Search This Blog

8.4.09

தேர்தலில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையும் - திராவிடர்கழகத்தின் நிலைப்பாடும் -கி.வீரமணி பேட்டி

மக்களவைத் தேர்தல் - மணியான விளக்கங்கள்

திருச்சியில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

(செய்தியாளர்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்துகளைத் தழுவியது)15 ஆவது மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. மூன்று அணிகள் களத்தில் இருக்கின்றன.


1. சாதனைகளின் அடிப்படையில் வாக்குகள் கேட்கும் அணி

முதல் அணி என்பது மத்தியில் இப்பொழுது ஆட்சியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட் டணியாகும். அதில் முக்கியமாக தி.மு.க. அங்கம் வகிக்கிறது.

இந்த அணி சாதனைகளைக் கூறி வாக்குகளைக் கேட்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை தமிழ்நாடு அரசும் மத்தியில் உள்ள அரசும் நல்லுறவோடு இருந்து வருவதால் ஏராளமான திட்டங்கள், நிதி உதவிகள் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளன.

மத்தியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் இருக்கின்றனர். எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்த தில்லை.

இந்திய அளவில் கடந்த காலங்களில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்திய அளவில் திட்டங்களின் மொத்தத் தொகையான ரூபாய் மூன்று லட்சத்து 70 ஆயிரம் கோடியில் தமிழ் நாட்டுக்கு மட்டும் கிடைத்துள்ள தொகையின் சதவிகிதம் 11 ஆகும். இதுவரை இந்த அளவு தமிழ்நாடு பெற்றது கிடையாது. 69 மத்திய அரசுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட் டுள்ளன.

நீண்ட காலமாகத் தமிழ்நாட்டின் கனவுத் திட்டமாகவிருந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக் கிறது. கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி கிடைத்திருக் கிறது.

விவசாயிகளுக்கு மத் திய அரசு 72 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசு அந்த வகையில் 7 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்து கொடுத்திருக் கிறது.

இவ்வாட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆறாவது சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டு அந்த அடிப்படையில் மத்திய அரசுக்குச் சம்பளம் என்றவுடன், மாநில அளவி லும் அந்த விகிதத்தில் சம்பளம் என்று அறிவித்தவர் முதலமைச்சர் கலைஞர்.

அய்ந்து ஆண்டு காலம் நிலையான ஆட்சியைத் தந்துள்ளது; மதச் சார்பின்மை, சமூகநீதி யில்அக்கறை காட்டியுள்ளது. மேலும் பெற வேண்டிய உரிமைகள் உள்ளன. அவற்றை மீண் டும் இந்த அரசை மத்தியில் அமர்த்துவதன் மூலம் பெற்றிட வாய்ப்பு இருக்கிறது.

கடந்த தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் இந்த அணி வெற்றி பெற்று மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. அந்த நிலை மீண்டும் தொடரவேண்டும்.

2. இரண்டாவது அணி என்ன சொல்கிறது?


இரண்டாவது அணி என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிடையாது. அது ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மதவாதம் தான் தலை தூக்கியது. அதற்கு மக்கள் நலம் முக்கியமல்ல; மதம்தான் முக்கியம்.

இந்தப் பிரச்சினையில் இந்தக் கூட்டணியிலும் பிளவு வந்துவிட்டது. ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் கழற்றிக் கொண்டு விட்டது.

பிகாரில் அய்க்கிய ஜனதா தள முதலமைச் சராக இருக்கக் கூடிய நிதிஷ்குமார் பி.ஜே.பி. கையில் எடுத்திருக்கும் ராமன் கோயில் பிரச் சினை எங்களுக்கு உடன் பாடானதல்ல என்று ஓங்கி ஒலித்திருக்கிறார்.

எந்தப் பிரச்சினையை மக்கள்முன் வைப்பது என்பதிலேகூட இந்த அணிக்குத் தெளிவு இல்லை.

3. மூன்றாம் அணியின் நிலைப்பாடு என்ன?

மூன்றாவது அணி என்று ஒன்று கிளம்பியிருக்கிறது. அதில் இடது சாரிகளும், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றன.

இதனை தேர்தலுக்கு முன் - தேர்தலுக்குப் பின் என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கவேண் டும். தேர்தலுக்குப் பின் இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஒன்றாக செயல்பட வாய்ப்பில்லை. இதனை அந்த அணியில் உள்ள கட்சிக்காரர்களே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

பிரதமராக ஆவதற்கு என்று இந்த அணியிலே கூட பலரும் இருக்கிறார்கள். தொடக்கத்தி லேயே என்னைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தந்தால் மட்டுமே அந்த அணியில் தொடர்வேன் என்று கறாராகக் கூறிவிட்டார் மாயாவதி.

தேர்தலுக்குப் பின் தாங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைக் கட்சி கூடி முடி வெடுக்கும் என்று பா.ம.க. கூறுகிறது.

இப்படி திசைக்கு ஒரு பக்கம் நிற்பவர்களால் எப்படி மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்?

4. லாலு - ராம்விலாஸ் பஸ்வான் என்ன சொல்கிறார்கள்?

அதேநேரத்தில் காங்கிரசுடன் கூட்டு சேராமல் தனியே பிரிந்து நிற்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தும், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானும் என்ன சொல்கிறார்கள்? காங்கிரசுடன் நாங்கள் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டி போடாவிட்டாலும், மத்தியில் பிரதமராக வர மன்மோகன்சிங்குக்கே ஆதரவு அளிப்போம் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்களே! - இதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் - மூன்றாவது அணியின் நிலையையும் கவனிக்கவேண்டும்.

5. அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

அ.இ.அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம் மையார் வைத்ததுதான் சட்டம். காலை என்ன சொல்வார்? மாலை என்ன சொல்வார்? என்று யாராலும் கூற முடியாது. அந்தக் கட்சியில் கூட்டணி வைத்த பல கட்சிகளின் தலைவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் நேற்றுவரை அவரின் நிலைப்பாடு என்ன? தேர்தல் அறிவிக் கப்பட்ட பின் - இப்பொழுது பேசும் பேச்சு என்ன என்பதும் நாட்டு மக்களுக்கு மிக நன் றாகவே தெரியும்!

ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்காக பொடா வில் இந்த அம்மையாரால் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்குமேல் சிறையில் தள்ளப்பட்டவர்களே, இந்த அம்மாவுக்கு ஆதரவு தெரிவிப் பதுதான் பரிதாபம்.
திராவிட இயக்கம் தொடர்ந்து போராடி, அண்ணா அவர்களால் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஒரு திட்டம்தான் சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டம். 2427 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் ஒரு திட்டத்தை பெரும்பகுதிப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் சென்று, ராமனைக் காட்டி முடக்கியுள்ளவர் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தேர்தலில் இந்தப் பிரச்சினை மிக முக்கியமாக இடம்பெறும். இந்தத் திட்டமே தேவையில்லை என்பது அம்மையாரின் கருத்தாகும்.

இந்த அம்மையாருடன் கூட்டணி சேர்ந்துள்ள பல கட்சியினரும் மக்கள் மத்தியிலே இதற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் எங்களால் தான் வந்தது, எங்களால் தான் வந்தது என்று மார்தட்டியவர்கள் இப்பொழுது இந்தத் திட்டத்தைக் குறித்து வாய் திறப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் திராவிடர் கழகம் இதனை முன் னிலைப்படுத்தும்.

வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடனே தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் தமது நோக்கம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். இதன்மூலம் பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓர் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பது என்ன ஜனநாயகம்? அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டிருக்கக் கூடியவர், இப்படி ஜனநாயக விரோதமாக நடந்துகொள்கிறார் என்பதைப் பொதுமக்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

6. ம.தி.மு.க.வின்
நிலை என்ன?


ம.தி.மு.க.வின் நிலை பரிதாபகரமான நிலையில் உள்ளது. இதற்கு மேலும் அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வுக்கு உடன்பாடு ஏற்பட்டாலும், மக்கள் மத்தியில் பரி கசிக்கப்படும் - எடுபடாத நிலைதான் - கட்சிக்காரர்கள் மத்தியிலும் உற்சாகம் இல்லாத ஒரு நிலைதான் ஏற்படும்.

கறந்த பால் முலைப்புகா, கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா என்ற நிலைதான். இதனை சுயமரியாதை உள்ள தோழர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

7. விஜயகாந்த் பற்றி...

நடக்கவிருப்பது மக்களவைத் தேர்தல் - இதில் தமிழ்நாட்டில் தனித்து நின்று அவரால் என்ன சாதிக்க முடியும்? தனித்தே நிற்பார் - கடைசியில் தனித்தே நிற்பார். அவர் பலம் என்ன என்பது திருமங்கலம் இடைத் தேர்தலில் தெரிந்துவிட்டது. டெபாசிட்டே போய்விட்டது. இவ்வளவுக்கும் அவரின் சொந்தப் பகுதி அது.

ஈழப் பிரச்சினைக்காக தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னவரே தேர்தலில் குதிக்கிறார்.

8. தேர்தலில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையின்
நிலை என்ன?


ஈழத் தமிழர் பிரச்சினை என்பது ஒரு கட்சியின் பிரச்சினையல்ல - அரசியல் பிரச்சினையும் அல்ல. அரசியலுக்கு அப்பால் நின்று அணுகப்பட வேண்டிய பொதுப் பிரச்சினை.

ஆனாலும், இப்பொழுது அரசியல் பிரச்சினையாக, தேர்தல் பிரச்சினையாக ஆக்கப்பட் டுள்ளது. ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்று பெயர் சூட்டிக் கொண்டு தி.மு.க.வை தோற்கடிப்போம் என்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட் டங்களில் கலந்து கொள்ள மறுக்கிறார்கள் - அனைத்துக் கட்சிகளும் கூடி மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தை நடத்தினால் அதனையும் பல கட்சிகள் புறக்கணிக்கின்றன.

சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தால் வெளிநடப்புச் செய்கின்றனர்.

பிரதமரைச் சந்திக்கச் சென்றால், நாங்கள் வரமாட்டோம் என்கிறார்கள்.

இப்படியெல்லாம் முரண்பாடாக நடந்து கொண்டு, தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரச் சினையில் நாங்கள் ஒன்றாக இல்லை - பிளவு பட்டுக் கிடக்கிறோம் என்று உலகுக்குத் தெரி விப்பவர்கள் - ஈழப் பிரச்சினையில் அரசைக் குறை கூறுகிறார்கள் என்றால், இவர்களைத் தமிழ் நாட்டு மக்கள் அடையாளம் காணவேண்டும்; காணவும் வைப்போம்.

வரும் 12 ஆம் தேதி ஞாயிறன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு இழைக் கப்படும் கொடுமை களைக் கண்டித்தும் அவர்களின் வாழ்வுரிமை கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழ்நாடு தழு விய அளவில், மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும். சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகிப்பார்.

9. திராவிடர் கழகப் பிரச்சாரம் எப்படி?

தேர்தல் பிரச்சாரத்தையொட்டி திராவிடர் கழகம் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கலைஞர் (தி.மு.க.) ஆட்சியின் சாதனைகளைப் பாரீர்! வாக்குகளைத் தாரீர்! என்னும் புத்தகம் மலிவு விலையில் ரூபாய் 5-க்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட உள்ளது.

தேர்தலை மய்யப்படுத்தியும், மாநில, மத்திய அரசுகளின் சாதனைகளை விளக்கியும், அய்க் கிய முற்போக்குக் கூட்டணியை எதிர்க்கும் கட்சிகளின் முரண்பாடுகளையும், போக்குகளை அம்பலப்படுத்தியும் ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அது பெரும் அளவுக்குத் தேர்தலில் வீச்சினை ஏற்படுத்தும்.

10. இந்த அணி ஏன் வெற்றி பெறவேண்டும்?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றால் மதவாத சக்திகள் முறியடிக்கப்படும். சமூகநீதியில் மேலும் பல சாதனைகளை ஈட்ட முடியும்.

சேதுசமுத்திரத் திட்டம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களைத் தமிழ் நாட்டுக்குப் பெற முடி யும்.

மாநிலத்தில் தி.மு.க. கடந்த மூன்று ஆண்டுகளில் மகத்தான சாதனைகளைப் புரிந்திருக் கிறது.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் அது ஆற்றியிருக்கிற பணிகள் பிரமிக் கத்தக்கவை.

(1) அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் (2) தைத் திங்கள் - முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சட்டம் (3) தமிழ் செம்மொழி அங்கீ காரம் (4) சிதம்பரம் நட ராசன் கோயில் தீட்சதர்கள் ஆதிக்கத்திலிருந்து அரசு துறைக்கு மீட்பு.

வடலூர் சத்திய ஞான சபையில் ஆரிய ஆதிக்கம் புகுந்து, இராமலிங்கஅடிகளாரின் கொள் கைக்கு விரோதமாக உருவ வழிபாடு உள்ளிட்ட சடங்குகளை நடத்தி, அதனை ஒரு இந்துமதக் கோயிலாக உரு மாற்றிய பார்ப்பன ஆதிக்க நிலையை வெளியேற்றி, இராமலிங்க அடிகளின் கொள்கை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழர்ப் பண்பாட்டுத் தளத்தில் காலத்தை வென்று நிற்கும் சாதனைக் கல் வெட்டுகள் இவை!

அய்ந்தாண்டுகளில் சாதிக்கப்படவேண்டியவைகளை கலைஞர் அரசு மூன்று ஆண்டுகளில் சாதித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளைப் பெரும்பாலும் நிறைவேற்றி ஒரு புதிய பொற்காலத்தைப் படைத்து வருகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க. அணியில் நிற்கும் அத்தனை வேட்பாளர்களையும் - கடந்த முறை 40-க்கு 40 என்று வெற்றி பெற வைத்ததுபோலவே தமிழக - புதுவை வாக்காளர்ப் பெருமக்கள் இந்த முறையும் அதே போன்ற வெற்றியை அளிக்கவேண்டும்.

இது ஏதோ ஒரு கட்சிக்காக அல்ல - தனிப் பட்ட வேட்பாளருக்காகவும் அல்ல; மாறாக, நமக் காக - நாட்டு மக்களுக்காக - நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் திராவிடர் இயக்கக் கொள் கைக்காக என்பதை மறக்கவேண்டாம்.


--------------"விடுதலை" 8-4-2009

7 comments:

Unknown said...

பல அய்யங்களுக்கு பதில் கிடைத்தது. ஜெ வை நம்பி களத்தில் இருப்பவர்கள் கழுத்தறுக்கப்பட்டு தோல்வியை சந்திப்பார்கள்.

Bagath said...

We should boycott this election for eelam tamil peoples...

dont take the role of Vibheeshnan...

பொற்கோ said...

மானமிகு ஆசிரியர் அவர்களே ! ஏன் தாங்கள் ஆற்று மணல் கொள்ளை குறித்தும், அகண்ட அலை வரிசை வழஅங்கியத்தில் பல கோடி ஊழல், சேது சமுத்திர திட்ட ஊழல் குறித்தெல்லாம் வரிசை படுத்த வில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை இவ்வளவு தானா?

யாரு சரியில்ல்லை என்று சொன்னால் தான் பெரியார் வழி பயணிப்பவர் என்பதில் பொருள் உண்டு.

அதை விட்டு தாங்களும், இன்ன பிற சால்ரக்களும் இப்படி நடந்து கொள்வது சரியில்லை.

Anonymous said...

மணியான விளக்கங்கள்-ஈழத் தமிழர் பிரச்சினை என்பது ஒரு கட்சியின் பிரச்சினையல்ல - அரசியல் பிரச்சினையும் அல்ல. அரசியலுக்கு அப்பால் நின்று அணுகப்பட வேண்டிய பொதுப் பிரச்சினை.


மானமிகு ஆசிரியர் அவர்களே !???????


சால்ரக்கL இப்படி thaan நடந்து கொள்LLUM

தமிழ் ஓவியா said...

பொற்கோ ஊழலைப் பற்றிப் பேச ஆயிரம் கட்சிகள் இருக்கின்றன. அதற்க்கா ஊழலைப்பற்ரி பேசக்கூடாது என்று பொருளல்ல. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தனித்தன்மைய்டன் எப்போதும் செயலபடும் இயக்கம் தி.க. யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.

ஒருவரை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் கொள்கை அடிப்படியிலேயே

உங்களின் பார்வை தவறானது பொற்கோ

தமிழ் ஓவியா said...

//ஈழத் தமிழர் பிரச்சினை என்பது ஒரு கட்சியின் பிரச்சினையல்ல - அரசியல் பிரச்சினையும் அல்ல. அரசியலுக்கு அப்பால் நின்று அணுகப்பட வேண்டிய பொதுப் பிரச்சினை.//

தமிழனாகப் பிறந்த ஏன் மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும் பொதுவான பிரச்சினை ஈழப்பிரச்சினை.

அதனால் தான் உல்க நாடுகள் அனைத்தும் ஆதரவுக் குரல் கொடுக்கின்ரன.

ஆனால் புகழினியின் வாதம் புளுகித்தனமாக இருக்கிறது.

பொற்கோ said...

என்னவாக்கும் சொல்கிறிர்கள்,ஐம்பது ஆண்டுகளில் சாதிக்கவேண்டியவைகளை மூன்றே ஆண்டுகளில் சாதித்து விட்டார் கலைஞ்சர்.
எதை குறிப்பிடுகிறிர்கள் என்று புரியவில்லை அய்யா! கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈழதமிழினம் தாங்கொணா துயரை சந்தித்து வருவதை தான் பார்க்கிறோம்.இதுதான் உண்மை. தாங்கள் மன சட்சிப்படி பேசினால் இதை தான் பேசி இருப்பிர்கள்.
இதுல இன்னும் நாற்பதுக்கு நாற்ப்பது வேணும்னு கேட்கிறிர்கள்.சிங்களனுக்கு ஆயுதமும்,கொடிய ஆயுதங்கள் வாங்க பணமும் கொடுத்து பின்னிருந்து முடுக்கி விடும் ஒரு கொடிய சிந்தனையை தடுத்து நிறுத்த துப்பில்லாமல் காங்கிரசுக்கும் ஆதரவு கேட்கிறிர்கள். எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது.ஈழ தமிழனின் அழிவை தடுப்பதைவிட தமிழின விரோதிகளுக்கு முட்டு கொடுப்பதையே பெரும் பேராக கருதுவது தான் பெரியார் வழி தமிழ் தொண்டா? அப்படித்தான் என்றால் "திராவிடர் கழகம்" என்னும் பெயரை சோனியா கழகம் என்றோ ராஜீவ் கழகம் மாற்றி விடுங்கள். சிறப்பாக இருக்கும்.தோழர் தமிழோவியா அவர்களே நாம் சுத்தமான பெரியார் கண்ணாடி கொண்டே பார்க்கிறோம்.எமது பார்வை என்பது தமிழின பாதுகாப்பை சார்ந்தது.இனம் அழிகிறது அழிப்பவர்களுக்கு ஆசிரியர் துணை போகிறார் சுட்டிக்காட்ட வேண்டியது மாணவர்களின் கடமை.மாணவர்களுக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லை.