Search This Blog

7.4.09

“நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்” நீதிபதி வெண்டுகோள்


6 மாந்தருள் தலைசிறந்த மாணிக்கம்!




இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு என்மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றால், நான் யாரைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் எனக்கருதியிருக்கிறேனோ, யாரை மாந்தருள்தலைசிறந்த மாணிக்கம் என்று எண்ணியிருக்கிறேனோ, அவருடைய நாற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதனால் அவருக்கு ஒரு சிறுதுளி நன்றிக் கடனைச்செலுத்த முடிகிறது இந்த வாய்ப்பால், நாம் யாருக்கு நன்றி கூறுகிறோம்!

விவரமறிந்த நாளிலிருந்து சாதி ஒழிய வேண்டும் என்று பறைசாற்றி-சாகும் தருணம் வரை அதற்காகப்போராடிய தலைவருக்கு நன்றி செலுத்துகிறோம்.

நம்மிடையே வாழ்ந்த தலைவர்களின் அய்யா அவர்கள் தலையாயவர் என்பதில் யாருக்கும் எந்தவிதமான அயப்பாடும் இருக்க நியாயமில்லை.

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்!

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் அவர் கண்ட களங்கள் எத்தனை, வெற்றி வாகைகள் எத்தனை என்பதைக் கணக்கிட முடியாது, “தனக்கென வாழாப்பிறர்க்குரியாளன்” என்றால் அது அய்யாவையே சாரும்.

எங்கெல்லாம் மக்கள் மத்தின் பேரால் - சாதியின் பேரால் சுரண்டப்பட்டார்களோ, அங்கே பெரியார்தலைமையேற்று அந்தச் சுரண்டலை ஒழிக்க முதலில் நின்றார்கள். அப்படி நடந்த ஒன்று வைகத்தில் நடந்த போராட்டம். யாருடைய நிழல்பட்டால் “தீட்டு” என்று, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுகப்பட்டார்களோ, அரவ்களை வீதியில் அழைத்துச் சென்று “வைக்கம் வீரர்” என்ற அழியாப் புகழை அடைந்தவர்கள் அய்யா ஆவார்.


மக்களிடையே சமத்துவம் நிலவ வேண்டும்; சாதி முதலில் ஒழிய வேண்டும் என்பதைத் திண்ணமாக்க்கொண்டிருந்தவர் அய்யா.

இவர் இவ்வாறு பள்ளு, பறைகளை எல்லாம் கோயிலில் நுழைய வைத்ததைப் பார்த்த வைதீகர்கள், “என்ன அய்யா, இம்மாதிரி ஒரு தகாத செயலைச் செய்துவிட்டீர்களே” என்று கேட்டதற்கு மிக வேடிக்கையாக அவர் பதில் சொன்னார்.

அய்யாவின் அணித்தரமான பதில்!

“மூடி வைத்திருக்கிற சாமியை அவன் பார்த்தா என்ன? சாமிக்குக்கோபம் வந்தால் அது மறைந்து கொள்ளட்டுமே! நீயேன் அவஸ்தைப் படறே” என்று அழுத்தந்திருத்தமாக்க் கூறினார். இதையும் ஏதோ நான் கேட்டமாதிரி கூறவில்லை. தலைவர் காமராஜ் அவர்கள், அய்யா இப்படிச் சொன்னார் என்று குறிப்பிட்டிருகிறார்கள். யாருக்காவது சந்தேகம் இருக்குமானால், சுயமரியாதை இயக்கப் பொன்விழா மலரில் 101-ஆம் பக்கத்தைப் பாருங்கள். நான் வகிக்கிற பதிவியின் காரணமாக நான் ஆதாரத்துடன் தானே பேச வேண்டும்!

அந்த ‘வைக்கம் வீரர்’ இன்று இல்லாததினால் நான் விழுப்புரங்களும் பேராணாம்பட்டும் தோன்றியுள்ளன. பெரியார் இல்லாத குறையை நாம் நன்றாக உணர முடிகின்றது. இந்தக் கலவரங்கள் நோயாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு தீராத நோயின் ஆரம்பக்கட்டமாக இவை இருந்தால் மனித உள்ளம் படைத்தவர்கள் அனைவரும் தீவிரமாக இது பற்றிச் சிந்திக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் ஓர் இருவராவது வைக்கம் வீர்ராக மாறவேண்டும். வெறும் வைக்கோல் வீரர்களா இருக்க கூடாது.

அன்று தெய்வங்கள் ‘இருப்பிடம்’ எனப்படும் கோவில் மீது படை எடுத்தார். பின்னர் ‘நீதித்தெய்வங்கள்’ இருக்கும் நீதி மன்றத்தின்மீது கணை விடுத்தார். அந்தக் கணைகளால் விழுந்த பழங்கள்தான் நானும் எனது அருமை நண்பர் மாண்புமிகு வரதராஜனும். சிறிது வெளிப்படையாகவே கூறுகிறேன்; என்னைப் பொறுத்தமட்டிலாவது இந்தப் பதவி அய்யா அவர்களுக்கு உரித்ததாகும். என்னுடைய மனக்குறை எல்லாம் அவர் வாழ்நாளிலே இது கிடைக்கவில்லையே என்பதுதான்.

அடுத்து, மூட நம்பிக்கை; நேற்று ஒரு இளைஞர் குழாத்திற்குத்தலைமை வகித்து உரையாற்றினேன். அங்கே குறிப்பிட்டார்கள். 13 அதிர்ஷ்டமற்ற எண் என்று நான் கேள்விப்பட்டேன். எந்த இளைஞர் சமுதாயம் பார்த்து இந்த நாட்டை வளர்க்க வேண்டுமோ அந்நச் சமுதாயம் இந்த எண்ணம் கொண்டிருந்தால் நாடு எப்படி உருப்படும்? 13-ஆம் தேதி பிறந்தவர்களே அப்படியானால் என்ன செய்வது? ஆற்றிலே குளத்திலேதான் தள்ள வேண்டும்? அப்படியானால் என் மனைவியையல்லவா நான் இழக்க நேரிடும்? இது போன்றே நாளினைப் பல கூறுகளாகப்பிரித்து ராகுகாலம், எமகண்டம் என்று கூறி நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

இது வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக உள்ளதே, என்று கூறினால், ‘நாத்திகம்’ என்று கூசாது சொல்கிறார்கள், ராகு காலத்தில் ரயில் கிளம்பினால் போகாமல் இருப்பதுதானே! அவ்வளவு தூரம் போவானேன். நாங்கள் இருக்கும் நீதி மன்றத்தில், என்னுடைய வழக்கு ராகுகாலத்தில் ஆரம்பிக்க நான் விரும்பவில்லை; ஆகவே, வாய்தா கொடுங்கள் என்றால் அது குறும்புத் தனமா, இல்லை கோமாளித்தனமா? என்பதை நீங்களே தீர்மானிக்க விடுகிறேன்.

எதிலும் எதிர் நீச்சல் போட்டவர்!


இப்படிப் பலப்பல போராட்டங்களை நடத்தி வாழ்க்கையையே போராட்டமாக அமைத்துக் கொண்டவர் பெரியார். எதிலும் எதிர் நீச்சல் போட்டே வெற்றி கண்டவர். புரையோடிப்போன, புல்லரித்துப்போன நம் சமுதாயத்திகுப் புது வாழ்வளித்த அந்த உத்தமர் நம்மிடையே இல்லை ஆனால், இன்னம் பல தலைமுறைகளுக்கு அந்தப் புகழ் அழியாது நிற்கும்.

நம்முடைய நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் அந்த அஞ்சா நெஞ்சனை, அஞ்சல் தலையாகப் பார்கின்றபொழுது கண்கள் குளமாவது இயற்கை; அஞ்சல் தலை வாயிலாக அவருக்கு மரியாதை காட்டிய இந்திய அரசிற்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நடைபாதைக்கோயிலை இடித்துத் தள்ளுக!

இந்த மாபெரும் விழாவில் ஒன்றே ஒன்றை மட்டும் கூறி அமையவிரும்புகிறேன். பெரியாருக்குக தியாகி மான்யம் கொடுப்பது பற்றி யோசிக்கப்படுமா என்று சட்டசபையில் கேட்கப்பட்டது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், “இந்தத்தமிழக அரசே பெரியாருக்குக் காணிக்கை என்று கூறினார்கள். அவ்வளவு தூரம் வேண்டாம்-இந்த அரசை நான் உங்கள் சார்பாக கேட்டுக்கொள்வதெல்லாம், “நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்” என்று; இதை இடிப்பதால் பக்தர்கள் மனம் புன்படாதா என்று உடனே கொதித்து எழுவார்கள். அவர்களுக்கெல்லாம் நான்கூறுவேன். இப்படிக் கொதித்து எழுபவர்கள் போலிப் பகத்ர்கள்; மத்த்தைப் பற்றி, ஆகமத்தைப்பற்றி அறியாத அறிவிலிகள். ஆகமத்தில் என்ன கூறியிருக்கிறது என்றால், 31 கலச நீராட்டி, மதச் சடங்குகளோடு நிறுவப்பட்டவுடன்தான் அந்தச் சிலை வடிவாக இருக்கின்ற சாமிக்குத் தெய்வீக சக்தி வருகிறது. இவ்வாறு நான் கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கின்போது ஜஸ்டிஸ் பாலேகர் அவர்கள் கூறினார். ஆகவே, ஆகமத்தின்படி இவை ஆலயங்கள் இல்லை- நமக்கோ அதைப்பற்றிக் கவலையே இல்லை-போக்குவரத்திற்கோ இடைஞ்சல்-இந்த நிலையில் இடித்தால் யாருக்கு நஷ்டம்? இந்த அரசு தயங்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.

எந்தெந்தக் கொள்களைகளுக்காக வாழ்ந்து மடிந்தாரோ அந்தக் கொள்களைகளைப் பின்பற்றி நட்டப்பதுதான் அய்யாவுக்குச் சிறந்த அஞ்சலியாகும். அஞ்சல் தலையோடு நின்றுவிடக்கூடாது என்று கூறி அமைகிறேன்.

----------------17-9-78 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “தந்தைப் பெரியார் நூற்றாண்டு விழா’வில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு மோகன் அவர்கள் ஆற்றிய உரை -நூல்:-"நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்" பக்கம்:-38-42

1 comments:

saivam said...

கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
evr in nokkam enna ?