Search This Blog

11.4.09

ஜெயலலிதா கூட்டணியில் குழப்பம்


கூட்டணியில் குழப்பம்


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரால் பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.அய்., விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் ஆகிய கட்சிகள் ஒரு அமைப்பை உருவாக்கின. ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பது இந்த அமைப்பின் குறிக்கோள். இதில் அரசியல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

நாளடைவில் அது அரசியல் நோக்கத்தோடு இயங்குகிறது என்பது அம்பலத்திற்கு வந்துவிட்டது.

தோழர் திருமாவளவன் இதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டுவிட்டார்; தொடங்கப்பட்ட நோக்கத்தில் இப்பொழுது சிதைவு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கட்சிகளோடு சி.பி.எம்., அ.இ.அ.தி.மு.க.வும் இணைந்து மூன்றாவது அணி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளிடையே ஈழத்தமிழர் பிரச்சினையில் மாறுபாடான கொள்கைகளும், அணுகுமுறைகளும் நிச்சயமாக இருக்கின்றன.

சென்னையில் கடந்த எட்டாம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பேச்சு இப்பொழுது அவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈழத்தில் பிரபாகரனுக்கு ஒன்று என்றால், தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று வீராவேசத்தோடு அந்தக் கூட்டத்தில் பேசினார்.

இந்தப் பேச்சு குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் வைகோவின் பேச்சு எங்களைக் கட்டுப்படுத்தாது - அந்தப் பேச்சுக்கு எங்களுடைய ஆதரவு கிடையாது; வைகோ அப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்று கறாராகவே கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராசன் அவர்களும் வைகோவின் கருத்து ஏற்புடையதல்ல என்று கூறி கைகழுவிவிட்டார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இதில் தம் கருத்தைச் சொல்ல முன்வரவில்லை; இந்த அம்மையார் அந்த அமைப்பில் இடம்பெற விரும்பவில்லை.


அதேநேரத்தில், விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரையில் பயங்கரவாதிகள் என்பதுதான் ஜெயலலிதாவின் நிலைப்பாடாகும். பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர். அந்த வகையில் பார்த்தாலும் வைகோ இந்தத் தேர்தலில், ஈழத் தமிழர் பிரச்சினையில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்.

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கருத்தாகக் கூறிவிட்டார். (இந்தியா டுடே, 15.4.2009)

ம.தி.மு.க.வும், அ.இ.அ.தி.ம.க.வும், பா.ம.க.வும் இத்தேர்தலில் ஈழப் பிரச்சினையையே முன்வைக்கும் என்பது அவர்களின் பேச்சுகளிலிருந்தே தெரியவருகிறது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே முரண்பாடு முற்றாகத் தெரிகிறது.

அந்தத் திட்டமே தவறானது - தேவையற்றது - கைவிடப்படவேண்டியது என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் நிலைப்பாடோ வேறு விதமாகவிருக்கிறது. எப்படியும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டாகவேண்டும் என்று அக்கட்சிகள் கருதுகின்றன.

மதச்சார்பற்ற தன்மை என்று எடுத்துக்கொண்டாலும் ஜெயலலிதா அதில் எதிர்மாறான மனப்பான்மையும், அணுகுமுறையும் கொண்டவர்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதற்கு உச்சநீதிமன்றத்தில் அவர் தெரிவித்த காரணம் ஹிந்துக்களின் நம்பிக்கையான கடவுள் ராமன் - அவன் பெயரால் இருக்கும் பாலத்தை இடிப்பது ஹிந்து மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அந்தக் கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க. ஏற்றுக்கொள்கின்றனவா? தொகுதிக்குத் தொகுதி குரல் மாற்றிப் பேசுவார்களா?

இத்தகைய அவியல் கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறதாம். தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலேயே அடிப்படையான முரண்பாடுகள் இருக்கும்போது இவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்?

வாக்காளர்களே சிந்திப்பீர்!

வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தக் கூட்டணியை முறியடிப்பீர்!

---------------------நன்றி:- "விடுதலை" தலையங்கம் 11-4-2009

0 comments: