Search This Blog
22.4.09
பெரியாருக்கு குருதட்சணை தருவது வாடிக்கை
குருதட்சணை
ஈரோட்டுக் குருகுலப் பயிற்சிக்குப்பின் திராவிட மாணவர் கழக கோடை விடுமுறைப் பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு 12 வயதில் மேஜையின்மீது ஏறிப் பேசிய அதே ஊரில், நகரமன்ற வரவேற்பைப் பெறும் வாய்ப்பும் எனக்கு - பெரியார் தொண்டனுக்குக் கிட்டியது என்றால் அதற்குக் காரணம் அய்யாவின் அடிச்சுவட்டில் அடிபோட்டதன் காரணமாகத்தானே; அது எனக்கு அளிக்கப்பட்ட தனி மரியாதையாக நான் கருதாது, எனது தலைவர், அறிவுக்கண் திறந்த அய்யாஅறிவு ஆசான் கொள்கைக்கு அந்நகரமக்கள் தந்த வரவேற்பாகவே கருதி, அதே அடிச்சுவட்டில் பணிபுரிவேன் என்றுதான் நகராட்சி வரவேற்பின்போது நான் பதில் கூறினேன்!
அடுத்து 3-10--1971இல் ஞாயிறு அன்று காலை கோயில் நகரம் என்று அழைக்கப்படும், ஆத்திக - பக்தியூரான மதுரையம்பதியில், நாத்திக நன்னெறியைப் பரப்பி, நாளும் தொண்டு செய்த எதிர்நீச்சல் வீரர் தந்தை பெரியார் அவர்களுக்குச் சிலை வைக்கவும், திராவிட மாணவர் கழக அமைப்பினைத் துவக்கிச் செயல்பட வைக்கவும் எனது தலைமையில் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மதுரை அம்சவல்லி பவன் என்ற உணவு விடுதியின் உரிமையாளர், சா.கோபால் தந்தை பெரியார் அவர்களிடம் எல்லையற்ற அன்பு பூண்ட சுயமரியாதைக் கொள்கையாளர். கழக உறுப்பினர் அல்லாத கடைசிவரை ஆதரவாளராகவே இருந்த வெள்ளைச்சட்டை - கதர்ச் சட்டை ஆதரவாளர். அய்யாவுக்குப் பிறகு அம்மாவிடத்திலும், என்னிடத்திலும் அப்படியே தொடர்ந்து மறையும்வரை இருந்த பெருந்தகையாளர்.
அவரது உணவு விடுதி மாடியில் சுயமரியாதைக் குடும்பங்களின் விருந்துகளும் அடிக்கடி நிகழும்.
கழக முக்கியப் பொறுப்பாளர்களும், திராவிட மாணவர்களும் ஏராளமாகக் குழுமியிருந்தனர்!
எனது தலைமையில் காலை 11 மணியளவில் சிலை அமைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
1948-இல் மதுரையில் கருப்புச் சட்டைப்படை மாநாடு நடந்தபோது, அவ்வூர் காங்கிரஸ் பார்ப்பனர் வைத்தியநாத அய்யர் என்ற வக்கீல் பார்ப்பனரின் தூண்டுகோலால், இரண்டாம் மாநாடு தொடர முடியாத அளவுக்கு பந்தலைத் தீவைத்துக் கொளுத்தி, பல்வேறு கருப்புச்சட்டை அணிந்து மாநாட்டிற்கு வந்த தோழர்கள், தோழியர்களை காலிகளையும், கூலி-களையும் வைத்துத் தாக்கினர்; தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நடிகவேள் ராதா, அஞ்சாநெஞ்சன் தளபதி பட்டுக்காட்டை அழகிரிசாமி போன்றவர்-களைத் தாக்கிடவும் திட்டமிட்ட நிலையில், மாநாட்டை பாதியில் நிறுத்தி, போலீஸ் காங்கிரஸ் ஆட்சியின் கண்ஜாடைக்கிணங்க நடந்து, தந்தை பெரியாரை கொடைக்கானல் ரோடு ரயில்வே நிலையம் வந்து ரயிலில் அனுப்பிவைத்தனர்.
அப்படிப்பட்ட எதிர்ப்புப்புயல் கிளம்பிய பக்தியூரில், தந்தை பெரியாருக்குச் சிலை அதுவும் எப்படிப்பட்ட நிலையில் என்றால் அக்குழுவிற்குப் புரவலராக, அம்மாநகர மேயர் சுயமரியாதைக் கொள்கை வீரர் மதுரை முத்து அவர்கள் (ஆரம்பகால திராவிடர் கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு திராவிடர் இயக்கத்தில் கடைசிவரை உழைத்தவர்; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.
அய்யா, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் இவர்களிடத்தில் அன்பு பூண்டவர்.)
சிலைக்குழுவிற்கு ஓ.வி.கே.நீர்காத்தலிங்கம் தலைவராகவும் கோபால்சாமி, எம்.எஸ்.-இராமசாமி, வாடிப்பட்டி சுப்பையா அவர்-களும், சிவகங்கை வழக்குரைஞர் சண்முக-நாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோர் துணைத்தலைவர்களாகவும்,
சமதர்மம் (வணிகப் பிரமுகர்) செயலாளராகவும், காரைக்குடி சுப்ரமணியன், நிலக்கோட்டை வழக்கறிஞர் கிருஷ்ணன் பி.ஏ.பி.எல்., முத்தையா அவர்களின் அருமை மகன் அன்பரசன் ஆகியோர் துணைச் செயலாளர்-களாகவும், பெருவணிகர் பே.தேவசகாயம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்!
அங்கேயே உடனடியாக சுமார் 10 ஆயிரத்து 562 ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது! மதுரை அனைத்துக்கல்லூரி திராவிட மாணவர்களும் கூட 2000 ரூபாய் நன்கொடை தந்தனர்! அடுத்து மதிய விருந்திற்குப்பின் தென் மாவட்டங்களில் திராவிடர் கழகப் பிரச்சாரப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது! அதற்கும் நான்தான் தலைமையேற்றேன்! தென்மாவட்டங்களைச் சேர்ந்த 5 மாவட்ட தி.க. தலைவர், செயலாளர் உட்பட மாவட்டத்திற்கு 3 பேர் வீதம் 15 பேர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்-பட்டது! பின்னர் மாலை 4 மணிக்கு எனது தலைமையில் பகுத்தறிவாளர் கழக அமைப்புக்-கூட்டம் அங்கேயே நடைபெற்றது! பல்வேறு துறைகளில் பணிபுரிவோர் சுமார் 300 பேர்களுக்கு மேல் வந்து, அதனை அமைத்து மகிழ்ந்தனர்! இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சுமார் 2 மணி நேரம் பேசினேன்! மதுரையில் ஏற்பட்ட திருப்பம் தென்மாவட்டங்களில் கழகப் பணிகள் வெகுவேகமாக நடைபெறுவதற்கு அச்சார முயற்சிகளாகிப் பிற்காலத்தில் நல்ல கொள்கை விளைச்சலைத் தந்தது!
அடுத்த நாள் 4-10-1971 திங்கள் அன்று விருதுநகரில் அம்மன் கோயில் திடலில் தந்தை பெரியார் 93ஆம் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன், கழகப் பொறுப்பாளர்கள் வெங்கடாஜலபதி பி.ஏ., மதுரை ஒ.வி.கே.-நீர்க்காத்தலிங்கம், பெரியகுளம் ச.வெ.அழகிரி (மதுரை மாவட்டச் செயலாளராக இருந்து கடைசி மூச்சுவரை தொண்டு செய்த கருஞ்சட்டைக் கடமைவீரர் - பொறுமைசாலி!) பெரியவர் சுயமரியாதைச் சுடரொளி அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பையா, விருதை தாலமுத்து, கே.பி.எஸ்.-பாண்டியன் ஆகியோர் அம்மேடையில் என்னுடன் உரையாற்றியவர்கள்!
அதே நாளில் (4.-10.-1971) பிற்பகலில் மதுரை யாதவர் கல்லூரி மாணவர் மன்றத்தில் உரையாற்றிவிட்டுத்தான், விருதுநகரில் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்டேன்!
திருச்சியில் சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் 10.10.1971 அன்று காலை 10 மணிக்கு தந்தை பெரியார் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டது!
திருச்சி பஞ்சாயத்துச் செய்தி ஆசிரியரும், தந்தை பெரியார் பற்றாளருமான நோபிள் பிரஸ் உரிமையாளர் கே.கோவிந்தராஜலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பொறியாளர் கே.எம்.பாலசுப்ரமணியம் (சிந்தனையாளர் கழகத் தலைவர்) தலைமை தாங்கினார். அவ்விழாவில் சென்னை பேராசிரியர் மா.கி.தசரதன், கிண்டி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி, துணைத்தலைமைப் பொறியாளர் திருஞான-சம்பந்தம், முன்னாள் அமைச்சர் கே.வி.சுப்பையா, வே.ஆனைமுத்து, திருச்சி சட்டப்-பேரவை உறுப்பினர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நானும் உரையாற்றினோம்.
தந்தை பெரியாரின் செல்லப்பிள்ளையாகவே இறுதிவரை திகழ்ந்த அமைச்சர் அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் தந்தை பெரியார் உருவமும், அவர் உருவமும் பொறித்த வெள்ளித்தட்டையும் ஒரு வைர மோதிரத்தையும் விழாக்குழு சார்பில் தந்தை பெரியாருக்கு அளித்தார். தந்தை பெரியாருக்கு எப்போதும் குருதட்சணை தருவது வாடிக்கை என்றும், எப்போதும் மாலை அணிவித்து அய்யாவிடம வாழ்த்துப் பெற்றுச் செல்வேன் என்றும் வர்ணித்தார்!
அன்றைய போக்குவரத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும், சமூகநலத்துறை அமைச்சர் திருமதி சத்தியவாணிமுத்து அவர்களும் கலந்து கொண்டு தந்தை பெரியார் தொண்டினைப் பாராட்டினார். அன்று இரவு (10.-10.-1971) 7.15 மணிக்கு திருச்சி கழக முன்னாள் நிருவாகக்குழுத் தலைவரும், வழக்குரைஞருமான தி.பொ.வேதாசலம் அவர்கள் மறைவுற்றார்.
தந்தை பெரியாரை விட்டு விலகி எதிர்ப்பிரச்சாரம் செய்து, வருமான வரித்துறைக்கு திரு.சா.குருசாமி (மேனாள் விடுதலை ஆசிரியர்) என இணைத்து மனு எழுதிப்போட்டு, எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்தார் என்ற நிலையில் தந்தை பெரியார் அவர்கள் அனுதாபச் செய்தி கூறியும் தென்னூரில் உள்ள வழக்கறிஞர் இல்லத்திற்கு மாடியில் ஏறிச் சென்று இறுதி மரியாதை செய்து திரும்பினார்கள். அவருடன் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், திருமதி ரங்கம்மாள் சிரம்பரம் முதலியோர் சென்று திரும்பினர். நான் இரவே சென்னை திரும்பிய பின்னரே செய்தி அறிந்து அனுதாபம் தெரிவித்தேன்.
16-10-1971 அன்று விடுதலையில் கீழ்க்காணும் அறிக்கை ஒன்றை, அய்யா அவர்களது உடல்நலம் கருதி, கழகத் தோழர்களுக்கு முக்கிய விண்ணப்பம் என்ற தலைப்பில் வெளியிட்டேன்.
தந்தை பெரியார் அவர்களைக் கொண்டு கூட்டம், பொதுநிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் தோழர்கள் அய்யா அவர்கள் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை மட்டும்தான் நடத்த வேண்டும். அந்தப்படி செய்யாமல் ஒவ்வொரு ஊரிலும் 4, 5 கூடுதல் நிகழ்ச்சிகள் வைத்துக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் மேடையில் ஏறி இறங்குவதால் அய்யா அவர்களுக்கு மிகுந்த களைப்பும், வலியும் உண்டாகி அவர்கள் தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. ஆகவே, அருள்கூர்ந்து இனி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் தோழர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒப்புக்கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும்தான் நடத்த வேண்டும். அதற்கு மேல் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனியே கூடுதலாக நூறு ரூபாய் கொடுக்க வேண்டும்.
இந்தப்படி 100 ரூபாய் கூடுதலாகத் தரவேண்டும் என்பது, அய்யா அவர்களது தொந்தரவைக் குறைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஆகும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். -கி.வீரமணி
22.10.1971 வெள்ளிக்கிழமை மாலை கிருஷ்ணகிரி கார்னேஷன் திடலில், கிருஷ்ணகிரி பகுத்தறிவாளர் கழகச் சார்பில், அறியாமையும், அறிவியல் சாதனைகளும் என்ற தலைப்பில், பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன். பகுத்தறிவுப் புலவரும், அவ்வட்டாரத்தில் தமிழ் இனவுணர்வாளராக இறுதி வரை வாழ்ந்த புலவர் இரா.பெ.-இராமச்சந்திரனார் அவர்களும், ஆசிரியர் பெ.வெ.தாது அவர்களும் என்னுடன் உரையாற்றினர்.
21.10.1971 அன்றைய விடுதலையிலும் அய்யாவின் உடல்நலப் பாதுகாப்பு பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டேன். தந்தை பெரியார் அவர்களை நிகழ்ச்சிகட்கு அழைக்கும் அன்பர்களும், தோழர்களும், அருள்கூர்ந்து நினைவிற்கொண்டு மேடையை அதிக உயரமில்லாமல் அமைப்பதுடன், மேடையில் அய்யா அவர்களை அமரவைத்து, மற்ற பேச்சாளர்களை பேசவிட்டு மணிக்கணக்கில் அய்யா அவர்கள் அமர்ந்து சோர்வடைந்து பிறகே அவர்களைப் பேசவிடும் தற்போதைய முறையை மாற்றி, அவர்களது உடல்நலம் வசதியைக் கருதி, முன்னால் பேசும் பேச்சாளர்களின் எண்ணிக்கையையும், பேசும் நேரத்தினைக்கூறி வசதி செய்து தருவது அய்யா அவர்கள் அறிவுரை கூற வசதி செய்து தருவது அய்யா அவர்களுக்கும், அவர்களது பேச்சைக் கேட்க ஆவலுடன் கூடும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் உதவியாக ஆகும். காரிலிருந்து பலமுறை ஏறி இறங்குவது, வெகுநேரம் மேடையில் உட்கார்ந்திருப்பது போன்றவைகள்தான் அய்யாவுக்கு மிகவும் வலியையும், உளைச்சலையும் தரும் காரியமாகும். தயவுசெய்து தோழர்கள் இதை கவனத்தில் கொண்டு நடந்துகொள்ளுமாறு அவர்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன். -- கி.வீரமணி
27.10.1971 அன்று சென்னை கவுரிவாக்கம் எஸ்.அய்.வி.இ.டி.கல்லூரி - மிகவும் பிற்படுத்தப்-பட்ட சமூகமாக வாணியர் சமூகத்தவர்களின் அரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட கல்லூரி, இக்கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்றத் திறப்பு விழாவில், அமைச்சர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் அவர்களுடன் கலந்துகொண்டு பேசினேன்.
----------------------நினைவுகள் நீளும்...
--------------ஏப்ரல் 01-15_2009 "உண்மை" இதழில் கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் அய்யாவின் அடிச்சுவட்டில் .... இரண்டாம் பாகம் (16)
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment