Search This Blog

20.4.09

அட மண்டுகளா? உங்களது ஜோதிட மடைமைக்கு ஓர் எல்லையே இல்லையா?


தேர்தல்களும் ஜோதிடப் பைத்தியங்களும்!

கி.வீரமணி


நேற்று (18.4.2009) வெளி வந்துள்ள தி டைம்ஸ் ஆப் இண்டியா என்ற ஆங்கில நாளேட்டில் முதல் பக்கத்திலேயே தேர்தலில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் சோதிடர்கள்தான் என்ற பொருளில் தலைப்பிட்டு ஒரு முக்கியச் செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது.

நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு மன இறுக்கத்திலிருந்து வெளியேறிட சோதிடப் பைத்தியம் அவர்களுக்குப் புகலிடமாக மாறியுள்ளதாம்.

என்னே கொடுமை! எவ்வளவு அறியாமை, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு முடிந்து 12 மணிக்கு நடுநிசியில் சுதந்தர நாளை வைத்ததே சோதிட மூடநம்பிக்கையின் காரணமாகவே ஆகும்.

ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் மதச் சார்பின்மை பற்றி எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரைகள் கொண்ட நூலில் வேதனையோடும் வெட்கத்தோடும் இதனைக் குறிப்பிட்டு உள்ளார்கள்.

சுதந்திரம் பிறக்கும்போது - அதுவும் பண்டித நேரு போன்ற அறிவியல் மனப்பான்மையாளர் தலைமை அமைச்சராகவும், அண்ணல் அம்பேத்கர் போன்ற பகுத்தறிவுவாதி சட்ட அமைச்சராகவும் அமைந்த அரசு - பதவியேற்கும்போதே இப்படி ஒரு மூடநம்பிக்கை படமெடுத்தாடிய பரிதாபத்தைப் பற்றி என்ன சொல்வது!


நம் நாட்டு நாளேடுகளில், வார ஏடுகளில் - நாய் விற்ற காசு குரைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது என்பதற்கொப்ப இந்த மூடநம்பிக்கைகளை நாளும் ராசி பலன், வருஷப் பிறப்புப் பலன், குருபெயர்ச்சிப் பலன் என்றெல்லாம் போட்டு, கொஞ்ச நஞ்சம் முளை கிளம்பும் பகுத்தறிவையும் அழித்து விடுகின்றன!
தேர்தலில் நிற்க ஜோதிடர்களை ஆஸ்தான ஜோதிடர்களாக்கிக் கொள்ள சிறிது கூட வெட்கமோ, கூச்சமோ கொள்ளாமல், எல்லோரும் நிர்வாணமாக உள்ள நாட்டில், கோவணம் கட்டியவனைப் பைத்தியக்காரன் என்று கருதும் கொடுமை, பகுத்தறிவுவாதிகளைக் கேலி செய்யும் வேதனை நம் விலாவைக் குடைகிறது!

அறிஞர் அண்ணா பெயரில் அரசியல் கட்சி நடத்தும் - திராவிடப் பாரம் பரியத்தில் ஆரிய மாயை புகுந்ததின் அருவருக்கத்தக்க விளைவு வேட்பாளர்களின் முதல் தகுதி - ஜோதிடப் பலன் தான் என்ற ஜெயலலிதா கட்சி அணுகு முறை மிகவும் வெட்ககரமானது அல்லவா?

பரப்பனங்காடி பணிக்கர்களின் சோழி ஜோதிடம் வரை பார்த்துதானே 2004இல் 40 தொகுதிகளிலும் படு தோல்வியடைந்தது ஜெயலலிதா கட்சிக் கூட்டணி!

என்றாலும், சூதாட்டக்காரனுக்குப் புத்தி வராது; மேலும் மேலும் இழத் தொறூஉம் காதலிக்கும் சூதேபோன்று - இப்போது ஜாதகம் தேடும் மடமை தான் என்னே!

ஜாதகம் பார்த்த பின்பு தானே அந்த ஜெயலலிதா திருவள்ளூர் தனித் தொகுதி, விழுப்புரம் தனித் தொகுதி, சென்னை மத்திய தொகுதிகளில் தனது வேட்பாளர்களை அறிவித்து, அவர்கள் பிரச்சாரம் துவங்கிய பின்னர் மாற்றப் பட்டுள்ளனர்? அது ஏன் முன் கூட்டி ஜோதிடத்தில் தெரியவில்லை? சிந்திக்க வேண்டாமா?

வடநாடு இதில் மிகமிக மோசம்; வடநாட்டுத் தலைவர்கள் இதில் மற்ற எவரையும் விட மிஞ்சி, ஜோதிடப் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்!

கர்நாடகத்தில் முன்பு தேவகவுடா, நாமக்கல் ஜோசியரைப் பார்த்துத்தான் - நாமக்கல் ஆஞ்சிநேயருடன் தமிழ் நாடு - புதுவை சனீஸ்வர பகவான் உட்பட கூட்டணி அமைத்து தானே தேர்தல் களம் கண்டார்? பலன் என்ன?

விழிகளில் குளம் கண்டது தானே மிச்சம்? எடியூரப்பா என்ற இன்றுள்ள பாஜகவின் முதல் அமைச்சர் (கர்நாடகத்தில்) முன்பு ஜோதிடம் பார்த்து தானே பதவியேற்று ஒரே வாரத்தில் பதவி இழந்து தெருவில் நின்றார்; மறந்து விட்டதா?

கர்நாடகத்தில் இன்னும் ஜோதிடர்களின் வருவாய் கொட்டோ கொட் டென்று கொட்டுகிறதாம்!
40 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரை செலவிடும் இந்த ஜோதிடத் தொழிலில் (ஹளவசடிடடிபல ஐனேரளவசல) 500-600 கோடி ரூபாய் வருமானம் - இந்த 2009 தேர்தலில் வசூலாகிவிட்டதாம்!
62 ஹோமம் உள்ளது; பூஜை புனஸ்காரம் உள்ளது; இதில் முட்டாள் தனத்திற்கு முடி சூட்டும் மற்றொரு கேலிக்குரிய செய்தி என்ன தெரியுமா?

தொகுதியின் அளவைப் பொறுத்து அதற்குரிய செலவு நீளும் அல்லது சுருங்குமாம்! இவ்வளவு அடி முட்டாள்களைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தின் யோக்கியதை எப்படி ஊழலற்றதாக அமையும்?

பகுத்தறிவுப் பிரச்சாரம், பெரியார்கள் தேவை எவ்வளவு என்பது புரியவில்லையா? ஜே.என்.சோம்யாஜி என்கிற பெங்களூர் ஜோதிடர் கூறுகிறார் - மேலே சொன்ன கருத்தை!

பெங்களூர் மத்திய தொகுதிக்குக் குறைவான கட்டணச் செலவு; பெங்களூர் கிராமியத் தொகுதி - நீளமான படியால் அதிக செலவாம்!

300 நம்பூதிரி ஜோதிடர்கள், புரோகிதர்கள் இறக்குமதியாம்; யாகம் - யோக - புனர் பூஜைகள் - ஹோமம் வளர்ச்சி.

சஹஸ்தினடிஹோமம் வஷிகர்ண ஹோமம் (மற்றவர்களை உங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவர)
விபரீத பிரத்தியங்காரா (வெற்றி வாய்ப்பை பெருக்கிட) இப்படி - புரோகிதர்கள் கன்சல்டேஷன் பீஸ் எவ்வளவு தொகை தெரியுமா? ரூ. 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை யாம்! இவை தேர்தல் கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா? 24 மணி நேர யாகம், 72 மணி இடை நிறுத்தமில்லா யாகம் (இவை எல்லாம் போயஸ் தோட்டத்துக்கு அத்துபடி). இப்படிப் பலப்பல!

அட மண்டுகளா? உங்களது ஜோதிட மடைமைக்கு ஓர் எல்லையே இல்லையா?

சோதிடந்தனை இகழ் - பாரதியார்!

இந்த ஞான பூமி எப்படி உருப்படும்? ஒபாமாக்களுக்கே ஜோசியம் கூறும் அளவுக்கு இந்தக் கேலிக்கூத்து உச்சத்தை அடையவில்லையா?

மக்களின் மடமைக்கு ஓர் எல்லையே இல்லையா?

பிரச்சாரம்! பிரச்சாரம்! பகுத்தறிவுப் பிரச்சாரம்தான் இனி அடைமழையாகப் பெய்தல் அவசியம்; அவசரம்!-------------------"விடுதலை" 19-4-2009

0 comments: