Search This Blog

22.4.09

மாணவர்களுக்கு பெரியார் அறிவுரை


பெரியோர்களே! தோழர்களே!

நான் அடிக்கடி மாணவர்களக்குச் சொல்வேன், மாணவர்களே! நீங்கள் படிப்பை ஒழுங்காகக் கவனித்துப் படியுங்கள்; உங்கள் பெற்றோர்கள் கடன் வாங்கி, எப்படியாவது நீங்கள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால் செலவழித்து, உங்களைப் படிக்க வைக்கின்றார்கள்; மற்ற மேல்ஜாதிக்-காரர்களைப்போல்- பார்ப்பனர்களைப்போல உங்களுக்கு யாதொருவிதமான வசதியும் இல்லை; நீங்களாகவேதான் படித்து முன்னுக்கு வரவேண்டும்; அப்படி இருக்கும்-போது நீங்கள் படிப்பைத் தவிர வெளி விஷயங்களில் கலந்துகொள்ளாதீர்கள்; அவைகளில் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதலில் உங்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி நன்றாகப் படியுங்கள் என்றெல்லாம் சொல்வேன்.

எந்தக் காரியத்திற்கும் அநேகமாக நான் மாணவர்களையே அழைக்கமாட்டேன். அவர்களைப் கூப்பிடுவதென்றாலே மிகவும் யோசிப்பேன். ஏனென்றால், அவர்கள் எவ்வளவோ கஷ்டங்களையும் எதிர்ப்பையும் தாண்டிப் படிக்க வேண்டியவர்கள். இந்தச் சந்தர்ப்பதில் நாமும் புகுந்து அவர்களைக் கெடுப்பது என்றால் என்ன நியாயம் என்று கருதித்தான், மாணவர்களை வெளி விஷயங்களில் கலந்து-கொள்ள வேண்டாமென்று கூறுவேன்.


ஆனால், இன்று அவர்களின் படிப்புக்கே ஆபத்து வந்துவிட்டது என்கிறபோது அவர்களின் படிப்பையே ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஒரு இராஜ்யத்து முதல் மந்திரியும், கல்வி மந்திரியும், வாத்தியார்களும் முயல்கிறார்கள் என்கிறபோது என்ன செய்வது? இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை எதிர்த்து மாண-வர்கள் கிளர்ச்சி செய்துதானே ஆகவேண்டும்?

சாதாரணமாக, மாணவர்களைக் கிளர்ச்சிக்கு அல்லது மற்ற காரியங்களுக்குத் தூண்டுவதே தவறு. அவர்கள் உலக அனுபவம் இல்லாதவர்கள்; எதையும் எளிதில் நம்பிவிடுவார்கள்; இளம் உள்ளத்தின் வேகத்தில் எதுவும் செய்துவிடுவார்கள். அவர்களை இந்த முறையில் பழக்கி அவர்களைச் சிலர் கேடு அடையச் செய்யக்கூடாது. அது பஞ்சுக்குப் பக்கத்தில் பெட்ரோல் வைத்து நெருப்புப் பற்றவைப்பதுபோல ஆகும். மாணவர்களை, மாணவர்களுடைய காரியத்தின் அளவுக்கு-மட்டும் பயன்படுத்திக்கொண்டு-அதிலும் அளவுக்கு மீறிப் போகாமல் கட்டோடு இருக்கச் செய்துகொண்டு, மற்றபடி அவர்கள் கலந்துகொள்ளாதிருக்க விட்டுவிடவேண்டும்; இப்படித்தான் செய்யவேண்டும்.


----------------------------சென்னையில்,5-12-1952இல்
சொற்பொழிவு - விடுதலை 11-12-1952)நான் மாணவர்களைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் அடிக்கடியும் குறிப்பிடுவதுண்டு. அதாவது, யாரும் மாணவர்களை நம்பி மோசம் போகக்கூடாது என்று கூறுவேன். ஏனெனில், மாணவர்கள் சுலபத்தில் நெருப்புப் பிடிக்கும் பண்டங்களுக்குச் சமமானவர்-கள். பஞ்சு, மண்ணெண்ணெய், பெட்ரோல் இவைகளை எரியும்படி செய்த-வற்கு அதிக உஷ்ணம் தேவையில்லை. சூரியனின் ஒளிக்கதிர் பட்டாலே எரியக்கூடிய தன்மையும் உண்டு. அப்படிப்பட்ட மெல்லிய உள்ளமும், தெளிவான மனத்தையும் கொண்ட-வர்கள் மாணவர்கள். கெட்டியான வஸ்துகள் சுலபத்தில் தீப்பற்றுவதில்லை; தீப்பற்றிவிட்டால் சுலபத்தில் அணைவதில்லை; நெடுநேரம் நின்று எரியும் சக்தி உள்ளவை. சீக்கிரத்தில் தீப்பிடிக்கும் வஸ்துகளோ கெட்டியான வஸ்துகளைப்போல் அதிகநேரம் எரிவதில்லை. சிறிது நேரத்திலேயே அணைந்து போகும். அப்படிப்பட்ட தன்மைக்குச் சமமாக மாணவர்களைக் கூறலாம். எதையும் உடனே நம்பும் சுபாவம் மாணவர்களுடையது. மாணவர்களின் உள்ளம் கெட்டியானது அல்ல; இலேசானதாக இருக்கும்; அதுவும் தூய்மையானதாக இருக்கும்; பட்டதும் பிடிக்கக்கூடிய தன்மை உள்ளது. அந்த மனம் கெட்டிப்படும் வரை அடுத்தடுத்து வருகிறவைகளைக் கவ்விக்கொண்டு, முன்னே பற்றியதைக் கக்கிவிடும்; சரியான பக்குவம் இல்லாததால் ஒரு நிலையில் நிலைத்து நிற்கும் தன்மை கிடையாது. இன்றைக்கு நான் சொல்வதைக் கேட்டு அப்படியே நம்பிவிடும். சரி நம்பி விட்டார்களே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது நாளைக்கு யாராவது ஒன்றைக் கூறினால் நான் சொன்னதை விட்டுவிட்டு, மற்றவர் கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள். மனது பக்குவம் அடைய வேண்டும். இதனால் நான் மாணவர்களுக்கு அறிவில்லை, அல்லது மாணவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பதாகக் கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். பிஞ்சு அறிவு கொண்டவர்கள்! அந்த அறிவு முற்றும் வரை அவர்களுக்கு எதிலும் உறுதியான எண்ணம் பிறக்காது.

அறிவு முற்றும் வரையில் எதையும் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த வேண்டும். மாணவ வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது எதையும் கற்பதிலேயே மனத்தைச் செலுத்திக் கற்றுத் தெரிந்துகொள்வதிலேயே இருக்கவேண்டும். படித்துப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவதிலேயே முழு முயற்சியும் காட்டவேண்டும்.

--------------------------சிதம்பரம் அண்ணாமலை நகரில், 9.2.1956இல்
சொற்பொழிவு - விடுதலை 9.3.1956

0 comments: