Search This Blog

13.4.09

ஈழப்பிரச்சினையை தேர்தலில் முன்வைக்கக்கூடாது ஏன்?


அரசியலாக்காதீர்!

தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அப்பாவித் தமிழர்களைக் கொல்லாதே - போரை நிறுத்துக என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது (12.4.2009). சென்னையில் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான உயிர்ப் பிரச்சினை; இதில் தேவையில்லாமல் அரசியலைத் திணிக்காதீர்; அப்படி அரசியல் ஆக்கப்பட்டால், அரசியல் ஆக்க ஆசைப் படுவோரின் முரண்பட்ட நிலைப்பாடுகளை யெல்லாம் மற்றவர்களும் விமர்சிக்கும் ஒரு நிலை ஏற்படும் என்றும் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு எடுத்துக் கூறினார்.

மூன்றாவது அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையை தேர்தலில் முன்வைக்க மாட்டோம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டுவிட்டார்; இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைப் பொறுத்தவரை அவர்களும் அவ்வாறே நடந்துகொள்வார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். ஏனெனில், 1996 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலேயே இந்தப் பிரச்சினையைத் தேர்லில் முன்வைக்கக் கூடாது என்று தம்மிடம் கூட்டு வைத்திருந்த ம.தி.மு.க.வுக்கு நிபந்தனை வைத்திருந்தது.

அ.இ.அ.தி.மு.க. ஈழப் பிரச்சினையை முன்வைக்கும் என்பதற்கான அறிகுறிகள் அதிகமாகவே தெரிகின்றன. அப்படி முன்வைத்தால், இந்தப் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி எப்படியெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக, ராஜபக்சேயின் உடன்பிறப்புப் போல ஜெயலலிதா கூறி வந்திருக்கிறார் என்பதை அவிழ்த்துக் கொட்ட நேரும். அது அக்கட்சிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பது கல் போன்ற உண்மையாகும்.

ம.தி.மு.க.வும், பா.ம.க.வும் முன்வைக்கக் கூடும். அப்படி முன்வைத்தால் இக்கட்சிகள் கூட்டு வைத்திருக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் கடந்த கால நிலைப்பாடுகள் என்ன? திடீர் என்று ஈழத் தமிழர்கள்மீது அம்மையாருக்கு ஏற்பட்ட கரிசனம் என்ன என்ற கந்தாயத்தை எல்லாம் எடுத்துக் கூறி, இத்தகைய கட்சியோடு கூட்டு சேர்பவர்களுக்கு ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் எப்படி உள்ளார்ந்த உணர்வு இருக்கும் என்ற கேள்வியை தி.மு.க. தலைமையிலான கூட்டணியினர் வினா எழுப்பினால் அது அ.இ.அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியைப் பிளக்கும் வெடிகுண்டாகவே இருக்கும்.

அதேநேரத்தில் இந்தப் பிரச்சினையை அரசியலாக்கினால் அது ஈழத் தமிழர்களுக்குப் பாதகமாகத்தான் போகும் என்பதை அப்பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்ட திராவிடர் கழகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.தமிழகத்தில் நடக்கும் எரிந்த கட்சி - எரியாத கட்சி என்பதுபோன்ற சண்டையில், எதிர்க்கட்சித் தலைவரான செல்வி ஜெயலலிதா கூறிவரும் கருத்துகளை இலங்கை சிங்கள அரசு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை, எடுத்துக்காட்டுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

மகாராட்டிர மாநிலத்தில் பணி செய்யும் வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வடநாட்டுக்காரர்கள் வேலையைவிட்டு விலகி ஓடிவிட வேண்டும் என்று சிவசேனா வெறிக் கூச்சல் போட்டபோது, மத்திய அமைச்சர் லாலுபிரசாத்தும், ராம்விலாஸ் பஸ்வானும் - இவர்களின் அரசியல் எதிரியான முதலமைச்சர் நிதிஷ்குமாரும் ஓரணியில் நின்று, கட்சி வண்ணங்களை ஒரு பக்கத்தில் மூட்டைகட்டி வைத்துவிட்டு எதிர்ப்புக்குரல் கொடுத்ததை தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பதே நமது பொறுப்பான வேண்டுகோளாகும்.

அதுபோலவே, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த எதிரும்புதிருமான அரசியல்வாதிகள் கட்சிக் கொடிகளை ஒரு பக்கத்தில் மறைத்து வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு எதிராகக் காட்டுக் கூச்சல் போடுவதையும் கவனிக்கவேண்டாமா?

ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பொருத்தவரை அணுகுமுறைகளில் வேறுபாடு இருக்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை - உயிர், பொருள், உரிமை, மான உணர்வு எக்காரணத்தை முன்னிட்டும் சேதப்படக் கூடாது என்பதற்காக ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால், இலங்கை அரசு அஞ்சுவது மட்டுமல்ல - இந்திய அரசும்கூட நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் கூடுதலாகச் செயல்பட வாய்ப்பு உண்டே!

அரசியல் பார்வையோடு வாக்குச் சீட்டை மனதில் வைக்காமல், நமது தொப்புள்கொடி உறவு மக்களின் நல் வாழ்வை மட்டும் முன்னிறுத்தினால் இது சாத்தியமாகும்!

------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 13-4-2009

0 comments: