Search This Blog

19.4.09

ஈழப்பிரச்சினையில் குறைகூறுவதற்கு முன் எல்லா வகையிலும் சிந்திக்கவேண்டும்-கி.வீரமணி


நமது பணிகள் என்ன?

திராவிடர் கழகத் தலைவர்


திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் (திருச்சி, 7.4.2009) திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில், இயக்கப் பணிகளை முன்னிறுத்தி கூறிய முக்கியமான கருத்துகளும் - திட்டங்களும் வருமாறு:

நமது இயக்கத்திற்குள்ள பெருமை என்பது தலைமை என்ன நினைக்கிறதோ - அதையேதான் தோழர்கள் நினைக்கின்றனர். அதுபோலவே தோழர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதையேதான் தலைமையும் நினைக்கிறது. காரணம் நமது கொள்கையும் இலட்சியமும் அப்படி.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு...

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அன்னை மணி யம்மையார் அவர்கள் அய்ந்தாண்டு காலம் கழகத்தைக் கட்டிக் காத்தார்கள் - வழி நடத்தினார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகு எளிய தொண்டனாகிய நான் உங்களை நம்பி - உங்களையே மூலதனமாக வைத்து உழைத்து வருகிறேன் அது வீண் போகவில்லை.

தந்தை பெரியார் எண்ணிய விரும்பிய பல பணிகள், நடந்திருக்கின்றன. உண்மையான இரட்டைக்குழல் துப்பாக்கியாக திராவிடர் கழகமும் தி.மு.க.வும் செயல்பட்டு வருகின்றன.

எதிரிகளுக்குக் கோபம் ஏன்?

நம் எதிரிகளுக்குக் கோபமே இதுதான். இவர்கள் நிரந்தரமாகப் பிரிந்து இருப்பார்கள் என்று எண்ணினோமே - அதற்கு மாறாக நெருக்கமாக அல்லவா இணைந்து இருக்கிறார்கள் என்கிற ஏமாற்றம் தான் அவர்களுக்கு. அந்த ஏமாற்றம் தொடரவேண்டும் என்பதே நமது ஆசை.

நாம் எடுக்கும் முடிவுகள் கொள்கையின் அடிப்படையில் தானே தவிர தனிப்பட்ட யாருக்காகவும் அல்ல.
வரும் மக்களவைத் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது.

வேட்பாளர்களைவிட நம் தோழர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். யாரோ வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்ல - மீண்டும் இந்த நாட்டிலே மதவாதம் தலைதூக்கக்கூடாது என்பதற்காகத்தான்.

பரம்பரை யுத்தம்


கடந்த சட்டமன்ற தேர்தலில் பரம்பரை யுத்தம் என்று அ.இ. அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பிரகடனப்படுத் தினார். அதனை சவாலாகவே எடுத்துக்கொண்டோம் - பிரச்சாரம் செய்தோம். மக்கள் - அந்தப் பரம்பரை யுத்தத்தில் யார் வெற்றி பெறவேண்டுமோ அவர்களை வெற்றி பெற வைத்தனர்.
வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சி மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் வீறு நடை போடுகிறது. அய்ந்தாண்டு சாதனைகளை மூன்று ஆண்டுகளிலேயே சாதித்து முடித்திருக்கிறது.

ஈழத்தமிழர் பிரச்சினை


ஈழத்தமிழர் பிரச் சினையைப் பொறுத்த வரை தொடக்க முதல் நாம் சீராகவே இதில் செயல்பட்டு இருக்கி றோம். இப்பொழுதுகூட முதன்முதலில் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கிக் கொடுத்தவர்கள் நாம்தான் (23.9.2008). அதனைத் தொடர்ந்து பலரும் அவரவர்களுக்கு உகந்த வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்குமுன் பிரான்சுக்கு நான் சென்றிருந்தபோது தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று என்னிடம் பேட்டி கண்டது. ஈழப்பிரச்சினையில் முன் போல் உங்கள் செயல்பாடு இல்லையே என்று கேட்டனர்.

எந்தப் பிரச்சினைக்கு எந்த நேரத்தில் எந்த அளவுக்கு முக்கியத்தும் கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் கழகம் செயல் பட்டு வருகிறது.

எங்கள் நாட்டில் ஈழப் பிரச்சினையோடு வேறு பல பிரச்சினைகள் உண்டு. அவற்றை நாங்கள் அலட்சியப்படுத்தி விடவும் முடியாதே!

சமூகநீதி, மதச்சார் பின்மை, மூட நம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு உள்ளிட்ட பல முனை களில் எங்களுக்கென்று உள்ள கடமைகளும், பணிகளும், செயல்பாடுகளும் இருக்கின்றனவே!

ஒரு முனையில் பாடு பட்டால் இங்கு உள்ள எதிரிகள் வேறு பல தளங்களிலும் முன்னேறிச் சென்றுவிடுவர் - முட்டுக்கட்டைகளைப் போடுவார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அதேநேரத்தில் ஈழப் பிரச்சினையில் தொடர்ச் சியாக நாங்கள் ஈடுபட்ட அளவுக்கு யாரும் ஈடு பட்டதில்லை என்று பேட்டியில் தெரிவித்தேன்.

இன்றைக்குக் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருப்பதால், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க முடிகிறது. கூட்டம் போட்டுப் பேச முடிகிறது - பேரணி நடத்த முடிகிறது. இதற்கு முன்பிருந்த ஆட்சியில் என்ன நடைபெற்றது? வைகோவும், நெடுமாறனும் இழைத்த குற்றமென்ன? ஈழத் தமிழர் களைப்பற்றி பேசியதே குற்றம் என்று பொடா சட்டத்தை ஏவிவிடவில்லையா? சிறையில் தள்ளவில்லையா?
யார் நண்பர்? யார் பகைவர்? என்பதை அறிந்துகொள்வதில் தடுமாற்றம் ஏற்படலாமா?
ஒரு தமிழ்ச்செல்வன் மரணத்துக்காக முதலமைச்சர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை யைக்கூட பிரச்சினை செய்தவர்கள்தான் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறவர்களா? அவர்கள் தலைமையில் தான் நாடு நடைபோட வேண்டுமா?

இந்த ஆட்சியை அகற்றுவதன்மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று யாராவது கூறியிருக்கிறார்களா? உத்தரவாதம் உண்டா?

தமிழ் ஈழம் மலர்ந் தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறும் ஒரே ஒரு முதலமைச்சர் கலைஞர்தானே! தமிழ் ஈழத்தை ஜெயலலிதா ஏற்றுக்கொள்கிறாரா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொள்கிறதா?
குறைகூறுவதற்கு முன் எல்லா வகையிலும் சிந்திக்கவேண்டும் - அதுதான் பகுத்தறிவுக்கும் அழகு.

இது விடுதலை ஏட்டின் பவள விழா ஆண்டு - விடுதலையை அதிகம் பரப்பிடவேண்டும்; சந்தாக்களை அதிகம் சேர்க்கவேண்டும்; சால்வைகள் வேண்டாம் - சந்தாக்களைத் தாரீர்! என்ற முழக்கத்தை மீண் டும் புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

பல்கலைக்கழகப் பணி

டைம்ஸ் ஆஃப் இந் தியா மேற்கொண்ட ஆய்வில் - நமது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இந்திய அளவில் 24 ஆம் இடத்திலும், தமிழக அளவில் 11 ஆம் இடத்திலும் உள்ளது. இரண்டாண்டு களிலேயே இத்தகைய சாதனையைப் பொறித்திருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

தந்தை பெரியாரின் பெண்ணியம்

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை, சிந்தனைகளை உலகெங்கும் கொண்டு செல்லவேண்டும். இந்த வகையில் கல்வி நிறுவனங்கள் அதற்குப் பயன் படும்.

தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை பற்றிய சிந்தனை - ஆங்கிலத்தில் feminisam என்ற பெயரில் வெளி வருகிறது.

தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியக் கருத்துகள் உலகைக் கலக்கக் கூடியவை. அதனை முதலில் உலகின் பல பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

திருச்சியிலும் அச்சகப் பிரிவு

இயக்க நூல்களை இன்னும் தீவிரமாகப் பரப்புவதற்கான செயல் திட்டங்கள் உள்ளன. திருச்சியிலும் அச்சு இயந்திரம் வாங்கப்பட்டு நூல்களை அச்சிடும் பணி வேகமாக நடைபெறவுள்ளது.

வளர்ச்சி! வளர்ச்சி!! தளர்ச்சி நம்மிடம் இல்லை - இல்லைவே யில்லை.

எழுத்துப்பணி

நிறைய எழுதவேண்டும் என்று திட்டமிட் டுள்ளேன். ஆத்மாவைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். அதுதான் மதத்தின் முக்கிய ஆயுதம். விரைவில் அது குறித்தும் நூல் வெளி வரும்.

ஒரு சிறுநொடிப் பொழுதைக்கூட வீணாக்காமல் நம் பணிகள் வேக வேகமாக நடைபெறவேண்டும்.
சொற்பொழிவாளர் களின் எண்ணிக்கை பெருகவேண்டும்; பயிற்சிப் பட்டறைகள் ஆண்டு முழுவதும் நடந்துகொண்டே இருக்கவேண்டும். இதற்கெல்லாம் இளைஞர்கள் முன் வரவேண்டும் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.


-------------------- கி.வீரமணி -"விடுதலை" 19-4-2009

0 comments: