Search This Blog

25.4.09

அப்பரின் புரட்சி-எது புத்தாண்டு?-சேக்கிழாரின் புரட்டு


அப்பரின் புரட்சி

அப்பரும் ஞானசம்பந்தரும் ஒரே காலத்தவர். சம்பந்தர் பல்லக்கில் பவனி வருபவர். அவரைச் சுமந்தவர்களில் அப்பரும் ஒருவர் என்றொரு கதை. திரைப்படத்தில் நைசாக இதை நுழைத்துப் பார்ப்பன மேலாண்மையைக் காட்டியுள்ளனர். இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

இவருவரும் இருவேறு சிந்தை, செயல் கொண்டு இயங்கியவர்கள். பார்ப்பனர்கள் மாலையில் சூரியனை வணங்குபவர்கள். இதனைச் சந்தியா வந்தனம் என்றனர். அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் எனப்பாடி இவர்கள் சந்தியா வந்தனம் செய்வதை வெளிப்படுத்துகிறார். (அருக்கன் என்றால் சூரியன்; அருகன் அல்ல) சம்பந்தன் சந்தியாவந்தனம் செய்பவர்.

வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் தாந்தம்மைத் தோயாவாம் தீவினையே என்று சம்பந்தன் திருவெண்காட்டுக் குளத்து நீரைப் பெருமைப்படுத்துகிறார். (அந்த ஊரில் யாரும் டாக்டர்கள் போய்விடக்கூடாது; தொழில் நடக்காது. குளத்து நீரேதான் நோய் தீர்க்குமாமே!) தீவினைகளும் தீண்டா என்கிறார்.

ஆனால் அப்பரோ - கங்கையாடிலென் காவிரியாடிலென், பொங்கு தண்குமரித்துறை புகுந்தாடிலென் என்று பாடினார். சம்பந்தனுக்கு மறுப்பாகப் பாடினாரோ? பொதுவாகக் கருத்தைத் தெரிவிக்கப் பாடினாரோ?

பார்ப்பன ஜாதிவெறி மேலோங்கி நிற்கச் செயலாற்றியவன் சம்பந்தன். தான் கவுண்டின்ய கோத்திரத்துப் பார்ப்பனச் சிறுவன் என்பதை மறக்காமல் சொல்லிக்கொண்டு சென்றவன். அதனால்தானே பார்வதிகூட, பார்ப்பனச் சிறுவன் என்பதால்தானே, பால் கொடுத்ததாகக் கதை. ஆனால், அப்பரோ சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் என்றே பாடுகிறார். சாத்திரம் பேசியவர்கள் பார்ப்பனர்கள் தானே! கோத்திரமும் குலமும் கொண்டு என் செயும்? என்ற கேள்வியை ஜாதிப் பெருமை பேசியவர்களைப் பற்றிச் சாடிப் பாடுகிறார்.

திருவாவடுதுறை கோயில் கருவூலத்திலிருந்து, சம்பந்தன் கடன் வாங்கினான்; பொன் கடனாக வாங்கினான்! இந்தச் சேதியை சம்பந்தன் ஓரிடத்தில் கூடப் பாடிவைக் கவில்லை! உலகில் எல்லாமே பார்ப்பனர்களுக்குச் சொந்தமானது என்றுதானே, மனுநூல் கூறுகிறது. எனவே, பார்ப்பனர் சொத்தைப் பார்ப்பனர் பெறுவதை ஏன் கடன் எனக் கருதவேண்டும் என்கிற இறுமாப்பு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் - இதைத்தம் பாடலில் அப்பர் பாடி அம்பலப்படுத்தி விட்டார். (அதனால்தானே நமக்குத் தெரியவந்தது!)

சம்பந்தன் வேதம் போற்றியவன். வேள்வி பற்றிப் பெருமை பேசியவன். ஆனால், அப்பருக்கோ வேதமும் தெரியாது, வேள்வி செய்யக் கூடிய ஜாதியும் கிடையாது. ஆனால் - சிவன் மட்டுமே முக்கியம்என வாழ்ந்திருக்கிறார், பாடியிருக்கிறார்!

சைவசமயக் குரவர் நான்குபேரில் மூவர் பார்ப்பனராக இருந்து அப்பர் ஒருவர் மட்டுமே பார்ப்பனர் அல்லாதாராக இருந்து கடவுள் பணி செய்திருக்கிறார். அவர் காலத்திய கட்டாயம் அது. அதுவும் கடவுள்; மறுப்புக் கொள்கை கொண்ட சமணத்தவராக இருந்து, ஏதோ சூழலில் சைவந்தழுவியர். வேறென்ன செய்ய முடியும்? ஆனாலும், பிறவி பேதத்தை ஒப்ப மறுத்துப் போராடியிருக்கிறார்.
பக்தி மார்க்கக் காலத்திலும்கூட, பார்ப்பனர், அல்லாதார் வேறுபாடும் இருந்தது; அதை எதிர்த்துப் போராட்டமும் இருந்தது. இன்னமும் போராட்டம் ஓயவில்லை. நம் காலத்திலாவது போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தே ஆகவேண்டும்.

------------------------------------------------------------------------------------

எது புத்தாண்டு?

சித்திரை முதல் நாள் ஆண்டுத் தொடக்கம் என்பதை அழித்து அரசு ஆணையிட்டார் மானமிகு கலைஞர் அவர்கள். இதைச் செரித்துக் கொள்ளமுடியாத நம் ஆள்கள் (பார்ப்பனர் அல்லாதார்) சிலர் சித்திரைத் திருநாள் என மாற்றிப்போட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். வேப்பம்பூவும் மாங்காயும் சேர்த்து பாயசம் எப்படிப் பண்ணுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அதிமுகவின் பொதுச்செயலாளரான பார்ப்பன அம்மணி வெளிப்படையாகவே புத்தாண்டு எனக்கூறி வாழ்த்து கூறுகிறார். சுவரொட்டி ஒட்டுகிறார். அப்பர் காலத்தில் சம்பந்தன் நடந்து கொண்டதை மேலே படித்தீர்கள் அல்லவா? அது தொடர்கிறது.

கலி ஆண்டு 5110 என்கிறார்கள். சாலிவாகன ஆண்டு 1931 என்கிறார்கள். போஜராஜ ஆண்டு 199 என்கிறார்கள். கொல்லம் ஆண்டு 1185 என்கிறார்கள். பாண்டவ ஆண்டு 5110 என்ப வர்களும் இருக்கின்றார்கள். ராமதேவ ஆண்டு 787 என்கிறார்கள். கிருஷ்ணராய ஆண்டு 480 என்றும், மாத்வ ஆண்டு 904 என்றும், ராமானுஜ ஆண்டு 992 என்றும், கூறிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள். (இதில் ஏன் சங்கரா ஆண்டைக் காணோம்?) இவையெல் லாம் இந்தியக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் ஆண்டுக் கணக்குகள்.

என்றால், உலக அளவில் பொது ஆண்டு 2009 என்றும் ஹிஜிரி ஆண்டு 1430 என்றும் கூறுகிறார்கள்.
ஜெயலலிதாவும் அர்ஜீன் சம்பத் என்கிற ஓர் அனாமதேயமும் மட்டும் கூறிப் பிதற்றி, தினமணி தூக்கிப்பிடிக்கும் தமிழ் ஆண்டுக்கு இப்படி ஒரு நெடுங்கணக்கு உண்டா?

60 ஆண்டுகள் சுழற்சி தானே! 1949இல் திமுக பிறந்தபோது பிறந்தவரின் வயது இன்றைக்கு 60 என்று சொல்ல முடியுமா? 2015இல் விரோதி ஆண்டு பிறந்து 6 ஆண்டுகள் ஆனநிலையில் அவர் வயது 6 என்று கூடக் கூறமுடியுமே! இந்தக் குழப்பத்திற்கு அம்மணி ஜெயலலிதா என்ன கூறுவார்?
அவராவது அல்லது அவரது பாததூளிபட்டு ஜென்ப சாபல்யம் அடைந்த வேறு யாராவது என்ன கூறமுடியும்?


--------------------------------------------------------------------------------------
சேக்கிழாரின் புரட்டு

சைவக்கோயிலாயினும், வைணவக் கோயிலாயினும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட வேண்டும் என்றுதான் ஆகமம் கூறுகிறதாம்.

கோயில் என்றாலே சிதம்பரம் கோயிலையும் சீரங்கம் கோயிலையும்தான் குறிக்கும் எனப் பெருமையுடன் கூறுவார்கள். ஆனால், இவை இரண்டும் தெற்குநோக்கி இருக்கின்றன! என்ன காரணம்? இதுவரை யாரும் கூறவில்லை. இனியாவது விளக்குவார்களா?

ஆகமம், அது - இது என்பதெல்லாம் ஹம்பக்! பவுத்தத்தில் புத்தரைக் கிடந்த கோலத்தில் (படுத்தியிருக்கும் நிலை) வடித்ததைப் பார்த்துக் காப்பியடித்த வைணவம் கிடந்த கோலத்தை சீரங்கம் முதல் பல ஊர்களில் கல் சிலையாக வடித்து, அடித்து வைத்துவிட்டனர்.

அதுபோலவே தெய்வப் பொம்மையைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாகக் சுற்றும் வீதியுலா என்பது கூடப் பவுத்தர்களைப் பார்த்துக் காப்பி அடித்தது என்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் என்றால் - இவர்கள் 10 நாள்கள்.

சமணத்தில் திரிசஷ்டி சாலக புருஷர்கள் என்று 63 பேர்கள் உண்டு. இதே எண்ணிக்கை யில் சைவர்களைக் கொண்டுவரப் படாத பாடுபட்டு, போனவன் - வந்தவன் பலரையும் கூட்டி 63 பேர்களைப் பட்டியல்போட சேக்கிழார் படாதபாடு பட்டிருக்கிறார்.இந்த 63 பேர்களோடு இன்னும் பலரையும் கூட்டி 70க்குமேல் நீட்டித்துவிட்டார் காஞ்சி சங்கரமடத் தமிழ் வாத்தியார் மகாதேவன் என்பவர். இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் இவர்கள் எண்ணிக்கை 100 என்றாகி விடுமோ?

இந்து மதத்தவர்கள் பழையது காலங்காலமாக இருப்பது என்று கதை விடுவதெல்லாம் கப்சாதான்!

------------------25-4-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: