Search This Blog

30.4.09

புரட்சியாளர்அம்பேத்கர் : வேதனைகளும் - சாதனைகளும்




இந்தியத் துணைக் கண்டத்தில் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சமூகப் புரட்சியாளர், அண்ணல் அம்பேத்கர். இந்து மதத்தில் பஞ்சமர் எனும் தாழ்வுக்கு உள்ளாகி, அடக்கி ஒடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அல்லல்பட்ட மக்களின் உரிமையை மீட்டவர்; என்றும் நிலையான வடமீனைப் போல் வழிகாட்டி நிற்பவர்; ஒட்டுமொத்தமான மனித இனத்தின் மாண்பை உயர்த்தியவர்.

பெயரும் ஊரும்

மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் எனும் மாநகரைச் சேர்ந்த மாவ் எனும் இடத்தில் 1891 ஏப்ரல் 14இல், தம் பெற்றோருக்குப் 14ஆவது குழந்தையாக அம்பேத்கர் பிறந்தார். அப்பொழுது அவருடைய தந்தை, ராம்ஜி சக்பால் ராணுவத்தில் சுபேதார்-மேஜராக இருந்தார். தன் மகனுக்கு பீம்ராவ் அம்பவடேகர் எனப் பெயரிட்டார். அம்பவடே என்பது மகாராஷ்டிரத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அவர்களின் பூர்விகமான ஊர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, மகாராஷ்டிரத்திற்குத் திரும்பிய ராம்ஜி, சதாராவில் ஒரு பணியில் அமர்ந்தார். அந்த ஊர் பள்ளியில் பீம்ராவ் சிறுவனாகச் சேர்ந்து படித்தார். அப்பள்ளி ஆசிரியர்களில் ஒருவரின் பெயர், அம்பேத்கர், அவருக்கு இச்சிறுவனின் இனிய நடத்தை பிடித்திருந்தது. ஆகையால், அம்பவடேகர் என்பதற்குப் பதிலாக அம்பேத்கர் என்பதைச் சேர்த்து, பீம் ராவ் அம்பேத்கர் எனப் பதிவுசெய்து விட்டார்.

தீண்டாமை, ஏழ்மை

தந்தை மும்பைக்குச் சென்றபொழுது, அங்கிருந்த எல்ஃபின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் அம்பேத்கர் சேர்ந்தார். மஹர் எனும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த காரணத்தால், படிப்பின் பொழுது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானார். இடையிலே கட்டிய ஒரே துணியுடன் பல நாட்கள் பள்ளிக்குச் சென்றார். குடிநீர் இல்லாமல் நாவறட்சியுடன் வீடுதிரும்பியதும் உண்டு. இவ்வாறு எத்தனையோ இடர்கள். மும்பையில் தொழிலாளர் நிறைந்த பரேல் பகுதியில், முதலில் ஓர் அறை கொண்ட வீட்டிலும், பின்பு இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலும் குடியிருந்தனர். இவர் கீழ் ஜாதி ஆகையால், பள்ளியில் மராத்திய மொழியுடன் சமஸ்கிருதம் படிக்க அனுமதிக்கப்படவில்லை! ஆகையால் பாரசீக மொழியைப் படித்தார். கலை இளநிலை (பி.ஏ.) பட்டம்பெற்று, பரோடா அரசில் சிலகாலம் பணியிலிருந்தார்; ஆனால், 1913இல் தந்தை இறந்தபின் பணியை விட்டார்.

மேல்நாட்டில்

அமெரிக்க நாட்டின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார், அம்பேத்கர். பரோடா (இப்பொழுது, வடோதரா) அரசர் அதற்கு உதவித் தொகை அளித்தார். பழங்கால இந்திய வணிகத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதி, கலை முதுநிலை (எம்.ஏ.) பட்டதாரி ஆனார். மறுஆண்டு, 1916 ஜுனில், இந்திய நாட்டின் வருமானம் பற்றிய ஆய்வு ஏட்டை அளித்து, முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்றார். மற்றொரு முனைவர் பட்டம் பெறுவதற்கு லண்டன் பல்கலையில் சேர்ந்தார். அத்துடன் சட்டப்படிப்பிற்கும் பதிவு செய்து கொண்டார். ஆனால், இந்தப் படிப்பு களைப் பாதியில் நிறுத்திக்கொண்டு இந்தியா விற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஒப்பந்தப் படி, பரோடா அரசில் பணியேற்றார்.

கண்ணீர் சிந்தினார்

பரோடா (வடோதரா) சென்று, அரசரின் ராணுவச் செயலாளர் பொறுப்பில் அமர்ந்தார். அங்கிருந்த மேல்ஜாதி இந்துக்கள், இவருக்குக் கீழ் வேலை செய்தவர்களும்கூட, உயர்ந்த படிப்பை முடித்திருந்த அம்பேத்கரைத் தீண்டத் தகாதவராகவே நடத்தினர். தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்தனர். பார்சி மதத்தவர்களின் விடுதியில் தங்கினார். இவர் ஒரு தாழ்த்தப் பட்டவர் எனத் தெரிந்து, அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்கள். ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்ணீர் விட்டார்; மெத்தப் படித்தும், மேல் நாட்டு அனுபவம் பெற்றும் பயனில்லை! மும்பைக்குத் திரும்பினார்.

மாநாடுகள்

மும்பை தொழிலாளர் பகுதியில் குடியிருந்து கொண்டே, 1918 நவம்பர் முதல் 1920 ஜூலை வரை, சிடனாம் வணிகவியல், மற்றும் பொருளா தாரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி செய்தார். இடையில், மூக் நாயக் (ஊமையர் தலைவர்) எனும் இருவார இதழ் தொடங்கினார். கோலாப்பூரில் மங்காவ் எனும் இடத்திலும், நாக்பூரிலும் நடந்த தீண்டப்படாதவர்களின் மாநாடுகளில் உரையாற்றினார். எதிர்காலத்தில், இந்தியாவின் முன்னணித் தலைவராக அம்பேத்கர் திகழ்வார் என மங்காவ் மாநாட்டில், கோலாப்பூரின் சீர்திருத்த அரசரும், சமூகநீதி முன்னோடியுமான சாகுமகராஜ் முன்கூட்டியே கணித்துச் சொன்னார்.

1920இன் பிற்காலத்தில் மீண்டும் லண்டன் சென்ற அம்பேத்கர், 1923 ஏப்ரல் வரை படிப்பைத் தொடர்ந்தார். சட்டத்தில் பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். ரூபாயின் சிக்கல் எனும் தலைப்பில் ஆய்வு செய்து எழுதி, பொருளாதாரத்தில் இரண்டாவது முனைவர் பட்டம் பெற்றார்.

மனுநூல் எரிப்பு

இவர் இந்தியா திரும்பியபொழுது, முதலில் மாவட்ட நீதிபதியாகவும், பின்பு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்க, பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. ஆனால், அதை அம்பேத்கர் ஏற்க வில்லை. உயர்நீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் செய்தார். 1924இல் ஒதுக்கப்பட்டோர் நலவாழ்வுச் சங்கம் நிறுவி, அதன் மேலாண் மைக் குழுவின் தலைமைப் பொறுப்பு ஏற்றார். மகாராஷ்டிர மாநிலத்தில், கொலாபா மாவட்டத்தைச் சேர்த்து மகாடு நகரம், அதில் உள்ள குளத்திற்குப் பெயர் சவ்தார் ஏரி என்பதாகும். 1927 மார்ச்சில், அக்குளத்தில் நீர் அள்ளு வதற்கு உரிய தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை அம்பேத்கர் நிலைநாட்டினார். பல ஆயிரம்பேர் அதில் கலந்துகொண்டனர். ஆனால், அவர்கள் தங்களுடைய ஊர் திரும்பு கையில், மேல்ஜாதியார் அவர்களைத் தாக்கினர். சிலநாள் கழித்து, தீட்டுப்பட்ட குளத்தைத் தூய்மைப்படுத்தச் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி, வேதியர் சடங்குகள் செய்தனர்! ஆகை யால், தம்முடைய மக்களை, அதே மகாடு நகரில் 1927 டிசம்பரில் கூட்டி, ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் மனுதரும நூலின் படியை எரித்தார். இதற்கு இடையில், தம்முடைய நியாயங்களையும், தாழ்த்தப்பட்டோர் நிலையையும் விளக்க, பஹிஷ்கிரித் பாரத் எனும் இதழ் ஒன்றை 1927 ஏப்ரல் 3இல் தொடங்கினார்.

வகுப்புரிமை

சட்டமன்ற உறுப்பினராக 1927இல் நியமனம் பெற்ற அம்பேத்கர், 1928இல் சைமன் ஆணையத்திடம் சாட்சியம் அளித்தபொழுது வகுப்புரிமையை வலியுறுத்தினார். லண்டனில் வட்டமேஜை மாநாடுகளில் (1930-32) கலந்து கொண்டு, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட பட்டியல்ஜாதி மக்களுக்குத் தனிவாக் குரிமைக்காக வாதாடினார். இவருடைய சிறப்பான வாதத்தை ஏற்று, அதற்குத்தக, பிரிடிஷ் பிரதமர் மெக்டனால்டு வகுப்புத் தீர்வை அளித்தார். ஆனால், அதை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாமையைக் காந்தியார் அறிவித்தார். அவர் உயிரைக் காப்பதற்காக, தம் நிலையில் இருந்து அம்பேத்கர் இறங்கி வந்து, தனி வாக்குரிமைக்கு மாற்றாகத் தொகுதி ஒதுக்கீடு என்பதை ஏற்றார். அது பூனா, ஒப்பந்தம் எனப்படுகிறது.

மேலும் சாதனைகள்

1937இல் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், அம்பேத்கரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சி, 17 இடங்களுக்குப் போட்டியிட்டு, 15இல் வெற்றி பெற்றது. 1942இல் வைஸ்ராயின் நிருவாகக் குழு உறுப்பினர் ஆனார்; தொழிலாளர் துறைப் பொறுப்பேற்றார். வேலை நேரத்தைக் குறைத் தார்; பட்டியல் ஜாதியாருக்கு இடஒதுக்கீடு தந்தார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் சட்ட அமைச்சர் ஆனார், அம்பேத்கர். இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைவராக இருந்து சாதனை புரிந்தார். பார்ப்பனர் இடையே செயல்பட வேண்டியிருந்தும், கூடிய வரையில் வகுப்புரிமைக்கு வகை செய்தார். உறுதியளித்தபடி, இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பிரதமர் நேரு தவறிய தால், 1951இல் அம்பேத்கர் பதவி விலகினார். 1952இல் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார்.

தாம் ஓர் இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாக இறக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை, ஏலா மாநாட்டில்1935இல் அண்ணல் அம்பேத்கர் அறிவித்தார். அதன்படி இலட்சக்கணக்கான மக்களுடன், அறிவு மதமாகிய பவுத்தத்தில் 1956 அக்டோபர் 14இல் இணைந்தார். அதே ஆண்டு டிசம்பர் 6இல் இயற்கை எய்தினார். அவர் எழுதிய பல நூல்களில், (புத்தரும், அவருடைய அறமும்) என்பது தலைசிறந்த ஒன்றாகும்.

------------------- கு.வெ.கி.ஆசான் அவர்கள் ஏப்ரல் 2009 "பெரியார் பிஞ்சு" இதழில் எழுதிய கட்டுரை

2 comments:

Thamizhan said...

பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பள்ளிப் பாடத்தில் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா