Search This Blog

12.4.09

கிணற்றுத் தவளைகள் யார்? பக்தர்களா? பகுத்தறிவாதிகளா?


கிணற்றுத் தவளைகளா?கேள்வி
: வருண்காந்தி சறுக்கல் தானே?

இல. கணேசன் (தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவர்)

பதில்: யார் யார் தேர்தலில்நிற்கக் கூடாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. வருண் காந்தியின் பேச்சு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடக்கிறது. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். தேர்தல் கமிஷன் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

ராகுல்காந்தி இந்தியா முழுக்க பயணம் செய்கிறார்: குடிசைகளில் தங்குகிறார். ஆனால் அவருக்குக் கிடைக்காத பாப்புலாரிட்டி, ஊடகங்கள் காரணமாக வருண்காந்திக்கு ஒரே நாளில் கிடைத்து விட்டது.

கேள்வி
: நெகடிவ் பப்ளி சிடிதானே?

இல.கணேசன்: இல்லை. இந்திய மக்களின் நிஜமான நாடித் துடிப்பு உங்களுக்குப் புரியவில்லை. இந்து சமுதாயம் இளிச்சவாய் சமுதாயம் இல்லை. அப்படித் தவறாக நினைத்து நீ அவர்களை வெட்ட வந்தால், அந்தக் கையை நான் வெட்டுவேன் என்கி றார். அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுலுக்குப் போட்டியாக வருண்காந்தி வருவதை சகித்துக் கொள்ளாத காங்கிரஸ் - அரசியலை யும், தேர்தல் கமிஷனையும் தவறாகப் பயன்படுத்தி, பதினைந்து ஆண்டு களுக்கு மேலாக பா.ஜ.க.வில் இருக்கும் வருணை முடக்கப் பார்க்கிறார்கள்.

(கல்கி 12.4.2009)

பா.ஜ.க.வினர் சிந்தனைத் தடுமாற்றத்தில் சில்லுக்கோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ப தற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

வருண்காந்தி - தான் அவ்வாறு பேசவில்லை; திரிபு வேலை செய்யப்பட்டு இருக்கிறது. என் குரல் மாதிரி இன்னொருவரைப் பேச வைத்து பதிவு செய்து, தில்லுமுல்லுத்தனம் செய்துள் ளனர் என்று கூறியிருக்கிறார்.

அது உண்மையென்றால் அதனைக் கண்டுபிடித்து விடுவது ஒன்றும் கடினமான வேலையல்ல; விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து இடியாப்பச் சிக்கல்களையெல்லாம்கூட அக்குவேர் ஆணி வேராக அலசிக் காட்டி விடுகிறது.

இதற்கிடையே சிறையில் இருக்கும் வருண்காந்தியை சி.பி.அய். அதிகாரிகள் சந்தித்து சம்பந்தப்பட்ட பகுதி யைப் பேசிக் காட்டுமாறு கேட்டுக் கொண்டபோது, அவ்வாறு பேச அவர் தயங்கினார்; இசைவு தெரிவிக்க வில்லை.

அவரது குற்ற உணர்வு அவரைத் தடுக்கிறது என்பது தானே இதன் பொருள்?

இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்க, திருவாளர் இல. கணேசன் வருண்காந்தியின் உரையை நியாயப் படுத்திப் பேசியிருக்கிறார்.

அப்படி வாருங்கள் - அதுதான் சரியான வழி - அதை விட்டு விட்டு ஒரு தவறை மறைக்க ஆயிரம் தவறுகளைச் செய்வானேன்?

இந்து சமுதாயம் இளிச்சவாய் சமுதாயம் என்று யார் சொன்னார்கள்? இவர்களை யார் வெட்ட வந்தார்கள்? என்ன புதிர் போடுகிறார்கள்?

உண்மையைச் சொல்லப் போனால் சங்பரிவார்க் கும்பல் தான் ஊருக்கு ஊர் திரிசூலம் கொடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறது.

செத்த மாட்டுத் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட சகோதரர்களைப் படுகொலை செய்ததுயார்? அந்தத் தாழ்த்தப்பட்டவர்கள் ஹிந்துக்கள் அல்லவா?


இவர்கள் போற்றும் இராமாயணத்திலேயே இவர்களின் அவதாரப் புருஷன் இராமன் சம்பூகனை சூத்திரன் என்று கூறி வாளால் வெட்டிக் கொன்று இருக்கிறானே

சம்பூகன் ஒன்றும் கிறித்துவன் அல்லன் -இசுலாமியன் அல்லன். இவர்களின் அர்த்தமுற்ற ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன்தான்.

ஜாதி தருமம் கெட்டுப் போய் விட்டது என்பதுதான் குற்றச்சாட்டு.


அன்றைக்கு ராமன் செய்ததைத்தான் இன்றைக்கு வருண்காந்தி செய்யத் துடிக்கிறார். சாதாரணமாக அல்ல, கீதையில் கிருஷ்ணன் சொன்னதை எடுத்துக்காட்டிதான் வெட்டுவேன் குத்துவேன்! என்று கொக்கரிக்கிறார்.

காந்தியாரைக் கொன்ற இவர்களில் முன்னோடியான நாதுராம் கோட்சே கூட கீதையில் இருந்துதான் சுலோகத்தை எடுத்துக்காட்டி, காந்தியாரைக் கொன்றது குற்றமல்ல என்று நீதி மன்றத்திலேயே கூவினான்.

அந்தக் கீதையைத்தான் நீதிமன்றத்தில் சாட்சி கூறுகிறவர்களிடம் கொடுத்து, நான் சொல்லுவது எல்லாம் சத்யம் என்று அந்தக் கீதைமீது சத்தியம் செய்ய வைத்தார்கள்.

எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது! இவர்கள் ஏற்பாட்டில்தானே இந்தியாவின் மூச்சுக் குழலே இருந்து வந்திருக்கிறது. இவர்களின் வெறியூட்டும் அநாகரிகக் குட்டையில் விழுந்த நேரு குடும்பத்து வாலிபன் அசிங்கமான சேற்றைப் பூசிக் கொண்டு சிறைக் கொட்டடியில் சிக்கிக் கொண்டதுதான் மிச்சம்.

கேள்வி
: பக்தி, பகுத்தறிவு இரண்டும் வெவ்வேறு பாதைகளில் சென்றாலும் பயணத்தின் நோக்கம் தேடல் மட்டும் தானே?

பதில்
: பக்தி உணர்வின் தேடல், பகுத்தறிவு புத்தியின் தேடல், பக்தியினால் மனசுக்கும் அதன் மூலம் உடலுக்கும், அதன்பின் விளைவாக முன்னேற்றத்துக்கும் ஏற்படும் நன்மைகளை, இன்று பகுத்தறிவும் புரிந்து கொண்டு உலகளாவிய அங்கீகாரம் அளிக்கிறது. இங்கேயுள்ள கிணற்றுத் தவளைகள்தான் ஏற்பதில்லை.

(கல்கி 12.4.2009)

என்ன சொல்ல வருகிறது கல்கி? பக்திக்குப் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையா? பகுத்தறிவுக்கும் உணர்வுக்கும் தொடர்பில்லையா? பக்தி என்ன சொல்லுகிறது? எல்லா வற்றிற்கும் கடவுளே மூலம் அவனிடம் சரணடைந்துவிடு! எல்லாம் உனக்குக் கிடைக்கும் என்பதை நம்ப வேண்டுமா?

இதனைக் கடைப்பிடித்தால் சங்கராச்சாரியார் உட்பட பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.

பகுத்தறிவைப் பயன்படுத்தியதால்தானே மனித குலம் இந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையில் அடையாளங் களைப் பதிவு செய்து கொண்டே முன்னேராகப் பய ணித்துக் கொண்டிருக்கிறது.

பகுத்தறிவுவாதிக்கு பக்தி உணர்வு இல்லாததால் என்ன கெட்டு விட்டது?

காலம் மிச்சம், பொருள் மிச்சம், புத்திக்கும் புத்தி மிச்சம், தன்னம்பிக்கையை தவறவிடாமல் முந்தித் தள்ளுகிறது.

ஹிந்து மதம் சொல்லும் பக்தியில் வருண பேதத்துக்கு இடம் உண்டு, பிறப்பில் பேதத்தை கற்பிக்கிறது. உயர்வு - தாழ்வைக் கற்பிக்கிறது. ஒரு ஜாதிக்கு மேல் இன்னொரு ஜாதி என்கிற ஏணிப்படி சமூகத்தை கடைக்கால் போட்டு கட்டி வைத்திருக்கிறது.

ஒருவனைப் பார்த்தால் இன்னொருவன் உறுமுகிறான். எச்சில் இலைக்குச் சண்டை போடும் பிராணியாய் கட்டிப் புரளுகிறான். இதன் மூலம் எது? ஹிந்து மதம் ஊட்டும் பக்தி என்னும் தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தானே இதன் மூலக் கூறுகள்?

பக்தியைச் சொன்னவன் அத்தோடு எல்லைக் கோட்டை நிறுத்தினானா? பாவங்களை ஏன் செய்யச் சொல்லுகிறான்? அவற்றிற்குப் பரிகாரங்களை வைத்தது பாவங்களைச் செய் யத் தூண்டுவதற்குத்தானே?

பன்னிரண்டு வருடம் செய்யும் பாவங்கள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமகத்தன்று ஒரு முழுக்குப் போட்டால் பஞ்சாய்ப் பறந்து போகும் என்றால் பாவம் செய்யப்பயப்படுபவன் பைத்தியக்காரன் தானே! குறைந்த முதலீடு கொள்ளை லாபம் என்றால் எவனுக்குத் தான் எச்சில் ஊறாது?

வெகுதூரம் போவானேன்? பகுத்தறிவைப் பரப்பிய தந்தை பெரியார் அவர்களின் ஒழுக்கம் உலகப் பரப்பில் ஒளி வீசி நிற்கிறது. எதிரிகள்கூட குற்றம் கூற முடியாத அப்பழுக்கற்ற நெருப்புக் கோளத்தின் மறு பெயர் தான் பெரியார்!

நானே கடவுள் என்னும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கதை என்ன? பக்தியின் மூல நட்சத்திரமாயிற்றே! கறி ஊரெல்லாம் சிரிக்கிறதே! வரகுணபாண்டியன் எனும் அரசன். பக்தச் சிரோன்மணி! குளத்தில் தவளைகள் கத்துவதைக் கேட்டு அவை அரகரா என்று கடவுளின் திருநாமத்தை உச்சரிக்கின்றன என்று கூறி அந்தக் குளத்தில் தங்கக் காசுகளை வாரி இறைத்தான்! திருவிடை மருதூர் மும்மணிக்கோவை இதனை விவரிக்கிறது.

கிணற்றுத் தவளைகள் யார்? பக்தர்களா? பகுத்தறி வாதிகளா?

கல்கிக்குத்தான் வெளிச்சம்.

------------------மின்சாரம் அவர்கள் 11-4-2009 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

0 comments: