Search This Blog

23.4.09

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் உண்மையாக அக்கறை கொண்டிருப்பவர்கள் யார்?


வேறு எப்போது?

ஈழத் தமிழர்களுக்காக - வாழ்வுரிமைக்காக தினைத்துணை அளவுக்கு செயல்கள் மேற்கொள்ளப் பட்டாலும், அதனைப் பனைத்துணை அளவுக்கு உச்சிமோந்து பாராட்ட முன்வருவோர் தான் ஈழத் தமிழர் பிரச்சினைமீது உண்மையுள்ள அக்கறை கொண்ட பரிசுத்த மனப்பான்மை கொண்டவர் ஆவர்.
அதிலும் ஆளும் கட்சி இன்று வேலை நிறுத்தத்துக்கு அழைப்புக் கொடுக்கும்போது, அந்தச் செயலுக்கு உலகளாவிய அளவில் கவனிப்பும், அக்கறையும், மதிப்பீடும் அதிகம் என்பது அரசியல் அறிந்தவர்களின் பாலபாடமாகும்.

பாழாய்ப்போன பதவி எனும் யானைப் பசியெடுத்த தமிழ்நாட்டில்தான் எதிலும் அரசியல், எதிலும் பதவிக் கண்ணோட்டம் என்னும் குருதிக் கொதிப்பெடுத்து நிலை தடுமாறச் செய்கிறது.

முதலமைச்சர் இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை நோக்கி, முதலமைச்சரை நோக்கிக் கோரிக்கை வைக்கும் அமைப்புகள், கட்சிகள், அந்த அரசோ, ஆளும் கட்சியோ ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கும்போது அதனை வரவேற்கவேண்டாமா? அப்படி வரவேற்றால்தான் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததற்கான நியாயமும்கூட!

முதலமைச்சரிடம் கோரிக்கைகள் கட்டுக்கட்டாக வைக்கப்படவேண்டும்; அந்த முதலமைச்சர் ஒன்றும் செய்யக்கூடாது; அதனை வைத்து அரசியல் லாபக் கொள்ளை அடிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் மக்களை ஏமாற்றிவிடலாம். அவர்களின் சிந்தனையில் மண் அள்ளிப் போடலாம் என்று மனப்பால் குடிக்கிறவர்களின் அரசியலில் மண்ணை அள்ளிப் போடுவார்கள் தமிழர்கள் என்பதில் கிஞ்சிற்றும் அய்யமில்லை.


அதுவும் தமிழர்கள் தங்களின் உயிர் நாடிப் பிரச்சினையாகக் கருதிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் விபரீத விளையாட்டை ஆடிக் காட்டலாம் என்று உண்மையான ஒரு கபட நாடகத்தை நடத்திக்காட்டும்போது, இதில் தமிழ் மக்களின் தார்மீகக் கோபம் பல மடங்கு உக்கிரத்தை வெளிப்படுத்தும் - இதனைக் கல்லில் சித்திரமாக இப்பொழுதே செதுக்கி வைத்துக் கொண்டுவிடலாம்.


ஈழப் பிரச்சினையை அரசியல் ஆக்கக் கூடாது - ஆக்கக் கூடாது என்று ஒப்புக்காக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் அரசியல் ஆக்குவதைத் தவிர, வேறு எதையும் செய்யாத சில கட்சிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை இடதுசாரிகள் கடந்த காலங்களில் நடத்தி வந்திருக்கிற முறைகள், தமிழர்களால் அவமானகரமான முறையில் நிராகரிக் கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசரமும், நெருக்கடியும் அவர்களுக்கு குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. (மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இன்றுவரை ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பதில் ஆற்றில் ஒரு கால், கரையில் ஒரு கால் என்கிற தன்மையில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றது).

பொதுவாக உண்மையான புலிகளைவிட வேஷம் போட்ட புலிகள் அதிகம் குதிக்கும் - தாழ்வு மனப் பான்மை காரணமாக. என்னதான் சாமர்த்தியம் காட்டினாலும், உண்மை ஒரு நாள் பளிச்சென்று வெளிப் பட்டே தீரும். இன்றைய வேலை நிறுத்தம்பற்றி சி.பி. அய்.யின் மூத்த தலைவர் கூறியிருக்கும் கருத்தை வைத்துப் பார்க்கும்பொழுது, அவர்களின் வெளிரிய உண்மை உருவம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலும், பொதுவான மனிதசங்கிலி அறப்போராட் டம் நடத்தினாலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், பிரதமரைச் சந்திக்க முதல மைச்சர் தலைமையில் தலைவர்கள் சென்றாலும் அனைத்தையும் கபட நாடகம் என்ற நிரந்தர விமர்சனத்தை ஆயத்த ஆடைபோல வைத்திருக்கிற செல்வி ஜெயலலிதாவின் தலைமையை தங்கள் கூட்டணிக்கான உன்னதமான ஒன்றாக நினைக்கக் கூடிய அளவுக்கு தரை தட்டிப் போன கப்பலாக ஆன கட்சிகளின் தலைவர்களின் துரோகப் போக்கை தமிழர்கள் அருவருப்பாகத்தான் பார்ப்பார்கள்.

ஆழ்வார் பட்டத்துக்கு இலங்காபுரி ஆட்சிக்காக தன் சொந்த அண்ணனைக் காட்டிக் கொடுத்த அந்தச் சரிதம், அதே இலங்கையை மய்யப்படுத்திய இந்தப் பிரச்சினையிலும் தொடர்கிறதே - வெட்கக்கேடு!
தமிழர்களே, ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் உண்மையாக அக்கறை கொண்டிருப்பவர்கள் யார்? நடிப்பவர்கள் யார்? இப்பொழுது புரிந்துகொள்ளா விட்டால் வேறு எப்பொழுது?--------------------"விடுதலை"தலையங்கம் 23-4-2009

2 comments:

Unknown said...

//முதலமைச்சர் இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை நோக்கி, முதலமைச்சரை நோக்கிக் கோரிக்கை வைக்கும் அமைப்புகள், கட்சிகள், அந்த அரசோ, ஆளும் கட்சியோ ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கும்போது அதனை வரவேற்கவேண்டாமா? //


உன்மையான அக்கரை உள்ளவர்கள் வரவேற்பார்கள். ஓட்டுக்காக அக்கரை உள்ளவர்கள் போல் சிலர் காட்டிக் கொள்கிறார்கள். உண்மை ஒரு நாள் வெளிப்படும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நண்றி திருநாவு