Search This Blog

17.4.09

மக்களுக்காக மதமா? மதத்துக்காக மக்களா?

இதுதான் பா.ஜ.க. கலாச்சாரம்!

சிறுபான்மையினரை வெட்டுவேன் - தலையைத் துண்டிப்பேன் என்கிற முறையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வருண்காந்தி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பரோலில் வரும்போது பிரம்மாண்டமான வரவேற்பினை பா.ஜ.க.வும், சங்பரிவார்க் கூட்டமும் அளித்துள்ளனவாம்.

இதனைவிட வெட்கக்கேடு, அநாகரிகம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. நாகரிகமற்ற முறையிலும், மனிதத் தன்மையைக் கொச்சைப்படுத்தும் முறையிலும், சமூக வாழ்வைக் குலைக்கும் வகையிலும் காட்டுவிலங்காண்டித்தனமாகப் பேசியதால் சட்டப்படி சிறையில் தள்ளப்பட்ட ஒருவரை வீரராகக் கருதும் மனப்பான்மை ஒரு கட்சிக்கு இருக்குமேயானால், அந்தக் கட்சியை எந்த வகையில் எடுத்துக்கொள்வது? இந்தக் கட்சி (பா.ஜ.க.) இந்தியாவை ஆளவும் துடிக்கிறது என்றால் இதைவிட இந்தியாவுக்குத் தலைக்குனிவு ஒன்று உண்டா?

பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், மதமற்ற மக்கள் வாழும் ஒரு நாட்டில் சிறுபான்மை மக் களைக் குறி வைத்துத் தாக்கும் நோக்குடைய ஒரு கூட்டம் அரசியல் வடிவத்திலும், சமூக அளவிலும் அனுமதிக்கப்படுமே யானால், அது மக்கள் வாழும் நாடல்ல; விலங்குகள் வாழும் காடேயாகும்!

இந்த அமைப்புகளை சட்டம் எப்படி அனுமதிக்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. மத உரிமை, மதப் பிரச்சாரம் என்பது வேறு - இன்னொரு மதக்காரர்கள் வாழவே கூடாது என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் கூறிதானே சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் களும் உறுதிமொழி எடுக்கிறார்கள்? அரசமைப்புச் சட்டம் எடுத்த எடுப்பிலேயே என்ன கூறுகிறது? மதச்சார்பற்ற நாடு என்பதைத் தெரிவிக்கவில்லையா? உறுதிமொழி எடுப்பது என்பது ஒன்று, நடப்பது என்பது இன்னொன்றா? இந்த இரட்டை வேடத்துக்குச் சொந்தக்காரர்கள்தான் பி.ஜே.பி. வகையறாக்கள்.

வருண்காந்தி பிரச்சினையில் நீதிமன்றம் நடந்துகொள்ளும் முறை வேடிக்கையாக உள்ளது. இனிமேல் இது மாதிரி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசமாட்டேன் என்று வருண்காந்தியிடம் எழுதி வாங்குகிறார்களாம்! இது சட்டப்படியாக சரியான அணுகுமுறைதானா? கொலையாளி ஒருவன் இனிமேல் அதுமாதிரி கொலை செய்யமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டால், அவனை விடுவிப்பார்களா?

வருண் காந்திக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதியா? சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு என்னாவது? இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டால் சட்டத்தை மதிக்கும் மனப்பான்மை மக்கள் மத்தியிலும் நிலைக்குமா?

நாட்டில் வன்முறையை ஒடுக்க பொடா சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அத்வானி வகையறாக்கள் ஒரு பக்கத்தில் சொல்கிறார்கள். இப்படி சொல்பவர்களே வன்முறை கதாநாயகர்களாகப் பவனி வருகிறார்கள்.

அத்வானியேகூட பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளிதான். நியாயமாக பொடா இவர்மீதுதானே பாய்ந் திருக்கவேண்டும். 17 ஆண்டுகாலமாக குற்றத்தைச் சுமந்து கொண்டு ஒருவர் ராஜநடை போட்டுத் திரிகிறார்; இந்தியாவின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார் என்றால், இது எவ்வளவுப் பெரிய மோசமான நிலை!இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பதுபோல இவர்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்பது போலப் பேசக் கிளம்புகிறார்கள்.

இவர்கள் கூறும் இந்துத்துவா என்பதே தர்மத்தைக் (வருணாசிரம தர்மத்தை) காப்பாற்ற தண்டத்தை (வன்முறையை)ப் பயன்படுத்தலாம்; அப்படி வன்முறையில் ஈடுபடுவதும் ஒரு தர்மம்தான் என்கிறது இவர்களின் மனுதர்மம்.ராம அவதாரம் என்பதும், அதனைத் தான் மெய்ப்பிக் கிறது. சூத்திரனான சம்பூகன் தவமிருந்தான்; அது வருணா தர்மத்துக்கு விரோதம் என்று சொல்லித்தானே ராமன் வெட்டிக் கொன்றான்?

கிருஷ்ண அவதாரமும் அதனைத்தானே மெய்ப்பிக்கிறது. காந்தியைக் கொன்ற கோட்சே முதல் சிறுபான்மையினர்களை வெட்டுவேன் என்று கர்ஜிக்கும் வருண்காந்தி வரை கீதையிலே கிருஷ்ணன் சொன்னான் என்பதை எடுத்துக்காட்டி தானே நடந்துகொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் வன்முறைக் கலாச்சாரம் ஒழியவேண்டும் என்றால் முதலில் இந்து மதத்தின் வன்முறை மூல ஊற்றான இந்த இதிகாசங்களையும், வேதங்களையும், மனுதர்மங் களையும் ஒழித்துக் கட்டவேண்டாமா?

சங் பரிவார் வன்முறைக் கூட்டம் மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி ராமன் சொன்னான், கிருஷ்ணன் சொன்னான் என்று கூறித் தப்பிக்கப் பார்க்கிறது.

தந்தை பெரியார் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (1973 டிசம்பர் 8, 9) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற 25, 26 ஆவது பிரிவான மத உரிமைப் பாதுகாப்பு என்ற பகுதியினை நீக்கிடவேண்டும் என்ற தீர்மானத்தின் அருமையை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்து உண்மை நிலையை உணரவேண்டும்.

மக்களுக்காக மதமா? மதத்துக்காக மக்களா? என்பதைத் தீர்மானிக்கவேண்டும். எந்த காலத்திலோ எவனோ கிறுக்கி வைத்தது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் - அதை
ஏற்றுத்தான் தீரவேண்டும் என்பதைவிட பிற்போக்குத்தனம், மூடத்தனம், வளர்ச்சிக்குக் கேடு வேறொன்றும் இல்லை.

மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக!

----------------"விடுதலை" தலையங்கம் 17-4-2009

0 comments: