமைக்கப் பட்டதோ அந்தப் பணியை அந்தக் குழு நிறை வேற்றிவிட்டது என்ற காரணத்தினால் கலைக்கப் பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக்கணக்குக் குழு அறிக்கை அல்ல. அந்தக் குழு கலைக்கப்பட்டதா, இல் லையா? அந்தக்குழு ஏற்கப்பட்டதா, இல்லையா? அதற்கு உயிர் இருக்கிறதா, இல்லையா? என்ற விவாதம் தொடருவதற்கு அவர்கள் அதுபோன்ற குழப்பத்தில் இருக்கக்கூடியவர்கள் அல்லர்.
மாறாக எந்தப் பணிக்காக அந்தக்குழு அமைக்கப்பட்டதோ அந்தப் பணி நிறைவு பெற்றது. எனவே குழுவினுடைய வேலை முடிந்து விட்டது என்று மிகத் தெளிவாக அறிவித்திருக்கின்றார்கள்.
இலங்கைப் போரின்போது இலங்கை இராணுவத்தினால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை செய்வதற்காக, அய்க்கிய நாடுகள் அவை அமைத்த நிபுணர் குழு தனது விசாரணையை ஏறத்தாழ 10 மாதகாலம் நடத்தி 240 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 26.4.2011 அன்று அய்.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்களிடம் அளித்தது.
எப்படி எல்லாம் இலங்கையில் கொடுமைகள் நடைபெற்றன? எப்படி எல்லாம் திட்டமிடப் பட்டு தமிழினம் அழிக்கப்பட்டிருக்கின்றது, தமிழின உரிமை மீறல்கள் நடைபெற்றிருக் கின்றன? அநாகரிகத்தின் உச்சங்கள், கொடுமை யினுடைய கோரத்தாண்டவங்கள் எப்படி எல்லாம் நடந்தன என்பதை ஒவ்வொரு நடவடிக் கையும் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டப் பட்டிருக்கின்றன.
உலக நாடுகளுக்குத் தெரியும் வண்ணம். அய்.நா. மன்றம் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னாலே ஈழத்திலே நடைபெற்ற தமிழினப்படுகொலையை பச்சிளங் குழந்தைகள் வரை எப்படி சிங்கள இராணுவம் குண்டுபோட்டு அழித்தது என்பதை தமிழ்நாடு முழுக்க நாம் கண்காட்சி நடத்திக் காட்டினோம்.
ஈழத்திலே கொடுமைகள் நடந்திருக்கின்றன என்று உலகம் முழுவதும் சொன்ன நேரத்தில், எல்லாம் இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் பயங்கரவாதத்தை அழிக்க நடத்துகின்ற போர் என்று இலங்கை சொன்னது. அதற்கு வக்காலத்து வாங்குகிறவர்களும் சொன்னார்கள்.
தமிழ்நாட்டிலேயே ஒரு தவறான பிரச் சாரத்தைச் சொன்னார்கள். இதோ ஓர் ஆல்பம் போல-240 பக்க அறிக்கையை ஒரு புத்தகம் போல அய்.நா.மன்றம் போட்டிருக்கிறது.
ஈழத்திலே நடைபெற்ற கொடுமைகளைப் பற்றி நாம் பக்கம் பக்கமாகப் படிக்கின்றபொழுது நமது இதயத்தில் இருந்து இரத்தக்கண்ணீர்தான் வடி கின்றது. அதைத் துடைப்பதற்கு வழியே இருக் காது.
நான் இந்த அறிக்கைப் புத்தகத்தை 10 நாள் களாக கையிலே வைத்திருக்கின்றேன். இதில் ஒரு நான்கைந்து பக்கங்களைத்தான் புரட்ட முடி கிறதே தவிர, அதற்கு மேலே புரட்டக்கூடிய ஆற்றல்-சக்தி என்னிடத்திலே இல்லை. காரணம், அவ்வளவு பார்க்க முடியாத-சகிக்க முடியாத கொடுமைகளை எல்லாம் சிங்கள இராணுவம்-சிங்கள அரசு நடத்திக்காட்டியிருக்கிறது.
இதோ என் கையில் உள்ளது இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதற்கு ஆதாரமாக அய்.நா. மன்றம் கொடுத்த அறிக்கை. அறிவார்ந்த அவையினர் கூடியிருக்கின்றீர்கள்; நல்ல தெளி வான அரசியல் நோக்குள்ளவர்கள் இங்கே கூடியிருக்கின்றீர்கள்.
மனிதநேயம் படைத்தவர்கள் கூடியிருக்கின் றீர்கள். அன்புள்ளம் படைத்த நண்பர்களே, கட்சிகளை மறந்து ஜாதிகளை மறந்து சிந்தித்துப் பாருங்கள்.
தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முடிவுகள் மே 13ஆம் தேதி வரும். ஆனால் அதை எல்லாம் மறந்து தமிழினம்-தமிழ்ச்சமுதாயம், திராவிடர் சமுதாயம் உலகம் முழுவதும் விரவியிருக்கின்ற தமிழினம் என்பதை எண்ணிப்பார்த்தாலும் சரி, அல்லது அது குறுகிய மனப்பான்மை என்று கருதி நீங்கள் நினைத்தாலும் மனிதஇனம், மனிதகுலம் என்ற அடிப்படையிலே மனிதநேயத்தோடு நீங்கள் சிந்திக்க வேண்டும்.
எவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். செய்தி யாளர்கள், ஊடக நண்பர்கள் இருப்பார்கள். அவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். மற்ற அறிவார்ந்த நண்பர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சில செய்திகளைச் சொல்லு கின்றேன்.
முதல் பக்கத்திலேயே Executive Summery என்று இதனுடைய சுருக்கத்தையும் அய்.நா.மன்ற அறிக் கையிலே சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். எத் தனையோ மனிதநேய அமைப்புகள் மனித நேய உரிமைகளைக் காப்போம் என்று ஒப்பந்தங் களைப் போட்டநாடு சிறீலங்கா. எனவே அதற்குக் கடமை யிருக்கிறது. மனித உரிமை மீறல்கள். இலங்கையிலே நிறைய நடைபெற்றிருக்கின்றன. இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது சாதாரணமானதல்ல. சர்வதேச சட்டப்படி செய்ய வேண்டிய காரியம் என்பதை முதலில் தங்களுடைய எல்லையை வரையறுத்துச் சொல்லிவிட்டுத்தான் பிறகு உள்ளே போகிறார்கள்.
இந்த அறிக்கையைப் பொருட்படுத்த வேண்டுமா? என்றெல்லாம் யாரும் கேட்கமுடியாது. மற்றவர்கள் நினைப்பதைவிட இந்திய அரசின் கேளாக்காதுகள் இதைக்கேட்க வேண்டும். பார்க்காத கண்களுடைய பார்வை இதிலே ஆழமாகப் பதிய வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். அதுதான் இந்தக் கூட்டத்தினுடைய சிறப்பு. மத்திய அரசு தனது கடமை என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
உலகத்தில் எந்த ஒரு இனமும் இவ்வளவு கொடுமை களை அனுபவித்திருக்காது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய செய்திகளை சுருக்கமாக உங்கள் முன்னாலே வைக்க விரும்புகிறோம்.
வன்னிப்பகுதி இங்கே குண்டுவிழாது. (Non fire zone) மற்ற இடங்களிலே குண்டு வீச்சு நடந்து கொண்டி ருக்கிறது. பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிடுங்கள் என்று மக்களை அழைக்கிறார்கள்.
ஈழத்தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு சென்றிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்காகப் போர் என்று சொன்னால் காஷ்மீரில்கூட பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அதை எதிர்த்து நாங்கள் போராடு கிறோம் என்று சொல்லுகிறார்கள்.
அங்கே காவல்துறை இருக்கிறது. இந்திய ராணுவம் இருக்கிறது. ஆனால் எங்கேயாவது மேலே இருந்து குண்டு போட்டு அங்குள்ள மக்களை அழித்திருக்கின்றார்களா? தேடப்படுகிறவர்களைக் கூட மேலேயிருந்து குண்டு போட்டு அவர்கள் அழிக்கவில்லை.
எப்பொழுது குண்டுவீச்சு நடக்கும்? இரண்டு உலகப்போர்கள் நடைபெற்றதைத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அல்லது போர்க்காலத்தைப் பற்றி அறிந்தவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் நடக்கும்பொழுது வான்வெளித் தாக்குதல்கள், தரைவழிப் போராட்டங்கள், கடல்வழிப்படைகள் இந்த முப்படைகள் மூலமாகப் போர் நடக்கும். அப்படி முப்படைகள் மூலமாக தாக்குதல்கள் நடந்தால் வெளிநாட்டுக்காரன் அந்த நாட்டைப் பிடிப்பதற்காக படை எடுத்து நடத்துகிறான் என்று சொல்லும்பொழுதுதான் குண்டு வீச்சுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் உலக வரலாற்றிலேயே எங்கும் கேள்விப்பட்டிருக்காத முதல் கொடுமை-பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயராலே சொந்த மக்களையே-அந்த மண்ணுக்குரிய வர்களையே அழித்தார்கள்.
முளைத்த தமிழினம்
இன்னும் கேட்டால் சிங்கள இனம் முளைப்பதற்கு முன்னாலேயே அந்த மண்ணிற்குரிய இனம் இருந்தது. அதுதான் தமிழ்இனம்.
அந்த மண்ணுக்குரிய மரபு இனம். அந்த மண்ணை பக்குவப்படுத்திய இனம் அந்த இனம். அந்த இனம் அழிக்கப்படுகிற பொழுது எப்படி அழிக்கப்படுகிறது? இவர்களால் போரிட முடியவில்லை. அதனால் என்ன பண்ணுகிறார்கள்?
மேலே இருந்து இராணுவ விமானங்கள் மூலமாக திடீர், திடீரென்று குண்டுவீச்சு நடைபெறுகிறது. யார் மீது குண்டுவீச்சு? பயங்கரவாதிகள் மீது குண்டு வீச்சா? அல்லது பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுகின்ற அந்தப் பாசறை மீது குண்டு வீச்சா? அல்ல. அதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.
எவ்வளவு பேர் இறந்தார்கள்? எவ்வளவு பெண்கள் அழிக்கப்பட்டார்கள்? எவ்வளவு குழந்தைகள் செத்தார்கள்? கணக்கு வழக்குக் கிடையாது. எவ்வளவு பேர் காணாமல் போனார்கள்? எண்ண முடியாது. தப்பியிருக்கிறவர்கள் இன்னமும் முள்வேலிக் குள்ளே இருந்து கொண்டிருக்கிறார்கள், இரண் டாண்டுகளுக்குப் பிறகுகூட. கேட்பதற்கு நாதியற்ற இனமா தமிழினம்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?
திராவிடர் கழகத்துக்காரன் எந்த மேடையில் பேசினாலும் ஆதாரங்கள் இல்லாமல் பேசிப் பழக்கப்பட்டவன் அல்ல. அது எங்களுடைய குருகுல வாசம். எங்களுடைய தலைவர் பெரியார் அவர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தபாடம். ஆகவே அந்த முறையிலிருந்து என்றைக்கும் நாங்கள் மாற மாட்டோம். அருமை நண்பர்களே! உலக செஞ்சிலுவை அமைப்பு-சுவிட்சர்லாந்து நாட்டைப் பொறுத்தது.
சுவிட்சர்லாந்து நாடு இராணுவம் இல்லாத ஒரு நாடு. உலக ஜனநாயகத்தில் மிகத்தெளிந்த சிறப்பான நாடு. அய்ரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று கருதப்படும் நாடு. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை சுவிட்சர்லாந்து நாடு உலகம் முழுவதும் வைத்திருக்கிறது. யார் அடிபடுகிறார்களோ, எங்கே ரணம், எங்கே இரத்தம் கொட்டுகிறதோ, அதற்கெல்லாம் காயத் திற்கு மருந்து போடக்கூடிய ஒரு நல்ல மருத்துவப் பணிகளை செய்யக்கூடிய நாடு.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் இலங்கையில் ஒரு கப்பலைக் கொண்டு போய் நிறுத்தி போரில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்தார்கள். அந்தக் கப்பலை சிங்கள ராஜபக்சே அரசு அனுமதிக்க மறுத்தது. செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியே போகச் சொன்னார்கள்.
இங்கே இருக்கக்கூடாது; உங்களுக்கு வேலை இல்லை என்று சொன்னார்கள். செஞ்சிலுவை சங்கம், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்துகொண்டிருந்தபொழுது அவர் களையும் குண்டு வீசித் தாக்கினார்கள். சர்வதேச சட்டத்திற்கு விரோதமான ஒரு போக்கு இலங்கை அரசாலே-ராஜபக்சே அரசாலே நடத்தப் பட்டதை மறுக்க முடியுமா? அய்.நா.அறிக்கை இதைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.
அப்பாவி மக்களைத் திட்டமிட்டு, குறிவைத்துத் தாக்கியது சிங்கள இராணுவம். அவர்கள் இராணு வத்தைச் சார்ந்த மக்கள் அல்லர்- விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்லர்-அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அப்பாவிமக்களை குறி வைத்து தாக்கி அழித்தனர்.
இலங்கை அரசின் இது போன்ற நடவடிக் கையால் உணவு, மருந்து, குடிநீர் விநியோகம் முற்றிலும் முடக்கப்பட்டு அப்பாவிப் பொதுமக்கள் கதி அற்ற நிலையில் அவர்களாகவே இறந்துபோகக் கூடிய நிலை; எஞ்சியிருக்கிறவர்களுக்கு உணவு கிடையாது. அடிபட்டவர்களுக்கு மருந்து கிடையாது., குடிநீர் கிடையாது. எனவேதான் அவர்கள் தானே செத்தழிந்து போகட்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடத்தினார்கள்.
போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை மறைமுகத் திட்டத்தோடு குறைத்துக்காட்டி அதற்குப் பிறகு தாக்குதல் நடத்தி னார்கள்.
பெரும்பகுதி மக்கள் உயிரோடு இருக்கி றார்களா, இல்லையா? அடையாளம் காணப்பட வில்லை. தாய் எங்கே? தந்தை எங்கே? பிள்ளை எங்கே? குழந்தை எங்கே? ஒருவருக்கும் தெரியாது.
போர் முடிவுற்றதாக இலங்கை அரசு அறிவித்த பின்பும் சிங்கள இராணுவத்தினுடைய கொடு மைகள், சித்ரவதைகள் இன்றுவரை நிறுத்தப் படவில்லை. போரில் இருந்து தப்பியவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அடையாளம் காணுகிறோம் என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்துச்செல்லப்பட்டவர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப் பட்டனர்.
யாராவது தமிழர்களைப் பார்த்தால், அதுவும் குறிப்பாக இளைஞர்களைப் பார்த்தால், உடனே நீ விடுதலைப்புலி; உனக்கு வேலை இல்லை; வா உள்ளே என்று அழைத்துப் போய் அவர்களை நெஞ்சுக்கு நேரே சுட்டுக்கொள்ளுகிறார்கள்.
இங்கே என்கவுன்ட்டர் என்ற பெயராலே பட்டியலில் உள்ளவர்களை எப்பொழுதாவது செய்தாலே, மனித உரிமை பறிபோய்விடுகிறது என்று நாம் நினைக்கிற அளவுக்கு மனித உரிமைகளை மதிக்கிறோம்.
அங்கு கேட்பதற்கே நாதி இல்லாத அளவுக்கு அவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றன.
பல்லாயிரம் தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. தாய் மார்கள் மன்னிக்க வேண்டும்.
தமிழச்சிகள் இனி மேல் தமிழ்க்குழந்தைகளைப் பெறக்கூடாது. இனிமேல் தமிழச்சிகளுக்குப் பிறக்கிற குழந்தைகள் எல்லாம்-சிங்கள குழந்தை களை தமிழ் கருக்கள் தாங்கியிருக்கவேண்டும் என்று திமிரோடு சிங்களவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அளவிலே வன்கொடுமைகள் அங்கு நடைபெற்றிருக்கின்றன.
பொதுமக்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்களில் நெரிசல்கள் அதிகமாகி அங்கே அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல் அவை ஏறக் குறைய சித்திரவதை முகாம்களாக காட்சிய ளிக்கின்றன. இப்படியே இனப்படுகொலை தொடர்ந்தது.
ஊடகவியலாளர்கள், அதே போல சமூக ஆர்வலர்கள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என்று சிங்களவர்களாக இருந்தால்கூட சிங்கள ஏடுகளாக இருந்தால்கூட, பத்திரிகையாளர்கள் இதை வெளிப்படுத்தினார்கள்., சொன்னார்கள் என்று சொன்னால் அங்கே எப்படிப்பட்ட சூழல்?
தமிழ் இனப்படுகொலையை எதிர்த்த ஊடக வியலாளர்கள், கண்டனம் செய்த சமூக ஆர்வலர் களையும் இலங்கை அரசு பல்வேறு வழிகளிலே மிரட்டி, துன்புறுத்தி அடக்கியிருக்கிறது.
பத்திரிகைகளுக்கு சுதந்திரம் கிடையாது. பத்திரிகையாளர்களையும் அவர்கள் கொன்றிருக் கிறார்கள். சுட்டிருக்கிறார்கள். அவர்களையும் கடத்திக்கொண்டுபோய் காணா மல் போகச் செய்திருக்கிறார்கள். வெள்ளை வேன்கள் மூலமாக மர்மமாக கடத்திச் செல்லப் பட்டவர்கள் இன்றுவரை காணாமலேயே போய் விட்டார்கள்.
இலங்கையில் நடந்ததைக் கண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உலகம் பதறித் துடித்தது. இப்பொழுது அய்.நா. அறிக்கை மூலம் உலகுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இது போன்ற செய்திகள் ஏராளமுண்டு நண்பர்களே! அதை சொன்னால் நமக்கு வேதனையே தவிர வேறு கிடையாது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டன என்பதை 2009ஆம் ஆண்டிலே ஜெனிவாவிலே சுவிட்சர்லாந்து நாட்டிலே இருக்கக்கூடிய மனித உரிமைகள் அமைப்புக் கூட்டம் போட்டு குற்றம் சுமத்திய நேரத்திலே அப்பொழுதே இலங்கை அரசும், ராஜபக்சே அரசும் குற்றவாளிக்கூண்டிலே ஏற்றப்பட்டிருக்கும். ஆனால் இலங்கை அரசு குற்றவாளிக்கூண்டிலே ஏறாமல் தடுத்தது யார் தெரியுமா? வெட்கத்தோடும், வேதனையோடும் சொல்லு கிறோம்-இந்தியாதான் அதை எதிர்த்தது.
அதன் காரணமாக அந்தத் தீர்மானம் நிறை வேற்றப்பட முடியாமல் தடுக்கப்பட்டது. எனவே இவ்வளவு கொடுமைகள் நடக்கிற நேரத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு, வாதிடக்கூடிய அளவுக்கு ராணுவ உதவிகள் ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் இது போல இந்தியா இலங் கைக்கு வழங் கியது என்று சொன்னால் தமிழர் களை என்ன வென்று நினைக்கிறார்கள்? நாம் தொப்புள் கொடி உறவு என்பதைக்கூட மறந்து விடுங்கள். மனித நேய அடிப்படையிலே நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா? காஷ்மீர் என்றால் அதற்கு ஒரு தனிச்சலுகை
காஷ்மீரில் இருக்கின்ற பண்டிதர்கள் வெளியே துரத்தப்பட்டார்கள் என்றால் அவர்களுக்காக கண்ணீர் சிந்தக்கூடிய மத்திய அரசு அதற்கு தனிச் சலுகை காட்டுகிறது.
இலங்கையிலே எம் இனம் அழிக்கப்படுகிறது. எம் இனம் ஒழிக்கப்படக்கூடிய அளவிலே திட்டமிட்டு இனப்படுகொலை நடந்து கொண்டி ருக்கிறதென்றால் அதைப் பொறுத்துக்கொண்டி ருக்க முடியுமா?
இலங்கையிலே வீடுகளைக் கட்டிக் கொடுக்கி றோம் என்று சொல்லுகிறார்கள் யாருக்கு வீடு களைக் கட்டிக்கொடுக்கிறார்கள்? சிங்களவர் களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறார்கள்.
தமிழர்கள் இருந்த பகுதிகளில் எல்லாம் நம்முடைய பணத்திலேயே-இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட பணத் திலேயே. இது யாருக்குப் பயன்படுகிறது என்று சொன்னால் சிங்களவர்களுக்குத்தான் பயன்படு கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கிற தென்றால் இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்? மத்திய அரசின் நிலை என்ன?
எனவே மத்திய அரசு இனிமேலும் பழைய போக்கையே கடைப்பிடிக்கப் போகிறதா? இதைத்தான் தமிழ்நாடு கேட்க விரும்புகிறது. தமிழ்நாட்டில் இந்த உணர்வு மங்கிப் போய் விட்டது, மறைந்து போய்விட்டது என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள். நீறுபூத்த நெருப்பாக இந்த உணர்வு தமிழ் நாட்டிலே இருக்கிறது என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கின் றோம்.
இந்த அரசுக்கு நாங்கள் கப்பம் கட்டுகிறவர்கள் அல்லவா? நாங்கள் வரிகொடுக்கிறவர்கள் அல்லவா? மத்தியிலே ஏற்கெனவே இருந்த மதவெறி அரசான பா.ஜ.க. அரசு இறக்கப்பட்டது. அது வரையிலே எதிர்க்கட்சியாக இருந்த இந்தக் காங்கிரஸ் அமைப்பு ஆட்சி பீடத்திற்கு வர முடியாமல் இருந்த நேரத்திலே மதவெறி ஆட்சியைக் கீழே இறக்கி காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்து ஒரு பிரதமரை அமர வைக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கியவர் யார் என்று சொன்னால், முதல்வர் கலைஞர் அவர்கள். திட்டமிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வகுத்த வியூகம்தான்.
தமிழ்நாட்டில் நாற்பது நாடாளுமன்றத் தொகுகளிலும் தி.மு.க. அணி வெற்றிபெற்றது. 40 எம்.பி.களின் ஆதரவை கலைஞர் அவர்கள் காங்கி ரசுக்கு வழங்கிய காரணத்தால்தான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியிலே ஏற்பட்டது. மறுக்க முடியுமா? இன்றைக்கு வசதியாக அது உங்களுக்கு மறந்துபோய்விட்டதா? மறுபடியும் அந்த ஆட்சி வந்திருக்கிறதென்றால், அதற்குத் தமிழ்நாடு கை கொடுக்கவில்லையா? தமிழக மக்கள் வாக்களிக்கவில்லையா?
எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று கேட்பதற்கு தமிழ்நாட்டுத் தமிழனுக்கு உரிமை உண்டு. அதை யாராலும் மறுக்க முடியாது. இதில் உண்மை இல்லை என்று சொன்னால் தமிழ்நாடு இந்தியாவோடு இல்லை என்று நீங்கள் பிரகடனப்படுத்துகின்றீர்கள் (கைதட்டல்). பிறகு உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை மற்றவர்கள் கொள்ளக் கூடிய அந்த நிலை இருக்கும் (கைதட்டல்).
அண்ணா அவர்கள் சொன்னதைப் போல நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அது கூடப் பரவாயில்லை; மன்னிப்போம், மறப்போம் என்று சொன்னாலும் இனிமேல் அடுத்த கட்டம் என்ன? மத்திய அரசு சிந்திக்க வேண்டாமா? தனது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண் டாமா? சிங்கள ராணுவத்திற்குப் பயிற்சி கொடுத் தீர்கள். சிங்கள ராணுவத்திற்குக் கவசமாக இருந்த சூழ்நிலைகளை எல்லாம் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அய்.நா.அறிக்கைக்குப் பிறகுகூட மத்திய அரசு இதற்கு ஒரு கழுவாய் தேட வேண்டாமா? பரிகாரம் தேட வேண்டாமா? மத்திய அரசின் கடமை அல்லவா அது? என்ன சொன் னீர்கள்?
எங்களுக்கு இராணுவத்தீர்விலே நம்பிக்கை இல்லை என்று மத்திய அரசு அழகான வார்த்தை களால் சொல்லியது. அரசியல் தீர்வு தமிழர்களுக்கு ஏற்பட வேண்டும். அங்கேயிருக்கிற தமிழர்களுக்கு உரிமை என்பதிலே எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை. பயங்கரவாதத்தை மட்டும்தான் இலங்கை அரசு எதிர்க்கிறது என்று சொன்னீர்கள்.
இலங்கையிலே நடைபெற்றது பயங்கர வாதத்தை எதிர்த்து அல்ல என்பதைத்தான் அய்.நா. சபை அறிக்கை கூறியிருக்கிறது. ஈழத்திலே நடந்தது. ஒரு சுதந்திரப் போராட்டம்; வாழ்வுரிமைப் போராட்டம்; அங்கே இருந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய போராட்டம் என்று மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லியிருக்கின் றார்கள்.
வான்வெளித் தாக்குதல், குண்டுவீச்சு-அது என்ன, உள்நாட்டுப் போராட்டத்திற்கு நடக்குமா? உலக வரலாற்றில் முப்படைகளை உருவாக்கி வைத்திருந்தார்கள் விடுதலைப்புலிகள்.
தமிழன் இதுவரை புறநானூற்றைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றான். அதைச்செய்து காட்டி வரலாற்றை உருவாக்கிவிட்டார்கள் ஈழத்திலே.
அவர்கள் எப்படி உருவாக்கப்பட்டார்கள்? திடீரென்று பிறக்கும்பொழுதே அவர்கள் விடுதலைப்புலிகளாக உருவாக்கப்பட்டார்களா? விடுதலைப்புலிகள் எப்படிப் பிறந்தார்கள்? எப்படி உருவாக்கப்பட்டார்கள்?
இன்றைக்குக்கூட நக்சல்பாரிகளை அழிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று சொன்னால், அதை வெறும் சட்டப் பிரச்சி னையாக ஆக்கிவிட முடியாது.
அது ஆழமான ஒரு சமூகப் பிரச்சினை என்று சொல்லுகிறீர்கள் அல்லவா? இதே மாதிரி எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஏன் விடுதலைப் புலிகள் ஆனார்கள்? இலங்கையிலே தமிழ் மாணவர்கள் படிக்க முடியவில்லை. சிங்கள மாணவர்களுக்கு முதல் உரிமை-தனி உரிமை. சிங்கள மொழிக்கு இருக்கின்ற உரிமை தமிழ் மொழிக்குக் கிடையாது.
பல்கலைக் கழகங்களில் இடம் கிடையாது தமிழர் மாணவர்களுக்கு என்று கதவு சாத்தப்பட்ட காரணத்தால்தான் கொஞ்சம், கொஞ்சமாக தமிழர்கள் தங்களுடைய உரிமை முழக்கங்களை எழுப்பத் தொடங்கினார்கள். பிறகு சட்டப் பூர்வமாக ஓட்டுமுறை மூலமாக பயன்படுத்திக் கொண்டு சிங்களவர்களுக்கென்றே சட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்டனர்.
யாரும் இலங்கை அரசை எதிர்க்கக்கூடாது, பிரிவினை கேட்கக்கூடாது என்றெல்லாம் சட்டத்தை வைத்துப் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களுடைய வாழ்வுரிமையைப் பறிக்க ஆரம் பித்தார்கள்.
சட்ட வரம்புக்கு உள்பட்டு செயல்பட்ட ஈழத்தமிழர்கள் அதற்கு அப்பால் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அங்கேயிருக்கின்ற சிங்கள அரசு உருவாக்கியது. அதற்குப் பிறகு பிறந்ததுதானே விடுதலைப்புலிகள் இயக்கம்? இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா?
எனவே, அரசியல் தீர்வு அங்கே வர முடியுமா? இராணுவத் தீர்வு கூடாது; அரசியல் தீர்வுதான் வரவேண்டும் என்று சொன்னீர்கள்.
இலங்கை இராணுவத் தீர்வு எடுத்தது. பயங்கரவாதிகளை முடித்துவிட்டோம் என்று சொன்னது. சரி, பயங்கரவாதிகளை ஒழித்து விட்டீர்கள். இலங்கையிலே வாழ்கிற தமிழர்களுக்கு என்ன வாழ்வுரிமை கிடைத்திருக்கிறது? அந்த உரிமை தமிழர்களுக்குக் கிடையாதா? அங்குள்ள தமிழர் கள் எங்கள் தொப்புள்கொடி உறவுள்ள இன மல்லவா? நாங்கள் அந்த உணர்வைக் காட்டியது தவறா?
எங்கோ இருக்கிற பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு நாம் குரல் கொடுத்தோம்; தவறல்ல. உலக மக்கள் அவதிப்படுகிறபொழுது நியாயங்கள் என்று சொல்லுகிறபொழுது நாம் குரல் கொடுத்தோம்.
அதே போல தென்னாப்பிரிக்காவிலே இருக் கின்ற நெல்சன் மாண்டேலா அவர் உரிமைக் குரலை எழுப்பிய நேரத்திலே 27 ஆண்டுகள் இருட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் வெளியே வரவேண்டும். கறுப்பர்கள் தங்களுடைய உரிமைக் கொடியை உயர்த்தியிருக்கிறார்கள். அது தேவை என்று கேட்போம். அதற்காகக் குரல் கொடுத்தோமே அது தவறா?
தென்னாப்பிரிக்காவுக்காக உரிமைக் குரல். இன ஒதுக்கல் கூடாது என்று தென்னாப்பிரிக்காவுக்காக குரல் கொடுத்த அதே நியாயம் தமிழனுக்குப் பொருந்த வேண்டாமா? எம் இனத்திற்குப் பொருந்த வேண்டாமா? திண்ணைப் பிரச்சாரம் முதல் தெருப் பிரச்சாரம்வரை
எனவே, இனிமேல் அரசியல் தீர்வு என்றால் என்ன தீர்வு? தயவு செய்து மக்கள் நடுநிலையிலே இருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர் களுடைய வாழ்வுரிமைக்காக ஒவ்வொருவரும் திண்ணைப் பிரச்சாரத்திலிருந்து தெருமுனைப் பிரச்சாரம் வரை கட்சிகளை மறந்து, ஜாதிகளைத் துறந்து, மதங்களைப் பற்றிக் கவலைப்படாமல், நாம் தமிழர்கள் என்றுகூட அல்ல; மனிதர்கள் என்று காட்டக்கூடிய அந்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.
இனிமேலும் சிங்களவர்களோடு தமிழர்கள் ஒத்துப்போக முடியுமா? தமிழினம் அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சியிருக்கின்ற தமிழர்களாவது வாழ்வுரிமை பெற வேண்டும். தமிழர்களை மைனாரிட்டிகள், மைனாரிட்டிகள் என்று சொல்லி எல்லா உரிமைகளையும் நீங்கள் பறித்து விடுவீர்கள் என்றால், இனிமேல் எவ்வளவு காலத்திற்கு அவர்கள் முள்வேலிக்குள்ளே இருக்க முடியும்?
முள்வேலிக்குள் இருந்து மட்டுமல்ல; சிங்கள ஆதிக்க பீடத்திலிருந்து தமிழர்கள் விடுதலை பெற வேண்டாமா?
ஓர் இயக்கம், ஓர் இனம் அழிக்கப்பட்டு விட்டது என்று நினைக்கக்கூடாது. எந்த ஓர் இயக்கமும் நடுவிலே ஒரு தொய்வு ஏற்பட்டது போல தோன்றினாலும்கூட, பிறகு அது எப் பொழுது உருவெடுக்கும் என்று மத்திய கிழக்கு நாடுகளைப் பாருங்கள். அப்பொழுது உங்களுக்கு தெளிவாகத் தெரியும்.
எனவேதான், ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான் அமைய வேண்டுமென்று ஒரே குரலில் தமிழர்கள் வற்புறுத்துகிறோம்(கைதட்டல்).
இதைவிட சிறிய நாடுகள் இருக்கின்றன. அந்த ஈழத்தினாலே இலங்கை இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பூச்சாண்டியை இந்த நாட்டுப் பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன இனத்தவர்களும் தமிழர்களுக்கு விரோதமாக இதே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டி ருக்காதீர்கள். யாரால் இலங்கைக்கு ஆபத்து.
இன்றைக்கு சீனாவினுடைய இராணுவத்தளப் பணி இலங்கையிலே ஏராளமாக நடந்து கொண்டி ருக்கிறது. அருணாசலப் பகுதிக்குள் ளேயே சீனா உள்ளே நுழைந்துவிட்டது.
இந்தியாவினுடைய தேசப்படத்தையே மாற்றியி ருக்கிறது சீனா. அங்கே இந்தியக் கொடி பறப்பதற்கே எங்கள் அனுமதி வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? மறுக்க முடியுமா? எனவே, இறையாண்மை இறையாண்மை என்று காட்டிப்பேசாதீர்கள். நாங்களும் சட்டம் படித்த வர்கள். சர்வதேச சட்டம் எங்களுக்கும் தெரியும். சர்வதேச சட்டத்தின்படி நான் சொல்லு கிறேன்.
இறையாண்மையைப்பற்றிப் பேசுகிறீர்களே- இறையாண்மைதான் இப்பொழுது பின்லேடன் விசயத்தில் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறதே! உலகம் முழுவதும் அதை கேலிக்கூத்தாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் என்ன இறையாண்மை? இந்தியா எங்களுக்கு உதவும்; ஒரு வேளை இந்தியா எங்களுக்கு உதவ மறுத்தால்கூட, எனக்கு சீனா உதவும், பாகிஸ்தான் உதவும் என்று ராஜபக்சே சொல்கிறார்.
சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவினுடைய இறையாண்மைக்கு இன்றைக்கு சவாலாக இருக் கின்றன. இதைப் புரிந்துகொள்ளக் கூடிய சக்தி மத்திய அரசுக்கு-மத்திய அரசின் தலைமைக்கு இருக்க வேண்டாமா? தயவு செய்து பின்னோக்கிப் பாருங்கள். உங்கள் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்திராகாந்தியின் ராஜதந்திரம் இந்திராகாந்தி அம்மையார் எவ்வளவு புத்திசாலித்தனத்தோடு அரசியல் வியூகத்தை அமைத்தார்? ஜெயவர்த்தனே இலங்கை அதிபராக இருந்தபொழுது, ஜெயவர்த்தனே அரசின் கொடுமை தாங்காமல் இந்தியாவுக்கு வந்த-தமிழகத்திற்கு வந்த தமிழர்களுக்கு இந்திராகாந்தி அம்மையார் இராணுவ பயிற்சி கொடுத்திட உதவி செய்தார். அதற்கு இடம் கொடுத்தார். தமிழர்கள் பயிற்சி பெற ஏன் ஆயுதங்களை இந்திராகாந்தி அம்மையார் வழங்கினார்கள்? பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசினுடைய இராணுவ அதிகாரிகளையே சில நேரங்களில் அனுப்பினார். இதை மறுக்க முடியுமா இந்திய அரசு?
காரணம், இவ்வளவு சரித்திரங்களையும் தெரிந்தவர்கள் நாங்கள். இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றோம். நாங்கள் இறந்துவிடவில்லை (கைதட்டல்). மறந்துவிட முடியாது நீங்கள்.
ஜெயவர்த்தனே ஆட்சியில், ஈழத்தமிழர்கள் அங்கு வாழ்வுரிமையைப் பெற முடியாது என்பதை அந்த அம்மையார் உணர்ந்தார். அதைவிட இன்னொரு காரணத்தையும் அரசியல் ரீதியாக வியூகம் வகுத்தபொழுது, பெரிய ராஜதந்திரியாக இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த காலத்திலே முடிவெடுத்தார். என்ன?
பாகிஸ்தானோடு யுத்தம் நடத்துகிற நேரத்திலே அமெரிக்காவினுடைய ஏழாவது படை இலங்கைப் பக்கத்திலே வந்து நின்றது. உடனே இந்திராகாந்தி அவர்கள் முடிவு செய்தார். இனிமேல் இலங்கையின் திரிகோணமலை போன்ற பல பகுதிகளை அமெரிக்கா தனது வல்லாண்மைக்கு நிச்சயமாக ஆட்படுத்திக் கொள்ளும். அந்தச் சூழ்நிலையை நாம் உருவாக்கி னால் இதைவிட இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்து வேறு கிடையாது என்று தெளிவாக நினைத்துத்தான் இலங்கை மீது ஒரு கண் வைத்துப் பார்க்க முடிவெடுத்தார்.
அதற்கு நல்ல வாய்ப்பாக தமிழக இளைஞர்கள் கிடைத்தார்கள் என்று கருதித்தான், தமிழர்களுக்கு ஆயுத உதவி மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கினார்.
ஆனால், இன்றைக்கு அந்த நிலை தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறதே! ஒரே ஒரு கொலை. இந்திராகாந்தியைக் கொன்ற அந்த சமூகத்தையே விரட்டித் துரத்திவிட்டார்களா? தண்டித்து விட்டார்களா? இல்லையே.
அந்த இனத்தைச் சார்ந்த மன்மோகன்சிங்தானே பிரதமராக இருக்கிறார்? தவறல்லவே? அப்படி இருக்கும்பொழுது தமிழனுக்கு மட்டும் இன்னொரு அளவுகோலா?
இதையே எவ்வளவு காலத்திற்கு நீங்கள் பேசிக்கொண்டிருப்பது? ஆகவே, ஈழத்தமிழர் களுக்கு தமிழ் ஈழம் என்பதைத் தவிர வேறு தீர்வே கிடையாது என்பதுதான் மிக முக்கியமானது.
எனவேதான், கடந்த காலம் எப்படி இருந்தாலும் இனிமேல் இந்தியாவினுடைய இறையாண்மைப் பாதுகாப்பைக் கருதி சீனத்திற்கும், பாகிஸ்தானத் திற்கும் போர்த்தளமாக இலங்கை அமைந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு மறுபடியும் மறுபடியும் இலங் கையைத் தட்டிக்கொடுத்தால், அது உங்களுக்கு எதிரான ஒரு நிலையை நீங்களே உருவாக்கிக் கொள்ளுகிறீர்கள் என்பதுதான் அதற்குப் பொருள்.
அதற்காகவாவது தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று சொல்லக்கூடிய புத்திசாலித்தனம், ராஜ தந்திரம் உங்களுக்கு வரவேண்டாமா? நேர்மைக் காக-மனிதநேயத்திற்காக வராவிட்டாலும் கூட, அரசியல் ராஜதந்திரத்திற்காக வரவேண்டாமா? என்று கேட்பதிலே தவறு ஒன்றும் இருக்க முடியாது.
ஆனால், தயவு செய்து கடந்தகாலத்திற்குப் பரிகாரம் தேட வேண்டும். இவ்வளவுக்கும் என்ன காரணம்? அவர்கள் ஒன்றை நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். தமிழர்கள் என்றால் அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டைகள். எல்லாம் தனித்தனிதான். சஞ்சீவி பருவதத்தின் சாரல் என்ற பகுதியிலே புரட்சிக் கவிஞர் அவர்கள் சொல்லுகிறார்:
ஏகமனதாகி அவர்கள் நம்மை எதிர்ப்பதெங்கே?
எல்லோரும் இங்கே
தனித்தனிதான்
என்று வார்த்தைகள் வரும்.
அது மாதிரி, எல்லாம் தனித்தனிக்கட்சி; தனித்தனி ஜாதி. இவர், அவரைக் குறை சொல்வார். அவர் இவரைக் குறை சொல்லுவார் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தநாட்டிலே எல்லாப் பிரச்சினைகளுக்கும் அரசியல். அதுவும் ஈழப்பிரச்சினையைக்கூட அரசியலுக்கு ஒரு மூலதனம் என்று சொல்லுவதைப் போல சிலர் ஆக்கிய காரணத்தால்தான் அதற்கு வலுவிழந்த சூழல் ஏற்பட்டது.
இதுவரையிலே நடந்தது எப்படியோ போகட்டும். எந்தக் கட்சியையும் குறைசொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுகூட எங்கள் நிலை அல்ல. நீங்கள் பொதுக்கண்ணோட்டத்தோடு ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நாம் அத்தனைபேரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்.
ஆனால், ஒன்றே ஒன்று-ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத்தர வேண்டும் என்றால், அந்த அரசியல் தீர்வு எதிலே அமைந்திருக்கிறதென்றால், தனி ஈழத்தில்தான் அமைந்திருக்கிறது என்று சொல்லுகிறவர்கள் யார் யாரோ (கைதட்டல்) அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரே மேடையிலே பேசுவதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
தீயை அணைக்க.... அது அல்லாமல் தீயை அணைக்க தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டுகிறவனோடு சேர்ந்து, பெட்ரோலைக்கொண்டு வந்து கொட்டி தீயை அணைக்கிறேன் என்று சொல்லுகிறவர்களை அடையாளம் காணவேண்டும்.
இருவரையும் ஒருவராகக் கருதி அவசரத்தில் ஏமாந்து போய் விடக்கூடாது. தமிழர்கள் ஒன்றுசேர வேண்டும். நான், சகோதரர் சுப.வீரபாண்டியன் இருவரும் பல கூட்டங்களில் பேசிக்கொண்டு வருகின்றோம்.
உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்-நீங்கள் எல்லாம் தனித்தனியாகப் பேசுவதற்குப் பதிலாக, நீங்கள் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள்.
சேர்ந்து குரல் கொடுக்கலாம். எங்களைப் பொறுத்த வரையிலே அதற்கு எந்தவிதமான மறுப்பும் கிடையாது.
ஆனால், உள்ளூர் அரசியலைப் பேசுவதற்கு இந்த மேடை. உள்ளூரில் ஓட்டு வாங்குவதற்கு இந்த மேடை என்று கருதி, திடீர் தேசியங்கள் முளைக் கின்றன.
திடீரென்று யார் யாருக்கோ பக்தி வருகிறது; யார் யாருக்கோ ஈழத்தின் மீது ஆசை வருகிறது என்று சொன்னால், அவர்கள் உள்ளபடியே ஈழத் தமிழர்களுக்காக கவலையோடு இருக் கிறார்கள் என்று பொருள்.
கருமத்திற்குரியவன் கடைசிவரையிலே இருப்பான் என்ற பழமொழியைப்போல நாங்கள் இதைச் சொல்லுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
அதிலே எங்களுக்கு எந்த மாறுபாடும் கிடையாது. ஆனால், ஒன்று-அந்த மேடையிலே உள்ளூர் அரசியலைப் பேசக்கூடாது. ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமைகூட தனிஈழம் மூலம் தான் பெற முடியுமே தவிர, வேறு எதையோ போட்டு ஒரு கந்தரிகோலத்தை உருவாக்கி விடக்கூடாது.
நீங்கள் அங்கே இருக்கலாம். இலங்கையில் சிங்களவர்களுக்குக் கீழே தமிழர்கள் இருக்கலாம். அந்த இறையாண்மைக்குக் கீழே நாங்கள் பேசமாட்டோம்.
அந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று பேச மாட்டோம் என்று சொல்ல முடியாது. ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்; ஒத்துப்போக முடியாதபொழுது அவள் விவாகரத்து- திருமண விலக்கு வாங்கிக்கொள்வ தில்லையா? இல்லை, கணவன் மனைவியைவிட உறவா சிங்களவன்-தமிழன் உறவு? அது வேண்டாம். ஒரு தாய் வயிற்றிலே பிறந்த அண்ணன் தம்பிகூட, அவர்களுக்குள்ளே ஒத்துப் போகவில்லையென்றால் பாகப் பிரிவினையைக் கொண்டு வருகிறார்கள். சட்டப் பூர்வமாக பாகங்களைப் பிரித்துக்கொள்கிறார்கள்.
என்னதான் நமது நண்பராக இருந்தாலும், என்னதான் நமக்கு வேண்டியவராக இருந்தாலும், தமிழ்நாட்டிலேயே ஒரு பழமொழி உண்டே-
தாயும் பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வெவ்வேறு என்று சொல்லுவார்கள். சாதாரண கிராம மக்களுக்குப் புரிந்த இந்த உண்மை அரசியல் வித்தகர்களுக்குப் புரிய வேண்டாமா? உங்களுடை யதும் எங்களுடையதுதான்; எங்களுடையதும் எங்களுடையதுதான் என்று சொல்லிக்கொண்டி ருந்தால் இது ஏமாற்று வேலை அல்லவா?
இல்லை, இல்லை, நாமெல்லாம் நட்பாக இருக்க வேண்டுமென்று சொல்லி நண்பர் ஒருவர் என் தோள் மீது கைகளைப் போட்டுக்கொண்டிருக் கிறேன் என்று சொல்லி, என் பையிலே கையை விட்டுக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால்-எவ்வளவு நாளைக்குப் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்?
நண்பர் சொல்வாரல்லவா-கை என்னுடையது; பை உன்னுடையது அதை ஞாபகப்படுத்துகிறேன் என்று சொல்ல மாட்டார்களா? அது மாதிரியான உணர்வை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளக் கூடிய கட்டாயம் வரும்.
மே 18ஆம் தேதி அமெரிக்கத் தமிழர்கள், கனடா நாட்டுத்தமிழர்கள் எல்லோரும் இணைந்து நியூயார்க்கிலே அய்.நா.சபைக்கு முன்னாலே மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக் கிறோம் என்று உலகத்தமிழர்கள் சார்பில் சொன்னார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நியாயம் கேட்க வேண்டும். குற்றவாளிக்கூண்டிலே ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக உங்களுடைய ஒத்துழைப்புத் தேவை என்று கேட்டதற்காக திராவிடர் கழகமும் அதிலே கலந்துகொள்ளும் என்று மிகத் தெளிவாகச் சொன்னோம். திராவிடர் கழகத்தின் சார்பிலே அதனுடைய தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் அங்கே அனுப்பப்பட்டிருக்கின்றார்.
நிச்சயமாக திராவிடர் கழகத்தின் சார்பாக 18ஆம் தேதி நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்களுடன் அவர் கலந்துகொள்வார்.
அதிலே பெரியார் பன்னாட்டமைப்பைச் சார்ந்த வர்கள் பங்கேற்பார்கள். பொதுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்தக் கண்ணோட்டமும் இல்லாமல் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமை இருக்க வேண்டும் என்ற அந்த ஒரே கண்ணோட்டத்தோடு மனித உரிமை மீறல்களுக்குத் தண்டனை கொடுக்கப் பட வேண்டும் என்பதற்காகத்தான். உலகத்தின் கண்கள் அகலமாகத் திறக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு கவனிக்க வேண்டும்
இதைவிட ஆழமாக மத்திய அரசினுடைய கண்களும், காதுகளும் முக்கியமாக கவனிக்கப் படவேண்டும். ஏனென்றால் இதிலே உரிமையோடு கேட்கக்கூடிய இதை வற்புறுத்தக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது.
ஈழத்தமிழர்களுக்கு விடிவு காணக்கூடிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே உரிமை யாளர்கள் கேட்கிறோம். கடமையாளர்கள் தங்க ளுடைய கடமைகளை செய்வதிலிருந்து ஒரு போதும் பின் வாங்கக்கூடாது என்பதை எடுத்துச் சொல்லுகிறோம்.
இல்லை இதே மாதிரி மெத்தனத்தோடுதான் இருப்போம் நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக பேசமாட்டோம். எதிரிகளுக்குத் தோள் கொடுப் போம் என்று சொன்னால் நிச்சயமாக தமிழ்நாடு தனியே சிந்திக்க வேண்டிய காலகட்டத்தை (கைதட்டல்) நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்றுதான் உங்களையே குற்றம் சொல்லமுடியும். பிரிவினை வாதத்தைப்பற்றி அண்ணா அவர்களிடம் கேட்டார்கள்.
நீங்கள் பிரிவினையை விட்டுவிட்டீர்களா? என்று கேட்டார்கள். அண்ணா சொன்னார்-பிரிவினையை விட்டுவிட்டோம். ஆனால் அதே நேரத்தில் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. இதை மறந்துவிடாதீர்கள் என்று சொன்னார்கள்.
இந்தச் செய்தியை தயவு செய்து மத்திய அரசு மறந்துவிடக்கூடாது. இது தமிழர்களுக்காக மட்டுமல்ல. மனிதநேயத்திற்காக, மனித நாகரிகத் திற்காக. எனவே தமிழர்களே, தமிழர்களே! கட்சி களால் பிளவுபட்டு நிற்காதீர்கள். ஏற்கெனவே காவிரிப்பிரச்சினை தீராததற்கு தமிழ்நாட்டு அரசியல்தான் காரணம்.
மற்ற மாநிலங்களில் ஒரே குரல்
கருநாடகத்திலே அத்தனை கட்சிக்காரர்களும் ஒன்றாக சேர்ந்து முன்னாள், இந்நாள் முதல்வர்கள் என்று எல்லோரும் அவர்களுடைய மாநில நலனுக்காக, மக்களுடைய நலனுக்காக குரல் கொடுத்தார்கள்-கருநாடகத்தில் அதிகமாக மழைபெய்து கிருஷ்ணராஜ சாகர் உடைந்து விடக்கூடாது என்று. அவர்கள் அணையைத் திறந்துவிட்டால் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரும்.
மற்ற சமயங்களில் நமக்கு உரிய நீர் கிடைப் பதில்லை. தமிழ்நாட்டிலே உள்ளவர்கள், இவர் காரணம், அவர் காரணம் என்று நமக்குள்ளேயே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். அதனா லேயே எதிரிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
முல்லை பெரியாறு அணையின் உயரத்தை சில அடிகள் உயர்த்துவதற்குக்கூட இதே சிந்தனை. பாலாற்றின் மீது தமிழக அரசு அணை கட்டுகிறது என்று சொன்னால், அங்கேயும் ஒருவருக்கு ஒருவர் அரசியலை உள்ளே போட்டு நடத்திக்கொண்டி ருக்கிறார்கள்.
ஆந்திராவிலே ஒரே குரல். கருநாடகத்திலே ஒரே குரல். கேரளாவிலே ஒரே குரல். தமிழ்நாட்டில் மட்டும் ஒரே குரல் அல்ல; கோரஸ் குரல், தனித்தனி குரல், அவலக் குரல், அசிங்கக் குரல் என்று இருக்கிறதே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? ஈழத்தமிழர்களுடைய கொடுமை களைப் பார்த்தாவது நமக்கு உணர்ச்சி வரவேண்டும்.
தற்காலிகமாக நீங்கள் மற்ற வேறுபாடுகளை மறந்துவிட்டு ஈழத்தமிழர்களுடைய வாழ்வுக்காக ஒன்றுபட்டு குரல்கொடுப்போம். அதுதான் மிக முக்கியம்.
அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் அழகாகச் சொன்னார்கள். பொதுப் பிரச்சினை என்று வருகிறபொழுது எது நம்மை இணைக்கிறதோ அதில் ஆர்வம் காட்டுங்கள். எது நம்மைப் பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத் துங்கள்.
நம்மை இணைப்பதை அகலப்படுத்துங்கள் நம்மை வேறுபடுத்துவதை அலட்சியப்படுத்துங்கள்; ஒன்று சேருங்கள் என்று சொன்னார்.
எனவே தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் உள்ளபடியே ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் விடுவதோ அல்லது இரங்குவதோ முக்கியமல்ல. அதைவிட தமிழர்கள் அத்துணைபேரும் ஒரே குரலில் தமிழ்ஈழம்தான் தேவை என்ற குரலை கொடுக்க வேண்டும். தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இனி எஞ்சியிருக்கும் தமிழ்மக்கள் ஈழத்திலே வாழ முடியும் என்பதை எடுத்துக்கூறி மத்திய அரசின் கடமையை நாம் இடையறாது வற்புறுத்தி இதில் கட்சி இல்லை; ஜாதி இல்லை; மதம் இல்லை. ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமைதான் முக்கியம். மனிதநேயம்தான் முக்கியம் என்று கூறி எனது உரையை முடிக்கிறேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
---------------- “விடுதலை” 10-5-2011
0 comments:
Post a Comment