Search This Blog
15.4.09
மதுவிலக்கு :- பெரியாரின் ஆதரவும் - எதிர்ப்பும்!
மதுவிலக்கு என்றால் பளிச்சென்று எல்லோரது நினைவிலும் வரக்கூடிய - வரவேண்டிய பெயர் தந்தை பெரியார்தான்!
காந்தியடிகள் முதன்முதலாக மதுவிலக்கு ஒரு கொள்கையாக அறிவித்தபோது - கள் இறக்க மரங்களைத் தராதீர்கள் என்றுதான் சொன்னார். மது உற்பத்தி செய்வதற்கான மரங்களை வெட்டிச் சாய்த்து விடுங்கள் என்று சொல்லவில்லை!
பெரியார் - காந்தியடிகள் சொன்னதையும் செய்தார்; சொல்லாததையும் செய்தார்.
தமக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை - மதுவிலக்கு ஆதரவு என்ற பெயரில் அடியோடு வெட்டிச் சாய்த்தார் பெரியார்!
மது விலக்குப் போராட்டம் - கள்ளுக்கடை மறியல் எப்போது முடிவுக்கு வரும் - காந்தியடிகளிடம் கேட்கப்பட்டபோது "போராட் டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களின் கையில் உள்ளது" என்றார். அந்த இரண்டு பெண்மணிகள் - மாதர்குல மாணிக்கங்கள் யார்?
- பெரியாரின் மனைவி நாகம்மையார்
- பெரியாரின் சகோதரி கண்ணம்மாள்
ஆகியோர்தான் அவர்கள்!இப்படி மதுவிலக்கு என்ற மகத்தான கொள்கைக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவராகச் செயல்பட்ட பெரியார் பின்னாளில்
மதுவிலக்கை அமல்
செய்வதில் உள்ள
குறைபாடுகளையும்
கோளாறுகளையும்
சுட்டிக்காட்டினார்.
மதுவிலக்கால்
சமுதாயத்தில்
அரசியலில்
பொதுவாழ்வில்
அதிகாரவர்க்கத்தில்
பொதுமக்களிடம்
எத்தகைய சீர்கேடுகள் மலிந்துவிட்டன என்பதை எடுத்துக்காட்டினார்.
மதுவிலக்கினால் ஏற்படும் நன்மைகளை பெரியாரைவிட உணர்ந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. எனினும் மதுவிலக்கு அமல் நடத்தப்பட்ட பின்னர் - அதனால் ஏற்பட்ட சமுதாய சீர்கேடுகளைப் பார்த்து மனம் நொந்த பெரியார் - பல்வேறு கட்டங்களிலும் மதுவிலக்கினால் ஏற்பட்ட தீமைகளை சுட்டிக்காட்டி - ‘போலி மது விலக்கு’ என்றே அதற்குப் பெயர் சூட்டிக் கடுமையாகக் கண்டித்தார்!
மதுவிலக்கு முதன்முதலாக அமல் செய்யப்பட்ட 1930களிலும் தீவிரமாக்கப்பட்ட 1940களிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அதுபற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் சில வருமாறு:-
. இன்று நம் மாகாணத்தில் உள்ள 25 ஜில்லாக்களில் 4 ஜில்லாக்களில் மாத்திரமே மதுவிலக்கு செய்வதாகக் காங்கிரசார் திட்டம் போட்டு, அந்தப்படி அமல் நடத்திவந்தார்கள். நாமறிந்தவரை இந்தத் திட்டம் மகா மகா முட்டாள்தனமாகவே முடிந்தது என்பதோடு, மதுவிலக்குக் கொள்கைக்கே கேடு செய்யும் படியாகவும், உலகோர் சிரிப்புக்கு இடமாகவும் இருந்துவருகிறது என்பதை வலியுறுத்திக் கூறுவோம்.
. சர்க்கார் இது விஷயத்தில் என்ன செய்ய வேண்டுமென்றால், நம் மாகாணத்தில் உள்ள மொத்த கள், சாராயக் கடைகளைக் கணக்கு எடுத்து, அந்த எண்ணிக்கையை தாலுக்காக்கள், சர்க்கிள்கள்தோறும் வருஷம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இல்லாமல் போகும்படியாகச் செய்துவிட வேண்டும். குடிகாரர்களைத் திடீரென்று ‘குடி பட்டினி’ போட்டால், அவர்கள் திருட்டுத்தனமாய் அதை அடைய முயற்சிக்காமல் போகமாட்டார்கள்; இது இயற்கை.
. இன்றையக் குடியானது மனிதனைப் போதையினால் கெடுப்பதைவிட, விலை அதிகத்தினாலேயே குடிக்கிறவனும் அவன் குடும்பமும் கஷ்டப்படுகிறார்கள்.
