Search This Blog

27.4.09

ஒன்றிடுவோம்! வென்றிடுவோம்!!தமிழ்நாடு கொந்தளிக்கிறது


தமிழ்நாடு கொந்தளிக்கிறது

ஈழத் தமிழர்களின் போராட்டம் மிக நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வந்தாலும் 1983 முதல் அது மிகவும் உக்கிரமமான கட்டத்தை எட்டியது.

சிங்களவர்கள், இலங்கை அரசின் துணையோடு தமிழர்களைக் கொன்று குவித்தனர்; தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று விளம்பரப் பலகை மாட்டியிருந்தனர்.

புகழ்பெற்ற தமிழர்களின் அரிய கருவூலமான யாழ்ப்பாண நூலகம் சிங்களக் காடையர்களால் தீயிட்டுச் சாம்பலாக்கப்பட்டது. சிறை உடைக்கப்பட்டு சிறைச் சாலையில் இருந்த போராளிகளும் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்டு பூட்சு காலால் இடரப்பட்டது. சிங்களத்தோடு தமிழும் ஆட்சி மொழி என்ற நிலை அகற்றப்பட்டது.

தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழர்களின் நெஞ்சில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்துப் பொறிக்கப்பட்டது.

தொடக்கத்தில் இந்தக் கொலைகளை எதிர்த்து ஈழத் தந்தை செல்வா என்ற செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அறப்போராட்டம் நடத்தப்பட்டது.

அவர்களின் அறப்போராட்டம் நசுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

ஈழ விடுதலையை முன்னிறுத்தி தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்திலேயே அச்சுறுத்தப்பட்டனர்.

வேறு வழியே இல்லை என்ற ஒரு கட்டத்தில்தான் அங்கே போராளிகள் ஆயுதங்களை ஏந்தவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.

அதில் பல குறைபாடுகள் இருந்தாலும், அதனைக்கூட சரிவர நிறைவேற்றிட முன்வரவில்லை. வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற முக்கியமான சரத்து - நீதிமன்றம் சென்று ரத்து செய்விக்கப்பட்டது.

தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களர்களைக் கொண்டு வந்து குடியேற்றி தமிழர்களை சிறுபான்மையாக்கும் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் அதன் எதிரொலிகள் எங்கு பார்த்தாலும் வெடித்துக் கிளம்பின. சிங்கள வெறியாட்டத்தை எதிர்த்து தமிழ் மண் எரிமலைக் குழம்பைக் கக்கியது.

பல வடிவங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் பொதுக்கூட்டத்தை சென்னை புல்லாரெட்டி அவென்யூ பகுதியில் திராவிடர் கழகம் நடத்திக் காட்டியது. கலைஞர் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களும் பங்கு கொண்டு சங்கநாதம் செய்தனர்.

மதுரையில் ஈழ விடுதலை மாநாடே நடத்தப்பட்டது. மாநாட்டில் ஈழ விடுதலைக் கொடி கூட ஏற்றப்பட்டது.

தி.மு.க. அரசு இரண்டு முறை - ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதற்காகக் கவிழ்க்கப்பட்டது. இப்பொழுது அய்ந்தாவது முறையாக முதலமைச்சராக ஆகியுள்ள கலைஞர் அவர்கள் தொடர்ந்து அரசு ரீதியிலும், கட்சி ரீதியிலும் பல்வகை வழிகளில் எதிர்ப்புணர்ச்சிகள் அறப்போராட்ட வடிவத்தில் அரங்கேற்றப்பட்டன.


அவ்வப்பொழுது சில வாக்குறுதிகள் வந்தாலும், செயல் அளவில் ஈழத் தமிழர்கள்மீது இலங்கை அரசு மேற்கொள்ள யுத்தம் நிறுத்தப்படவில்லை.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத முறையில் இன்று காலை 5.30 மணிக்கு சென்னை - அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னதுபோல, கலைஞர் அவர்களின் உயிர் என்பது தமிழினத்தின் சொத்தாகும் - பாதுகாவலரணாகும். அந்த வகையில் பலவகைப்பட்டவர்களும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்ட வண்ணம் உள்ளனர். அதேநேரத்தில் இந்த 86 வயதில் தமிழர்களுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயார் என்று அவர் காட்டிக் கொண்டிருப்பது அசாதாரணமானது. இதனைப் புரிந்துகொண்டு இலங்கை அரசு போரை நிறுத்தாவிட்டால், அதன் விளைவு உலகெங்கும் கடுமையாக எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

அதுபோலவே, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நாளைய தினம் (28.4.2009) காலை 11 மணிக்கு சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை அறிவித்துள்ளார். பல தரப்பு மக்களாலும் இது வரவேற் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அரசியலாக்க முனைந்தது வருந்தத்தக்கது.

பிரச்சினைக்கு மட்டும் முதல் இடம் கொடுப்போர் திராவிடர் கழகம் நாளை நடத்தவிருக்கும் போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும்; இதில் கட்சியில்லை; மாறாக இன உணர்வுடன் மனித உரிமை, மனிதநேய எண்ணங்களும்தான் பொங்கி நிற்கின்றன.

ஒன்றிடுவோம்! வென்றிடுவோம்!!தமிழ்நாடு கொந்தளிக்கிறது


----------"விடுதலை"தலையங்கம் 27-4-2009

0 comments: