Search This Blog
15.4.09
பெரியார் சொன்னார்; கலைஞர் செய்தார்!
பெரியாரின் சிந்தனைகளை, பெரியார் சமூக மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதனை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதித்துக் காட்டியவர் நமது தலைவர் கலைஞர். இதுபற்றி ஒன்றல்ல. ஓராயிரம் எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் சிலவற்றை மட்டும் இங்கு நாம் காண்போம்.
பெரியார் சொன்னார்:-
"இனிமேல் சர்க்கார் தர்க்காஸ்து நிலம் கொடுப்ப தெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களுக்கும் மற்றும் நிலமில்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அதிலும் இப்போது தீண்டாதோர் எனப்படுவோருக்கு விசேட சலுகை காட்டி நிலங்களைப் பயன்படுத்திப் பயிர் செய்ய பண உதவி செய்ய வேண்டுமென்றும் இந்த மாநாடு கோருகிறது."
(- 1929 ஆம் வருட செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டுத் தீர்மானம்)
கலைஞர் செய்தார்:-பெரியார் 1929 ஆம் ஆண்டு கூறியதை அடியொற்றிக் கலைஞர் தனது ஆட்சிக் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளார். அதனைச் சுருக்கமாகப் பார்ப்போம்
1989 - 90 ஆம் ஆண்டில் நிலமற்ற ஏழை எளியவர்களுக்கு 3 லட்சத்து 34 ஆயிரத்து 95 இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 383 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்.
1990 - 91 ஆம் ஆண்டுகளில் 3.25 லட்சத்து இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர் ஐந்தாம் முறையாக ஆட்சிக்கு வந்தபின்பு 2006-07-ல் 76622 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
2007-08 ஆம் ஆண்டில் 4,16,423 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கலைஞர் உழுபவனுக்கு நிலம் வேண்டும் என்ற செயல் திட்டத்தின்படி நில உச்சவரம்புச் சட்டத்தை மாற்றி அமைத்தார். இதன்படி 1970 ஆம் ஆண்டு நில உச்ச வரம்புச் சட்டம் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மிட்டா மிராசுகளிடமிருந்த 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டு நிலமற்ற 1,37,236 ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதுபோக உலகில் இதுவரை எவரும் செய்ய எண்ணாத மாபெரும் புரட்சி செய்தார் கலைஞர். ஆம் கழகம் தனது 2006 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அனைவருக்கும் நிலம் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார். நிலம் எங்கே இருக்கிறது? என்று ஏகடியம் பேசியவர்களும், நிலம் வழங்கும் திட்டம் தோல்வி அடையும் என்று ஆரூடம் கணித்தவர்களுக்கு வாய் பிளக்கும் வண்ணம் நிலம் வழங்கும் திட்டம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
17.9.2006 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் இதுவரை ஏழு கட்டங்களாகச் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 178711,48 ஏக்கர் நிலம் நிலமற்ற 151265 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.
தலித் மக்களின் பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்து உல்லாச மாளிகை கட்டிய தலைவியும், தனது திருமண மண்டபம் காக்க கட்சி நடத்தியவரும் இத்திட்டத்தை எதிர்ப்பதை என்னவென்று சொல்ல?
----------------------------------------------------------------------------------------
பெரியார் சொன்னார்:-
‘பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாகச் சொத்துரிமைகளும், வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பெண்களும் ஆண்களைப் போலவே எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்தி வருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும், அவகாசமும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு கோருகிறது.’ (- 1929 ஆம் வருடம் செங்கற்பட்டு சுய மரியாதை மாகாண மாநாட்டுத் தீர்மானம்)
கலைஞர் செய்தார்:-
பெரியார் 1929 ஆம் ஆண்டு வலியுறுத்தியதை பெரியாரைப் போல பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட கலைஞர், ஆண்களைப் போல பெண்களும் இவ்வுலகில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு சொத்துரிமை மிகவும் அவசியம் என்று உணர்ந்த கலைஞர் 1989 ஆம் ஆண்டில் மே மாதம் 6 ஆம் நாள் பெற்றோர் சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க சட்டம் இயற்றினார். இதன் மூலம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்தது.
அதைப் போலவே பெண்கள் ஆண்களைப் போலவே தொழில் நடத்தி முன்னேறுவதற்கு ஏதுவாக மகளிர் சுய உதவிக் குழுக்களை கலைஞர் தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கினார்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கழக அரசினால் கிராமப்புற ஏழை எளிய பெண்களின் சமூக - பொருளாதார நிலைகளை உயர்த்திடும் வண்ணம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னும் சமூக மாறுதலுக்கான திட்டத்தை கலைஞர் உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இன்று பல்கிப் பெருகி, ஏழை, எளிய கிராமப்புற பெண்களின் வாழ்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய மாறுதலுக்கு கலைஞர் அரசு செய்த பணிகள் சிலவற்றையும் பார்ப்போம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1996-2001 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் பல்வேறு தொழில்களைத் தொடங்கிய ரூ.73.25 கோடி நிதியுதவி.
13.5.2006 முதல் 15.3.2008 வரை 50083 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8,01,328 பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு சுழல் நிதி மானியம் கலைஞர் அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 1,50,000 சுய உதவிக் குழுக்கள் பயன்பெற்றுள்ளன. 2006-07-ல் மட்டும் ரூ.10,000 வீதம் 30,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30 கோடி சுழல்நிதி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழுக்களுக்கு இந்த வருடத்திற்கு வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள் எந்த தொழிலையும் நடத்துவதற்கு சம உரிமையும், அவகாசமும் வழங்கப்பட வேண்டுமென்ற தந்தை பெரியாரின் எண்ணத்திற்கு ஏற்ப மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மகளிர் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
----------------------------------------------------------------------------------------
பெரியார் சொன்னார்:-
"பள்ளிக்கூட உபாத்தியர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது." (-1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு சுய மரியாதை மாகாண மாநாட்டுத் தீர்மானம்)
கலைஞர் செய்தார்:-
பெரியாரின் வழி ஆட்சி செய்யும் கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் தான் முதன் முதலாக தொடக்கப்பள்ளிகளில் பெண்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய உத்தரவிட்டார். இன்று பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் எல்லாம் கலைஞர் இட்ட உத்தவரவால் தான் பணிக்கு வந்தவர்கள். இது கலைஞர் பெண்களின் வாழ்வில் செய்ய மிகப்பெரும் தொண்டு.
----------------------------------------------------------------------------------------
பெரியார் சொன்னார்:-"பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டாலொழிய பெண்கள் விடுதலை ஏற்படாதென்று இந்த மாநாடு கருதுவதால் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது." (-1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் 3-வது சுய மரியாதை வாலிபர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம்)
கலைஞர் செய்தார்:-
பெண்களுக்கு அவர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு என்னதான் சலுகைகள் அளித்தாலும், உதவிகள் புரிந்தாலும் அவர்களின் வாழ்வில் பெரிய அளவிலான மாற்றமோ, விடுதலையோ மலராது என்பதனை உணர்ந்த கலைஞர் அவர்களின் விடுதலைக்கு மிகப்பெரிய மகத்தான பணியினைச் செய்தார். அது உள்ளாட்சிப் பணிகளில் மகளிருக்கு 33 விழுக்காடு வழங்குவது.
இந்தியாவிலேயே முதன்முறையாக கலைஞர்தான் இத்தகைய இட ஒதுக்கீட்டை வழங்கினார். இதன் மூலம் வீட்டை அலங்கரித்த பெண்கள் நமது கலைஞரின் உத்தரவின் மூலம் அனைத்து உள்ளாட்சிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளர். இன்று உள்ளாட்சிகளில் உறுப்பினர்களாக, மேயர்களாக நாம் காணும் பெண்கள் எல்லாம் நமது கலைஞர் அவர்கள் இயற்றிய சட்டத்தால், அரசியல் அரங்கில் இடம் பெற்றுள்ளனர். கத்தியின்றி, ரத்தமின்றி கலைஞர் நிகழ்த்திய மாபெரும் புரட்சி இது. பல்லாண்டுகள் அடிமைப்பட்டிருந்த பெண்கள் இனத்தையே தான் இயற்றிய சட்டத்தின் மூலம் கலைஞர் தலைநிமிரச் செய்தார். பெண்கள் வாழ்வில் கலைஞர் செய்த இந்த மகத்தான பணிக்கு ஈடாக யாரும் இதுவரை எதுவும் செய்யவில்லை.
-----------------------------------------------------------------------------------------
பெரியார் சொன்னார்:-
"பெண்கள் வைத்தியத் தொழிலுக்கும் உபாத்திமைத் தொழிலுக்கும் மாத்திரம் எடுப்பது போதாது. அவர்களைப் போலீஸ் இலாகாவிலும், ராணுவத்திலும் சேர்க்க வேண்டும்." (-1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டுத் தீர்மானம்.)
கலைஞர் செய்தார்:-
பெரியாரின் எண்ணப்படி பெண்களை அனைத்துத் துறைகளிலும் கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் காவல் பணியில் முதன் முதலாக பெண்களை நியமனம் செய்தார். இதன்மூலம் பெண்கள் காவல் பணிகளிலும் இடம் பெற்றனர்.
------------------------------------------------------------------------------------
பெரியார் சொன்னார்:-
"விவசாயிகளுக்கு இன்று உள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன், இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லை ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்." (-23.9.1934 ஆம் ஆண்டு சென்னை பார்ப்பனரல்லாதோர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்)
கலைஞர் செய்தார்:-
நம் நாட்டின் மிகப் பெரும்பான்மையான விவசாயத் தொழிலாளர்கள் நலனில் கனிவும், அக்கறையும் கொண்ட கலைஞர் அவர்கள் விவசாயிகள் நலனுக்காக, பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார்.
எ விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த இயலாமல் 31.3.2006 வரை வங்கிகளில் நிலுவை இருந்த விவசாயக் கடன் மற்றும் வட்டித் தொகை ஏறத்தாழ 7000 கோடி முழுவதையும் தள்ளுபடி செய்துதான் 3.5.2006 அன்று முதல்வராகப் பதவியேற்ற விழா மேடையிலேயே அரசு ஆணை பிறப்பித்தார் கலைஞர். இதன்மூலம் இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றினார் கலைஞர்.
எ பயிர்க்கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 2006-07-ல் 7 சதவீதம் ஆகவும், 2007-08-ல் 5 சதவீதம் ஆகவும் குறைத்தவர் கலைஞர்.
எ கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு கொடுக்கின்ற விவசாயிகளுக்கு கரும்புக்குரிய விலை மட்டுமில்லாமல் அந்தந்த ஆலையில் வருகின்ற லாபத் தொகையைப் பகிர்ந்து உயர்த்திக் கொடுக்கின்ற வகையில் ஊக்கத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தியவர் கலைஞர்.
இந்தியாவிலேயே கலைஞர்தான் முதன்முதலாக 1990ல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். இத்திட்டத்தினால் ஏறத்தாழ 20 லட்சம் மோட்டார் பம்புகள் உடைய விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு கூடுதல் விலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் சந்தைகளைத் தொடங்கி வைத்தார். இதனால் விவசாயிகள் கூடுதல் விலை பெற்றனர்.
------------------------------------------------------------------------------------
பெரியார் சொன்னார்:-
"நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்குப் போவதானாலும், சாமி இருக்கிற அறைக்கு வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம் நாம் கீழ்சாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்கவேண்டும். வெளியில் நிற்கிறோம். எனவே, நமக்கு இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம்". - விடுதலை 14.10.1973
கலைஞர் செய்தார்:-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும். தமிழர்கள் சாமி இழிவு நீங்கவேண்டும் என்பது தந்தை பெரியாரின் இறுதி விருப்பம். ஆனால், அந்த விருப்பம் நிறைவேறாமலே தந்தை பெரியார் மரணமடைந்தார்.
நமது தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரை அவரது இறுதி விருப்பம் நிறைவேறாமலே புதைத்துவிட்டோமே என்று வேதனை அடைந்ததோடு பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க உறுதி பூண்டார். அர்ச்சகர் தொழிலுக்கான உரிமையைப் பார்ப்பனர் மட்டுமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதை ஒழிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் வலியுறுத்தி வந்த கொள்கையைப் பின்பற்றி அர்ச்சகர் தொழிலுக்கு பார்ப்பனரல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்பதற்கு வழி செய்யும் மசோதா கலைஞர் ஆட்சியில் 30.11.1970ல் தாக்கல் செய்யப்பட்டு 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அன்று பல்வேறு காரணங்களால் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது கலைஞர் அவர்கள் ஐந்தாம் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றபோது கூடிய முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 2.1.2007 அன்று உத்தரவிட்டார். தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டது. அவரது இறுதி விருப்பம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் அதனை நிறைவேற்றினார்.
------------------------------------------------------------------------------------- (கட்டுரை சுருக்கித் தரப்பட்டுள்ளது)
-------------நன்றி:- "முரசொலி"
Labels:
கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல வேளை...பெரியார் உயிரோடு இல்லை..அவருக்கு ஜால்ரா சத்தம் பிடிக்காது
அய்யா வனக்கம்.
புள்ளிவிபரங்களுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. அதனால் தான் பதிவு செய்தோம்.
ஜால்ரா என்பது உங்கள் அதீத கற்பனை
கலைஞர் குறித்து பெரியார் கூறியது இதோ;
'"நமது கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தொழிலாளர்கள் ஆகியவர்களை மனதில் கொண்டு அனேக நம்மைகளைச் செய்து வருகின்றார். குடி இருக்க மனை, வீடு முதலியனவும் ஏற்பாடு செய்து வருகின்றார் ".
இந்தியாவிலேயே எந்த மாநில அரசாங்கமும், மத்திய ஆட்சியோ செய்ய முன் வராத காரியமான தொழிலாளர்களுக்கு தொழில்கள் லாபத்தில் பங்கும், நிர்வாகத்தில் பங்கும் அளித்து அவர்களை மேன்மையுறச் செய்ய முற்பட்டு உள்ளார்.
மற்ற ஆட்சி எல்லாம், தொழிலாளி - முதலாளி என்ற பாகுபாடு இருக்கவே காரியம் ஆற்றுகின்றன. கலைஞர் அவர்கள் தான் இந்தப் பேதத்தை மாற்றக் காரியம் ஆற்றுகின்றார்.
எதிரிகள் பொறாமை உணர்ச்சியோடு இதனைப் பாராட்டாததோடு தூற்றியும் திரிகின்றார்கள். உண்மையிலேயே சாதி ஒழிந்த சமுதாயமாக நாடு ஆகவேண்டும் என்ற கருத்தில்தான் கலைஞர் எல்லா மக்களும் கோயிலுக்குள் போகலாம், பூஜை பண்ணலாம் என்ற உத்தரவுபோட்டார்.
ஒரு நாளும் இப்படிப்பட்ட திறமையான ஆட்சி, வலிமையான ஆட்சி, அதுவும் தமிழனே தமிழர் நலன் கருதி ஆளக்கூடிய ஆட்சி நடந்ததே இல்லை.
இன்றைய நிலையில் கலைஞர் அவர்களே ஆட்சிப் பொறுப்பில் இல்லாது, வேறு யார் இருந்தாலும்கூட இவ்வளவு திறமையாக எதிரிகளைச் சமாளித்துக் கொண்டு காரியம் ஆற்றி வரமுடியாது.
இப்படிப்பட்ட முதல்வரை நாடு பெற்று இருப்பது ஒரு நல்ல வாய்ப்பு என்று மக்கள் உணரவேண்டும். இவ்வளவு அரிய பெரிய காரியங்களை எல்லாம் நலன் கருதிச் செய்கின்ற ஆட்சியினை நாம் ஆதரிக்கவேண்டும்".
(- 30.5.1973 அன்று காஞ்சிபுரம் நகராட்சி மன்றத்தின் சார்பாகத் தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து ஆற்றிய உரை.)
முடிவை உங்களின் சிந்தனக்கே விட்டு விடுகிறேன் தண்டோரோ.
சல்மா அவர்கள் எழுதிய கட்டுரை இது.அவர் பெயர் வெளியிட்டால் சிற்ப்பாக இருக்கும்.
Post a Comment