. உணவு கண்ட்ரோல் எப்படி சர்க்காரால் ஒழுங்காக நடத்த முடியாமல் போனதோடு, இது அமலில் இருப்பதாலேயே மக்கள் நாணயக் குறைவாகவும், ஒழுக்கக் குறைவாகவும் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு, பலர் பலவிதமாய் அநியாயக் கொள்ளை இலாபமும், நட்டமும் அடையும்படி நேர்ந்து இருந்ததோ அதேபோல் - மதுவிலக்குத் திட்டத்தாலும் பெருவாரியான மக்கள் நாணயக் குறைவாக - ஒழுக்கக் குறைவாக நடந்து மது அருந்தவும், அதுபோலவே நடந்து மக்கள் மது உற்பத்தி செய்யவும், அதுபோலவே மக்கள் குறைசொல்லவும் ஏற்பட்டுவருவதுடன், அதிகாரிகளும் ஒரு நல்ல அளவுக்கு நாணயக் குறைவான மக்களாக ஆகிவருகிறார்கள். இவை மாத்திரமல்லாமல் பலர் விஷ சத்தை மதுவாக அருந்த வேண்டியவர்களாக ஆகிறார்கள்.
. இந்த மதுவிலக்கால் சர்க்காருக்கு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை நஷ்டமாவது ஒருபுறமிருந்தாலும் - தவறான வழியில் உற்பத்தி செய்கிறவர்கள், பகுதிக்கு மேல் இதில் பணம் பெறுகிறார்கள். இயற்கை மதுவல்லாத - மற்ற செயற்கை மதுவை அருந்துகிறவர்கள் பல கோடி ரூபாய் செலவழித்து போதை அடைகிறார்கள். மற்றும் பல வழிகளில் கேடும் செலவும் ஏற்படுகின்றன.
. ஆகவே, மதுவிலக்கு வெற்றி மக்கள் வெற்றி அல்ல; ஆச்சாரியார் வெற்றியேயாகும். மக்கள் தோல்வி, ஒழுக்கம் தோல்வி, உண்மை தோல்வி எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பந்தயத்தில் ஈடுபட்டுத் தோற்றவன் வெற்றி பெற்றவனைப் பாராட்டுவதுபோல் ஆச்சாரியார் அவர்களை இந்த வெற்றிக்காகப் பாராட்டுகிறேன்.
. நான் காங்கிரஸ் மதுவிலக்கைப் பற்றி எதிர்த்து ‘குடிஅரசு’ இதழில் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் காங்கிரஸ் மதுவிலக்குக்கு உள்எண்ணம் கூடக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறேன்; பேசி வந்திருக்கிறேன்.
. அந்த உள் எண்ணம் என்னவென்றால், 1938ல் காங்கிரஸ் (இராஜாஜி) பதவிக்கு வந்த காலத்தில் ‘நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரு ஆதாரம் தேட வேண்டும் என்கிற எண்ணத்தின்மீது மதுவிலக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’ என்று எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். அதாவது, 100க்கு 5 வீதமே படித்த மக்களாய் இருந்த நாம் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு 100க்கு 7 படித்த மக்களானோம். அதைக்கண்டு ஆத்திரமடைந்த இராஜாஜி தாம் 1938ல் பதவிக்கு வந்தவுடன் ‘கல்வியை அன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்தினிடம் போதிய பணம் இல்லை. ஆதலால், வரவு - செலவைச் சரிகட்ட 2600 பள்ளிகளை மூடவேண்டியது அவசியமாகிவிட்டது’ என்பதாக ஒரு சாக்குக் கண்டுபிடிக்கக் கருதியே ‘மதுவிலக்கினால் ஏற்பட்ட நட்டத்தைச் சரிகட்டினேன்’ என்று சொல்ல வசதி ஏற்படுத்திக் கொண்டார். அது, மதுவிலக்கினால் மது வரும்படித் தொகை பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டது என்று கூறிவிடலாம் என்பதாகக் கருதி ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த மதுவிலக்கு ஏற்பாடு செய்த நாள் முதல் நாளது வரைக்கும் அந்த மதுவிலக்குக் காரணமாக அது குடிசைத் தொழிலாக மாறி, இன்று அது (குடி) ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவி வந்திருக்கிறது.
.இந்த மதுவிலக்கினால் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்தபாடில்லை என்பதோடு, இதற்காகக் குடியர்கள் செலவிடும் பணமும், மற்றும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்ததே அல்லாமல் குறையவில்லை என்பதோடு, முன்பு மதுக் கடைகளுக்குச் சென்று வாங்கிக் குடித்தவர்களுக்கு இன்று அவர்கள் வீடு தேடிவந்து மதுவிநியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மது உற்பத்தித் தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள், நாணயமில்லாதவர்கள் பெருகி வருகிறார்கள். இது மாத்திரமல்லாமல், கீழ்நிலை போலீஸ் நண்பர்கள் அனேகர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகி, நாணயம் கெட்டவர்களாகவும் ஆகிவருகிறார்கள். மற்றும், இந்த மது உற்பத்தி காரணமாக அநேக அயோக்கி யர்கள், காலிகள் போலீசுக்கு நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம்விட, குடியர்கள் உடல்நிலை மிக மிகக் கேடடைந்து விடுகிறது.
. மது அருந்தியதற்காக 5 சதவிகிதத்திற்கும் குறைவான பேர்கள்தாம் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். மற்ற 95 சதவிகிதத்தினர் தாராளமாய் முறைப்படி அருந்திக் கொண்டே இருக்கிறார்கள்.
. ‘நம் மக்கள் சகல துறைகளிலும் கேடடைந்து சிலர் கெட்டு உழலவேண்டும் என்பதுதான் பார்ப்பனர் தர்மம். ஆதலால், எந்த நிலையிலும் பார்ப்பனர் நம் யாருக்குமே நல்வழி காட்டமாட்டார்கள்.
. இந்த மதுவிலக்குத் துறையில், தேவைப்பட்ட வர்களுக்கு எல்லாம் மது கிடைக்கும்படியும் மதுவினால் உடலும் புத்தியும் கெடாதபடியும் இருக்கத்தக்க வண்ணம் மது அனுமதிப்பு ஏற்படுத்தினால் சர்க்காருக்கு நல்ல நிதி வரும்படி ஏற்படுவதுடன், பார்ப்பனார் தவிர்த்த மற்ற சகல துறையிலும் உள்ள மக்களின் நல்ல அளவுக்கு இந்த ஆட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கருதுகிறேன்.
. சேலத்தில் மதுவிலக்குச் செய்வதற்காகக் கோவையிலுள்ள பள்ளிக் கூடங்களை மூடுவது நியாயமா? ஐந்து ஆறு லட்சம் குடிகாரர்களைக் காப்பாற்றுவதற்கு என்று நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்களிடமிருந்து பல வரியைக் கசக்கிப் பிழிவது நியாயந்தானா? நான் இப்படிச் சொல்வதால் மதுவிலக்கை எதிர்க்கிறேன் என்று சனங்கள் எண்ணிக் கொள்ளக் கூடாது. நான் மதுவிலக்கைத் திடமாக ஆதரிக்கிறேன். மதுவிலக்குக்குப் பல தடவை சிறை சென்றிருக்கிறேன்.
. ஒரு இடத்தில் கடைகளை மூடிவிட்டு மற்ற இடத்திற்கு ஓடவிட்டு விட்டு அவர்களை நாசமாக்குவதும், அத்தொழிலில் இருந்த லட்சக் கணக்கான மக்களுக்கு வேறு தொழில் இல்லாமல் செய்வதும் ஒரு நாளும் கள்ளை நிறுத்திவிடாது. வெளிப்படையாய்ப் பிழைக்க வழி இல்லாதவர்கள், திருட்டுத்தனமாய்ப் பிழைத்துத் தீர வேண்டியது இயற்கை விதி.
. கள்ளை நிறுத்தும் வேலைக்கு வசூல் செய்த, செலவிட்ட பணம் எவ்வளவு? வரி வசூல் நட்டம் எவ்வளவு? ஒரு கால்படி கள்ளாவது குடிப்பதையோ செலவாவதையோ உண்மையில் நிறுத்தினார்களா? மதுவிலக்கு என்பது ஒரு பித்தலாட்ட நாடகம் என்றே கூற வேண்டும்.
. மதுவிலக்கு என்பதே ஆச்சாரியார் மூளையின் அதிசயக் கண்டுபிடிப்பு. வெள்ளையர் ஆட்சியில் கல்விச் செலவுக்கு ஆக மது இலாகா வரும்படியை ஒதுக்கி வைத்தனர். மது இலாகா வரும்படி குறைந்தால் கல்விக்குச் செலவிடப் பணம் குறைந்துவிடும். ஆதலால் மக்களுக்குக் கல்வி அளிப்பதைக் குறைத்து விடலாம் என்று கருதியே இந்த மதுவிலக்குத் திட்டம் சூழ்ச்சிகரமாக நிர்மாணத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
. இந்த முட்டாள்தனமான கொள்கையால் (மதுவிலக்குக் கொள்கையால்) அரசாங்கத்திற்குக் கிடைக்கும் சுமார் 20 கோடி ரூபாய் நட்டமாகிறது. இந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம். இது விசயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். வழி வேண்டுமென்கின்ற எண்ணத்தின் மீதுதான் மதுவிலக்கு ஏற்பாடு கொண்டு வரப்பட்டது.
. இன்றுள்ள நிலவரத்தில் எப்படிக் குறைத்துக் கணக்குப் போட்டாலும் சுமார் ரூ. 20 கோடி முதல் 30, 35 கோடி ரூபாய்வரை மதுவிலக்கை ரத்து செய்வதால் அதிக வருமானம் கிடைக்கும்..... மக்களிடத்தில் உண்மையான பற்று உள்ள எந்த அரசும், மாமாங்கத்தை மக்கள் கொண்டாட அனுமதிப்பதைவிட மதுவிலக்கை ரத்து செய்வது எப்படிக் கீழாகிவிடும்.
. மதுவிலக்குச் சட்டத்தால் பார்ப்பானுக்கும், கள்ளச் சாராயம் விற்பவனுக்கும்தான் லாபமே தவிரச் சர்க்காருக்கோ, பாட்டாளி மக்களுக்கோ எவ்வித நன்மையும் இல்லை.
. பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் ஒரு முட்டாள்தனமான போராட்டமே யாகும். இப்போதுள்ள மதுவிலக்கால் கீழ்மக்களை மேலும் உற்பத்தி செய்த பலன்தான் ஏற்படுகிறது.
. மதுவிலக்கு முன்னிலும் அதிகமான செலவிலும், முன்னிலும் அதிகமான விசத்தன்மையோடு, முன்னிலும் அதிகக் கேடு தரும்படியான நிலையில் நடந்து கொண்டே இருக்கிறது. ஏழைக் கூலிகள் மது அருந்தாமல் தூங்குவதே இல்லை. மது உற்பத்தித் தொழில் குடிசைத் தொழில் மாதிரியும், காலிகள் தொழில் மாதிரியும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. அரசியலில், மதத்தில் எல்லா மக்களிடையிலும் குடிப் பழக்கம், குடி வெறி இருப்பதைச் சாதாரணமாகப் பார்க்கிறோம். இதில் பெருங்கேடு என்னவென்றால் இரகசியமாய்க் குடிக்க வேண்டி இருப்பதால் மது அருந்துவதின் செலவு முன்னைவிட இரட்டிப்பும், வெறி முன்னைவிட இரட்டிப்பும் ஏற்பட்டு வருகிறது.
. மது அருந்துவதைத் தடுக்க இதுவரை செய்துவந்த எந்த முயற்சியும் வெற்றி பெறவே இல்லை. சர்க்காருக்கும் வரும்படி குறைந்தது. குடிக்கிறவனுக்கும் அதிகச் செலவு ஏற்பட்டது. காலிப் பசங்களுக்கும், அயோக்கியர்களுக்கும் பிழைப்பிற்கு மது உற்பத்தித் தொழில் ஏற்பட்டு வளர்ச்சியடைந்தது என்பதல்லாமல் மது விலக்கால் யாதொரு பயனும் ஏற்படவில்லை.
. இவற்றால் (மதுவிலக்கை அமல்படுத்துவதால்) அரசாங்க நிர்வாக ஒழுக்கம், நேர்மை கெடுவதுடன் அதிகாரிகள் நேர்மையும் நாணயமும் கெடுவதோடு மக்களும் ஒழுக்கக் கேடர்களாக ஆகிக் கொண்டு வர முடிகிறது. இது ஒருபுறமிருக்க இப்படிப்பட்ட மதுவிலக்கினால் அரசாங்கத்திற்கு ஆண்டு ஒன்றுக்குச் சுமார் 40 கோடி ரூபாய் வரவு நட்டமாகிற தென்றால் இதைவிட மதியற்ற காரியமாக வேறு எந்தக் காரியம் இருக்க முடியும்?
. இன்றைய மதுவிலக்கு ஒரு விச நோய்ப் பரவல் போன்ற பலன் தருகிறது. அது தொற்று நோய் போலவும் கேடு செய்கிறது. கடுகளவு உலக அறிவு உள்ளவரெவரும் மதுவிலக்கை ஆதரிக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து; முடிந்த முடிவு.
. மதுவிலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மையில் சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார்.
. ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும், நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்?
- என்று குறிப்பிட்டிருக்கிறார் பெரியார்!
மதுவிலக்கைப் பெரியாரைப் போல் தீவிரமாக ஆதரித்தவர்களும் வேறு எவருமில்லை! கண்டித்தவர்களும் அவரைப் போல் வேறு எவரும் இல்லை!
மதுவிலக்கை அமல்நடத்து
மதுக்கடைகளை மூடு
என்று சொல்வது சுலபம்! ஆனால் அதனை அமல் நடத்திய பின்னர் ஏற்படக்கூடிய சமுதாய சீர்கேடுகளைத் தவிர்ப்பது மிக மிகக் கடினம்!
------------------ நன்றி:- சின்னகுத்தூசி அவர்கள்"முரசொலி" இல் எழுதிய கட்டுரை
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment