Search This Blog

25.4.09

பெரியாரும் புத்தகங்களும்



உலகப் புத்தக நாள் - ஏப்ரல் 23!

புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை நமது நண்பர்கள் குறிப்பாக, இளைஞர்கள் - இருபால் - மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் புத்தகங்களை விடச் சிறந்த நண்பர்கள் யாரும் உண்டா?

உடல்நலத்திற்கு ஊட்டச்சத்துகள் - வைட்டமின்கள் - எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றே உள்ள நலத்திற்கும், வளத்திற்கும் புத்தகங்கள்தான் அரிய ஊக்கச்சத்துகள் ஆகும்!

ஒவ்வொரு வீட்டிலும் அது எவ்வளவு சிறிய வீடாக இருப்பினும்கூட - நூல் அளவு - நூலகம் அமைந்த பகுதி இருப்பது மிகவும் அவசியம் அல்லவா?

மாணவப் பருவத்திலேயே அய்யாவின் குருகுலத்தில் சேர்ந்ததாலும், என்னை ஆளாக்கிய எனது மரியாதைக்குரிய ஆசிரியர் ஆ. திராவிடமணி பி.ஏ. அவர்கள் - இளம் வகுப்பு மாணவர்களாகிய எங்களுக்கு பிரைவேட் ட்யூசன் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு, இயக்க வெளியீடுகளையும் சத்தம் போட்டு உரக்கப் படிக்கச் சொல்லி மற்றவர்களை அமர்ந்து கேட்கச் செய்து, கேள்வி கேட்கும் முறையைக் கையாளுவார்கள்!

குடிஅரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற ஏடுகளையும், அதன் தலைப்புகளையும்கூட அப்படி ஓங்கி கணீர் குரலில் படிக்கச் சொல்லி, நன்றாகப் படிப்பவரைப் பாராட்டி மகிழ்வார்!

சுயமரியாதை இயக்கத்தின் பாலபாட நூல்களான ஞான சூரியன், கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?, பெண் ஏன் அடிமையானாள்?, புராண ஆபாசங்கள் போன்றவை எங்களைச் செழுமைப்படுத்திய சிறப்பான - எங்களது சிந்தனை வயலில் வளரும் அறிவுப் பயிர்களுக்குப் போடப்பட்ட நல்ல ஆரோக்கிய இயற்கை உரங்கள் ஆகும்!

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்? என்று நாடு கேட்டபோது, மாவீரன் லெனின் அவர்கள் பொன்னையோ, பொருளையோ கேட்கவில்லை - புத்தகங்கள்தான் வேண்டுமென்றாராம்!
தந்தை பெரியாரை படிக்காதவர் என்று சிலர் - நுனிப் புல் மேய்வதுபோல் - கூறுவதுண்டு. அது கல்லூரியில் - பல்கலைக் கழகங்களில் சேர்ந்து பட்டம் வாங்கத் தவறியவர் - என்ற பொருளில் மட்டுமே பொருந்தக்கூடிய சொல்லே தவிர, அவர் இறுதி மூச்சு அடங்கும்வரை ஏராளமான நூல்களை - அய்யா அவர்கள் படித்து அசை போட்டுச் சிந்தித்து, நான் மட்டும் இப்படிக் கூறவில்லை - எனது இதே கருத்தை இன்னின்னார் கூட கூறியுள்ளனரே என்று தனது சுய சிந்தனைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்துவார்கள்.



சென்னை அடையாறு பகுதியில் உள்ள எனது இல்லத்தில் சில நாள்கள் அய்யாவும், அம்மாவும் (அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்) தங்கி இருக்கையில் எனது நூல்கள் பலவற்றை - இயக்கக் கொள்கை அல்லாத பொதுக்கருத்துள்ளவைகளை எடுத்துப் புரட்டிப் படித்து, அந்த நூலாசிரியர் கருத்தினை ஏற்றோ, மறுத்தோகூட சில பல கட்டுரைகளை எழுதி - விடுதலையில் போட வாய்ப்பாக அமைந்த சூழ்நிலையும்கூட உருவானதுண்டு!

அய்யா பெரியார் இராமாயண ஆராய்ச்சி 7 பாகங்கள் காண்டங்கள் - சந்திரசேகரப்பாவலர் என்ற புனை பெயரில் பண்டித இ.மு. சுப்பிரமணியப்பிள்ளை என்ற பழுத்த சைவத் திருமேனிப் புலவர் அவர்கள் எழுதிய எவரும் மறுக்க முடியாத நூல்களை ஒரே பைண்டாகச் செய்து வைப்பதை எடுத்துப் படித்து அதுபற்றி சில நேரங்களில் அவர்கள் விளக்கும்போது, பழைய பழைய வால்மீகி மற்றும் இராமாயணப் பிரதிகளை பிரதிவாதி பயங்கரம் என்ற பெயர் பெற்ற பார்ப்பன ஆசிரியர்கள், சி.ஆர். சீனுவாச அய்யங்கார் மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசி, தனது நிலைப்பாட்டை ஆதாரத்துடன் விளக்குவதை கேட்டபோது, அய்யா அவர்கள் புத்தராகப் பொலிந்தார்கள்! நானே சீடன் ஆனந்தன் ஆகியிருக்கிறேன். என்னைப்போல அண்ணா, கலைஞர் முதலிய பலருக்கும் அவ்வாய்ப்பு முன்பு ஈரோட்டு குருகுலத்திலும் கூட ஏராளம் வாய்த்ததுண்டு!

மற்றவைகளில் பெரிதும் சிக்கனம் பார்க்கும் தந்தை பெரியார் அவர்கள், புத்தகங்கள் வாங்குவதில் மிகவும் தாராளச் செலவு செய்யும் வள்ளல் ஆவார்கள்!

ஈரோட்டில் அண்ணா அவர்கள் (1940 இல்) விடுதலை நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, ஈரோடு ஹிக்கின்ஸ் பாதம்ஸ் ரயில்வே புத்தக நிலையத்தில் நல்ல ஆங்கிலப் புத்தகங்கள் வந்துள்ளன என்பதை அண்ணா கூறியவுடன் அய்யா பணத்தை எடுத்துக் கொடுத்து, அண்ணாத்துரை அதனை உடனே சென்று வாங்கிக் கொண்டு வந்து படித்துவிட்டு கட்டுரைகளாகவும் எழுதுங்கள்.
இரண்டு புத்தகங்களாக வாங்குங்கள்; ஒன்று உங்களுக்கு வைத்துக்கொண்டு, மற்றொன்றை குடிஅரசு ஆபீஸ் நூலகத்திலும் வையுங்கள் என்று கூறுவார்களாம்!

அன்று மாலையே, அண்ணா அவர்கள் சென்று வாங்கி வருவார்களாம்.

தோழர்கள் எஸ்.ஆர். சந்தானம், அய்யாவின் சகோதரியார் (கண்ணம்மையார் அவர்களது மூத்த மகன் - பல ஆண்டுகால ஈரோடு நகராட்சி உறுப்பினர் - கோவை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராகவும் அப்போது இருந்துள்ளார்!) அதுபோலவே, மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் உரையாடும் ஈரோடு ப. சண்முக வேலாயுதன் (இவர் பத்திரங்களை எழுதும் தொழில் செய்தவர்) மாலை நடைப் பயிற்சியாக ஈரோடு சந்திப்பு ரயில் நிலையம் சென்று, புத்தகங்களை வாங்குவார் அண்ணா! அங்கே மிகவும் சுவை மிக்க இறைச்சி உணவுக் கடை ரஹ்மானியா கேட்டரிங் சர்வீஸ் என்ற கடையில் நல்ல தேநீர் - பிரியாணி - புலால் - பரோட்டா குருமா முதலியவற்றினையும் சாப்பிட்டுவிட்டு, அரட்டைக் கச்சேரி சில நேரம் அடித்துவிட்டு மாலை திரும்பி, இரவெல்லாம் படித்து, அப்புது நூல்பற்றி உடனே கட்டுரைகள் வெளிவரும்; மேடைப் பேச்சுகளில், முத்துக்கள் மிளிரும். என்னிடம்கூட சென்னையில் அய்யா, இரண்டு நூல்கள் வாங்கு, என்று சொல்லி பணம் கொடுத்ததும் உண்டு.
அய்யாவுக்கு அன்பளிப்பாகத் தந்த ஆங்கில நூல்களில் கையெழுத்திட்டே என்னிடம் தந்துள்ள நூல்களும் உண்டு.


எனவே, படிப்போம்! படிப்போம்! நூலைப் படிப்போம் - தவறாமல் படிப்போம் - பயன்பெறுவோம்!


புத்தம் மனிதராக நாம் ஆக புத்தகங்கள்தானே புதுமையை - பொலிவை - நமக்குள் புகுத்தும் புதிய படைக்கலன்கள்!

மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனி மனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென் பதுணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர்எண்ணமெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை;
புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டிடல்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்!

தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சைம யோகம் புரிந்ததொரு வேளை தன்னில்
இனித்த புவி இயற்கை யெழில் எல்லாம் கண்டேன்;
இசை கேட்டேன்! மணம்மோந்தேன்; சுவைகள் உண்டேன்
மனிதரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மகாசோதியிற் கலந்த தெனது நெஞ்சம்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்துணர்வு! புத்தகங்கள்
தருமுதவி பெரிது, மிகப்பெரிது கண்டீர்!


புத்தக சாலை வேண்டும் என்று சுமார் 70 ஆண்டுகளுக்குமுன் புரட்சிக்கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற இனிய கவிதைகள் இவை.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் சிறந்த பரிசு புத்தகங்கள்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.


குடும்பத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டபோது அறிஞர் இங்கர்சால் சென்ற இடம் புத்தக சாலைகள்தான்!

கோவை தொழில் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள், ஹிக்கின்பாதம்ஸ் போன்ற பெரிய நூல் விற்பனைக் கடைகளுக்குச் சென்று புதிதாக வந்த பல புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து, சென்னையில் அவர் தங்கும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உள்ள அறையில் தங்கிப் படிப்பாராம்; திடீரென்று சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, புதுடில்லிக்கு கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரசுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலிலே இந்தப் புது நூல்களைப் படித்துவிட்டு, அதே வண்டி சென்னை திரும்புகிறதல்லவா அதிலேயோ அல்லது அடுத்துவரும் வண்டியிலேயோ படித்துக்கொண்டே திரும்புவாராம். அவரது டெல்லி போன்ற ஒன்றரை நாள் ரயில் பயணங்களே கூட, பயணத்திற்காக அல்ல; பிறரது தொல்லைகள், குறுக்கீடுகள் இன்றி படித்துச் சுவைப்பதற்கே தானாம்!


படித்தாகவேண்டும் என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடுதான் எப்படி எப்படியெல்லாம் அமைந்துள்ளன; வெளிப்படுகின்றன என்பதைப் பாருங்கள்!

இந்நூல் புத்தகங்கள் இப்படி உலகம் முழுவதும் இப்படி பல கோடி படிவங்களாகப் பரவும் நிலை - ஜான்கூடன் பர்க் என்ற ஜெர்மானியன் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததனால்தானே?
அதுபோல (கம்ப்யூட்டர்) கணினியின் கண்டுபிடிப்பால் Dtp என்ற முறையில், எவ்வளவு எளிதில் அச்சிட முடிகிறது!

இ-காமர்ஸ் என்ற மின்னணுவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி உலகின் ஒரு மூலையில் உள்ள கிடைத்தற்கரிய நூலை இன்னொரு மூலையில் உள்ளவர்களால் இப்போது பெற முடிகிறதே! மின்னணுப் புத்தகங்கள் - இணைய தளங்களில் உடனடியாகக் கிடைக்கின்றனவே!

தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் வரை வாசித்துக்கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நாத்திகன் பகத்சிங்கின் நினைவும்,
அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமுன் 24 மணிநேரம் அவகாசம் கேட்ட அண்ணா - ஒரு நூலைப் படிக்கவேதான் மருத்துவர்களிடம் அண்ணா அறுவை சிகிச்சையை நாளைத் தள்ளி வைக்கக் கேட்டுக்கொண்டார் - சகுனம் பார்த்து அல்ல என்பதை அறிந்த மருத்துவ நிபுணர்கள், அண்ணாவின் புத்தகக் காதல் கண்டு இன்ப அதிர்ச்சியை அல்லவா அடைந்தனர்!


எனவே, இதைப் படிக்கும் நண்பர்கள் உடனடியாக 2 புத்தகங்களை வாங்கி, ஒன்று உங்களுக்காக, மற்றொன்று உங்களுக்கு மிக வேண்டிய நண்பருக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு என்று அறிவிக்க முயற்சியுங்கள்.


----------------- கி.வீரமணி எழுதி வரும் "வாழ்வியல் சிந்தனை"களிலிருந்து ..."விடுதலை" 23,24-4-2009

0 comments: