Search This Blog

30.4.09

"மே" தினமும் -பெரியாரும்

மே நாள்

எட்டுமணி நேரப் பணி, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் - என்று 24 மணி நேரம் பிரிக்கப்பட வேண்டும் என்பதே 19ஆம் நூற்றாண்டில் பெரிய கோரிக்கையாக இருந்தது. தொழிலாளர்கள் 18 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர், பெண் தொழிலாளிகள் உள்பட . ஊதியமோ மிகமிகக் குறைவு.

அமெரிக்கா இன்று முதலாளித்துவ நாடு. அன்று, தொழிலாளர் கிளர்ச்சி கிளம்பியது அங்கேதான். சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் எனும் வைக்கோல் சந்தைப் பகுதியில்தான் தொழிலாளர்களின் பேராட்டம் உச்சநிலையைத் தொட்டது. நாள் 1886 மே 1 ஆம் நாள். தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். நான்கு பேர் கொல்லப்பட்டனர். பார்சன்ஸ், ஸ்பைஸ், ஃபிஷர், எங்கெல் எனும் நால்வர் விசாரணை என்று நடத்தப்பட்ட நாடகத்தின் முடிவில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டனர்.

1889 ஜூலை 14 ஃபிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற்ற நாள். லூயி மன்னர்களின் பாஸ்டிலி சிறையை மக்கள் உடைத்துப் புரட்சியின் வெற்றி முகடைத் தொட்ட நாள். அந்தப் புரட்சி யின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்திற்காக பாரிஸ் நகரத்தில் தொழிலாளர்கள் கூடினர். அங்கே எடுக்கப்பட்ட முடிவு தான் -தொழிலாளர்களின் உரிமை நாளாக மே முதல் நாளைப் பாட்டாளி வர்க்கம் கொண்டாடவேண்டும் என்கிற முடிவு.

அதற்கான வேண்டுகோள் விடப்பட்டது. 1890 மே 1 முதல் உலகமெங்கும் மே நாள் கொண்டாடப் படுகிறது.


தொழிலும் இல்லை, தொழில் புரட்சியும் கிடையாது எனும் நிலையில் இருந்த இந்தியாவில் பிறவித் தொழிலாளிகள் மட்டும் உண்டு. அதே போல பிறவி முதலாளிகளும் (பார்ப்பனர்) கல் முதலாளிகளும் (கடவுள்) உண்டு. இங்கேயும் மே நாள் கொண்டாடப்பட வேண்டும் எனக் குரல் தந்தது அகில இந்திய தொழிற் சங்கக் காங்கிரசு - 1927 இல்.

அதற்கு முன்பாகவே - இந்தியாவின் முதல் பொது உடைமை வாதி - இந்தியாவில் பொது உடைமைக் கட்சி தொடங்கப் பட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சுயமரியாதை வீரர், பகுத்தறிவாளர் ம. சிங்கார வேலர் - 1923 இல் சென்னை உயர்நீதிமன்றக் கடற்கரையில் மேதினம் கொண்டாடியவர். அந்த ஆண்டில் திருவல்லிக்கேணி கடற்கரையில் மேதினக் கொண்டாட்டத்தை கிருஷ்ணசாமி என்பவரும் நடத்தினார் எனும் செய்த தி இந்து நாளி தழில் (2-5-1923) வெளிவந்தது.

அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலரால் நடத்தப்பட்டு வந்த மேநாள் மக்கள் இயக்கமாக அமைப்பு ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்து 1931 முதல் மேநாள் கொண்டாட்டங்களை நடத்தி வரச்செய்தார்.

சுயமரியாதை இயக்க விருதுநகர் மாநாட்டில் 7 மணி நேர வேலை மட்டுமே விதிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார். வெறும் கூலி உயர்வு, போனஸ் போன்ற வற்றிற்கு மட்டுமே குரல் கொடுத்துப் போராடாமல், தொழிலாளர்கள் படிப்படியாகத் தொழிலில் பங்காளிகளாக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார்!

சுயமரியாதை இயக்கத்தையே பொதுஉடைமை இயக்கமாகத்தான் தந்தை பெரியார் தோற்றுவித்தார் என்பதைப் பின்வரும் வரிகளால் அறிந்து கொள்ளலாம்.

"ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கிற வரையிலும் ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டுச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டியில்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கிறவரையிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுகவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கிற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்."

மேற்காணும் நோக்கங்கள் தானே கம்யூனிசத்தின் கொள்கைகள்?


------------------"விடுதலை" 30-4-2009

0 comments: