Search This Blog

31.1.09

தந்தைபெரியாரின் ஆசிரியர் யார்?





தந்தை பெரியார் என்றால் சிந்தனை: சிந்தனை என்றால் தந்தை பெரியார் எனலாம். எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும். சிந்தனை இருந்தால்தான் உண்மையை விளக்க முடியும் என்கிறார் பெரியார். சாக்ரடீஸ் உண்மை அறிவது ஒன்றே என் விருப்பம் என்கிறார். பள்ளியில் படித்து தெளிவு பெறுகிறவர்களின் அறிவைவிட சிந்தனையில் ஈடுபட்டு தெளிவு பெறுகிறவர்களின் அறிவு சிறந்து விளங்குகின்றது. முன்னது சுருக்கமானது; பின்னது எல்லையற்றது என்று மௌலானா ரூமி குறிப்பிட்டுள்ளார். அறிஞர் வ.ரா.வோ யோசிப்பது குரு இல்லா வித்தை என்கிறார்.

பெரியார் நாளும் சிந்தனை வயப்பட்டவராகவே இருப்பார் என்பதை அவரது முகபாவங்களே காட்டி நிற்கும். பெரியார் கூட்டத்தில் பேசும்போதும் மற்றவர்களுடன் உரையாடும் பொழுதும் விவாதிக்கும்போதும் அந்தத் தாமரை முகத்தில்தான் எத்தனை பாவங்கள்; எத்தனை நளினங்கள்.

பெரியாருக்கு அழகான உருண்டை முகம். ஒரு தனியான முகவெட்டு, என்னவோ ஒரு விதமான கவர்ச்சி என்கிறார் பேராசிரியர் சாமி. சிதம்பரனார்.

முகத்தின் தோற்றம் பேச்சைவிட வன்மை மிக்கது என்றும், ஒளியும், பொலிவும் பெற்ற முகமே ஒரு நற்செய்த என்கிறார் பாரசீகப் பெருங்கவிஞர் சஅதி.

பெரியாரின் வாழ்க்கையே பயணத்தில் தொடங்கி, பயணத்திலேயே முடிவடைந்தது. அதனால்தான் முதல்வர் டாக்டர் கலைஞர், பெரியார் தம் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார் என்று தம் இரங்கல் உரையில் மிக சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

பெரியார் பயணங்கள் பலவும் தொலைதூர நெடும் பயணமாகவே அமைந்துவிடும். ஒரு சிலவே குறுகிய பயணங்களாக இருக்கும். அப்பயண காலங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வருவார்.

அச்சிந்தனை பகலில் கரு, உரு கொண்டு பின் இரவுக்குப்பின் கிழக்கே வெள்ளி முளைக்கும் நேரத்தில் பிரசவிப்பார்; கட்டுத்தாள் பெரிய பேனாவால் கரகரவென எழுதிக் குவித்து விடுவார். எழுதும் தாள்களில் எண்மட்டும் குறித்திருக்க மாட்டார். அது அவரது உதவியாளர்களுக்கே பரிச்சயமாகும்.

அவர் எழுதிய அறிக்கைகளோ அல்லது ஆய்வுக் கட்டுரைகளோ ஒரு கட்டுக்கோப்பை பெற்றிருக்கும் இப்படி உயிரோட்டமாகவும், நடைமுறையாகவும் எழுதுபவர்கள் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை எனலாம்.


எதையும் பெரியார் நிர்வாணக் கண்களால் நிர்வாணமாகப் பார்த்துப் பச்சை மொழியில் பேசி எழுதுகிற பழக்கமுடையவன் என்கிறார். இதை அவரது பேச்சிலும், எழுத்-திலும் கண்டு வியக்கலாம்.

இவ்வாறெல்லாம் பேசியும், எழுதியும் மறுமலர்ச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய பெரியாருக்கு குரு, ஆசிரியர் இருந்திருக்க வேண்டாமா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பெரியாரே, என் பகுத்தறிவே என் குரு, என் வழிகாட்டி, என் செல்வம் என்கிறார்.


---------------------- சு.ஒளிச்செங்கோ அவர்கள் "உண்மை" ஜனவரி 1-15 2009 இதழில் எழுதியது.

விடுதலைப்புலிகள் " போராளிகளா"? - "பயங்கரவாதிகளா"?


போராளிகளே தவிர பயங்கரவாதிகள் அல்லர்!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அறிவுரை கூறுவதாக, கருத்துக் கூறுவதாக நினைத்துக்கொண்டு பலரும் அவரவர் பாணியில் இஷ்டத்துக்குக் கருத்துகளைக் கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

(1) இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள்.

போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக - அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள் - உறுதியாகவும் உள்ளனர்.

ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும் - உண்மையிலே போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத் தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்டால், விடுதலைப்புலிகள்மீது பழி சுமத்துவது அபாண்டமே என்பதைப் புரிந்துகொள்வர்
.

(2) போரை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை என்றும், அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கதைக்கின்றனர்.

நார்வேயின் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நின்றிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியவர்கள் யார்? தன்னிச்சையாக இலங்கை அரசுதானே போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின் வாங்கியது? இந்த நிலையில், விடுதலைப்புலிகளையும், சிங்கள அரசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது குற்றமேயாகும்.

(3) விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால்தான் பேச்சுவார்த்தை என்பதும் முன்வைக்கப்படுகிறது.

ஏதோ விடுதலைப்புலிகள் போர் வெறிகொண்டு சிங்கள இராணுவப் படையைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு இதுபோன்ற நிபந்தனையை முன்வைக்கின்றன.

உண்மை என்னவென்றால், இலங்கையில் தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே எந்த ஆயுதத்தையும் தூக்கிக்கொண்டு முன்வரவில்லை.

ஈழத் தந்தை என்று மதிக்கப்பட்ட செல்வநாயகம் அவர் களின் தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியோடு அல்லாமல், அந்த அகிம்சைவாதிகளை அரசின் அதிகாரபலம் கொண்டு அடித்துத் துவைத்தனர் என்ற அரிச்சுவடி தெரியாதவர்கள்தான் தன் மனம் போன போக்கில் விடுதலைப்புலிகளால் தான் பிரச்சினை என்று பொறுப்பற்ற முறையில் கருத்துகளைக் கூறிக்கொண்டு திரிகின்றனர்.


(4) தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி பறிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மாணவ - மாணவிகளுக்குக் கல்வியில் பாரபட்சம் காட்டியதுவரை எடுத்துச் சொன்னால், அது ஒரு பெரிய தொகுதியாகவே நீட்சி அடையும்.

ஈழத் தமிழ்த் தலைவர்கள் சாத்வீகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற தமிழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டது என்கிற விவரம் எல்லாம் தெரியாமல், வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்ற முறையில், வெறுப்பு நஞ்சைக் கக்கும் வகையில் வஞ்சகமாகப் பேசுகின்றனர் - எழுதியும் வருகின்றனர்.


தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட நிலையிலும், சிறையில் இருக்கும் தமிழர்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற கொடுமையான சந்தர்ப்பத்திலும், தமிழ்ப் பெண்கள், மானம், மரியாதையோடு வாழ முடியாது - சிங்கள வெறித்தனத்தின் உடல் பசிக்கு தமிழ்ப் பெண்களின் உடல் இரையாக்கப்படுகிறது என்ற கொடுமையான காலகட்டத்தில்தான் அங்கே போராளிகள் உருவாகவேண்டிய நிலையும், ஆயுதங்களைத் தூக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட்டு, நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும்.

இந்தப் பிரச்சினையில் பார்ப்பனர்களும், ஜெயலலிதாக்களும், காங்கிரஸ்காரர்களும், குறிப்பிட்ட இடதுசாரிகளும் போராளிகள்மீது அபாண்டம் பேசுவது கண்டிக்கத் தக்கதாகும்.


-----------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் -31-1-2009

பார்ப்பன பனியா கூட்டத்தின் சதித் திட்டம்!






7-ஆவது என்.ஆர்.அய். மாநாடு (வெளி நாடு வாழ் இந்தியர்கள்) முதன் முறையாக தமிழ்நாட்டில் இம்மாதம் 7 முதல் 9 முடிய சென்னையில் நடைபெற்றது. 40 நாடுகளிலி ருந்து 1500 செல்வாக்கு மிக்க இந்தியர்கள் கலந்து கொண்டனர், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பங்கேற்றார். தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியும் பங்கு கொள்ள, பார்ப்பன ஊடகங்கள் மோடியின் பேச்சை ஆகா ஊகா என்று பாராட்டின.

அதே போல உலகம் தழுவிய முதலீட்டாளர்களின் உச்சி மாநாடு ஒன்று சனவரி 13-ஆம் தேதி டில்லியில் நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள் அனில் அம்பானி, சுனில் மிட்டல், ரட்டன் டாட்டா முதலியோர் பங்கு கொண்டு, குஜராத் முதல் அமைச்சர் மோடியைத் தலையில் தூக்கி வைத்து ஆடினர். எதிர்காலப் பிரதமருக்குத் தகுதியானவர் நெய்யில் பொரித்த இவர்தான் என்று ஏகப்பட்ட புகழாரங்களைச் சூட்டினர்.

பார்ப்பனர்களும், பண முதலைகளும் இப்படி ஒரு கருத்தை சன்னமாக மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

குஜராத்தை இந்தியாவிலேயே முதல் நம்பர் தொழிற்கூடமாக மாற்றிக் காட்டிய முத்தான மனிதர் இவர்தான். இவர் இந்தியாவின் பிரதமராக வந்தால் இந்தியாவையே குஜராத்தாக மாற்றிக் காட்டுவார். வறுமை ஒழியும் வாட்டங்கள் பறக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் திண்டாட்டமாகி விடும் என்பது போல பாமர மக்களின் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.

அதற்கு ஏற்றாற்போல ஊடகங்களும் பார்ப்பனர்கள் - பனியாக்கள் - முதலாளிகளின் கைகளிலேதானே வசமாகச் சிக்கிக் கிடக்கின்றன பிரச்சாரத்தால் ஆகாதது எது என்ற இறுமாப்பில் மேய்ந்து கொண்டிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று மோடி அழைக்கப்பட்டது ஏன் என்ற பின்னணியைத் தெரிந்து கொண்டால் தான் மோடி என்கிற மோசக்கார மனிதனின் முழுப் பரிமாணம் தெரிய முடியும்.

1) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை என்பதில் நம்பிக்கை கொண்டவரா இந்த மனிதன்?

முதலில் இதற்குப் பதில் சொல்லி விட்டல்லவா அடுத்தடுத்து ஆசைகளைப்பற்றி வாயூறப் பேச வேண்டும்.

ஹிந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று கூறும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர் தேர்தலில் நிற்கக் கூட சட்டரீதியாகத் தகுதியற்றவராயிற்றே. இந்த நிலையில் பிரதமர் என்கிற நினைப்பு பிழைப்பைக் கெடுக்காதா?

2) இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களான முசுலிம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரண மாக இருந்த ஒருவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று ஒரு சிறு கூட்டம் சதிக்கிருமிகளை ஊடுருவ விடுகிறது
என்றால், அதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

3) 2002-இல் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு சிறுபான்மை மக்களின் உயிர்களைக் குடித்தகொடுமை மட்டுமல்ல; அவர் தொடக்கமும், தொடர்ச்சியும் முடிவும் எல்லாமே சிறுபான்மை மக்களின் ரத்தத்தைக் குடித்துப் பசியாறுவது தான் - தாகம் தீர்ப்பதுதான்!

People's Democracy ஏட்டில் வெளிவந்த தலையங்கத்தை தீக்கதிர் ஏடு (9.9.2008) தமிழில் தந்துள்ளதை எடுத்துக் கொள்ளலாம்.

1998 டிசம்பர் 25 முதல் 31 வரையிலான தேதிகளில் இந்துத்துவா சக்திகள் குஜராத்தில் மிகச் சிறிய டாங்ஸ் மாவட்டத்தில் ஒன்பது தேவாலயங்களை தீக்கிரையாக்கி யுள்ளன. பதினொரு தேவாலயங்களிலிருந்து அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கியுள்ளன. மிகத் திட்ட மிட்ட கொரில்லா உத்திகளின் அடிப்படையில், ஒவ்வொரு நாள் இரவும், ஒரு வாரம் முழுவதுமாக இத்தகைய நடவடிக் கைகளில் நூற்றுக்கணக்கானோர் கிராமங்களில் புகுந்து, தேவா லயங்களையும், பிரார்த்தனைக் கூடங்களையும் தீக்கிரை யாக்கியும், பொருள்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத் தியும், கிறித்துவ மத நம்பிக்கையுடைய ஆண்கள் பெண்கள் அனைவரையும் அடித்து நொறுக்கியும் உள்ளனர். இது இந்திய அரசியல் அமைப்புக் கூட்டம், நாட்டில் உள்ள அனைத்துக் குடி மக்களுக்கும் உறுதி அளித்துள்ள தனி நபர் சுதந்திரத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும். இது ஜனநாயகத்தை பெரும்பான்மையான வாதமாகக் (Majoritiarianism) குறைத்திடும் நடவடிக்கையாகும் என்று பீப்பிள்ஸ் டெமாக்கிராஸி தலையங்கம் தீட்டியதி லிருந்து குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியை - நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றம் ஏன் விமர்சித்தது என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளலாமே.

டாங்ஸ் மாவட்டத்தில் நடந்த இந்தக் கேவலமான காட்சிகளை நேரில் கண்ட நிலையில் தான் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன்! என்று வெளிப் படையாகவே கூறினார்!

அக்கட்சியின் பிரதமரே அநாகரிகமாகக் கருதும் அளவுக்கு நடந்து கொண்ட ஒரு பாசிஸவாதியை இந்தியாவின் பிரதமராக்கத் துடிக்கிறது ஒரு குள்ள நரிக் கூட்டம் என்பதை வெகு மக்கள் வெகு எச்சரிக்கையுடன் நோக்க வேண்டும்.

பா.ஜ.க. சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் அத்வானியா - நரேந்திர மோடியா என்றெல்லாம் அவாள் வட்டாரத்துக் குள்ளேயே போட்டா போட்டி!

அந்த இருவருள் ஒருவரான அத்வானியால் எழுதப்பட்டு அண்மையில் வெளியிட்ட என் நாடும் என் வாழ்க்கையும் என்ற நூலில் இடம் பெற்றுள்ள ஒரு தகவல் - மோடி எந்த அளவு பிரதமருக்கான வேட்பாளர் என்பது ஒரு புறம் இருக்கட்டும் - முதல் அமைச்சருக்கே தகுதியானவரா அவர் என்பதை எடை போட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

குஜராத்தில் நடந்த சம் பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறியதாகவும், அதற்கு மோடியும் கோவாவில் நடக்க விருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வ தாகவும் கூறினார் என்று கூறப்பட்டுள்ளதே - இதற்கு என்ன சமாதானம்?

இதற்கான பதில் இவ்வளவு கேவலமான, குரூரமான செயலில் ஈடுபட்ட ஒருவர் முதல் அமைச்சர் பதவியிலிருந்து பிரதமராகப் பதவி உயர்வு தரப்பட வேண்டும் என்பதுதானா?

என்ன அசட்டுத் தைரியம் இருந்தால் சோ ராமசாமி அய்யர்.

மோடி குஜராத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன்பிறகு, நிச்சயம் தேசிய அரசியலில் அவர் முக்கியத்துவம் பெறுவார். உடன டியாக இல்லாது போனாலும் எதிர்காலத்தில் மோடி இந்திய பிரதமராவது நிச்சயம்! என்று பேட்டி கொடுக்கிறார் (கல்கி 6.4.2008).


2002 குஜராத் இனப்படு கொலைக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்று ஆட்சிப் பீடம் ஏறியுள்ளாரே என்று வேறு இந்தக் கூட்டம் கதைக்கிறது. ஜெர்மனி நாட்டில் அடால்ப் ஹிட்லர்கூட தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்தவர்தான் (1933).

யூதர்களையும் கம்யூனிஸ்டுகளையும் தன் எதிரியாக அன்று ஹிட்லர் கருதினான் என்றால், இங்கு இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் கொடிய பகைவர்களாக இந்த மோடிக் கூட்டம் கருதுகிறது. வரலாறு இப்படித்தான் சுழன்று கொண்டு இருக்கிறது.

ஒரு அறையில் தள்ளி விஷவாயு வைத்து எதிரிகளைக் கொன்று குவித்த ஹிட்லருக்கும், ஒரு குடும்பத்தையே பேக்கரி அடுப்பில் விறகாக வைத்துக் கொன்ற மோடிகளுக்கும் அடிப் படையில் வேறுபாடு என்ன!

ஒரு நாட்டைத் தொழில் வளமாக்குவதுதான் பிரதமர் ஆவதற்கான முதல் தகுதியா?

குடி மக்களை சகோதரத்துவத் துடன் கருதாத - கருத முடியாத கூட்டம் கழுகு வகையைச் சார்ந்ததாக இருக்க முடியுமே தவிர, மனித வகையில் சேர்த்துப் பார்க்க முடியாதே!

குறிப்பிட்ட - மதத்தைச் சார்ந்த மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக் குறியாக - கேலிக் குறியாக ஆக்கும் வஞ்சகர்கள் தான் இந்தியாவில் பிரதமராவதற்கு லாயக்கு என்று ஒரு கூட்டம் கூறுகிறது - திட்டமிடுகிறது என்றால் அந்தக் கூட்டம் நாட்டில் வாழ்வதற்குப் பதிலாகக் காடுகளில் மட்டும் திரியக் கூடிய அளவுக்குத் தகுதி வாய்ந்ததுதான்.

பிரச்சாரப் பலத்தினால் மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணத்தையும் பால், தயிர், வெண் ணெய்யையும் ஒன்றாகக் கலக்கி பஞ்சகவ்யம் என்று கொடுத்து காணிக்கையையும் பெற்றுக் கொண்டு நம்மைக் குடிக்க வைக்கும் கூட்டமாயிற்றே!

மோசடியின் மறுபெயரான மோடியைத் தூக்கி நிறுத்துவதும் அந்த வகைதான் - எச்சரிக்கை!


-----------------------நன்றி: மின்சாரம் அவர்கள் 31-1-2009 "விடுதலை' ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா?




ஜெயலலலிதா யாரை ஏமாற்ற முயலுகிறார்?

“I have always been a staunch opponent of the L.T.T.E.”

(விடுதலைப்புலிகளின் கடுமையான எதிரியாகவே நான் எப்போதும் இருந்து வந்திருக்கிறேன்) என்று ஜெயலலிதா கூறி அனைத்து ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா?

அவர் எப்படிப்பட்ட புளுகர் என்பதைத் தெரிந்துகொள்ள, இதோ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு 4.10.1990 அன்று செல்வி ஜெயலலிதா சிறப்புப் பேட்டியொன்று அளித்துள்ளதைப் படித்துப் பாருங்கள்!

"சிங்கள ராணுவமும், காவல்துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவிற்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை. இப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது. இது ஓர் அதிதீரமான செயல். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்தவேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இலங்கைத் தமிழர்களின் கதிபற்றி பிரதமர் வி.பி. சிங் எந்தவிதக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கவேண்டும். மத்திய அரசு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி சமாதானத் தீர்வு ஒன்றைக் காணவேண்டும். அல்லது விடுதலைப்புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்கவேண்டும்.

செய்தியாளர்: விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்துவிட்டது. ஆனால், நீங்கள் இன்னமும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே?

ஜெயலலிதா: நம்முடைய முக்கிய நோக்கம் என்ன? தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடக்கூடாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப் படுகொலையிலிருந்தும் பூண்டோடு ஒழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படவேண்டும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தவறுகளைச் செய்துள்ளனர். ஆனால், நாம் விடுதலைப்புலிகளை ஆதரிக்காவிடில் அது இலங்கையில் தமிழ் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும். அதை நாம் அந்த நோக்கோடு பார்க்கவேண்டும்.

செய்தியாளர்: எம்.ஜி.ஆர். செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யவில்லையா?

ஜெயலலிதா: அதற்கான எந்தத் தடயத்தையும் நான் காணவில்லை.

***

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் மாத்திரமல்ல, 8.10.1990 தேதியிட்ட இந்து இதழிலே ஜெயலலிதா விடுதலைப்புலிகளைப்பற்றி ராஜீவ் காந்தி அவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குறிப்பிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:-

இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாததற்காக ஜெயலலிதா மத்திய அரசையும், மாநில அரசையும் குற்றஞ்சாட்டினார். இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் அத்தீவில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிந்துவிடும் என்று ஜெயலலிதா எச்சரித்தார்.

இது மாத்திரமல்ல, 29.4.1991 தேதிய இந்து நாளேட்டுக்கு ஜெயலலிதா பேட்டியளித்தபோது, பங்களாதேஷ் பிரச்சினையில் இந்திரா காந்தி செய்ததைப்போல ராணுவ நடவடிக்கைபற்றி இந்தியா சிந்தித்தால், அதில் தவறு எதுவுமில்லையென்று நான் கருதுகிறேன் என்றும் கூறி அது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவிற்கு இன்று நெருங்கிய ஆதரவாளராக உள்ள சுப்பிரமணியம் சுவாமி 21.7.1995 அன்று ஜெயின் கமிஷன் விசாரணையிலே கூறியது என்ன தெரியுமா?

ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்பும், பின்பும் ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரச்சாரகராகவே விளங்கினார். ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாமென்று ஜெயலலிதாவிற்கு விடுதலைப்புலிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததால், அ.தி.மு.க.வும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி வைத்திருந்தபோதிலும், ராஜீவ் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, விமான நிலையத்திலே ராஜீவ் காந்தியை வரவேற்கவும் செல்லவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு இந்த அளவிற்கு ஆதரவாளராக இருந்தவர் தற்போது விடுதலைப்புலிகளுக்குத் தான் என்றைக்கும் எதிரியாக இருந்துள்ளதாக கடைந்தெடுத்த பொய்யைக் கூறி யாரை ஏமாற்ற முயலுகிறார்?

------------------நன்றி: "முரசொலி", 30.1.2009

30.1.09

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா?




உழைத்திடும் பிறவியும், ஓய்வெடுக்கும் உல்லாசியும்!

கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

கடுமையான முதுகுவலி, விலாப்புற வலிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் என்னிடம் முன்னாள் முதல்வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான அம்மையார் ஜெயலலிதா சில கேள்விகளைக் கேட்டு, அதனை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். அவர் கேட்டுள்ள கேள்விகளும், அவற்றுக்கு என் பதில்களும், விளக்கங்களும் வருமாறு:

கேள்வி: தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தி அவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா? அப்படியானால் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, மைனாரிட்டி அரசின் முதலமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக இல்லையா? மனவுறுத்தலாக இல்லையா?

கலைஞர்: 1991 பொதுத் தேர்தல் நேரத்தில் மே 21-ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது அமைக்கப்பட்டிருந்த தேர்தல் கூட்டணியின் தலைவராக ராஜீவ் காந்தி இருந்தார். காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காகத் தான் சென்னைக்கு விமானம் மூலம் அவர் வந்தார். அப்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவரும் - இந்தியப் பிரதமருமான ராஜீவ் காந்தியை வரவேற்க அந்தக் கூட்டணியிலே உள்ள கட்சிகளில் ஒன்றான அ.திமு.க., சார்பில் யாரும் சென்னை விமான நிலையத்துக்குப் போகவில்லை என்பது உண்மையா? பொய்யா? உண்மை என்றால் ராஜீவின் படுகொலை முன்கூட்டியே அதிமுகவினருக்கு தெரிந்திருக்கிறது என்று தானே நினைக்க வேண்டியுள்ளது? இதுபற்றிய சந்தேகத்தை சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் அப்போதே எழுப்பியது உண்டா இல்லையா?

மைனாரிட்டி அரசின் முதலமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது எனக்கு வெட்கமாக இல்லையா என்று ஜெயலலிதா கேட்டுள்ளார். மைனாரிட்டி சமூக மக்களின் முன்னேற்றத்தையும் கருத்திலே கொண்டு ஓர் அரசு நடத்துவதில் வெட்கம் என்ன வந்து கிடக்கிறது? மாறாக மைனாரிட்டி மக்களுக்குத் தொண்டாற்றுவதைப் பெருமையாகக் கருதுபவன் நான். தேர்தல் ஆணையத்தாலேயே பொதுத் தேர்தலில் போட்டியிட தகுதியற்று, பின்னர் ஆளுநரின் ஒத்துழைப்போடு முதலமைச்சராக இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகப் பதவியேற்று, பிறகு நீதிமன்றம், இவர் பதவியேற்றது செல்லாது என்று தீர்ப்பு கொடுத்த போது இவருக்கு வெட்கம் வரவில்லையா? மனவுறுத்தல் ஏற்படவில்லையா? இளந்தலைவர் ராஜீவ் காந்தியின் துணைவியார் அன்னை சோனியா காந்தி அவர்களை வெளிநாட்டுக்காரி என்று விமர்சனம் செய்து விட்டு, பிறகு அவருடன் தோழமை கொள்வதற்காக டெல்லியில் தேநீர் விருந்து வைத்த போது இவரது வெட்கம் எங்கே போயிற்று? என்ன இருந்தாலும் வெட்கம், மானம் பற்றி அவர் பேசக் கூடாது; அது ஏன் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியுமே!

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்றளவும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்தபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார். தி.முக.வும்., அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கின்றன. திமுக கூட்டணியில் உள்ள எந்த மத்திய அமைச்சருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாதா? ஏன் அவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை? தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பதவியை ஏன் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை?

கலைஞர்: மத்திய அரசின் சார்பில் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவிகள் அனுப்புவதைப் பற்றி மாநில அரசுகளைக் கலந்து கொண்டோ, அல்லது மத்திய அமைச்சர்கள் அனைவரையும் கலந்து கொண்டோ செய்யப்படுவதில்லை என்ற சிறு விஷயம் கூட பத்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு தெரியாமல் இருப்பது வேதனைதான். பாதுகாப்பு போன்ற துறைகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய நியாயமில்லை. இன்னும் சொல்லப் போனால், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஆனாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்கள் ஆனாலும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை அனுப்பியதாகத் தெரிவிக்கவில்லை. மாறாக அதை மறுத்தும் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா என்னைப்பார்த்து என்ன செய்து கொண்டிருந்தேன் என்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதுதான் இலங்கைக்கு மத்திய அரசு மூலம் ராணுவ உதவிகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது இவர் முதலமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்து கொண்டிருந்தார் என்று நான் திருப்பிக் கேட்க மாட்டேன். காரணம் ராணுவ உதவியெல்லாம் மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டு செய்யப்படுவதில்லை என்பதை நான் அறிவேன்.

கேள்வி: இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்தபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார் என்ற ஜே கேள்விக்கு என்ன பதில்?

கலைஞர்: இரண்டாவது கேள்விக்கு அளித்துள்ள பதில் தான் இந்தக் கேள்விக்கும்! நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று திரும்பத் திரும்ப ஜெயலலிதா கேட்கிறார். கொட நாடு எஸ்டேட்டில் மாதக் காணக்கில் ஓய்வு, சிறுதாவூர் பங்களாவிலே வாரக்கணக்கில் ஓய்வு, பையனூர் மாளிகையிலே நாட்கணக்கிலே ஓய்வு, இதற்கிடையே அய்தராபாத் திராட்சை தோட்டத்திலே ஓய்வு என்று நான் எப்போதும் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை. நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று கேட்பதற்கு அவருக்கு எவ்வித அருகதையும் எப்போதும் கிடையாது. ஏனென்றால் நான் உழைக்கப் பிறந்த பிறவி. அவர் ஓய்வெடுக்கப் பிறந்த உல்லாசி!

கேள்வி: காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது தனி நாடு கோரிக்கை குறித்து, கருணாநிதி மற்றும் திமுக.வின் நிலைப்பாடு என்ன?

கலைஞர்: திமு. கழகத்தின் பிரிவினைக் கொள்கை குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் தன் கைப்படவே எண்ணித் துணிக கருமம் என்ற தலைப்பில் நூலாகவே எழுதி வைத்துள்ளார். ஜெயலலிதாவிற்கு அதையெல்லாம் படித்திட நேரம் இருந்திருக்காது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை ஜெயலலிதா தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், கழக சட்ட திட்டப் புத்தகத்தில் விதி 2 மற்றும் விதி 3 ஆகியவற்றைப் படித்துப் பார்க்கட்டும்.

விதி 2: குறிக்கோள் என்ற தலைப்பில் இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில்முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது என்பது தி.மு. கழகத்தின் குறிக்கோள் ஆகும்.

விதி 3: கோட்பாடு என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்; பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவைகளுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவாலக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் மத்தியில் கூட்டாசியும் (Autonomy for States and Federation at Centre) உருவாகிடவும் தொண்டாற்றுவது.

அன்புள்ள,
மு.க.,

-----------------------நன்றி:- "விடுதலை" 30-1-2009

காந்தியார் படுகொலை நாளில் சிந்திக்க வேண்டிய கருத்துகள் சில




உலக உத்தமர் என்று போற்றப்படும் காந்தியார் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (30.1.1948).

இந்நாளில் மக்கள் சிந்திக்க வேண்டிய கருத்துகள் சில:

இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று காந்தியார் பிரகடனப் படுத்தியது 7.12.1947. இதற்காக அவர் படுகொலை செய்யப்பட்டது 30.1.1948. அதாவது சுதந்திரம் அடைந்து சரியாக 165ஆம் நாள்; மதச் சார்பற்ற நாடு என்று காந்தியார் சொன்ன 54-ஆம் நாளில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

சோமநாதபுரம் கோயில் கும்பாபிஷேகம் அரசு செலவில் செய்யப் போவதாக அறிந்தேன். அதனை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நம் எல்லோருக்கும் சேர்த்துதான் அரசு. செக்குலர் கவர்ன்மெண்ட் இது. ஒரு மதத்தைச் சேர்ந்த நாடல்ல இது. எனவே அரசுப் பணத்தை ஒரு குறிப்பிட்ட வகுப்பார் கோயிலுக்குச் செலவு செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றார் காந்தியார் (28.11.1947)

இந்தச் சூழலில் தான் பார்ப்பன வெறிக் கும்பலால் திட்டமிட்ட வகையிலே காந்தியார் படுகொலை செய்யப்பட்டார். மும்பையில் கடந்த இரு நாள்களுக்கு முன் கூடிய பார்ப்பனக் கும்பல் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லப்பட்டதால் தான் மோசம் போய் விட்டோம் என்று கூறியுள்ளது.

இந்தக் கும்பல்தான் மத்திய ஆட்சியைப் பிடிக்கத் திட்டம் போடுகிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!!

------------------- நன்றி: "விடுதலை" 30-1-2009

பார்ப்பனரின் பிறவிக்குணம் மாறவே மாறாது!




சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும் எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ளவேமாட்டான் என்றார் திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட டாக்டர் டி.எம். நாயர் அவர்கள்.


பிறவிக் குற்றவாளிகள் பார்ப்பனர்கள் என்பதும் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பே!

ஆரியம் ஒரு நடமாடும் நாகம் என்றார் அறிஞர் அண்ணா.


இவையெல்லாம் ஏதோ ஓர் இனத்தின்மீது ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியாலோ, வெறுப்புணர்ச்சியாலோ, பகைமை உணர்ச்சியாலோ கூறப்பட்ட கருத்துகளோ, கணிப்புகளோ அல்ல!

பார்ப்பனர்களின் கடந்தகால, நிகழ்கால நடப்புகளை, போக்குகளைக் கண்டு கணித்துச் சொல்லப்பட்ட அரிய உண்மைகளாகும்!

இதைக் கண்டுபிடிப்பதற்காக பெரிய ஆய்வுகளில் மூழ்கவேண்டாம் - பழைய ஏடுகளைத் தேடிக் கொண்டும் திரிய வேண்டாம் நம் கண் முன்னே நடக்கும் நாட்டு நடப்புகளை எடை போட்டுப் பார்த்தாலே இந்தக் கூற்றின் உண்மை - உண்மையிலும் உண்மை என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளலாமே!

மும்பையில் பல்வேறு பார்ப்பன அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வெளிப்படையாக ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளாத பார்ப்பனர்களும், சங்கராச்சாரியரான பார்ப்பனரும், அரசியல் தரகரான பார்ப்பனரும், சங் பரிவார்ப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்திருப்பதும் - அதற்குப் புதிய நாமகரணம் சூட்டியிருப்பதும், தங்களின் பார்ப்பனத்தனத்தைக் கட்டிக் காக்க சூளுரைப்பதும் எதனைக் காட்டுகிறது?

1. இந்தியா - இந்து நாடென்றும், மதச்சார்பற்ற நாடாக ஆக்கியதன் விளைவாகவே நாடு அழிந்துவிட்டது என்றும் ஒரு பார்ப்பனர் சொல்கிறார்.

அரசியல் தரகரான இன்னொரு பார்ப்பனரோ வரலாற்றையே திருத்தி எழுதிடவேண்டும் என்று அறிக்கை கொடுக்கிறார். (பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது அந்தக் காரியத்தைத்தானே செய்தார்கள் - சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று காட்டுவதற்காக காளையை கணினிமூலம் (கிராஃபிக்ஸ்) குதிரையாக்கிக் காட்டவில்லையா?).

பாடப் புத்தகங்களைப் பார்ப்பனக் கலாச்சாரத்திற்குத் தோதாக மாற்றி எழுதவேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கிறார்.

நாட்டின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் ஆக்கப்படவேண்டும் என்று இன்னொரு பார்ப்பனர் ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார்.

இவற்றின் பொருள் என்ன? இந்தியா பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள் மற்றும் மதமற்றவர்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதை இந்தப் பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லை என்பது விளங்கவில்லையா?

இதன்மூலம் இந்தச் சமூக அமைப்பிலிருந்து அவர்கள் தங்களை அந்நியப்படுத்திக் கொள்கின்றனர் என்பது பெறப்படவில்லையா?

சமஸ்கிருதம் ஆட்சி மொழியாகவேண்டும் என்ற கருத்தை ஏதோ இன்று நேற்று சொல்வதாக யாரும் கருதத்தேவையில்லை.

1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோதே சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வருவதற்காகவே இப்பொழுது இந்தியைத் திணிக்கிறேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும்போது குறிப்பிட்டாரே! (24.1.1937).

ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், நமது பழைய பெருமைகளுக்குத் திறவுகோல் சமஸ்கிருதமே என்று மேலும் அங்கு கூறினாரே!


1914-1919 - ஹோம் ரூல் இயக்கக் காலத்தில் இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து, இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவையென்றும், அந்தப் பொது மொழி சமஸ்கிருதம் என்றும் பிரச்சாரம் செய்து வந்தேன். அப்போது கொண்ட இந்தக் கருத்தை பின்னரும் நான் விடவில்லை. உண்மைத் தேசிய மொழியும், ஹிந்து மொழியின் தாயுமான இந்த சமஸ்கிருத மொழி எளிமையாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளவும், பேசவும் தகுந்ததாகச் செய்யப்படவேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவிருந்த சர்.சி.பி. இராமசாமி அய்யர் உதகமண்டலத்தில் நடைபெற்ற இந்தி பிரச்சார சபைக் கூட்டத்தில் கூறினாரே - (5.6.1953) இதற்கெல்லாம் பொருள் என்ன?

பார்ப்பனர்கள் எந்தக் காலத்திலும் அவர்களின் ஆதிபத்தியத்தைக் கட்டிக் காப்பதிலே குறியாகயிருக்கின்றனர் என்பதுதானே! இதனைப் பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொள்ளவேண்டாமா?

---------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 30-1-2009

பெரியார் சிந்தனைத் துளிகள்


தகுதியுடையவன்

"காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடைய வனாவான்."

("குடிஅரசு", 26.1.1936)


கிடைக்காது!

"உலகில் எந்தத் தொண்டு செய்கிறவர்களுக்கும் மரியாதை கிடைக்கும். ஆனால், சமுதாயத் தொண்டுக்காரர் களுக்கு மட்டும் மரியாதை கிடைக்காது."

("விடுதலை", 26.12.1964)



மனிதன்


"மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதே யாகும்."

("விடுதலை", 26.3.1951)



இலட்சியம்

தமது வாழ்க்கையால் பிறர் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.

(விடுதலை, 20.3.1950)

29.1.09

பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்தின் விளைவு என்ன?


பாதுகாப்பு எந்த வகையில்?

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனுப்பப்படுவார் - அனுப்பப்படுவார் என்று இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

சொல்லி இவ்வளவு நாள்கள் ஆகியும் அமைச்சர் நகருவதாகயில்லையே - அதற்கான அறிகுறியில்லையே என்ற கண்டனங்கள் கசிந்து கொண்டேயிருந்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இறுதி வேண்டுகோள் என்று கூறி ஓர் அழுத்தமான - குமுறல் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியும் கொடுத்தார்.

இறுதி வேண்டுகோள் என்று ஒரு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றால், அந்த இறுதி என்பதில் உள்ள இறுக்கத்தின் ஆழம் என்ன என்பதை பிரதமர் அவர்களும் சரி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும் சரி மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நம்பலாம்.
இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநில அரசு இதைவிட வேறு எந்த வகையில்தான் தன் உணர்வை வெளிப்படுத்த முடியும்?

ஜனநாயக ரீதியாக தொடர்ந்து படிப்படியாக பல கட்டங்களில் தமிழகம் தன் உணர்வை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டே வந்து இறுதியாக இறுதி வேண்டுகோளை சட்டமன்றத்தின் வழியாக சரியான முறையில் உணர்த்தி விட்டது.

இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று வந்தார். அவர் ஏன் சென்றார்? எதற்குச் சென்றார்? எதைக் கொண்டு வந்தார் என்பதெல்லாம் இதுவரை மர்மம், மர்மம்தான்!

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார், அந்நாட்டின் அதிபரைச் சந்தித்தார்; இதன் விளைவு என்ன?
யுத்த முனையில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாம் கூறியதாகவும், அதற்கு இலங்கை அதிபர் சம்மதித்ததாகவும் கூறியுள்ளார்.

போரை நிறுத்தவேண்டும் - அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் - உலக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துக்கு ஆக்கம் கிடைக்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகவிட்டது.

இலங்கை அரசு போரை நிறுத்தாமல் அந்தப் பகுதியில் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை எப்படி காப்பாற்றப் போகிறது? உண்ண உணவும், உயிர் காக்கும் மருந்துகளும் கிடைக்காத நிலையில், ஈழத் தமிழர்கள் உயிர் வாழ்வது எங்ஙனம்?
பாதுகாப்புப் பகுதி என்று இலங்கை அரசு அறிவித்த இடங்களுக்குச் செல்லும் மக்களையும் குண்டு போட்டு அழிக்கும் ஓர் இனவெறி அரசாங்கம் அம்மக்களைக் காப்பாற்றும் என்று நம்புவதற்கு எங்காவது இடம் இருக்கிறதா?

வாழ்ந்தாலும், செத்தாலும் போராளிகளுடன்தான் இருப்போம் என்பதில் ஈழத் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றாகும். இது நம்மைவிட சிங்கள அரசுக்கும், இராணுவத்துக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, இலட்சக்கணக்கான தமிழர்களை, போராளிகள் கேடயமாகப் பயன்படுத்த இயலுமா? கடுகளவு பொது அறிவு உள்ளவர்களும் தெரிந்துகொண்டு இருக்கக்கூடிய சாதாரண உண்மை இதுவாகும்.
இந்த நிலையில், இலங்கையில் போரை நிறுத்தச் செய்யாமல், தமிழர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்வது நம்பத் தகுந்த ஒன்றல்ல.


இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை (Genocide) குறித்து அய்.நா. மன்றம் கொஞ்சம் வாயைத் திறந்துள்ளது. இந்தப் பிரச்சினையை உலகப் பிரச்சினை யாக்கித் தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

பாலஸ்தீனத்தின்மீது மேற்கொண்ட தாக்குதலை இசுரேல் எப்படி நிறுத்தியது? அதே அளவுகோல் ஈழத்திலும் மேற்கொள்ளப்படவேண்டாமா?


தமிழர்களின் ஒன்றுபட்ட இந்த உணர்வை மீண்டும் மீண்டும் அழுத்தமாக ஒலிப்போம்!


----------------நன்றி: "விடுதலை" 29-1-2009

இந்தியா ஆன்மீக நாடா? மதச்சார்பற்ற நாடா?


கொலைக்குற்றவாளி காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட
இந்து மதவெறியர்களின் கூட்டம்
சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்
மதச் சார்பற்ற நாடாக்கியதால் பாரதத்தின் அடையாளம் மாற்றப்பட்டுவிட்டதாம்!
மும்பையில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் புதிய அவதாரம்?



பல்வேறு இந்து அமைப்புகள் பல பெயர்களில் இயங்கி வருகின்றன. இவற்றின் கூட்டமைப்புக்கு தர்ம ரக்க்ஷ மஞ்ச் (தருமப் பாதுகாப்புக் குழு) என்று பெயர். இதன் கூட்டம் நேற்று (புதன்கிழமை) மும்பையில் நடந்துள்ளது.

இதில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியான காஞ்சிபுரம் ஜெயேந்திர சரசுவதி உள்பட பல இந்து மதச் சாமியார்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்புகளில் இதுவும் ஒன்று.

ஆர்.எஸ்.எஸ். பதாகையின்கீழ் அதன் சின்னம் அடங்கிய பெயர்ப் பதாகையை வெளிப்படையாகக் கட்டி, கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி போன்றோர் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு நாள்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின் பின்னணியில் இருந்து இதனை இயக்குபவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதன்தாஸ் தேவி ஆவார்.

இதில் கலந்துகொண்டு வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில், இந்தியா புனிதமான பாரம்பரியம் மிக்க நாடு என்றும், ஆன்மிகத்தில் சிறந்த நாடு என்றும், அந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக ஆக்கியதன் விளைவாக அந்த அடையாளம் அழிந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படிக்கான மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்துகளை இவர் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் கோமாளியான சுப்பிரமணியசாமி இக்கூட்டத்தில் அறிக்கை ஒன்றைப் படித்து அளித்துள்ளார். இந்து மதக் கொள்கை அறிக்கை என்று கூறி, இந்துக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, இந்து மறுமலர்ச்சிக்கு என்னென்ன செய்யப்படவேண்டும் என்றும் பட்டியலிட்டுள்ளார்.

முக்கியமாக, இந்தியாவின் வரலாறு திருத்தி (திரித்து?) எழுதப்படவேண்டும் என்றும், கல்வி நிலையங்களின் பாடப் புத்தகங்கள் வேறு வகையில் மாற்றி எழுதப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். தீவிரவாதிகளிடம் சகிப்புத் தன்மை காட்டவேண்டியதில்லை, அவர்களுடன் பேச்சுவார்த்தை தேவையில்லை, அவர்களைத் திருப்பித் தாக்கி அவர்களின் அரசியல் நோக்கங்களை முறியடிக்கவேண்டும் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளார்!

நாட்டின் ஆட்சி மொழியாக மீண்டும் சமக்கிருத மொழியை அரியாசனத்தில் அமர்த்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை இந்து நாடு (இந்துஸ்தான்) என்றே குறிப்பிட்டுள் ளார்.


கூட்டத்திற்கு முன்னதாகச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தயானந்த மகராஜ் எனும் சாமியார், நாட்டில் உள்ள 13 இசுலாமிய அமைப்புகளுக்குக் கடிதம் எழுதி, தீவிர வாதத்திற்கு எதிராக மதக் கட்டளை (ஃபட்வா) பிறப்பிக்கக் கோரப்படும் என்று தெரிவித்தார். தீவிரவாதச் செயல்களைக் கண்டனம் செய்து இசுலாமிய அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளனவே எனக் கேட்டதற்கு, அது போதாது, ஃபட்வா கொடுக்கவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமையும் நடக்க விருக்கும் கூட்டத்தில் 11 அம்சத் திட்டங்கள்பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படுமாம். இந்துப் பயங்கரவாதம் என்பது கிடையாது என்றும், அச்சொல் இந்துக்களைக் கேவலப்படுத்துகிறது என்றும், இந்துக்களுக்குப் பொருந்தாத சொல் என்றும் விசித்திரமான விளக்கம் கூறியுள்ளனர்.

தற்போதைய ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அகற்றப் படவேண்டுமாம்! ஆனால், இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறிக் கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவமான பா.ஜ. கட்சியின் ஆதரவு அமைப்பு என்பது எல் லோருக்கும் தெரிந்த இரகசியம் தான்!

மீண்டும் இந்து மதத்தையும், செத்துப்போன சமக்கிருத மொழியையும் ஆட்சியில் அமர்த்திடத் துடிக்கும் இவர்களிடம் இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


------------------------ நன்றி: "விடுதலை" 29-1-2009

அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்களா?



மக்கள் மனிதக் கேடயங்களா? வன்னிக்கு வந்து பாருங்கள்
உலகத் தலைவர்களுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு

முல்லைத் தீவு மாவட்டத்தில் அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாற்றை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உண்மை நிலை என்ன என்பதை அறிய வன்னிப் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிடும்படி உலகத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பல இலட்சக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று இலங்கை அரசு நடத்தி வரும் பொய் பரப்புரை பற்றி கேட்டபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்களின் மக்களுக்காகவே நாங்கள் போராடுகிறோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாங்கள் வைத்திருக்கிறோம் என்பது பொய் பரப்புரையாகும். எங்கள் தமிழ் மக்களை கொல்வதற்கான பொய் பரப்புரையாக இதை சிங்கள அரசு செய்து வருகிறது. வன்னிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் வாழ்வதையே விரும்புகின்றனர். அதனால் தான் கடந்த 2 ஆண்டு களாக எங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் என்று நடேசன் தெரிவித்தார்.

இதே குற்றச்சாற்றை பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் முன்வைப்பது பற்றி கேட்டபோது, எங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்குவந்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். எங்கள் மீது குற்றச்சாற்றுகளை முன் வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுக்கும் நான் வெளிப்படையான அழைப்பு விடுக்கிறேன். எங்கள் மக்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலை நிறுத்தி விட்டு, எங்கள் பகுதிக்கு வந்து பாருங்கள். அங்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றும் நடேசன் கூறினார்.


இலங்கைப்படையினருடனான போரில் விடுதலைப்புலிகள் பெரும் இழப்பை எதிர் கொண்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் அரசியல் தீர்வை பெறக் கூடாது என்று கேட்டபோது, சுதந்திரமான சிறப்பான அரசியல் தீர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தத் தீர்வை பெறுவதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம் என்று அவர் விடையளித்தார்.

------------------ நன்றி: "விடுதலை" 29-1-2009

இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியாக உதவி



இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு இந்தியா உதவி
பருத்தித்துறை கடலுக்கு அண்மையில்
இந்தியாவின் இரு போர்க்கப்பல்கள் நிற்கின்றன


இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ராணுவ ரீதியாக உதவியளித்து வருவதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை கடந்த திங்கட் கிழமை தெரிவித்துள்ளது.

பாக். நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மாத்திரமன்றி விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள் ளது.

விடுதலைப்புலிகளின் இறுதித் தளமாக இருந்த முல்லைத் தீவின் நகர பகுதிக்குள் இலங்கை இராணுவம் நுழைந்ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.

இந்திய கடற்படை சிறப்பான விதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்திய கடற் பரப்பில் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் ஊடுருவதைத் தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான இந்தியாவின் உதவி மட்டுப் படுத்தப்படாத அளவுக்கு உள்ளது. இந்திய இலங்கை முகவரமைப்புகள் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்கின்றன என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன் இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி வழங்குவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு நகரை இலங்கை ராணுவத்தினர் கைப் பற்றிய செய்தி தொடர்பாக மட்டக்களப்பு பகுதியிலுள்ள கிராமவாசிகள் நம்பிக்கொள்ளாமல் இல்லை. ஆனால் புலிகளின் கடைசி தளத்தில் இராணுவம் ஊடுருவியிருப்பது அமைதியைக் கொண்டு வருமா என்பது தொடர்பாக வும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இராணுவ வெற்றியைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை இடம்பெறும் வரை பிரச்சினை தொடர்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாக மட்டக் களப்பு நகரைச்சேரந்த ஓட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ஏசியன் ஏஜின் செய்தியாள ருக்குக் கூறியுள்ளார். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் பிரபாகரன் இருந்தாலோ இல்லாவிடிலோ எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை வழமைக்கு மாறாக பருத்தித்துறை கடற்பரப்பில் இரு யுத்த கப்பல்கள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நிற்பதாகவும் அவை இந்திய கடற்படைக்கப்பலாக இருக் கலாமெனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

---------------------நன்றி: "விடுதலை" 29-1-2009

பக்தர்கள் சிந்திக்கக் கூடாதா?




திருநெல்வேலி மாவட்டம் திருவுருமாமலை வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த 19 பேர், மன்றத்தின் செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் இம்மாதம் 24 ஆம் தேதி தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களைத் தரிசிப்பதற்காக தனி வாகனத்தின்மூலம் சென்றனர். தரிசனம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், நேற்று விடியற்காலை 2.30 மணியளவில் திருநெல்வேலி தாழையூத்து அருகே வந்தபோது, எதிரே வந்த பால் லாரியோடு வேகமாக மோதியதில் 15 பக்தர்கள் பரிதாபகரமான முறையில் நசுங்கிச் செத்தனர் என்ற செய்தி நெஞ்சைப் பதறச் செய்கிறது - குருதியை உறையவும் வைக்கிறது.

பகுத்தறிவுவாதிகள் பக்தியை எதிர்த்துக் கருத்துகளைக் கூறினாலும், மனிதாபிமான முறையில் அவர்களின் பரிதாபகரமான மரணம் கண்டு கண்ணீர் வடிக்கிறோம். விலை மதிக்க முடியாத உயிர்கள் இப்படி காரணம் இல்லாமல், பயன் இல்லாமல் பறிக்கப்பட்டனவே என்ற துக்கம் நெஞ்சை அடைக்கிறது.

இந்த நேரத்தில் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு பக்தர்களை நோக்கி சில வினாக்களைத் தொடுப்பது நமது கடமையாகிறது!

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் என்றும், கடவுள் தரிசனம் புண்ணியம் தரும் என்றும், கேட்டது கிடைக்கும் என்றும் நம்பி, பெரும் பொருள் செலவு செய்து, பொழுதையும் வீணடித்து கோயில் கோயிலாகச் சுற்றியும், தரிசனம் செய்தும், அந்தப் பக்தர்கள் பரிதாபகர மான முறையில் பலியாகிறார்களே - இந்த நேரத்திலாவது கடவுள் சக்தி என்பதுபற்றி அவர்கள் கணநேரமாவது சிந்திக்கவேண்டாமா? என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் முதல் கேள்வி.

தன்னை நாடி வந்த அந்தப் பக்தர்களைப் பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்க உத்தரவாதம் கொடுக்காத ஒருவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று நம்புவது அறியாமையிலும் அறியாமை அல்லவா என்பதை அனுபவத்திற்குப் பிறகாவது அறியவேண்டாமா? என்பது நமது இரண்டாவது கேள்வி.

அவாள் அவாள் தலையெழுத்து எப்படியோ அப்படித்தான் நடக்கும் என்று சமாதானம் சொல்ல முயலும் முந்திரிக்கொட்டைகளை நோக்கியும் கேள்வி உண்டு. அவாள் அவாள் தலை யெழுத்தின்படிதான் நடக்கும் என்பது உண்மையானால், கோயிலுக்குச் சென்றுதான் என்ன பயன்? கோயிலுக்குச் சென்றாலும், நேர்த்திக் கடன் கழித்தாலும், பக்திச் சொட்டச் சொட்ட தரிசித்தாலும், தலையெழுத்தை அழிக்க முடியாது - ஏற்கெனவே எழுதப்பட்டதை அழித்து எழுத முடியாது என்று உண்மையாகவே நம்புவார்களேயானால், குறைந்தபட்சம் கோயிலுக்குச் செல்வதை, தரிசனம் செய்வதை நிறுத்திக் கொள்ளக்கூடாதா? பொருளும், பொழுதுமாவது மிச்சப்படுமே!

இன்னொரு கேள்வியும் எஞ்சியிருக்கிறது. கோயிலுக்குச் சென்று திரும்பிய அத்தனைப் பேர் தலையெழுத்தும் ஒன்று சேர்ந்தது போல ஆண்டவனால் எழுதப்பட்டதா? அப்படி எழுதப்பட்டது என்பதற்கு ஏதாவது ஆதாரங்களை ஆதினகர்த்தாக்கள், ஆன்மிக மெய்யன்பர்கள் வைத்திருக்கிறார்களா? என்பதும் முக்கியமான வினாவே!


தீராத வினையையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று பாட்டுப் பாடிக் கொண்டு திருப்பதி செல்லும் பக்தர்கள் ஆனாலும், பல நாள் விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்பப் பக்தர்களாக இருந்தாலும், சாலை விபத்துகளில் மரணமடைவது சர்வ சாதாரணமாகவே இருக்கிறதே - இதற்குப் பிறகாவது புத்தியைக் கொஞ்சம் செலவழித்தால் என்ன என்பது பகுத்தறிவுவாதிகள் கேட்பது, பக்தர்களின் மீது பரிதாபப்பட்டுதான்.

மிகப்பெரிய ஆற்றல் படைத்த மூளையை மூலதனமாக வைத்துக்கொண்டு அதனைப் பயன்படுத்தாமல் பக்தி என்ற விலங்கால் பூட்டிக்கொண்டு வீணாக வாழ்வைத் தொலைத்துக் கொள்ளலாமா? என்று பக்திப் பழமாய் இருக்கும் சக மனிதனை தோழமை உணர்வோடு கேட்கிறோம்.

கோயிலுக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள குத்துக்கல்லுக்கு எப்படி சக்தியிருக்க முடியும்? அதனை வடித்த சிற்பியும் ஒரு மனிதன் தானே! அந்தக் குழவிக் கல்லை குளிப்பாட்டுவது, ஆடை உடுத்துவது, அலங்காரம் செய்வது எல்லாம் கூட ஒரு மனிதன்தானே?

பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி கடவுள்களை உருவாக்குவது நாங்கள்தானே என்று பேட்டி கொடுத்தாரே!

("கல்கி", 11.6.2006)

குந்த வைக்கப்பட்ட இடத்திலிருந்து அது என்றாவது நகர்ந்ததுண்டா? படைக்கப்பட்ட உணவைத்தான் சாப்பிட்டதுண்டா? இந்த உண்மைகள் எல்லாம் பிரத்தியட்சமாகத் தெரிந்திருந்தும் மனிதன் புத்தியைப் பலி கொடுக்கிறானே! தன்னம்பிக்கையை இழக்கின்றானே! உழைத்துச் சம்பாதித்த பொருளை புரோகிதச் சுரண்டலுக்குப் பறி கொடுக்கின்றானே என்று கேட்டுக்கொண்டே தானிருக்கிறோம். நெல்லையில் நடந்த கோர சம்பவத்துக்குப் பிறகாவது கண்களைத் திறக்கிறார்களா பார்ப்போம்!


------------------நன்றி: -"விடுதலை" தலையங்கம் 28-1-2009

28.1.09

இலங்கைக்கு இந்தியா அனுப்பிய பீரங்கிகள்! ஆதாரம் இதோ!!




இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல்
தொடுக்க இந்தியா அனுப்பிய பீரங்கிகள்!


ஈரோடு வழியாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லும் கொடுமை!.

இந்திய அரசு தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுக்க ஈரோடு வழியாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லும் பீரங்கிகள் இவை.

இலங்கை அரசுக்கு இந்தியா உதவிடவில்லை என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் இராணுவத் தளவாடங்களையும், பீரங்கிகளையும் இந்திய அரசு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்தப் படம் அம்பலமாக்கவில்லையா?

------------------நன்றி: "விடுதலை" 28-1-2009

சங்கராச்சாரியார் படத்தை தேசியக் கொடிமீது ஒட்டி வைக்கலாமா?




தேசியக் கொடியை அவமதிக்கலாமா?

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

அதேநேரத்தில், ஒரு முக்கியப் பிரச்சினையை முன் வைக்கவேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் என்பதால் அரசு மரியாதை தரும் வகையில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல்மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருப்பது மரபுதான்.

ஆனால், இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், அந்தத் தேசியக் கொடியில் முதலாவதாக உள்ள ஆரஞ்சு வண்ணத்தின்மேல் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் படத்தை ஒட்டி வைத்துள்ளனரே - அது எப்படி? சங்கராச்சாரியார் என்றல்ல - எந்த ஒருவரின் படத்தையும் தேசியக் கொடிமீது ஒட்டி வைக்கலாமா?

அதுவும், தேசியக் கவுரவமாகக் கருதப்படும் கொடியில், மதச் சார்பற்ற அரசின் தேசியக் கொடியில், தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன - அரசமைப்புச் சட்டத்தின் பகைவரது படத்தை ஒட்டலாமா?

தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயல் அல்லவா இது?

தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம் போன்ற தேசிய சின்னங்களை அவமதித்தால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்று சட்டம் உள்ள நிலையில் இதனைச் செய்தவர்கள்மீது என்ன நடவடிக்கை?


குடியரசுத் தலைவராக இருந்து மறைந்தாலும், அவாளின் வட்டாரம் எதை முன்னிறுத்துகிறது என்பதைப் பார்த்த பிறகாவது தமிழர்களின் கண்கள் திறந்து கொள்ளுமா?

------------------------நன்றி:- "விடுதலை" 28-1-2009

ஆணின் அடிமை என்பதைக் காட்டக் கூடிய அடிமைச் சின்னமே "தாலி"


பழைய முறை - முன்னோர் முறை என்று சொல்கின்ற இந்நிகழ்ச்சிக்கு, அதைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல் தமிழில் ஒன்று கூட இல்லை. இருக்கிற கல்யாணம், விவாகம், தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்கின்ற சொற்கள் வடமொழிச் சொற்கள் என்பதோடு, அவை இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொற்களும் அல்ல. இந்நிகழ்ச்சிக்கு நாம் தோன்றிய பின் தான் - நாம் "வாழ்க்கை ஒப்பந்தம்' என்கின்ற இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல்லை ஏற்படுத்தினோம். இந்நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு பெயர் இல்லை என்பதோடு, இதற்குப் பொதுவான ஒரு முறையும், சடங்கும் கிடையாது. நம்மிடையே நடைபெறும் இச்சடங்குகள் என்பவையும், இந்நிகழ்ச்சிக்குப் பார்ப்பனரால் ஏற்பாடு செய்யப்பட்டு நம்மிடையே புகுத்தப்பட்டவையேயாகும்.....

........பெண்ணடிமைக்கு இருக்கிற சக்தி, உலகமெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தி இருக்கிறது. வெள்ளைக்காரன் பெண்களை இழிவாக நடத்துகின்றான். துலுக்கன் பெண்களுக்கு உறையே போட்டு விடுகின்றான். அவனெல்லாம் நடப்பில் இழிவுபடுத்துகிறான் என்றால், நமக்கிருக்கிற ஆதாரம் இலக்கியம், தர்மம் எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவனவாக இருக்கின்றன என்பதோடு, மொழியும் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. பெண்ணைக் குறிக்க "அடி', "அவள்' என்ற சொற்கள் இருக்கின்றனவே தவிர, மரியாதைக்குரிய சொற்கள் எதுவும் இல்லை. ஆண்களுக்கு மட்டும் அய்யா, அவர்கள் என்று சொற்கள் இருக்கின்றன. இலக்கியம், தர்மம் செய்தவன் இன்றைக்கு எதிரே இருந்தால், உதைக்க வேண்டுமென்றுதான் தோன்றுகின்றது. பெரிய சமுதாயக் கோளாறை மாற்ற வேண்டுமானால், பெரும் புரட்சி செய்துதானாக வேண்டும்.

அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் வரும் ஒரு பாடலில் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “எவ்வளவு பணக்காரனின் மனைவியாக இருந்தாலும், இந்திரன் மகளாக இருந்தாலும் அவள் கையில் பத்து ரூபாய் கொடுத்தால் போதும் சம்மதித்து விடுவாள்'' என்கின்றான். கணவன் எவ்வளவு அழகானவனாக இருந்தாலும், கலையில் வல்லவனாக இருந்தாலும், பிறன் மேலேயே அவள் எண்ணம் செல்லும் என்று எழுதி இருக்கின்றான்.

வள்ளுவன் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண் தன் மனைவியைத் தொழ வேண்டுமென்று சொல்லவில்லை. அவ்வை, பெண் புலவராக இருந்தும் அவள் "தையல் சொல் கேளேல்' பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்கிறாள். இப்படி எந்தப் புலவரை, இலக்கியத்தை, நீதி நூலை, புராண - இதிகாசங்களை எதை எடுத்தாலும் அவை பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அடிமைப்படுத்துவதாகவுமே இருக்கின்றன.
.........

............காதலர் வாழ்வு மறைந்து, கணவன் - மனைவி வாழ்வு வந்ததும் பெண்களின் சுதந்திரம் மறைந்து விட்டது. பெண் என்றால் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு என்று வாழ்வு முறையாக்கப்பட்டு விட்டதால், பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். இனியாவது தாய்மார்கள், பெண்களை அறிவு பெற முடியாமல் மூடி வைப்பதைத் தடுக்க வேண்டும். ஆண்கள் பெண்களுக்கு உரிமை கொடுக்க முன்வந்தால் கூட, பெண்கள் அதனை ஏற்பதாக இல்லை. காரணம், நாம் அவர்களை அடக்கி ஒடுக்கி அறிவு பெற முடியாமல் செய்வதாலேயே ஆகும். ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற ஊதியம் பெறும்படியான தொழிலைச் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 20 வயது வரைப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விட வேண்டும்.

........இந்த ஜோசியம், சகுனம், பொருத்தம் என்பவை எல்லாம் மனிதனின் முட்டாள்தனமான மூடநம்பிக்கையேயாகும். தாலி கட்டுவது என்பதும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஒன்றுதானாகும். தாலி கட்டுவதே "அறுப்பதற்காக!' பெண்களை முண்டச்சி (விதவை)களாக்க, சகுனத் தடையாக்கவேயாகும். வயதுப்படிப் பார்த்தால் ஆண்தான் முன் சாக வேண்டும்; அதன்பின் தான் பெண் சாக வேண்டும். திருமண அமைப்பு முறையானது அப்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணை விடப் பெண் வயதில் குறைவாக இருக்க வேண்டும் என்கின்ற முறை இருப்பதால், ஆண் முதலில் சாகவும் பெண் தாலியறுக்கவுமான நிலை ஏற்படுகின்றது. மற்றப்படி தாலியால் எந்தப் பயனுமில்லை. ஆணின் அடிமை என்பதைக் காட்டக் கூடிய அடிமைச் சின்னமே தாலியாகும்........

...........இந்த நிகழ்ச்சி சடங்கு நிகழ்ச்சியல்ல; பிரச்சார நிகழ்ச்சி. சடங்கு நிகழ்ச்சியென்றால் இங்கு பானை, சட்டி, அம்மி எல்லாமிருக்கும். மக்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லிபிரச்சாரம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மணமக்களாக இருக்கிற இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து "நாங்கள் துணைவர்களாகிவிட்டோம்' என்று சொன்னால் போதும்.




--------------- தந்தைபெரியார் -"விடுதலை" - 17.6.1969

தந்தைபெரியார் யாரைப் "பெரியவர்" என்று அழைப்பார்?



பெரியாரிடம் பெற்ற பெரு ஊதியம்


முதல்வர், டாக்டர் கலைஞர் அவர்களுக்குச் சிலை அமைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்ததோடு சில நாள்களில் சில தனி நபர்கள் - பற்றாளர்களும் நன்கொடை அளிக்கவே செய்தனர். அப்படிப் பெயர் கூற விரும்பாத ஓர் ஆர்வலர் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்ததையும் விடுதலை நாளேட்டில் (21.8.1971) பெட்டிச் செய்தியாக வெளியிட்டு மகிழ்ந்தோம்.

சிலைக்குழுவின் செயலாளராகவும், பொருளாளராகவும் என்னை தந்தை பெரியார் அவர்கள் நியமித்து அறிவித்த நிலையில், முறையான கணக்குத் தேவை என்பதற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் கதீட்ரல் கிளையில் ஒரு தனிக் கணக்கே துவங்கினோம்.

அதிலிருந்துதான் சிலை வடிக்கும் சிற்பி முதலியவர்களுக்குரிய தொகை, மற்ற செலவினங்களைச் செய்தோம்.

சிலை தயாராகியது என்றாலும் தனக்கு உடனே சிலை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடக்க உணர்ச்சியினால், முதல்வர் கலைஞர் அவர்கள் கூறிய நிபந்தனையான - சென்னையில் தி.மு.க. சார்பில் பெரியாருக்கு சிலை வைப்பதை, காலந்தாழ்த்திக் கொண்டே காலத்தைக் கடத்தினார்!

என்னைப் பொறுத்தவரை நான் எந்தச் செயலுக்காகவும் தந்தை பெரியார் அவர்களின் கடுஞ்சொல்லுக்கோ, கண்டனத்திற்கோ, தண்டனைக்கோ, கோபத்திற்கோ, தவறுக்கான தண்டனைக்கோ ஆட்பட்டவனாக பொது வாழ்வில் இல்லை என்ற மன நிறைவுதான் நான் எனது ஆசான் அய்யாவிடம் பெற்ற பெரு ஊதியம் ஆகும்!

அப்படிப்பட்ட நிலையில் எதனையும் கட்டுப்பாட்டுடன் செய்து, தலைவர் தம் நோக்கம் அறிந்து செயல்பட்டு வந்த என்னைக்கூட (செல்லமாக) கோபித்துக் கொண்டார் அய்யா அவர்கள்.

என்னப்பா, நான் அறிவித்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன? கலைஞருக்குச் சிலை வைப்போம் என்று! நீங்கள் இப்படி அலட்சியமாய் இருந்தால் எப்படி? பொறுப்புணர்வு வேண்டாமா? என்று சற்று குரலை உயர்த்தி தனது விருப்பம் விழைவு ஆசை கலந்த ஆவேசத்தை வெளிப்படுத்தினார் அய்யா அவர்கள்.

நான் உடனே, சிலை எல்லாம் செய்து முடித்தாகி விட்டதய்யா; கலைஞர் அவர்களின் அனுமதி கிட்டவில்லை. அவர் முன்பே அறிவித்தபடி தங்களது சிலையை அவர்களது (தி.மு.க.) கட்சியின், சார்பில் வைத்து முடித்த பிறகுதான் என்பதால், அதற்காக நாமும் பொறுத்து இருக்க வேண்டியுள்ளது, என்ன செய்வது என்று நாம் தயங்க வேண்டியுள்ளது என்று விளக்கியவுடனே எனது சங்கடமான சூழ்நிலையை அய்யா அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

சீக்கிரம் நான் சொன்னதாக பெரியவரிடம் சொல் என்று (முதல்வரை அய்யா அப்படிதான் பற்பல நேரங்களில் உரையாடல்களில் குறிப்பிடுவது வழக்கம்)- சொல்லி, வற்புறுத்தினார்கள்!

பெரியாருக்கும் அவர்தம் தொண்டர்களுக்கும் எப்படிப்பட்ட இக்கட்டான நிலை (Tight corner) பார்த்தீர்களா? அய்யாவுக்குச் சிலையை சென்னையில் வைக்க வற்புறுத்து என்றார் கலைஞரைப் பார்த்து; அவருக்காகவா? அல்ல! அல்ல!! அதன்பிறகுதானே ஒப்பந்தப்படி ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைப்படி கலைஞர் சிலையைத் திறக்க முடியும் என்பதால், அதை வலியுறுத்தி சீக்கிரம் நடத்திடச் சொல்லுங்கள் என்றார்.

என்னே காலத்தின் கோலம்!

கொள்கையின் வாஞ்சை!!

சொன்னதைச் செய்தாக வேண்டும்

என்ற வேட்கையின் வேகம்!!!

தனக்கு என ஒருவர் பொது வாழ்வில் செய்வது என்றாலும் உண்மையில் அது பிறருக்காகவே என்ற தத்துவத்தை அய்யா அவர்கள் அடிக்கடி பொது வாழ்வில் எடுத்துரைப்பார்கள்; அதன் முழுப் பொருள் - உண்மை அர்த்தம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள இச்சம்பவமும்கூட எனக்குப் பாடமாக அமைந்தது.

தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டில் நடைபோடும் என்னைப் போன்ற தொண்டர்கள் எண்ணற்றோர் தந்தை பெரியார் என்ற பேராசானின் தத்துவத்தை இத்தகைய சிறு சம்பவங்களானாலும் தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் நிகழ்வுகள் எத்தனை! எத்தனையோ!

அது மட்டுமா?

அய்யா மறைவுக்குப் பின்னர்தான் தந்தை பெரியார் சிலை அண்ணாசாலையில் 17.9.1974 அன்று திறந்து வைக்கப்பட்டு, அதில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரும் நானும் கலந்து கொள்ள திமுகவால் அழைக்கப்பட்டு, கலந்து கொண்டோம்!

கலைஞர் சிலை, அன்னை மணியம்மையார் அவர்களால் திறக்கப்பட, அச்சிலை அண்ணாசாலையின் முக்கியமான பகுதியில் ஜெனரல் பேட்டர்ஸ்ரோடு பிரியும் சந்திப்பு பகுதியில் முக்கியமான இடத்தில் நிறுவப்பட்டது.

வாழ்நாளில் கலைஞர் எத்தனையோ முறை எதிர்நீச்சல் அடித்தே வெற்றி பெற்றவர், சிறப்பு டாக்டர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அளித்தபோதுகூட அவரது அரசியல் எதிரிகள், அப்பாவி மாணவர்களில் ஒரு சாராரை ஆயுதமாக்கி, வீண் பழி தூற்றி, எதிர்ப்புக்காட்டி நிறுத்தி விட முயன்றனர். ஆனால் இறுதிவெற்றி என்றைக்குமே பெரியார் தொண்டர்களுக்குத்தான் என்பதுபோல கலைஞர் அவர்கள் பட்டம் பெற்று, தந்தை பெரியார் என்ற குருகுலப் பல்கலைக் கழகப் பாசறையின் பாராட்டுக் கடலிலும் குளித்து, மகிழ்ந்த நிலையில், அவருடைய ஆசான் அய்யா அவர்களாலேயே அவருக்கு, தலைநகர் சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்ற திட்டத்தையும் தந்தை பெரியார் முன்மொழிந்து செயல்படத் துவங்கிய நிலையில் - அம்மா அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை தலைமையில் இயக்கம் இயங்கிய அந்த முக்கியமான காலகட்டத்தில் சிலை வைக்க முயன்றபோது, கலைஞர் சிலை வைக்கவும் அண்ணா திமுக தரப்பில் ஒரு வழக்கறிஞர் (பின்னாளில் அவர் சபாநாயகரானவர்) உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கி திடீரென திட்டமிட்ட ஒரு திட்டமே தீட்டி வெற்றி பெறலாம் என்ற அவர்தம் எதிர்ப்பை எப்படி முறியடித்தோம் என்பதை அடுத்தவருக்கு சிலையாக நிற்பதற்கும் எதிர்நீச்சல்தான்!

--------------- நினைவுகள் நீளும்.


-------------------- கி.வீரமணி அவர்கள் உண்மை ( ஜனவரி 01-15 2009) இதழில் எழுதிவரும் "அய்யாவின் அடிச்சுவட்டில்" இருந்து ஒரு பகுதி ... இரண்டாம் பாகம் (11)

இந்தியக் குடிமகனுக்கு எது மதம்?





கேரளத்தில், ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ஒரு பாடம் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. இப்பாடத்தை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. என்ன அந்த பாடம்?

தன் மகனைப் பள்ளியில் சேர்க்க தலைமையாசிரியரிடம் வருகிறார் அந்தப் பையனின் தந்தை. மகனும் உடன் இருக்கிறான். தலைமையாசிரியருக்கும் தந்தைக்கும் உரையாடல் துவங்குகிறது.

மாணவனின் பெயர் என்ன?, ஜீவன், நல்ல பெயர், மிகவும் அழகான பெயர். நல்லது, அப்பா பெயர் என்ன?, அன்வர் ரஷீத், அம்மா பேரு?

இலட்சுமி தேவி

தலைமையாசிரியர் எழுதுகோலை கீழே வைக்கிறார். தந்தையை ஒருவிதமாகப் பார்க்கிறார். சற்றே யோசிக்கிறார். தயக்கத்தோடு எழுதுகோலை கையில் எடுக்கிறார். கேள்விகள் தொடர்கின்றன...

பையன் எந்த மதத்தைச் சேர்ந்தவன்?

அந்த இடத்தில் ஒன்றும் எழுத வேண்டாம் அய்யா. அவன் எந்த மதமும் சார்ந்தவனில்லை.

ஜாதி?

அதிலும் எதுவும் எழுத வேண்டாம்...

தலைமையாசிரியர் கோபத்தோடு எழுந்து கேட்கிறார்.

அப்போ, அவன் வளர்ந்து பெரியவனான பிறகு, ஏதாவது ஒரு மதத்தில் சேர விரும்பினால்...? பிற்காலத்தில் அவன் தீர்மானித்துக் கொள்ளட்டும். நாம் அதை விட்டுத் தள்ளுவோம். இதுதான் அந்தப் பாடத்தின் உள்ளடக்கம். பாடத்தின் தலைப்பு மதம் இல்லாத ஜீவன்.

இந்து மத அமைப்புகள், இசுலாமிய மத அமைப்புகள், கிறிஸ்தவ மத அமைப்புகள், ஒன்றிணைந்து இந்தப் பாடத்தை நீக்கப் போராடுகின்றன. நாயர் கழகம், ஜமாத்துகள், தேவாலயங்கள் ஆகியவை கடுமையாக எதிர்க்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன. எதிர்க்கின்றன.

இடதுசாரி அரசு நடைபெறுகிறது. இந்த அரசுக்கும் இந்தப் பாடத்திற்கும் தொடர்பில்லை. தேசியக் கல்வி ஆய்வு மய்யம் (என்.சி.ஆர்.டி.) வழி காட்டிய நெறிப்படி இப்பாடத்தை கேரள கல்வித் துறை எழுதியிருக்கிறது. முற்போக்காளர்கள், சிந்தனையாளர்கள் இப்பாடத்தை ஆதரித்துக் குரல் கொடுக்கிறார்கள். இதைப் படிப்பவர்களுக்குக் கூட இந்தப் பாடத்தில் என்ன பிழை இருக்கிறது என்று கேட்கத் தோன்றும்.

உண்மையான மதச் சார்பின்மையைப் பின் பற்றுகிற ஒரு நாட்டில் இம்மாதிரியான பாடங்கள் வரலாம்.

இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று நம்பப்படுகிறது. அது உண்மையல்ல. நடைமுறையில் இந்தியா மதங்களின் சார்புள்ள நாடாகவே இருக்கிறது. பொதுக்குடிமைச் சட்டம் என்பது மதச் சார்பற்ற குடிமைச் சட்டம் என்ற பொருளில் பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நமது அரசியல் உருவாக்கச் சட்டம் பொது என்ற சொல்லையோ, மதச்சார்பற்ற என்ற சொல்லையோ பயன்படுத்தவில்லை. ஒரே சீரான என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

மத அடிப்படையிலான தனி நபர் சட்டங்களை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே வைத்துக் கொண்டு, அவற்றின் உள்ளடக்கத்தை மட்டும் ஒரே சீராக இருக்குமாறு வைத்துக் கொள்வது நடைமுறையாக இருக்கிறது. நீதிமன்றங்களும் இதைத்தான் பின்பற்றுகின்றன.

மற்றொரு முதன்மைச் செய்தி: 1950இல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசு என்று கூறவில்லை. 1976இல் கொண்டு வரப்பட்ட 42வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை யொட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில், இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாகக் குறிப்பிடப்பட்டது. இந்த முன்னுரை இலட்சியந்தான் - சட்டமல்ல; சட்டப் பொறுப்பும் இதற்குக் கிடையாது. அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், நமது நாட்டில் மதச்சார்பின்மை நிலவுவது உண்மை என யாராவது கூறினால், அதே சட்டத்தில் கூறப்பட்டுள்ள சோசலிசம் நிலவுகிறதா என நாம் கேட்கலாம்.

சோசலிசம் கைவிடப்பட்டது போலவே, மதச்சார்பின்ம்யும் கைவிடப்பட்டுள்ளது. மதமில்லாமல் எந்த இந்தியக் குடிமகனும் சட்டப்படி இருக்க முடியாது. குறிப்பாக இந்து மதம் சார்ந்தே அரசியல் சட்டம் (1953-56இல்) எழுதப்பட்டது.

யார் இந்து? - யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துகள்.

யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்? - யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

யாருக்குப் பொருந்தாது? - முசுலிம்கள், யூதர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குப் பொருந்தாது. ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துகளே!

உச்சநீதிமன்றம் இதைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துகள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துகளே! இந்துப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துகளே!

முஸ்லிம், கிறிஸ்தவ, யூத, பார்ச்சி மதங்களைச் சாராத மற்றவர்களனைவரும் கூட இந்துகளே! இவர்கள் அனைவருக்கும் இந்து சட்டத் தொகுப்பு பொருந்தும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதை வழங்கியவர் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப்சிங். இந்தியக் குடிமகன்கள் ஏதாவது ஒரு மதத்தில் இருக்க வேண்டும் என்பதே சட்டம்.


கேரளப் பாடம் சட்டப்படி செல்லாது. செல்ல வைக்க வேண்டுமானால் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். இதை யார் செய்வது?

----------------------- வீ.ந.சோ "இப்படிக்கு" சிற்றிதழிலிலிருந்து..

27.1.09

மதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா?, அல்லது மதம் மாற்றுப் பிரச்சாரம் வேண்டுமா?


மதப்பிரச்சாரமும் மதமாற்றமும்

இந்திய மக்களின் கல்வி அறிவுவாசனை அற்ற தன்மையும், பாமரத்தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மங்களும், மத வேற்றுமைகளும், மதமாற்றங்களும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள், புத்தர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் முதலிய கடவுள் மாறுபாடு உள்ளவர்களும்,மதகர்த்தாக்கள் மாறுபாடுள்ளவர்களும், மதக்கோட்பாடுகளின் அர்த்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்து கொண்டு, வெகுகாலமாகவே மதமாற்றப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் வருகிறார்கள்.

ஆனால், இந்த மதங்களில் மனித வாழ்க்கைத் தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கிறனவா என்று பார்த்தால், ஒன்றுமே காண முடியாத நிலையில்தான் இருந்து வருகின்றன.

எல்லா மதத்துக்குமே - ஒரு கடவுள் உண்டு,மேல் லோகமுண்டு,மோட்ச நரகமுண்டு, ஆத்மா உண்டு,

செத்த பிறகு இந்த ஆத்மா என்கின்ற கொள்கைகளிலாவது, அல்லது மனிதன் அவனவன் நன்மை - தீமைக்கு ஏற்றவிதம் பலன், மோட்ச - நரகம் அனுபவிப்பான் என்கின்ற கொள்கைகளிலாவது கருத்து வித்தியாசமில்லாமலே இருந்து வருகின்றது.

பிரத்தியட்ச அனுபவத்திலோ, எல்லா மதத்திலும் அயோக்கியர்கள், யோக்கியர்கள் இருந்துதான் வருகிறார்கள்.

எல்லா மதத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள்.

எல்லா மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள்.

எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன.

எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை, ஜபம், தவம் இருக்கின்றன.

எல்லா மதக் கடவுள்களும் - தொழுகை, பிரார்த்தனை வணக்கம், பூசை ஆகியவைகளுக்குப் பலன் கொடுக்கும் என்றும், இவற்றாலேயே நாம் செய்த எப்படிப்பட்ட பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடலாம் என்றும் ஒரு நம்பிக்கை இருந்து தான் வருகின்றது.


மற்றும், எல்லா மதக்கடவுள்களும் கண்களுக்குத் தோன்றாததும், மனத்திற்குப் படாததும், ஆதி அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவை-களுமாகவேதான் இருக்கின்றன. எல்லா மதங்களும், கண்களுக்கும் மனத்திற்கும் தோன்றக்கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்றும், ஆனால், கண்களுக்கும் மனத்திற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு மாத்திரம் ஒரு கர்த்தா இல்லையென்றுமே சொல்லுகின்றன. ஒரு மதமாவது, என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என் வேதமாவது தனது கோட்பாடுகள் எல்லாம், மக்கள் எல்லோரும் ஏற்று நடக்கக்கூடியதாய் இருந்து வருகின்றது. அல்லது நடக்கக்கூடியதாய்ச் செய்யச் சக்தி உள்ளதாய் இருக்கின்றது என்றோ, சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும் பசி, தாகம், நித்திரை, அதிருப்தி, கவலை, போதாது என்கிற தரித்திர குணம் ஆகியவை ஒன்று போலவேதான் இருக்கின்றன. எல்லோருடைய வேதமும், கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலுந்தான் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன என்றாலும், அவை ஒன்றுக்கொன்று, மாறுபட்டதாகவும், பலவற்றில் நேர்மாறான கருத்துக் கொண்டதாகவும் இருந்து வருகின்றன. எல்லா மதக்காரர்களுக்கும் ஒவ்வொருவித அடையாளம் இருக்கின்றது. இந்த நிலையில், மதப்பிரச்சாரத்தால் மத மாற்றத்தால் மனிதர்களுக்கு என்ன லாபம் ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.

சாதாரணமாக, இந்தியர்களில் 8 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; 1 கோடி கிறித்துவர்கள் இருக்கிறார்கள்; சுமார் 10 கோடி வைணவர்கள் இருக்கிறார்கள்; 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.

மற்றும், கலப்பு மதம் உள்ளவர்களும், மதக்குறிப்பு இல்லாதவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக் கூடுமானாலும், இவர்களில் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார் 1000, 2000 வருடங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமானாலும், இவர்களின் வாழ்க்கையில் ஏதாவது விசேஷமோ உயர்வோ உண்டா என்பதைச் சிந்தித்து நன்றாகப் பார்ப்போமேயானால், ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக்காரருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது, அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும் அறிவியலிலாகட்டும், சமுதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண், பெண் தலைமையிலாகட்டும், எல்லோரும் ஒரு திட்டத்தில் இல்லாவிட்டாலும், கொள்கையில் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.

ஆகையால், மனித சமூகத்திற்கு அவரவர்கள் வாழ்க்கையில் உள்ள கவலைகள் அற்று - அதிருப்தி ஒழிந்து, சாந்தியும், சந்தோஷமும் கொண்டு வாழ்வதற்கும், பொருளியலிலும், சமுதாய இயலிலும், ஆண், பெண் தன்மையிலும் சமதர்ம தத்துவம் கொண்ட வாழ்க்கை ஏற்பட இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா, அல்லது மதம் மாற்றுப் பிரச்சாரம் வேண்டுமா என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டிய முக்கியக் கடமையாகும்.

மதம் மாற்றுதல், மதப்பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப காலத்திற்கு முன்பு உலகிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் நடந்த முட்டாள்தனமான - மூர்க்கத்தனமான பலாத்காரக் கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்து-வெட்டுகளும், கொலைகளும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்குச் சரித்திரங்கள், புராணங்கள், பிரத்தியட்ச அனுபவங்கள், எத்தனையோ மலிந்து கிடக்கின்றன. இவைகளையெல்லாம் உத்தேசித்தாவது, இனி வரும் சுயமரியாதை -அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புத்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிகைகளில் எழுதினாலும் - அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, தோளோடு தோள் பிணைந்து தோழர்களாக வாழ முடியும் என்பதோடு, மதத் தத்துவங்களின் பயனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு - தாழ்வு நிலை ஒழிந்து, சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம்.

---------------1.1.1937 "பகுத்தறிவு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.

`இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படுமானால், தேசியக் கொடியையே எரிப்பேன்’’




தோழர்களே! இந்த இராஜாஜி வந்து என்னை வேண்டிக் கொண்டார். ``நாயக்கரே விட்டுவிடாதீர். பதவியை ஒத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவோ இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவர். காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பார்கள் என்று நீங்கள் அஞ்சவேண்டாம். நான் காந்தி இடம் கூறி சரிப்படுத்தி விடுகின்றேன்.’’

``நீங்கள் இஷ்டப்பட்டால் எனக்கும் ஒரு மந்திரி பதவி கொடுங்கள். நான் இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றேன்’’ என்று கூறினார். நம் திரு. டி.டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கும் இது தெரியும்.

நான் மறுத்துவிட்டேன். பிறகு தான் வெள்ளைக்காரன் வேறு ஆள்களை வைத்து ஆட்சியை ஏற்படுத்தினான். நானும் ``என்னால் ஆன உதவியைச் செய்கின்றேன்’’ என்றேன். அதன்படி செய்தேன். ஆச்சாரியாருக்கு அடுத்து வந்த மந்திரிசபை இந்தி கட்டாயம் என்பதை மாற்றியது.

தோழர்களே, 1955-இல் காமராசர் முதன் மந்திரியாக இருக்கும்போது ``இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படுமானால், தேசியக் கொடியையே எரிப்பேன்’’ என்றேன். அதற்காகத் தேதி குறிப்பிட்டு நாட்டில் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்து வந்தேன்.

அதுபோது, ``தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படமாட்டாது’’ என்று முதலமைச்சராக இருந்த காமராஜர் தமது சர்க்கார் சார்பாகவும், இராஷ்டிரபதியாக இருந்த திரு. இராஜேந்திரபாபு சார்பாகவும், பிரதமராக இருந்த நேரு சார்பாகவும் எனக்கு உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கின்றார்கள்.பிறகுதான் கொடி கொளுத்துவதை ஒத்திப் போட்டேன்.

அதில் இருந்து நானும் கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இந்தி எங்கே எப்போது புகுத்தப்பட்டது? சொல்ல வேண்டாமா?காங்கிரஸ் சர்க்கார் மேற்கொண்டு உள்ள சோஷ்யலிச திட்டத்தை முறியடிக்க பார்ப்பனர்களும், பணக்காரர்களும், மில் முதலாளிகளும் கூடிச் செய்த கூட்டுச் சதி காரணமாக ஏற்பட்டது தான் இந்தக் கலவரம் ஆகும்.

இவர்களுக்கு இந்தக் கண்ணீர்த் துளிகள் நாளைக்கு இந்த ஆட்சி ஒழிந்தால், நமக்குப் பதவி கிடைக்காதா என்ற கருத்தில் நல்ல வண்ணம் உதவி செய்து இருக்கின்றார்கள்.

ஒன்றும் அறியாத மாணவர்களைத் தூண்டி விட்டுக் கலவரத்தை ஆரம்பிக்க வைத்து காலித்தனம், கொலை, கொள்ளை, தீ வைப்புப் போன்ற நாச வேலையினை நல்ல அளவுக்குச் செய்யத் தூண்டி விட்டுவிட்டனர்.

பார்ப்பனர்கள் தங்கள் இன நலனுக்குக் கேடாக எதாவது சீர்திருத்தங்கள் நாட்டில் நடைபெற்றபோதெல்லாம் நம்மவர்களைத் தூண்டி விட்டுக் கலவரம், குழப்பம் விளைவித்தே வந்துள்ளர்.

இப்போது நடைபெற்ற காலித்தனம், குழப்பத்துக்கு ``மாணவர்களின் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி’’ என்று பெயர் கொடுத்துப் பார்ப்பனர்கள் திரைமறைவில் இருந்து தூண்டி விட்டு நடத்துகின்றார்களே, அதுபோலவே, 1857-இல் சிப்பாய்க் கலவரம் என்ற ஒன்றையும் தூண்டி விட்டார்கள்.

பொய்யாக இந்தி எதிர்ப்பு என்ற பேரில் நடைபெறும் காலித்தனத்துக்குப் பார்ப்பனர்களும், பத்திரிகைக்காரர்களும் மாணவர் போராட்டம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி என்று பெயர் சூட்டியுள்ளார்களே, அதுபோலத்தான் 1857 இல் சிப்பாய்க் கலவரம் பற்றியும், அது முதல் முதல் ஏற்பட்ட சுதந்திரக் கிளர்ச்சி என்று பெயர் சூட்டியுள்ளர்.


தோழர்களே, 1857-இல் நடந்த சிப்பாய்க் கலவரமானது சுதந்திர உணர்ச்சியின் பேரில் ஏற்பட்ட கலவரம் அல்ல; அன்று ஆட்சி செய்த வெள்ளைக்காரன் செய்த சில சமுதாயச் சீர்திருத்தங்கள் காரணமாகப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்ட கலவரமாகும்.

அன்று இந்த நாட்டில் புருஷன் இறந்தால் அவனுடன் அவன் மனைவியையும் உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் இருந்தது.

இந்தப் பழக்கத்தை பல்வேறு காலங்களில் பல முஸ்லிம் அரசர்கள் எதிர்த்துப் பார்த்து, தோல்வியே கண்டார்கள்.

வங்கத்தில் தோன்றிய இராஜாராம் மோகன்ராயின் அண்ணன் இறந்தபோது, அவருடைய மனைவியை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கொளுத்தப் பார்ப்பனர்கள் முற்பட்டார்கள். அது கண்டு அந்த அம்மாள் திமிறிக்கொண்டு ஓட ஆரம்பித்தார், பார்ப்பனர்கள் விடவில்லை; விரட்டிப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கி நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொளுத்தினர்.

இந்த நிகழ்ச்சி சிறந்த கல்விமானான இராஜாராம் மோகன்ராய் மனதை வாட்டியது. அவர் இந்தக் கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முறியடிக்க முயற்சி செய்தார்.

வெள்ளைக்கார அரசாங்கத்தை அணுகி, ``என்ன நாகரிகம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்று பறைசாற்றிக் கொள்ளுகின்றீர்கள். உங்கள் ஆட்சியில் தானே ``சதி’’ என்ற இந்தக் கொடுமை நடக்கின்றது? இதனைத் தடை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு `சதி’ என்று உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சட்ட விரோதமாக்கியது.

வைதீகப் பார்ப்பனர்களும், மதவாதிகளும் எதிர்த்துப் பார்த்துத் தோல்வியே அடைந்தனர். இதுதான் இந்திய வரலாற்றிலேயே ஏற்பட்ட முதல் சீர்திருத்தமாகும்.

அடுத்து இந்த நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் அன்று இருந்து வந்திருக்கின்றது. அதனையும் ஆங்கில அரசாங்கம் சட்ட விரோதமாக்கித் தடுத்து விட்டது.

அந்தக் காலத்தில் விவசாயத் தோட்டங்களுக்கு நரபலி கொடுத்து திருஷ்டி கழிக்கும் வழக்கம் ஆங்காங்கு நடந்து இருக்கின்றது. அதனையும் வெள்ளைக்கார ஆட்சி ஒழித்தது.

அடுத்து அது செய்த `பாவம்’ பெண்களுக்குப் பள்ளி ஏற்படுத்தியதும், ஆஸ்பத்திரி ஏற்படுத்தியதும் ஆகும்.

இதனால் பார்ப்பனர்கள் கொதிப்படைந்து, தந்திரமாகப் பட்டாளத்துக்காரன்களைத் தூண்டி விட்டுக் குழப்பம் பண்ணச் செய்தார்கள்.

முஸ்லிம் தோழர்களிடம் சென்று, ``நீங்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கியில் பன்றிக் கொழுப்பு தடவி இருக்கின்றார்கள். உங்கள் மதத்துக்குப் பன்றி கூடாது. உங்கள் மத உணர்ச்சியைக் குலைக்கவே பன்றிக் கொழுப்புத் தடவி இருக்கின்றார்கள்’’ என்று தூண்டிவிட்டார்கள்.

இந்துக்களாக இருக்கின்ற சோல்ஜர்களிடம் சென்று, நீங்கள் உபயோகிக்கும் துப்பாக்கியிலும், தோட்டாவிலும் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ தடவி இருக்கின்றார்கள். இந்துக்கள் கடல் தாண்டுவது என்பது சாஸ்திர விரோதமானதாகும். உங்களை எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் வெளி இடங்களுக்குச் சென்று சண்டை போடச் சொல்லுகின்றார்கள்’’ என்று தூண்டி விட்டார்கள்.

அன்று பட்டாளத்தில் பார்ப்பனர்களும் அதிகமாக இருந்தபடியால் கலகம் பண்ணினார்கள்.அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு வெள்ளைக்காரர்கள் மீது துப்பாக்கியை நீட்டவும் ஆரம்பித்தார்கள். ஏராளமான வெள்ளைக்காரர்களும், பெண்களும் குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

வெள்ளைக்காரர்கள் பயந்து அங்குமிங்குமாக ஓடினார்கள். ஓர் இடத்தில் என்ன பண்ணினார்கள் தெரியுமா? ஒரு படகைக் கொண்டு வந்து நிறுத்தி ``இதில் ஏறிக்கொள்ளுங்கள்; உங்களைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுகின்றோம்’’ என்று ஏற்றிச் சென்று, நடுக்கடலில் கொண்டு போய்ப் படகைக் கவிழ்த்துவிட்டு அத்தனை பேர்களையும் கொன்று விட்டார்கள்.

வெள்ளைக்காரனால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே பார்ப்பனர்களைக் கூப்பிட்டு ஏன் இப்படிக் கலகம் பண்ணுகின்றீர்கள் என்று ராசி பேசினான்.

பார்ப்பனர்கள் ``நீங்கள் எங்கள் மதத்திலே, பழக்க வழக்கங்களிலே தலையிடக் கூடாது’’ என்று உறுதி கேட்டார்கள். அதன்படி எழுதிக் கொடுக்கப்பட்டது. அதுதான் விக்டோரியா மகாராணியின் மகாசாசனம் ஆகும். பிறகு எக்கேடு கெட்டாவது போங்கள் என்றும், ஆட்சி சரியாக நடைபெற்றால் போதும் என்றும் எண்ணிக் கொண்டு நமது சமுதாய முன்னேற்றத்தில், மாறுதலில் நாட்டம் செலுத்தவில்லை.

தோழர்களே, பார்ப்பனர்கள் இப்படியாக நமது சமுதாயத்தில் சில மாறுதல்களை மேற்கொண்டதற்காக எப்படி பட்டாளத்துக்காரர்களைத் தூண்டி விட்டுக் கலவரம் செய்யச் சொன்னார்களோ அதுபோலத்தான் இன்றைய ஆட்சியின் சமதருமத் திட்டத்தினால் ஏற்படும் மாறுதல்களை ஒழிக்க மாணவர்களையும், காலிகளையும், கூலிகளையும் தூண்டிவிட்டுக் காலித்தனம் பண்ணச் சொல்லுகின்றார்கள்.


இன்றைய ஆட்சியானது மேற்கொண்டு உள்ள சமதருமத் திட்டத்தினால் சாதி ஏற்றத் தாழ்வு ஒழிந்து எல்லோரும் சமுதாயத்தில் ஒரே மாதிரியாக ஆகிவிடுவார்களே, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒழிந்து எல்லோரும் பொருளாதாரத் துறையிலும் சமமாகி விடுவார்களே, என்ற ஆயாசப்படுகின்றார்கள்.

இதுவரை கல்வித் துறையிலே, உத்தியோகத் துறையிலே மற்ற மற்றத் தங்களுக்கு இருந்து வந்த ஆதிக்கமானது காங்கிரசில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் எல்லா உத்தியோகங்களிலும் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டதன் காரணமாக மணல் வீடு சரிவதுபோல் அல்லவா சரிகின்றது? என்று வயிற்றெரிச்சல் அடைகின்றனர்.

எனவே, இந்த ஆட்சியினை என்ன பண்ணியாவது, எந்த வழியினைக் கையாண்டாவது, யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது ஒழித்துக் கட்டுவது என்று முன்வந்து காரியம் ஆற்றுகின்றார்கள்.

இந்த நிலையில், பொது மக்களாகிய உங்கள் கடமை என்ன?
100க்கு 97 பேர்களாக உள்ள உங்கள் நலனில் அக்கறை கொண்டு ஆட்சி நடத்தும் இந்த ஆட்சியைப் பாதுகாப்பதா? அல்லது ஆச்சாரியாருடனும், கண்ணீர்த் துளிகளுடனும்,பணக்காரர்களுடனும் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை ஒழிப்பதா? நன்கு சிந்தியுங்கள்.



-------------------18, 19, 20.3.1965 ஆகிய நாள்களில் சென்னைக் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை -"விடுதலை" 21-3-1965 - நூல்:- "பெரியார்களஞ்சியம்" தொகுதி 16 (ஜாதி-தீண்டாமை, பாகம் -10) பக்கம் 191-196

அய்யாவின் அடிச்சுவட்டில்...!




அய்யாவின் அடிச்சுவட்டில்தான் நாடே இருக்கிறது. இருக்க வேண்டும். அப்படியிருந்தால் எந்த உரிமை மறுப்பும் நம்மைப் பார்த்து கனைக்க முடியாது - எந்தச் சுரண்டலும் இங்குச் சூல்கொள்ள முடியாது.

1943 ஜூலை 29 இல் தந்தை பெரியார் அவர்களை 10 வயது சிறுவனாக கடலூரில் சந்தித்து, அந்தப் பருவந்தொட்டு 1973 டிசம்பர் 24 இல் பகுத்தறிவுப் பகலவன் தன் இமையை மூடும் அந்தக் கடைசிச் சொட்டு நேரம் வரை - அந்த அடிச்சுவட்டைத் தாளம் தப்பாமல், தளை தட்டாமல் மறந்தும், நொடித்தும் வேறு இடத்தில் தன் கால் சுண்டு விரலைக்கூட தவறவிடாமல் பதித்த ஒரு தலைவர் அய்யாவின் அடிச்சுவட்டில் எனும் தலைப்பில் தன் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அவர்தான் இன்றைய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

நாள்குறிப்பு எழுதிப் பழக்கம் இல்லாத அந்தத் தலைவர் தன் நெஞ்சில் பதிய வைத்தவைகளை - ஆதாரக் குறிப்புகளைத் துணைக்கழைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார்.

தன் வரலாற்று நூல்களில் தனிச் சிறப்புடன் குறிப்பிடத்தகுந்த தகைமை உடையது இந்நூல் என்று ஆய்வாளர்களும், விமர்சகர்களும், இதழாளர்களும் தங்கள் கணிப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மயிலை க. திருநாவுக்கரசு எழுதுகிறார்

அந்த நூல் 368 பக்கங்களைக் கொண்டது. அத்தியாயங்கள் 58 உள்ளன. நூலைப் படிக்க கையில் எடுத்தவுடன் கீழே வைக்க முடியவில்லை; படித்துக்கொண்டே போகவேண்டும் என்ற ஆவலை புத்தகத்தின் நிகழ்வுகள் இழுத்துச் செல்லுகின்றன...

பள்ளிச் சிறுவனாய்ப் பொது வாழ்க்கையைத் தொடங்கிய ஆசிரியர், ஒரு தீப்பொறி எரி நெருப்பாய் ஆனதைப்போல கொள்கை உறுதி மிக்கவராய் அவர் உயர்ந்து திகழ்வதை அய்யா வின் அடிச்சுவட்டில்... என்ற புத்தகம் சொல்லாமல் சொல்கிறது என்று திராவிட இயக்கக் கணினி என்று போற்றப்படும் திறனாய்வாளர் மயிலை க. திருநாவுக்கரசு அவர்கள் கணிப்பீடு செய்துள்ளார்.

("விடுதலை"," ஞாயிறுமலர்" 17.1.2009).


***************************************************

நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பினும், பல அரிய வரலாற்று உண்மைகளும் நூலோடு பின்னிப் பிணைந்துள்ளன. பொதுவாகப் பெரியாரின் திருமணம் குறித்தும், அதில் ராஜாஜியின் பங்கு குறித்தும் பெரும்பாலான நூல்களும், விமர்சகர்களும் தருகிற தகவலுக்கு மாற்றாக ஒரு செய்தி: அதாவது பெரியார் திருமணத்தை ராஜாஜி எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் - அய்யா விளக்கம், துவேஷப் புயல் உணர்த்தும் உண்மை, ராஜ கோபாலாச்சாரியார் கடிதம் முதலிய அத்தியாயங்கள் குறிப்பிடத் தக்கன என்று தீக்கதிரில் அதன் பொறுப்பாசிரியர் க.பொ. அகத்தியலிங்கம் தம் எழுதுகோலை ஓட்டியுள்ளார்.

("தீக்கதிர்", 18.1.2009).

**********************************

"தினகரன்" எழுதுகிறது

தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல் அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி. வீரமணி. தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல் மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய நூல் என்று தினகரன் (4.1.2009) மதிப்புரை தந்துள்ளது.


****************************************

"தினத்தந்தி" பேசுகிறது


பெரியாருடன் தனக்குள்ள அனுபவங்களை அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. சுவையும், விறுவிறுப்பும் கலந்த நடையில் வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார்! என்பது தினத்தந்தியின் விமர்சனம்.

***************************************


"தினமணி"யின் தீர்ப்பு


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944 ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா. பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1973 ஆம் ஆண்டுவரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர்கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் என்பது தினமணியின் தீர்ப்பு.

*******************************************


புதிய பார்வை

ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று, நிதானமாக, இயல்பாக, மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் - தனக்குத்தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி, இவ்வகையிலும் இந்நூல் முக்கிய கவனத்திற்குரியதாகிறது.

- இது புதிய பார்வையின் கருத்து (சனவரி 1-15, 2009).



விமர்சகர்கள், ஏடுகளின் பார்வையில் ஏற்றம் பெரும் இந்நூல் - ஏதோ ஒரு தனி மனிதர்தம் வாழ்வைப் பற்றியதல்ல; ஒரு நாட்டின், ஓர் இனத்தின் வரலாற்றைப் புத்தம் புதிய புரட்சி முறையில் வார்த்தெடுக்க தந்த வரலாற்றுத் தலைவரின் சீடர் ஒருவரால் எழுதப்பட்டது என்றால், அதன் தாக்கங்களும், சீற்றங்களும், செழிப்பான தகவல்களும், புத்தம் புதிய முத்துகளும் நிறைந்து கிடக்கும் - கிடக்கின்றன என்று ஆய்வாளர்கள் சலித்து எடுத்துக் கொடுத்துள்ளனர்.

தன் இனத்தின் வரலாற்றை அறியாத ஓர் இனம் தறுதலையாகத்தான் போகும். தமிழர்கள் அவ்வாறு ஆகாமல் இருப்பதற்கு தந்தை பெரியார், அவர்தம் சீடர்களின் வரலாற்றினைத் தெரிந்துகொள்ள வேண்டுமே!

தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு ஏன் - எதற்காக? என்ற நூலைத் தமிழ்நாடு தழுவிய அளவில் கொண்டு சேர்த்த மாணவரணியினர், அடுத்தகட்டமாக மாணவரணியினரும், இளைஞரணியினரும் இணைந்து 56 கழக மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஆயிரம் என, அய்யாவின் அடிச்சுவட்டில்... என்ற அரிய கருவூலத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பிப்ரவரி 10 இல் தொடங்கி மார்ச் 10 இல் அந்தப் பணியை நிறைவு செய்து, அதற்கான தொகையினைக் கழகத் தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆரோக்கியமான போட்டி!

"அய்யாவின் அடிச்சுவட்டில்..." என்ற நூலை தனிப்பட்ட முறையில் அதிகம் விற்று சாதனை படைப்பவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்படும். இதற்காக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். இது ஓர் ஆரோக்கியமான அறிவுப் போட்டியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தபோது, பலத்த கரவொலி வெடித்துக் கிளம்பியது.
கோவைப் புறநகர மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் குறிச்சி சந்திரசேகரன் சார்பாக தனிப்பட்ட முறையில் நூறு புத்தகங்கள் விற்றுத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாவட்டத்துக்கு ஆயிரத்துக்குமேல் விற்றுத் தரப்படும் என்று இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தனர்.

அதற்கான பூர்வாங்கக் கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் கடந்த ஞாயிறன்று (25.1.2009) மாலையில், கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடவுள் மறுப்புடன் தொடங்கப்பட்ட இந்தக் கலந்துறவாடலில், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், துரை. சந்திரசேகரன், பொதுச்செயலாளர் கலி. பூங் குன்றன், இளைஞரணி மாநில அமைப்பாளர் பூபேஷ்குப்தா, மாணவரணி மாநில அமைப்பாளர் ரஞ்சித்குமார், இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளர்கள் ஈரோடு வைரம், திருத்தணி அறிவுச்செல்வன், இராசபாளையம் இல. திருப்பதி, தருமபுரி சிவாஜி, விருத்தாசலம் முத்து கதிரவன், தஞ்சை ந. இராமகிருட்டினன், சென்னை - தமிழ் சாக்ரட்டீஸ், மாணவரணி துணை அமைப்பாளர்கள் உசிலம்பட்டி செயப்பிரகாசு, சேலம் தம்பி பிரபாகரன் (சட்டக் கல்லூரி மாணவர்) மற்றும் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு. சேகர் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தலைவரின் நிறைவுரை

கலந்துறவாடல் கூட்டத்தின் தலைவர் - தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ரத்தினச் சுருக்கமாக வழிகாட்டும் கருத்துகளை எடுத் துரைத்தார்.

1. நூல்கள் விற்பனையாகவேண்டும் என்பதற்கான முயற்சியல்ல - இது.

2. சரியான வரலாற்றினை மக்களுக்கு - குறிப்பாக இளைஞர் களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சி - திட்டம் இது.

3. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று திட்டமிட்ட வகையில் குழப்பத்தை விளைவிக்கும் சக்திகளை முறியடிக்கும் முயற்சி இது.

4. முக்கியமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்குமான ஒரு பயிற்சி இது. மக்கள் மத்தியில் செல்வது, நம் கருத்துகளை எடுத்துக் கூறுவது என்பது இதன் உள்ளடக்கம். தன்னம்பிக்கை, நம்மால் சாதிக்க முடியும் என்ற திடத்தை ஏற்படுத்தக் கூடியது இது.

அலை அலையான செயல் திட்டங்களால் இயக்கம் பீடு நடை போட்டு வருவதை மறுப்பார் யார்?

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு யுவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று நாம் கூறுவது வெறும் மந்திரச் சொற்கள் அல்ல - செயலில் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

எடைக்கு எடை வெள்ளி, எடைக்கு எடை தங்கம் அளிக்கப்பட்டது - தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் செய்து காட்டிடவில்லை. மறைந்த கழகப் பொருளாளர் தஞ்சை மானமிகு கா.மா. குப்புசாமி அவர்கள் துணிவுடன் அறிவித்தார். எனக்கெல்லாம் கூட என்ன, இப்படி அறிவித்துவிட்டார்களே, எப்படி சாத்தியம் என்ற எண்ணம் இருந்தது. நம் தோழர்கள் முயற்சி எடுத்து சாதித்து முடித்து விட்டார்களே!

மானம் பாராத தொண்டு, கூச்சம், தயக்கம் இவற்றிற்கு இடம் இல்லாமல் பொதுப்பணி ஆற்றிட இவையெல்லாம் ஒரு பயிற்சிக்களமாகும்.

5. வரும் ஜூன் மாதத்தில் விடுதலையின் பவளவிழா (75 ஆம் ஆண்டு) ஏற்கெனவேயுள்ள விடுதலை பொலிவுக்கு மேலும் ஒளி சேர்க்கும் வண்ணம் வெளிவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதுடில்லியில் நடைபெற்ற அச்சு இயந்திரக் கண்காட்சிக்கு நமது அச்சக மேலாளர் சரவணன் சென்று வந்து பல தகவல்களைக் கொடுத்துள்ளார்.

நவீன வசதிகளைக் (Modernisation) கொண்டு எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாகக் கொண்டு வருவதற்குத் திட்டங்கள் உள்ளன.

குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும். நாம் எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு தொடங்குவதில்லை. தைரியமாக வங்கியில் கடன் வாங்கி செய்து முடிக்கிறோம்.

ஒரு கோடி ரூபாய் கடன் பெறுகிறோம் வங்கியிலிருந்து என்று சொன்னால், மூன்றில் ஒரு பங்கு முதலில் கட்ட வேண்டியிருக்கும். இந்த நூலின் மூலமாகக் கிடைக்கும் இந்தத் தொகையை அதற்குப் (Seed Money) பயன்படுத்திக் கொள்வோம் (பலத்த கரவொலி!).

மே மாதத்தில் புதிய அச்சு இயந்திரத்தை வாங்குவோம். நமது பிரச்சாரத்திற்கு முக்கியமான முதன்மையான ஆயுதம் விடுதலைதான். அதனை விரிவாக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவோம்.

மார்ச் 10 ஆம் தேதி அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள். அன்றைய தினம் திருச்சி கல்வி வளாகத்தில் அன்னை மணியம்மையார் பெயரில் விளையாட்டரங்கம் (ஸ்டேடியம்) திறக்கப்படும்.

6. நாம் எதைச் செய்தாலும் ஒரு காலவரையறையை வகுத்துக் கொண்டு செய்யவேண்டும் (Time Bound Programme) ஒவ்வொரு மணித்துளியையும் வீணடிக்கக் கூடாது என்று அருமையான வழிகாட்டும் உரையை நிகழ்த்தினார்.

மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் நம்பியூர் சென்னியப்பன் நன்றி கூறிட, இரவு 7.45 மணிக்குக் கலந்துறவாடல் கூட்டம் நிறைவுற்றது.

-------------------நன்றி:-"விடுதலை" 27-1-2009